அவனுக்கு அவள் கேட்ட எதுவுமே நினைவில் இல்லாதது போன்ற மரத்த நிலை. விழிகளை இறுக்கி மூடி ஒருமுறை யோசித்துவிட்டு, “பிளான்ல எந்த மாற்றமும் இல்லை எண்டால் ஒண்டும் தேவை இல்ல. எல்லாம் ஏற்கனவே ஏற்பாடு செய்தாச்சு. எல்லாம் சரியா நடக்குதா எண்டு மட்டும் அகரன ஒருக்கா செக் பண்ணச் சொல்லு, போதும்.” என்றான் தன் கனத்த குரலில். இரண்டரை வருடங்களாக, ஆதினியின் வருகைக்காகக் காத்திருந்தவன் இன்றைக்கு, அதை உணரும் நிலையிலேயே இல்லை.
“என்ன அண்ணா, ஏன் ஒருமாதிரி இருக்கிறீங்க? உடம்பு ஏதும் சரி இல்லையா?” அவன் குரலின் பேதம் உணர்ந்து அக்கறையோடு விசாரித்தாள், சியாமளா.
“ஒண்டும் இல்லயம்மா.” என்னவோ அவளுக்கு மிகவும் பிடித்த காண்டீபன் அண்ணாவின் இன்றைய நிலையைச் சொல்ல மனம் வரவில்லை அவனுக்கு. ஒருகணம் விழிகளை மூடி யோசித்தவன், “ரெண்டு சாப்பாட்டு பார்சல் கட்டி வை. கொஞ்ச நேரத்தில வாறன்.” என்றுவிட்டு எழுந்து புறப்பட்டான்.
அவன் மீண்டும் காவல் நிலையம் சென்றபோது, நெருப்பெட்டி அளவிலான அந்தச் சிறை அறைக்குள், கால்களை நீட்டித் தரையில் அமர்ந்திருந்து, சுவரில் தலையைச் சாய்த்து, விழிகளை மூடி இருந்தான், காண்டீபன். தலை கலைந்து, முகம் சோர்ந்திருந்தது. காலையில் நேர்த்தியாக அவன் அணிந்திருந்த ஆடைகள் இப்போது அவன் மனதைப்போலவே கசங்கிக் கிடந்தது. அப்படியே அவனைப் பார்த்தது பார்த்தபடி நின்றான்.
எந்த உணர்வு உந்தியதோ மெல்ல விழிகளைத் திறந்தான் காண்டீபன். சாதாரண ஒரு பாண்ட் டீ ஷேர்ட்டுடன் நின்றிருந்தான் எல்லாளன். இருவரையும் பிரித்திருந்தது சிறைக் கம்பிகள். சேர்ந்தாலும் பிரிந்தே தான் இருக்கவேண்டும் என்பது, அவர்கள் இருவருக்கும் விதித்தது போலும். இருவரின் நெஞ்சமும் துடித்தது. மனதின் அந்தத் துடிப்பையும் தவிப்பையும் மற்றவருக்குக் காட்டி விடவே கூடாது என்கிற கவனத்தோடு, இருவரின் பார்வையும் அமைதியாகக் கலந்து கவ்வி நின்றது. முகத்தில் எந்த உணர்வையும் காட்ட மறுத்தனர். எல்லாளன் திரும்பிப் பார்த்தான். காவலுக்கு நின்ற கொன்ஸ்டபிள் வந்து, பூட்டியிருந்த கதவைத் திறந்து விட்டார். உள்ளே வந்தான் எல்லாளன். காண்டீபனின் முன்னே கையில் இருந்த பையை வைத்துவிட்டு அவனருகில் தானும் தரையிலேயே அமர்ந்தான். காண்டீபனிடம் எந்த அசைவும் இல்லை. நேரே பார்த்தபடியே அமர்ந்திருந்தான்.
என்ன பேசுவது? வார்த்தைகள் மூலம் எண்ணங்களையும் உணர்வுகளையும் பகிரும் அவசியம் அவர்கள் இருவருக்குமே இல்லை. சில நொடிகள் அமைதியில் கழிந்தன. காண்டீபனின் தாடையைப் பற்றித் திருப்பி, அவன் உதட்டின் வெடிப்பை ஆராய்ந்தான், எல்லாளன். காண்டீபன் தடுக்கவில்லை. அவன் பார்வை இவனிடம் இருந்தது. பைக்குள் இருந்த குட்டி டியூப் ஒன்றை எடுத்து, அதைப் பிசுக்கி, அதிலிருந்த களிம்பை அவன் உதட்டினில் தடவி விட்டான், எல்லாளன். அவனே உடைத்து, அவனே சரிபார்த்து எடுத்து வந்த கண்ணாடியை அவன் புறமாக நீட்டினான். வாங்கி அணிந்துகொண்டான் காண்டீபன். “சாப்பிடு.” பார்சலை காட்டிச் சொன்னான்.
“வீட்டை போனியா?” தன் மௌனம் கலைத்தான் காண்டீபன். எல்லாளன் பதில் சொல்லவில்லை. பார்சல் ஒன்றை எடுத்துப் பிரித்து, அவன் புறமாக நகர்த்தி வைத்தான். அந்தப் பையினுள் இன்னொரு பார்சல் இருப்பதைக் கவனித்தான் காண்டீபன். அதை எடுத்துப் பிரித்து எல்லாளனின் முன்னே வைத்தான். இருவராலும் உண்ண முடியவில்லை. எத்தனை வருடங்களுக்குப் பிறகு ஒன்றாகச் சாப்பிடப் போகிறார்கள். அதுவும் எங்கு வைத்து. இருவரின் நெஞ்சமும் வெடித்துவிடும் நிலையில் இருந்தது. அதை மற்றவருக்கு காட்டப் பிடிக்காததால் இருவரின் பார்வையும் பார்சலிலேயே பிடிவாதமாக நிலைத்திருந்தது.
இதெல்லாம் நடக்கும் என்று கணித்து வைத்திருந்ததாலோ என்னவோ எல்லாளனை விடவும் வேகமாகத் தன்னைச் சமாளித்துக்கொண்டான் காண்டீபன். அருகிருந்தவனின் கையைப் பற்றி அழுத்தி, “சாப்பிடு மச்சான், இனி எத்தின வருசத்துக்குப் பிறகு இப்பிடி ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமோ தெரியாது.” என்றான்.
அதைக் கேட்ட எல்லாளனுக்கு சுர் என்று கோபம் உச்சிக்கு ஏறியது. திரும்பி அவனைத் தீப்பார்வை பார்த்தான். அவன் எங்கு இருக்கிறான் எப்பிடி இருக்கிறான் என்று இவனுக்குத் தெரியாது. ஆனால், இவன் எங்கு, என்னவாக இருக்கிறான் என்றெல்லாம் அவன் தெரிந்துதானே வைத்திருந்திருக்கிறான். தன் பிரச்சனைகளை எல்லாம் ஏன் அவன் இவனிடம் கொண்டு வரவில்லை. கொண்டு வந்திருக்க இந்தத் துன்பங்களைத் தவிர்த்திருக்கிலாமே. இன்றைக்கு, அவனை ஒரு குற்றவாளியாக இவன் பார்த்திருக்க மாட்டான். கண்டதும் அணைக்க ஓடி வந்தவன் அணைக்காமல் நின்றிருக்கவும் மாட்டான். இவனும் தன்னைக் கல்லாக்கிக் கொண்டு அவனைக் கைது செய்திருக்கவும் மாட்டானே. அத்தனை சிக்கல்களையும் உருவாக்கி, அதற்குள் தன்னைத் தானே திணித்துக்கொண்டு நிற்கும் நண்பனை நன்றாக வெளுக்கும் வெறி வந்தது. என்ன, இந்த நிலையில் இருக்கும் அவனிடம் அதைக் காட்ட முடியவில்லை. எப்படி இவனைக் காப்பாற்றப் போகிறேன், எப்படி வெளியில் கொண்டு வருவேன் என்று அவன் மனது, படாத பாடு பட்டது.
இவனுக்கு இருக்கும் இந்தத் தவிப்புகள் எதுவும் அவனுக்கு இல்லை போலும். ஒரு வாய் சோற்றை அள்ளி இவன் வாயருகில் நீட்டினான். வந்ததே ஒரு கோபம். படார் என்று அவன் கையைப் பிடித்துத் தட்டிவிட்டான். உணவு தரையில் சிந்தியது. “ஏசிபிக்கு பழக்கம் சரியில்ல!” அவனை இலகுவாக்க முயன்றபடி, மீண்டும் ஒரு வாய் சோற்றை அள்ளி, அவன் தாடையைப் பற்றித் தன் புறம் திருப்பி மீண்டும் நீட்டினான் காண்டீபன். அவனை முறைத்தபடி வாங்கிக்கொண்டான் எல்லாளன்.
இருவரும் சத்தமில்லாமல் சாப்பிட ஆரம்பித்தனர். தனக்குத் தருவானா என்று இரண்டு மூன்று முறை திரும்பி திரும்பிப் பார்த்தான் காண்டீபன். அவன் ஒரு பிடிவாதத்துடன் உண்டுகொண்டு இருக்கவும், அவன் வாய்க்குள் கொண்டுபோன கையைப் பிடித்து இழுத்துத் தன் வாய்க்குள் அடைந்துகொண்டான். அதற்குமேல் எல்லாளனால் முடியவில்லை. “உன்ன நானே கொல்லப்போறன் பார். செய்றதை எல்லாம் செய்துபோட்டு என்ன நட்பு கொண்டாடுறியா?” என்று சீறினான்.
மலர்ந்த சிரிப்புடன் அவன் முகத்தையே பார்த்தான் காண்டீபன். “ஏன்டா, இந்தக் கோபம் மட்டும் உனக்கு எண்டைக்குமே குறையாதா?” என்று வினவினான். எப்போதுமே அவன் கேட்கும் கேள்வி இது. அந்த நாட்களின் நினைவில் இருவருக்குமே மனது சற்று இலகுவாகிற்று. அப்படியே உணவை முடித்தனர்.