“மாதவன், அஞ்சலியை ஒண்டும் செய்ய வேண்டாம் கதிரவன். நாங்க அவேட்ட இருந்தோ, அவேன்ர வீடுகளில இருந்தோ எதையும் கைப்பற்ற இல்ல. இப்ப அவே அந்த மாதிரியான எந்த வேலைலயும் ஈடுபடவும் இல்ல. ஆனாலும், அப்பப்ப அஞ்சலியைக் கொஞ்சம் கவனிங்க. காண்டீபன் சொன்னதை வச்சுப் பாத்தா அவவுக்கு, ‘எஸ் எஸ் எஸ் குரூப்ல’ இன்னும் கோவம் இருக்கலாம். அதால, ஏதும் செய்யப் பாக்கலாம்.” என்றான்.
“ஓகே சேர், சாகித்தியன்?”
அவனைப் பற்றித்தான் எல்லாளனுக்கும் சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது. அவன் செய்தது பெரும் குற்றம். போதைப் பொருட்களோடுதான் அவனைப் பிடித்ததும். வழக்காகப் பதிவு செய்தால் தண்டனை நிச்சயம். ஆனால், அந்தக் குடும்பம் என்னாகும்? அந்தத் தாய் தகப்பனின் நிலை என்ன?
“என்ன செய்வம் கதிரவன்? இன்னும் எஃப்.ஐ.ஆர் போடேல்லத் தானே.”
“இல்ல சேர், இன்னும் போடேல்ல. நடந்தது எனக்கும் உங்களுக்கும் மட்டும் தான் தெரியும். ஏற்கனவே சாமந்தியப் பறி குடுத்திட்டு இப்பத் தான் அந்த ஐயாவும் அம்மாவும் வெளில வந்துகொண்டு இருக்கினம். இப்ப, இவன் கைது எண்டு தெரிஞ்சா என்ன நடக்குமோ தெரியாது. அவனும் போதை பாவிக்கிறவன் இல்ல. தாய் தகப்பனுக்காகவும் தங்கச்சின்ர மானம் இன்னுமின்னும் போக வேண்டாம் எண்டும் தான் இந்த வேலையப் பாத்திருக்கிறான். இதையெல்லாம் யோசிச்சு வெளில விடலாம். ஆனா சேர், சாமந்தின்ர வீடியோ இன்னும் அவங்களிட்ட இருக்கச் சாத்தியம் இருக்கு. அதை விடவும், இன்னும் வேற என்ன எல்லாம் இருக்கோ தெரியாது. அதை வச்சுத் திரும்பவும் மிரட்டினா இவன் என்ன செய்வான் எண்டு சொல்லுறதுக்கு இல்ல. இவன் பணியாட்டி இவன்ர அப்பா, அம்மா எண்டு அந்தக் குரூப் போகவும் சான்ஸ் இருக்கு, சேர். எல்லாரும் சாதாரண மனுசர்கள். மானம் எண்டுற ஒண்டுல எவ்வளவு தைரியசாலியா இருந்தாலும் பணிஞ்சிடுவினம். கேஸ் போடாம வெளில விடுறதும் ரிஸ்க் தான், சேர்.” தன் கருத்தைத் தெளிவாகச் சொன்னான், கதிரவன்.
விழிகளை மூடி அமைதியாகக் கேட்டபடி ஒற்றைப் புருவத்தை நீவி விட்டுக்கொண்டிருந்தான், எல்லாளன்.
உண்மையில் சாகித்தியன் குற்றவாளிதான். ஆனால், அந்தப் பாதை அவனாகத் தேர்ந்து எடுத்தது அல்ல. திணிக்கப்பட்டது. கட்டாயப் படுத்தப் பட்டது. எவனோ ஒருவன் செய்கிற அத்தனை அக்கிரமங்களுக்குள் மாட்டிக்கொண்டு முழிக்கும் சாகித்தியன், மாதவன் போன்ற எளிய மனிதர்களைத் தண்டிப்பதால், அவர்களின் குடும்பங்கள் பாதிப்பதைத் தவிர்த்து வேறு எந்த மாற்றமும் வரப்போவதில்லை. பிறகு எதற்குத் தண்டிக்க?
குற்றங்களைக் குறைக்கத்தானே தண்டனை. இவர்கள் இல்லாவிட்டால் இன்னும் யாராவது என்று அவர்கள் கடந்து போய்க்கொண்டிருப்பார்கள். இந்தக் குற்றங்கள் குறைய வேண்டுமானால் அவர்களைத்தான் பிடிக்க வேண்டும்.
ஒரு முடிவுடன் எழுந்து, “அவனையும் கூட்டிக்கொண்டு வாங்க!” என்றவன், நேராகச் சென்று நின்றது சாகித்தியனின் வீட்டில் தான்.
எல்லாளன், கதிரவனைக் கண்டதும் அவர்களின் முகத்தில் பெரும் பதட்டம். நேற்றிலிருந்து வீட்டுக்கு வராத மகனும் பயமும் பதட்டமுமாக நிற்கிறானே. உயிர், உடல் எல்லாம் தவித்துப் போனது. மீண்டும் ஜீரணிக்க முடியாத எதையும் கேட்டுவிடுவோமோ என்று நடுங்கினர். முகம் பயத்தில் வெளுக்க, என்ன என்று கூடக் கேட்கும் சக்தியற்றவர்களாகச் சாகித்தியனையும் எல்லாளனையும் மாறி மாறிப் பார்த்தனர்.
அதிகரித்துப்போன மூப்பும், தைரியமற்ற உடல் மொழியும், கலங்கிய முகமுமாக நின்றவர்களை எதிர்கொள்ள எல்லாளனே சிரமப்பட்டான். திரும்பி சாகித்தியனை முறைத்தான். முகம் கன்றத் தலை குனிந்தான், அவன். அடுத்த நிமிடம் அனைத்தையும் சொன்னான், எல்லாளன்.
நம்ப முடியாத அதிர்வில் நெஞ்சைப் பற்றிக்கொண்டு அமர்ந்துவிட்டனர், சாகித்தியனின் பெற்றோர். அஜையோடுதான் பிரச்சனை என்றால் அதற்கும் முதலுமா? கடவுளே, அவர்களின் மகள் அவ்வளவு கேவலமானவளா? போதாக்குறைக்கு இப்போது, அதற்குள் மகனும் சிக்குண்டு நிற்கிறான்.
“ஐயா இங்க பாருங்க, இதை நான் வழக்காப் பதிவு செய்தா ரெண்டு தொடக்கம் அஞ்சு வருசம் தீரும். அதுவும், கடூழியச் சிறைத் தண்டனை. இப்ப, நான் என்ன செய்ய?” என்று வினவினான், எல்லாளன்.
என்ன சொல்வார்கள்? தம் வளர்ப்பில் முழுப் பிழையையும் வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்? இயலாமையுடன் அவனைப் பார்த்தார், சாகித்தியனின் அப்பா.
அவனுக்கு அவர்கள் மீதும் கோபம் உண்டாயிற்று. “என்னை ஏன் ஐயா பாக்கிறீங்க?” என்றான் சினத்துடன். “பிள்ளைகளை ஒழுங்கா வளக்காம விட்டுட்டு இப்பிடித்தான் ஒவ்வொருத்தரிட்டயா கெஞ்சிக்கொண்டு நிப்பீங்களா?” என்று சீறினான்.
எதற்கும் வாய் திறக்கவில்லை அவர். கண்கள் கலங்க அப்படியே அமர்ந்திருந்தார்.
“கண்ணுக்குத் தெரியிற உடம்பு பலமா இருக்கோணும், நோய் நொடி வந்திடக் கூடாது எண்டு பாத்து பாத்துச் சத்தான சாப்பாட்டப் போட்டு பிள்ளைகளின்ர உடம்ப வளத்துவிடுற அம்மா அப்பா, அந்தப் பிள்ளைகளின்ர கண்ணுக்குத் தெரியாத மனதைப் பற்றி யோசிக்கிறதே இல்ல. யோசிக்கிறது எல்லாம் அழ வச்சிடக் கூடாது, கவலைப்பட விட்டுடக் கூடாது, இல்லை எண்டு சொல்லிடக் கூடாது, பேசினா தண்டிச்சா நொந்து போயிடுவினம் எண்டு மட்டும் தான். பாசமா வளக்கிறம் எண்டுற பெயர்ல முதுகெலும்பே இல்லாத, பலவீனமான மனது உள்ள பிள்ளைகளைத்தான் வளத்து விடுறது. ஒரு அவமானத்தைத் தாங்கேலாது, ஒரு தோல்வியத் தாங்கேலாது, ஒரு பிரச்சினை வந்தாத் தைரியமாக் கையாளத் தெரியாது, சின்னதா ஒரு விமர்சனத்தைக் கூடத் தாங்கிறதுக்குத் தைரியம் இல்ல. எல்லாப் பிள்ளைகளுக்கும் உடம்பு மட்டும் தான் தடிமாடு மாதிரி வளந்து நிக்குது. மனங்கள் வளரவே இல்ல, திடமாவும் இல்ல. ஒரு சின்ன மழைக்கே கரைஞ்சு போற மண்சுவர் மாதிரித்தான் பிள்ளைகளின்ர மனதை மாத்தி வச்சு இருக்கிறீங்க.” என்றவனின் சீற்றத்தில் அழக்கூட முடியாமல் உறைந்திருந்தனர் இருவரும்.
“உடற்பயிற்சி கடுமையா செய்தா எப்பிடி உடம்பு, ‘பிட்’ டா இருக்குமோ அப்பிடி மனங்களுக்கும் கடுமையான பயிற்சிகள் வேணும். அதுக்குத் தோல்விகள், அவமானங்கள், மறுப்புகள் எல்லாம் சரியான முக்கியம். அதைப் பிள்ளைகளுக்குக் குடுங்க. பிரச்சினைகளுக்கு முகம் குடுக்க குடுக்கத் தான் தைரியமும் தன்னம்பிக்கையும் வரும். அத விட்டுப்போட்டு, வெயிலும் படாம, மழையும் விழாம வீட்டுக்கையே வச்சிருந்தா, வெளி உலகம் தெரியாத பிள்ளை, நான் தைரியமானவள் துணிவானவள் எண்டு அசட்டுத்தனத்தோட வெளில வந்து, ஒரு சின்னப் பிரச்சினை எண்டதும் அதை எதிர்கொள்ள முடியாம தவறான முடிவுக்குத்தான் போகும்.” யார் மீதிருந்த கோபத்தை யார் மீது தீர்த்தானோ தெரியாது, இப்போதெல்லாம் அவன் மனதை அழுத்தும் கோபத்தை எல்லாம் வெளியேற்றி இருந்தான்.
ஆணும் பெண்ணுமாக இரண்டு குழந்தைகள். நல்ல நிலையில் சம்பாதிக்கும் பெற்றோர். அழகான குடும்பம். அந்தப் பிள்ளைகள் படித்து முடித்து, நல்ல உத்தியோகம், நல்ல வாழ்க்கை என்று போயிருந்தால் இந்தக் குடும்பத்தின் நிலை எப்படி இருந்திருக்கும்? இன்று, அது தலை கீழாக மாறி எப்படியாகிப்போய் நிற்கிறது?
வாழ்க்கையில் யோசிக்கவே யோசிக்காத ஒன்று நடந்துபோனால் தான் என்ன? எதிர்பாராத சூழ்நிலைகளை எதிர்த்து நிற்கிறபோதுதானே வாழ்க்கை சுவைக்கும். என்னால் முடியவே முடியாது என்று நினைக்கிற ஒன்றை, முடித்துவிட்டுத் திரும்பிப் பார்க்கையில் மனம் எப்படிச் சந்தோசத்தில் விம்மும்? கடக்கவே முடியாத சூழ்நிலைகளைக் கடந்த பிறகு கிடைக்கிற பூரிப்புக்கு இணையானது ஒன்று உண்டா என்ன? அதெல்லாம் வேண்டாமா இவர்களுக்கு? மனம் கொந்தளித்தது அவனுக்கு.
இப்படி ஒரு வெடிப்பை அவனிடம் கதிரவனே எதிர்பார்க்கவில்லை எனும்போது மற்ற மூவரும் வாயைத் திறக்கவே பயந்தனர்.
“சொல்லுங்க, இப்ப நன் என்ன செய்ய?”
பெற்றோரிடம் பதிலே இல்லை. மீண்டும் உயிருடன் மடிந்திருந்தனர். கட்டிய கோட்டைகள் அத்தனையும் மண்ணோடு மண்ணாகப் புதைந்து, அதன் சுவடே இல்லாமல் போயிருந்தது. அவர்களின் மனது, இனி என்ன ஆனாலும் சரிதான் என்கிற விரக்தியின் விளிம்பு நிலைக்கு வந்திருந்தது.
“சேர், இனி நான் எப்பவும் இப்பிடிச் செய்ய மாட்டான்!” மெல்லிய குரலில் முணுமுணுத்தான் சாகித்தியன்.
“உன்னை என்னை நம்பச் சொல்லுறியா?” கோபத்துடன் வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான் எல்லாளன்.
“இல்ல சேர். இனி நீங்க என்ன நம்பலாம். அம்மா அப்பாக்குத் தெரிஞ்சா தாங்க மாட்டினம் எண்டுதான்…” என்றவனை மேலே பேசவிடப் பொறுமையற்று, “இப்ப தெரிஞ்சிட்டுது தானே. என்ன நடந்தது?” என்று சீறினான்.
அதுதானே? தாங்கிக்கொண்டு இருக்கிறார்கள் தானே. அதை வெளியே சொல்லப் பயந்துகொண்டு நின்றான் சாகித்தியன்.
“நீயா எல்லாத்துக்கும் ஒரு முடிவை எடுக்காத சாகித்தியன். முதல் கேக்கேக்க அதிர்ச்சியாத் தான் இருக்கும். ஆனா, ரெண்டு நாளில எல்லாத்தையும் கடந்து வருவினம். இண்டைக்கு நான் செய்ததை அண்டைக்கு நீ செய்திருந்தா இந்த விசயம் இவ்வளவு பெருசாகி இருக்காது. அம்மா தாங்க மாட்டா, அப்பா தாங்க மாட்டார், மானம் போயிரும், மண்ணாங்ககட்டி போயிடும் எண்டு நீயா ஒரு முடிவை எடுத்திட்டு, முட்டாள் தனமான காரியங்கள் செய்றத இனியாவது நிப்பாட்டு. இல்ல..” என்றவன் வேறு பேசாமல் பார்த்த பார்வையில் அப்படியே உறைந்துபோனான், சாகித்தியன்.
அவனின் பெற்றோரின் புறம் திரும்பினான் எல்லாளன். “இவனை நான் இங்கயே விட்டுட்டுப் போறன். இவனை நான் பாக்கேல்லை, இவன நான் பிடிக்கேல்ல. ஒண்டுமே நடக்க இல்ல, சரியா. அப்பிடியே நீங்களும் இருங்க. ஆனா, இவனை மிரட்டினவங்கள் திரும்பவும் மிரட்டலாம். போட்டோ, வீடியோ எண்டு அனுப்பலாம். இவன் மசியாட்டி அடுத்தக் கட்டமா உங்களிட்ட கூட வரலாம். உங்களின்ர பயம் தான் அவங்களின்ர ஆயுதமே. தயவு செய்து அப்பிடி ஏதாவது நடந்தா என்னட்ட வாங்க. இல்ல, திரும்பவும் இப்பிடி ஏதாவது வேல பாப்பீங்களா இருந்தா, இப்ப விட்டுட்டுப் போறதுக்கும் சேர்த்துத் தண்டனை தருவன்!” அழுத்தம் திருத்தமாகக் உரைத்து விட்டு அங்கிருந்து வெளியேறினான்.