கல்லூரியின் வாசலில் பெரும் பரபரப்பு. கேட்டைத் திறந்துகொண்டு ஒரு கும்பல் உள்ளே நுழைய முயன்றுகொண்டிருந்தது.
அவர்களை உள்ளே விடாமல் மாணவிகள் தம் கைகளைச் சங்கிலியாக்கித் தடுத்து நின்றபடி, “நாங்க விடமாட்டோம்! நீங்க என்னத்துக்கு இஞ்ச வாறீங்க! இது எங்கட பள்ளிக்கூடம். எங்கட பிரின்சிபல்தான் எங்களுக்குப் பிரின்சிபல்! வெளில போங்கோ!” என்று கூச்சலிட, நடையை மாற்றி அவர்களை நோக்கி ஓடினாள் பிரமிளா.
“பிள்ளைகள்! தேவையில்லாம பிரச்சனை செய்யாம தள்ளிப் போங்கோ! நீங்க சின்ன பிள்ளைகள். உங்களுக்கு ஒண்டும் தெரியாது!” என்று அதட்டிக்கொண்டிருந்தார் அவர்களில் ஒருவர்.
“மாட்டோம்! போகமாட்டோம்! நீங்க என்னத்துக்கு உள்ளுக்கு வாறீங்க? வெளில போங்கோ!” என்று நின்றனர் மாணவிகள்.
கழுத்தில் மாலையுடன் அழைத்துவரப்பட்டவர்தான் புதிய அதிபராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்று பார்த்ததுமே தெரிந்தது. அந்தக் கும்பலில் நிர்வாகசபையினருடன் அவர்களின் பள்ளிக்கூட ஆசிரியர்கள் சிலரும் நிற்கக் கண்டு மனம் வருந்தினாள் பிரமிளா.
கூடவே கரடு முரடான முகச்சாயலுடன் சிலரும் நிற்கக் கண்டு என்னவோ சரியில்லை என்று புரிந்துபோயிற்று.
அவள் அங்குப் போய்ச் சேருவதற்குள் அந்தக் கும்பல் எதைப் பற்றியும் யோசிக்காமல் மாணவிகளைத் தள்ளிக்கொண்டு உள்ளே வந்துவிட முயன்றுகொண்டிருந்தனர். பிள்ளைகளும் உறுதியாக நிற்க, தள்ளத் தொடங்கியவர்களின் கைகள் இடமறியாமல் மாணவிகளின் மீது படத்துவங்கிற்று.
பதறிப்போனாள் பிரமிளா!
ஓடிவந்து மாணவிகளின் முன்னே நின்றுகொண்டு, “இது என்ன காட்டுமிராண்டித்தனம்? நீங்கள் எல்லாம் படிச்ச மனுசர்தானே? படிக்கிற பிள்ளைகளிட்ட எப்படி நடக்கோணும் எண்டு தெரியாதா? பொம்பிளைப் பிள்ளைகளில என்ன தைரியத்தில் கை வைக்கிறீங்கள்! தள்ளி நில்லுங்கோ!” என்றவளின் பேச்சையோ, அவளுடன் நின்று எதிர்த்துக் கேள்வி கேட்ட மற்றைய ஆசிரியர்களின் குரலையோ அவர்கள் மதிப்பதாகவே இல்லை.
எப்படி உள்ளே நுழைவது என்று திட்டம் போட்டே வந்தவர்களாயிற்றே! “இதெல்லாம் அழகில்லை இராமச்சந்திரன்! இப்படிச் செய்யாதீங்கோ!” என்ற தனபாலசிங்கத்தின் பேச்சையும் காதில் வாங்கவில்லை.
“இப்ப வழி விடப்போறீங்களா இல்லையா!” மாணவர்கள் அவர்களைக் கடுமையாக எதிர்த்து நின்றதில், அவர்களிடம் இப்படியொரு பலமிருக்கும் என்று எதிர்பாராததில் ஆத்திரமடைந்த கும்பல் அவர்களைக் கால்களால் எட்டி உதைத்தனர். தள்ளி விழுத்தினர். அங்குநின்ற ஆசிரியர்கள் தடுத்தும் மூர்க்கமாகத் தாக்கினர்.
தடுமாறி, தள்ளுப்பட்டு, நிலத்தில் விழுந்து, காயப்பட்டு, நெரிசலுக்குள் மாட்டுப்பட்டு, அலறி என்று மாணவிகளின் வலியின் அலறலும் போராட்டக் குரல்களும் அந்த இடத்தையே நடுநடுங்க வைத்தன.
தனபாலசிங்கம் பதற பதறப் போராட்டமாக இருந்த ஒரு நிகழ்வு நொடியில் கலவரமாகிப் போயிற்று!
அதுவரை, இது பள்ளிக்கூடப் பிரச்சனை, நாம் தலையிடக் கூடாது என்று கவனிப்பாளர்களாக மட்டுமே நின்ற பெற்றவர்கள், தம் பிள்ளைகள் தாக்கப்படுவதைக் கண்டு ஆக்ரோசமாக உள்ளே நுழைந்து நடுவில் புகுந்தனர்.
அப்போதும் அடிபாடுகள் அதிகரித்தனவே ஒழிய பிரச்சனை தீர்ந்தபாடில்லை. அந்த இடமே அல்லோலகல்லோலப் பட்டது. ஆத்திரக் குரல்கள், ஆவேசக் குரல்கள், அழுகைக் குரல்கள், போராட்டக் குரல்கள், வேதனைக் குரல்கள் என்று எங்கும் சத்தம்!
யாராலும் யாரையும் அடக்க முடியவில்லை. அமைதிப்பூங்காவாய் அறிவின் வாசம் வீசிய அந்தக் கல்லூரி வளாகம் நொடியில் காடையரின் இருப்பிடம் போன்று மாறிய காட்சியைக் கண்டு இதயமே விண்டுவிடும் போலாயிற்று தனபாலசிங்கத்துக்கு.
அவர்களின் கடுமையைக் கண்டு துடித்தாள் பிரமிளா. பதறினாள். இப்படியெல்லாம் நடக்காதீர்கள் என்று கத்தினாள். மாணவிகள் தாங்கமாட்டார்கள் என்று கெஞ்சினாள். மாணவிகளை அவர்களிடமிருந்து பாதுகாக்க முயன்றாள். என்ன செய்தும் கலவரத்தை நிறுத்த முடியவேயில்லை.
அவள் மட்டுமல்ல அங்கிருந்த தனபாலசிங்கம், திருநாவுக்கரசு, பிற ஆசிரியர்கள், பெற்றோர்கள் யாரின் குரலையும் யாரும் கேட்பதாயில்லை. அப்படியொரு மூர்க்கம் தெரிந்தது அவர்களிடம்.
அன்று காலையில் மாணவிகளின் போராட்டம் ஆரம்பித்ததையடுத்து வாசலில் காவலுக்கு நிறுத்தப்பட்டுக் கடமையில் ஈடுபட்ட போலீசார் இதனைத் தடுக்க முன்வரவேயில்லை.
எப்படியோ மாணவிகளைத் தள்ளிக்கொண்டு வந்த இராமச்சந்திரன், தனபாலசிங்கத்தை நெருங்கி இருந்தார்.
என்ன மனிதனையா நீ? வலி நிறைந்த விழிகளோடு அவரைப் பார்த்தார் தனபாலசிங்கம்.
“இதுக்கெல்லாம் காரணம் நீங்கதான் சேர். நாங்க இல்ல! விடிய வந்து தன்மையா சொன்னோம். நீங்க கேக்கேல்லை. நீங்க போனாத்தான் இந்தப் பிள்ளைகள் அமைதியாகுவீனம். மரியாதையா வெளில நடவுங்கோ!” என்று கடுங்குரலில் இரைந்தார் இராமச்சந்திரன்.
அவமானத்தில் முகமெல்லாம் சிவந்து போயிற்று தனபாலசிங்கத்துக்கு. ‘ஒன்றும் வேண்டாம்! பட்டதெல்லாம் போதும்!’ அந்த நொடியே அந்த இடத்திலிருந்து போய்விடத் துடித்தவரின் உடல் ஒத்துழைக்காமல் நடுங்கிற்று. இன்னுமே அறுபது வயது கூடிவிட்டது போன்று தள்ளாடினார். தட்டுத் தடுமாறி எழுந்தவரை ஒருசில மாணவிகள் ஓடிவந்து பற்றிக்கொண்டனர்.
“எங்கட பிரின்சிபல் போகமாட்டார். நீங்க போங்கோ வெளில! சேர் நீங்க போகக்கூடாது. நாங்க விடமாட்டோம்!” என்று மாணவிகள் தனபாலசிங்கத்தைச் சுற்றிக்கொண்டு கைச் சங்கிலி அமைத்துத் தடுத்து நின்றனர்.
“விடுங்கோ பிள்ளைகள். நான் போறன். இந்தச் சண்டை சச்சரவு ஒண்டும் வேண்டாம்!” நலிந்த குரலில் உரைத்தவரின் பேச்சை அவர்கள் கேட்பதாயில்லை.
பிரச்சனை முடிகிறது என்று பார்த்தால் விடாமல் ஆரம்பிக்கிறார்கள் என்கிற சினத்தில் அங்கிருந்த ஒருவன், அவரைச் சுற்றி நின்ற மாணவிகளில் ஒருத்தியை பிடித்து இழுத்து எறிந்தான். அவள் மதில் சுவருடன் போய் மோதுப்பட்டு, “என்ர அம்மாஆ…!” என்று அலறியபடி மயங்கிவிழ துடித்துப்போனாள் பிரமிளா.
“அறிவு கெட்டவனே! மிருகமாடா நீ!” அவனிடம் சீறியவளை, “முதல் உன்னத்தான் வெளில தூக்கிப் போடோணும்!” என்றபடி, அவளையும் பிடித்துத் தள்ளிவிட்டான் அவன்.
அவனின் ஆவேசம் மிகுந்த வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாத பிரமிளா, தடார் என்று நிலத்தில் மோதுண்டு விழுந்தாள். ஒரு நொடி கண் மங்கி, தலை சுற்றிப் போயிற்று. சற்று நேரத்துக்கு இயங்கவே முடியவில்லை.
“ஐயோ மிஸ்! எழும்புங்கோ மிஸ்.” என்ற மாணவியரின் பதட்டத்தில் கண்களை மெல்லத் திறந்தவளுக்குக் கண்ணில் பூச்சிதான் பறந்தது.
இப்படித்தானே இந்தக் குழந்தைகளுக்கும் இருக்கும் என்கிற நினைவு வந்ததுமே தன் வலி மறக்க மாணவிகளை அவர்களிடமிருந்து பாதுகாக்க மீண்டும் ஓடினாள்.


