அப்போது, படக்கென்று கதவைத் திறந்துகொண்டு வந்தான், அவள் கணவன். பதறியடித்துக்கொண்டு எழுந்து அமர்ந்தாள், தமயந்தி. அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, அங்கிருந்த தொலைக்காட்சியை உயிர்ப்பித்தான், அவன். அதில், செய்தியைப் போட்டுவிட்டு ரிமோர்ட்டை கட்டிலில் தூக்கிப் எறிந்துவிட்டுப் போனான்.
குழப்பத்தோடு தொலைக்காட்சியைப் பார்த்தவளின் விழிகள், அதில் சொன்ன செய்தியைக் கேட்டு விரிந்து போயிற்று. அவளின் பெயர் வரவேயில்லை. ஆனால், காண்டீபன் கைதாகியிருந்தான். மனதில் மெல்லிய மகிழ்ச்சி. அவள் வாழ்க்கையையே சிதைத்தவனைக் கணவன் சும்மா விடவில்லை. வேண்டும்! அவனுக்கு இன்னும் வேண்டும்! அந்த அஞ்சலி கூட நம்பவைத்துக் கழுத்தை அறுத்துவிட்டாளே. அல்லது, அவளுக்கும் தெரியாதா? அவளும் தானே இவளோடு சேர்ந்து லொலி சாப்பிட்டாள். கணவன் அவளின் கைப்பேசியைக் கையகப் படுத்தியிருந்ததில் அஞ்சலியோடு பேசமுடியாமல் போயிற்று.
*****
பொழுது மாலையை நெருங்கி இருந்தது. காண்டீபனின் வீட்டின் முன்னே பைக்கை கொண்டுவந்து நிறுத்தினான், எல்லாளன். காவலுக்கு நின்றவர் இவனைக் கண்டதும் ஓடிவந்தார்.
“சந்தேகப் படுறமாதிரி ஏதும் நடமாட்டம்?”
“அப்பிடி எதுவும் கண்ணில படேல்ல சேர்.”
“ஓ..” என்று கேட்டுக் கொண்டவனின் விழிகள் சுற்றுப் புறத்தை வலு கூர்மையுடன் ஆராய்ந்தது. திடீரென்று நடப்பவற்றின் பின்னே பெரும் ஆபத்து இருப்பதாக இன்று முழுக்க, அவனுடைய உள்ளுணர்வு உணர்த்திக்கொண்டே இருந்தது. அவ்வப்போது ஆதினிக்கு அழைத்து, அவர்களின் நிலவரம் அறிந்துகொண்டு தான் இருந்தான். அசம்பாவிதமாக எதுவும் நடக்காதபோதும் அவனால் அமைதியாக இருக்க முடியவில்லை. ஒருமுறை நேரிலும் பார்த்துவிட்டுச் செல்வோம் என்று தான் வந்தான். “எண்டாலும் கவனமா இருங்க. புதுசா ஆர் வந்தாலும் உள்ளுக்கு விடாதீங்க. உங்களுக்குத் தெரியாம ஆரும் வெளில போகவும் வேண்டாம். சின்னதா சந்தேகமா இருந்தாலும் எனக்கு உடனேயே சொல்ல மறக்காதீங்க.” என்றுவிட்டு உள்ளே நடந்தான்.
அந்த வீட்டைப் பார்த்ததுமே மனம் நண்பனின் நினைவில் பாரமாகியது. இரண்டு நாட்களுக்கு முன் வரையிலும் அவன் வாழ்ந்த வீடு. இன்றைக்கு, அவன் வரவுக்காய்க் காத்திருக்கிறது. அதற்குள், பைக் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்த ஆதினி, இவன் என்றதும் ஓடிவந்தாள்.
“காண்டீபன் அண்ணாவைப் பற்றி ஏதும் தெரிஞ்சதா?” விழிகளில் பெரும் எதிர்பார்ப்புடன் வினவினாள்.
இல்லை என்று மறுத்துத் தலையசைத்தவனின் பார்வை அவளில். அழுததில் சிவந்திருந்த முகம், சோர்ந்திருந்தது. தலை கலைந்து, உடை கசங்கி அவள் அவளாகவே இலை.
“நீ ஏன் இப்பிடி இருக்கிறாய்? போய் முதல் முகத்தைக் கழுவிக்கொண்டு வா!” என்றவனுக்குப் பதில் சொல்லாமல் அவனைப் பார்த்தாள், ஆதினி. இன்னுமே காக்கி உடையில் தான் இருந்தான். அளவுக்கதிகமாக அலைந்ததின் வெளிப்பாடாகக் களைத்து, அன்றைய நாளின் வெயில் முழுவதையும் முகத்தில் வாங்கியதற்குச் சான்றாகக் கறுத்து, களைத்துத் தெரிந்தான்.
“மிதிலாவும் மாமாவும் எப்பிடி இருக்கினம்?”
“இருக்கினம்.” சோர்வுற்ற குரலில் சொன்னாள், ஆதினி. அறைக்குள் இருந்த கட்டிலில் சுருண்டு கண்ணீர் உகுக்கும் மிதிலா, இரத்தப்பசை இழந்த முகத்தோடு நிரந்தரமாக விழிகள் மூடிச் சாய்ந்திருந்த சம்மந்தன், நடப்பது எதுவும் தெரியாமல் தானே சிரித்துத் தானே பேசும் மிதிலாவின் அன்னை என்று, அவர்களைப் பற்றி என்ன சொல்வது என்று அவளுக்குத் தெரியவில்லை.
இவனைக் கண்டதும் விழிகளைத் திறந்து பார்த்தார், சம்மந்தன். எதுவும் கேட்கவில்லை. ஆனால், அவரின் விழிகளில் பெரும் காயத்தின் வலி தெரிந்தது. வேகமாகச் சென்று அவரின் அருகில் அமர்ந்து, அவரின் கையைப் பற்றிக்கொண்டான், எல்லாளன்.
அந்தப் பற்றலில் மகனை உணர்ந்தார் போலும். “உனக்காக எவ்வளவோ ஏங்கினவன் என்ர பிள்ளை. இண்டைக்கு நீ வந்திட்டாய். ஆனா, அவன் இல்ல.” என்றார்.
கூர் ஆயுதம் ஒன்று ஈட்டியாய் நெஞ்சுக்குள் பாய்ந்த உணர்வு எல்லாளனுக்கு. என்ன சொல்லுவான்? திரும்பி ஆதினியைப் பார்த்தான். கண்ணீரை விழிகளுக்குள் இறுக்கிப் பிடித்தபடி நின்றிருந்தாள், அவள். அங்கே, அறையின் வாசலில் வந்து நின்றிருந்த மிதிலாவும் பட்டாள். அழுதழுது பார்க்கவே முடியாத அளவில் முகம் சிவந்து வீங்கியிருந்தது.
“நான் விசாரிச்ச வரையில இப்ப வரைக்கும் அவனுக்கு எந்தப் பிரச்சினையும் இல்ல, மாமா. குறைஞ்சது 14 நாள் விளக்கமறியலில வச்சிருக்கலாம். பிறகு கோர்ட்டுக்கு கொண்டுவந்தே ஆகவேணும். அங்க வச்சுப் பாப்பம்.” மிதிலாவின் கண்களில் தெரிந்த கேள்விக்குச் சம்மந்தனிடம் பதில் சொன்னான்.
இன்னும் 14 நாட்கள். பிறகும் அவனுக்கு என்னாகும் என்று தெரியாது? மீண்டும் விழிகள் நிறைந்துவிட அறைக்குள் மறைந்துகொண்டாள், மிதிலா.
அப்படியே சிலைபோல் அமர்ந்திருந்தான், எல்லாளன். எல்லோரும் அவன் முகம் பார்க்கிறார்கள். அவன் யார் முகத்தைப் பார்ப்பது? தன் கையாலாகா நிலையை எண்ணி மனம் கசந்து வழிய, “வாங்க மாமா, பாத்ரூமுக்கு போயிட்டு வருவம்.” என்று, அவரை அழைத்துச் சென்று அவரின் தேவைகளைக் கவனித்தான். உடல் கழுவி, உடை மாற்றி அவரை மீண்டும் கட்டிலில் விட்டுவிட்டு வெளியே வெளியே வந்தான். விழிகள் அது பாட்டுக்கு அந்தக் காணியைச் சுற்றி வந்தது.
முழுச் சோலை. பாக்கு, தென்னை, தோடை, வாழை, பலா, அன்னமுன்னா, மாதுளை என்று இல்லாத மரங்களே இல்லை. அத்தனையும் காண்டீபனின் வேலையாகத்தான் இருக்கும். சிறு வயதில் இருந்தே இதெல்லாம் அவனுக்கு மிகவும் பிடித்தமானவை. வெயிலும் அடங்கி இருந்ததில் வீசும் காற்றும் சோலையின் குளிர்மையும் சேர்ந்து மனதை சற்றே அமைதி படுத்த முயன்றது. கிணற்றடியைக் கண்டுவிட்டு அங்கு நடந்தான். டேங்கில் இருந்த தண்ணீரில் முகத்தை அடித்துக் கழுவினான். அதற்குள், ஒரு துவாயோடு ஓடிவந்தாள், ஆதினி.
அவன் வாங்கி முகத்தைத் துடைக்க, “சாப்பிட்டீங்களா?” என்றாள்.
அன்றைய நாள் விடிந்ததில் இருந்து, பச்சைத் தண்ணீர் கூட எல்லாளனின் வயிற்றுக்குள் போகவில்லை. அதன் நினைவும் இருக்கவில்லை. மாதவன், அஞ்சலி, சாகித்தியன் என்று எல்லோரையும் எச்சரித்து, சி.ஐ.டியினரின் விசாரணைகளுக்கு எப்படிப் பதில் சொல்லவேண்டும் என்பதை அறிவுறுத்தி, அந்தப் பத்து மாணவர்களையும் ஆராய்ந்து முடித்தபோது அன்றைய நாளே முடிந்து போயிற்று. இதில், எங்கே சாப்பிட? முதல், பசி என்கிற ஒரு உணர்வே அவனுக்குள் இல்லை. நண்பனே தொண்டைக் குழிக்குள் நின்றுகொண்டிருந்தான்.
“நீங்க எல்லாரும் என்ன செய்தீங்க?” என்று, அவன் வினவினான்.
“அண்ணாவும் அண்ணியும் சாப்பாடு கொண்டு வந்து தந்தவே. இரவுக்கும் கொண்டுவாறன் எண்டு சொன்னவா அண்ணி.”
அவன் திரும்பி அவளைப் பார்த்தான். அவன் கையில் இருந்த துவாயை வாங்கியபடி, “இரவுக்கும் இங்கேயே தங்குவம் எண்டு நினைச்சன். அவே மூண்டு பேருக்குமே உதவி தேவ. தனியா சமாளிக்க மாட்டினம்.” என்றாள்.
மாமாக்கு இவளால் எப்படி உதவ முடியும்? அதோடு, அவளையும் சேர்த்து இங்கே தனியாக விட அஞ்சினான். “இப்ப திரும்ப ஒருக்கா ஸ்டேஷன் போகவேணும். போயிட்டு நானும் வாறன்.” என்றான், அவன்.
அவள் சரி என்று தலையை அசைத்தாள். அவன் கேட்டை நோக்கி நடக்க, “சாப்பிட்டு போங்கோவன்.” என்றாள் அவசரமாக.
கையைத் திருப்பி நேரம் பார்த்தான், எல்லாளன். “நேரம் காணாது வந்து பாப்பம்.”
வந்தும் பார்க்கத்தான் போகிறானாம். “ரெண்டு நிமிசம் அந்தக் கொட்டிலுக்க இருங்க. நான் ஓடி வாறன்!” காண்டீபன், பிள்ளைகளுக்கு டியூசன் கொடுக்க என்று அமைத்திருந்த சிறிய கொட்டிலைக் காட்டி விட்டு, அவன் பதிலுக்குக் கூடக் காத்திருக்காமல் ஓடினாள், ஆதினி.
“ப்ச்! இவள் ஒருத்தி சொல்லுறதைக் கேக்காம!” சலித்தபடி சென்று அமர்ந்தவனுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்கிற யோசனை தான்.
அந்த மாணவர்களை எல்லாளன் நேரடியாக அணுகவில்லை. அது, அவர்களுக்கே ஆபத்தாக முடியலாம். இரண்டாவது, எதிராளி இன்னும் புதுச் சதித் திட்டங்களைத் தீட்ட முனையலாம். அதைவிட, காண்டீபன் அவர்களின் கையில் இருப்பதால் இவன் எடுத்து வைக்கிற ஒவ்வொரு காலடியையும் மிகுந்த கவனத்தோடு எடுத்து வைக்க வேண்டி இருந்தது. என்ன தான் நேர்மை, நியாயம், மனச்சாட்சி என்று அவர்கள் உயிரைக் கொடுத்து வேலை பார்த்தாலும் பணத்துக்கு வேலை பார்க்கும் கூட்டம் எங்கும் உண்டு தானே. இல்லாமல், அவனின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் காவல் நிலையத்தில் நடந்தவை எப்படி வெளியில் போனது?
இதற்குள் உணவைக் கொண்டுவந்து தந்தாள், ஆதினி.
“நீ சாப்பிட்டியா?”
“ம்ம்..” அந்தக் கொட்டிலுக்குள் மூன்று வரிசையில் நீண்ட மேசைகளும் வாங்கில்களும் அடித்திருந்தான், காண்டீபன். அதில் ஒன்றில் எல்லாளன் அமர்ந்திருக்க, அவன் முன்னால் இருந்த மேசையில் உணவை வைத்தவள் அதற்கு முன்னால் இருந்த வாங்கிலில் இவனைப் பார்ப்பது போல் திரும்பி அமர்ந்தபடி சொன்னாள்.
“மிதிலாவக் கொஞ்சம் கவனி. இனி அழுறதால ஒண்டும் வராது. தைரியமா இருக்கோணும். நடக்கிறத ஏற்கிற மனநிலைக்கு வரவேணும் எண்டு சொல்லு. நீயும் தான். சும்மா சும்மா அழுதுகொண்டு இருக்காத.”
அவள் ஒன்றும் சொல்லவில்லை. அவன் சொல்வதைக் கேட்டுக்கொண்டாள். “எனக்குக் காண்டீபன் அண்ணான்ர கேஸ் பைல் வேணும்.” அவன் சாப்பிட்டு முடியும் தருவாயில் சொன்னாள்.
“ம்ம்..” இரவுக்கு இதைப்பற்றி அவளோடு பேசுவோம் என்று எண்ணிக்கொண்டு, உணவை முடித்ததும் புறப்பட்டான். “மாற்றுடுப்பு இருக்கா உனக்கு? இல்ல, இரவு வரேக்க எடுத்துக்கொண்டு வரவா?” என்றான் நினைவு வந்தவனாக.
அந்த நெருக்கடியான நிலையிலும் அவன் தன்னைக் குறித்து யோசித்து வினவியது மனதுக்கு இதம் சேர்க்க, “அண்ணி வரேக்க கொண்டு வாறன் எண்டு சொன்னவா.” என்றாள், ஆதினி.
சரி என்று புறப்பட்டுச் சென்றான், அவன்.
ஆதினிக்கு அவனை எண்ணியும் கவலையாயிற்று. அன்றைக்கு, சாயத் தோள் வேண்டும் என்று வாய்விட்டுக் கேட்டவன், இன்றைக்கு, அதையெல்லாம் மறந்து ஓடிக்கொண்டு இருக்கிறான். எப்போது தான் இளைப்பாறுவானோ? மனம் அவனுக்குத் துணையாய் இருக்க விரும்பிற்று.
சற்று நேரத்தில் இரவு உணவு கொண்டு வந்திருந்தாள், சியாமளா. அதை, அவர்கள் மூவருக்கும் கொடுத்து முடிப்பதிலேயே ஆதினி, சியாமளா இருவருக்கும் நேரம் ஓடிப் போயிற்று. மகிழினி இருப்பதால் அதற்குமேல் நிற்க முடியாமல் புறப்பட்டாள், சியாமளா.
இரவுக்கு வருகிறேன் என்ற எல்லாளன் இரவு பத்துத் தாண்டியும் வரவில்லை. மற்ற மூவரையும் உறங்குவதற்கு அனுப்பிவிட்டு மடிக்கணணியை எடுத்து வைத்துக்கொண்டு விழித்தே இருந்தாள், ஆதினி.
நேரம் பதினொன்றை நெருங்கும் வேளையில் தான் வந்தான், எல்லாளன். இப்போது, குளித்து உடை மாற்றியிருந்தான். அவள் அவன் முகம் பார்க்க, “என்ன எண்டாலும் நாளைக்குக் கதைப்பம். இப்ப நேரமாச்சு, போய்ப்படு. நான் நாளைக்கு நேரத்துக்கே போகோணும்!” என்றவன், முதலில் சம்மந்தனைக் கவனித்தான். அவரைப் படுக்கையில் விட்டுவிட்டு, டோர்ச் லைட்டை எடுத்துக்கொண்டு காணி முழுவதையும் சுற்றி வலம் வந்தான். அப்படியே, காவலுக்கு நின்றவரோடும் பேசிவிட்டு வந்து சம்மந்தனின் அருகில் ஆதினி விரித்துவிட்டிருந்த பாயில் சரிந்துகொண்டான்.
அதுவரையில், அறைக்குள் செல்லாமல் அவனையே பார்த்திருந்த ஆதினியும் ஒரு பெரிய மூச்சுடன் சென்று படுத்துக்கொண்டாள். உறக்கம் தான் வரமாட்டேன் என்றது.
இனி என்னாகும்? இந்தக் கேள்விக்கான பதில் குழப்பமாகவே இருந்தது. கேஸ் பைலை படித்தால் தான் அவளுக்கும் ஒரு தெளிவான பதில் கிடைக்கும். சொல்லிவிட்டும் கொண்டு வராத எல்லாளனைக் கோபிக்கவும் முடியவில்லை.
திடீரென்று வாசல் கதவை மிக மிக மெதுவாக யாரோ திறக்கும் சத்தம் கேட்டது. எல்லாளனாகத் தான் இருக்கும் என்பதில் சற்று நேரம் பொறுத்துப் பார்த்தாள். வெளியே போனவன் திரும்பி வந்ததற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை என்றதும் தானும் எழுந்து சென்று பார்த்தாள். நிலவின் ஒளியில் அந்தக் கொட்டிலில் அவன் தனியாக அமர்ந்திருப்பது தெரிந்தது.
அவனிடம் சென்றாள், ஆதினி.
“இங்க என்ன செய்றீங்க?”
“நித்திரை வரேல்லையா?” அவளின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் வினவினான், அவன்.
“கண்ணெல்லாம் எரியுது. ஆனாலும் நித்திரை வரேல்ல.” அன்றைக்கு அவன் கேட்ட ஆறுதலை இன்றைக்குக் கொடுக்கிறவளாக அவனருகில் அமர்ந்தபடி சொன்னாள், ஆதினி. அவனும் அதை உணர்ந்திருக்க வேண்டும். அதன் பிறகு அமைதியாகிப் போனான்.
திரும்பி அவனைப் பார்த்தாள், ஆதினி. அந்த இருளுக்குள் அவன் முகத்தைப் படிக்க முனைந்தாள். நெற்றியில் விரவியிருந்த சிந்தனை ரேகைகளும் சுழித்திருந்த புருவங்களும் அவன் இங்கில்லை என்று சொல்லிற்று.