தன்னுடைய அறையில் சரிந்திருந்தாள், ஆதினி. பொழுது, நள்ளிரவைத் தாண்டிக்கொண்டு இருந்தது. உடல், மனம் இரண்டுமே களைத்துச் சோர்ந்து போயிருந்தது. திறந்திருந்த யன்னலின் வாயிலாக உள் நுழைந்து, உடலைத் தழுவிய மென் குளிர் காற்று, மெலிதாகத் தாலாட்டிய போதும் உறக்கம் வந்து தழுவமாட்டேன் என்றது.
இந்த ஒரு நாளில் மாத்திரம், அவளுக்குத் தெரிந்த மனிதர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் புதிதாக அறிந்த ஒவ்வொரு விடயமும் பெரும் நிர்வாக அவளுக்குள் இறங்கி இருந்தது.
சம்மந்தன் அங்கிளின் நிலை, அதற்கான காரணம், மிதிலாவின் அன்னையின் நிலை, அதற்குக் காரணமான மிதிலா என்று எல்லாமே திகைப்பைத்தான் உண்டாக்கி இருந்தன.
அதுவும், மிக மிக மென்மையான மிதிலாவின் இருண்ட கடந்தகாலம் மிகுந்த திகைப்பைக் கொடுத்திருந்தது.
அவர்கள் மூவரையும் தாங்கும் அவளின் காண்டீபன் அண்ணா உண்மையிலேயே பெரு மதிப்பிற்கு உரியவன்.
உயிர் நண்பனுக்காக, அவனின் எதிர்காலத் துணைவி என்று அறிந்த ஒரு பெண்ணைத் தேடி தேடி வந்து பழகி இருக்கிறானே. அவளில் தன் நண்பனைக் கண்டிருக்கிறான். அவளின் வாயைப் பிடுங்கி, எல்லாளன் பற்றிய விசயங்களை அறிந்திருக்கிறான். அதுதான், அவனின் பெரும் தாகமாக இருந்திருக்கிறது. நண்பன் மீது எத்தனை அன்பிருந்தால் இப்படி எல்லாம் செய்வான். தந்தையைத் தாயாகத் தாங்கும் தனயன், மாமியை அன்னையாக தோள் சாய்க்கும் மறுமகன், மனைவிக்கு அருமையான துணைவன், அவளுக்குக் கூட அருமையான சகோதரன் என்று அவன் கொண்ட வடிவங்கள் தான் எத்தனை?
விளையாட்டாகத்தான் சட்டம் கற்க ஆரம்பித்தாள். அதன்மீது ஒருவித ஈடுபாட்டையும் தீவிரத்தையும் வரவைத்தவன் அவன் தான். இல்லையானால் பெயருக்கு ஒரு பட்டத்தை வாங்கி விட்டு, அடுத்த வேலையைப் பார்க்கப் போயிருப்பாள்.
என்ன இருந்தாலும் அவளுக்கு அவளின் காண்டீபன் அண்ணாவின் மீது செல்லக் கோபம் ஒன்று பெரிதாக உண்டு. அதற்கு முதலில் அவனை வெளியே கொண்டு வரவேண்டும். பிறகு இருக்கிறது அவனுக்கு!
உதட்டோரம் முறுவல் அரும்ப புரண்டு படுத்தாள். காண்டீபன், அவனின் நண்பனை நினைவூட்டினான். அதுவும், இன்றைக்கு அவன் கடைசியாகச் சொன்னவை. அந்த நிமிடத்தில், அவன் பால் அவள் மனது உருகி வழியும் மெழுகாகக் கரைந்து தான் போனது. வார்த்தைகளே அற்றுப்போன நிலை. நல்ல காலம், அகரன் வந்து காப்பாற்றி இருந்தான். ஆனால், அவனுக்குள் இருக்கும் கோபத்துக்கும் கொதிப்புக்கும் பின்னே துணை தேடும் சிறுவன் ஒருவனும் இருக்கிறான் என்பதை, இன்று தான் அறிந்துகொண்டாள்.
***************
காண்டீபனைச் சந்திப்பதற்காகக் காலையிலேயே எழுந்து தயாராகிக்கொண்டு இருந்தாள், ஆதினி. என்றைக்குமே, அவனைச் சந்திக்கப் போகிறோம் என்றாலே உற்சாகம் பொங்கும். உதட்டோரம் சிரிப்பு மின்னும். அந்தளவில் பேச்சு, செயல், பார்வை என்று அணைத்தாலும் சீண்டி, அவளை ஒருவழியாக்கி விடுவான். அப்படியானவனை இன்றைக்கு, எப்படி சிறைக் கம்பிகளுக்கப்பால் பார்க்கப் போகிறாள்? நினைக்கையிலேயே நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது.
‘இன்னும் கொஞ்ச நாள் தான் அண்ணா. நீங்க வெளில வந்திடுவீங்க.’ மனம் சொல்ல, கைபேசி, ஸ்கூட்டியின் திறப்பு, பேர்ஸ் அனைத்தையும் எடுத்துக்கொண்டு கீழே இறங்கினாள்.
“அத்த!” இவளைக் கண்டுவிட்டு ஓடி வந்தாள், மகிழ்.
ஆதினியின் முகம் நொடியில் மலர்ந்துவிட்டது. விறுவிறு என்று படிகளில் இறங்கி வந்து, “அம்முக்குட்டி, விடிய வெள்ளனவே எழும்பியாச்சோ?” என்று, அள்ளிக் கொஞ்சியவளின் காதில், ‘கல்லூரி மாணவர்களுக்குப் போதைப் பொருட்களை விநியோகம் செய்த, யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் காண்டீபன் சம்மந்தன், காவல்துறையினால் நேற்றுக் கைது செய்யப்பட்ட நிலையில், இன்றைக்கு, போதைத் தடுப்புப் பிரிவின் குற்றவியல் விசாரணை திணைக்களத்தின்(Criminal Investigation Department) கீழ் மாற்றப்பட்டார்.’ என்கிற செய்தி, பெரும் இடியாக வந்து விழுந்தது.
விழுக்கென்று திரும்பியவள், வேகமாகத் தொலைக்காட்சியின் முன்னே சென்று நின்றாள். இதயம் படபடவென்று அடித்துக்கொள்ள ஆரம்பித்தது.
‘எதிர்காலச் சந்ததியினருக்கு, முன்னுதாரணமாகவும் வழிகாட்டியாகவும் இருக்க வேண்டிய, ஒரு விரிவுரையாளரின் மோசமான இச்செய்கையினால், பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் கொடுத்த முறைப்பாட்டின் பெயரில், இரகசியமாக விசாரணையை மேற்கொண்ட போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானதை அடுத்து, விசாரணைக்காக, சி.ஐ.டியினரின் தடுப்புக் காவலுக்கு மாற்றப் பட்டிருக்கிறார்.’ என்கிற செய்தியின் பின்னே, கைகளில் விலங்கிடப்பட்டு, காவல் நிலையத்தில் இருந்து வெளியே அழைத்து வரப்படும் காண்டீபனைத் திரும்ப திரும்பக் காட்டிக் கொண்டிருந்தனர்.
துடித்துப் போனாள், ஆதினி. விழிகள் அதுபாட்டுக்கு மளுக்கென்று நிறைந்து வழிந்தது. கம்பீரமும் களையும் மிகுந்து, அவள் மிகுந்த உயரத்தில் வைத்துப் பார்த்த மனிதன், இன்றைக்கு, முகம் கருத்து, உணர்வுகளை மறைத்துக் கொண்டு நின்றான். நெஞ்சு துடித்தது. ‘ஹோ’ என்று உள்ளம் ஓலமிட்டது.
‘மூன்று வருடங்களுக்கு முன்னர், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி, உயர் மன அழுத்தத்துக்கு ஆளாகி, தற்கொலை செய்துகொண்ட கல்லூரி மாணவியின் தற்கொலையின் பின்னாலும் காண்டீபன் சம்மந்தன் இருக்கலாம் என்கிற, வலுவான சந்தேகத்தின் அடிப்படையிலும் விசாரணை தொடரும் என்று, போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் குற்றவியல் திணைக்கள அதிகாரி தெரிவித்துள்ளார்…’ என்று தொடர்ந்த செய்தி, ஆதினியின் தலையில் பெரும் இடியாகவே இறங்கிற்று.
பணிக்குச் செல்வதற்குத் தயாராகி வெளியே வந்த அகரனும் செய்தியைக் கேட்டு அப்படியே நின்றுவிட்டான். அவன் புருவங்கள் சுருங்கிற்று. வழக்கின் திசையே மாறிப் போயிற்றே. அதைவிட, இது எல்லாம் ஒற்றை இரவில், எப்படி மாறிப் போனது? அதைவிட, தொலைக்காட்சியில் செய்தி வரும் அளவுக்கான இந்த வேகம், என்னவோ சரியில்லை என்று சொல்லிற்று. எல்லாளன் மூலம் அனைத்தையும் அறிந்திருந்தவன் வேகமாகத் திரும்பி, ஆதினியைப் பார்த்தான்.
யாரையும் கவனிக்கும் நிலையில், அவள் இல்லை. சி.ஐ.டியினர் கொண்டு செல்வதற்கிடையில் காண்டீபனைப் பார்த்தே ஆகவேண்டும். என்ன நடந்தது என்று அறிந்தே ஆகவேண்டும் என்கிற அவசரத்தில், தன்னுடைய பொருட்களை எடுத்துக்கொண்டு ஓடினாள்.
“ஆதி நில்லு, நான் கூட்டிக்கொண்டு போறன்!” அகரனின் அவசரக் குரல் அவளை எட்டவே இல்லை.
என்னவோ பெரிய தீவிரவாதியைச் சிறைப் பிடித்தது போன்ற காட்சியைக் கட்டமைக்க முயன்றவர்களாக, இரண்டு பக்கமும் இவ்விரண்டு காவல்துறையினர் வர, நடுவில் விலங்கிடப்பட்ட நிலையில் காண்டீபன் அழைத்து வரப்பட்ட காட்சியே, கண்களுக்குள் நின்றது. இந்த எல்லாளன் எங்கே போனான்? அவள் மனது அவன் மீது சினம் கொண்டது.
‘கடவுளே! எப்பிடியாவது அண்ணாவைப் பாத்திடோணும். நான் இருக்கிறன், பயப்பிடாதீங்க எண்டு சொல்லோணும்.’ அவளின் மனம் பரிதவித்தது. வழக்கு மிகப் பெரியது என்றால், குணசேகரன் மாமாவை இங்கே வரவழைத்தாவது வழக்காட, அவள் தயார். அதை முதலில், காண்டீபன் அண்ணாவுக்குச் சொல்ல வேண்டும்; நம்பிக்கையைக் கொடுக்க வேண்டும். மிதிலாக்கா, சம்மந்தன் மாமா இருவரினதும் நிலை? நேற்றே அப்படித் துடித்தார்களே!
மனம் தவித்துத் துடிக்க, அவள் அங்குச் சென்று சேர்ந்தபோது, அந்தச் சூழலே மிகுந்த பதட்டத்தில் இருந்தது. எல்லோர் முகத்திலும் ஒருவிதத் தீவிரம். பத்திரிக்கை தொலைகாட்சி நிருபர்கள் குவிய ஆரம்பித்திருந்தனர். அவசர நிலை ஒன்று பிரகடனப் படுத்தப் பட்டது போன்று, அங்கும் இங்குமாக காவல்துறை ஆட்கள் நடந்துகொண்டிருந்தனர். இந்தளவில் அப்படி என்ன பெரிதாக நடந்துவிட்டது? ஒன்றுமே விளங்கவில்லை அவளுக்கு. வாசலில் நின்ற, கைதிகளை அழைத்துச் செல்லும் வாகனம் நடுக்கமூட்டியது.