சூறாவளி வந்துவிட்டுப் போனபின்னும் அதன் எச்சங்களைச் சுமந்திருக்கும் நகரைப் போல, அவன் போனபின்னும் அவன் உண்டாக்கிவிட்டுப் போன தாக்கத்திலிருந்து வெளிவர முடியாமல் நின்ற இடத்திலேயே உறைந்து போயிருந்தாள் பிரமிளா.
தேகமெங்கும் காரணமறியா ஒரு நடுக்கம். இதயமோ டமார் டமார் என்று அடித்துக்கொண்டிருந்தது. அவனுடைய கர்ஜனை இன்னுமே செவிப்பறையை வந்து அறைந்துகொண்டிருப்பது போலொரு மாயை.
எத்தனை கடுமை மிகுந்த வார்த்தைகள்? எவ்வளவு தரமற்ற பேச்சுகள்? மனத்தில் கொதிப்பும் களைப்பும் சரிசமமாய் எழுந்துநின்று அவளைப் பந்தாடின. திருப்பிக் கொடுக்கமுடியாமல் போயிற்றே என்கிற ஆத்திரம் நெஞ்சை அடைக்க, பெரிய மூச்சு ஒன்றை இழுத்துவிட்டவளிடம் வேகமாக விரைந்து வந்தான் சசிகரன்.
“ஏன் மிஸ் ஒருமாதிரி இருக்கிறீங்க? என்னவாம் அந்தக் கௌசிகன்?”
அக்கறையோடு விசாரித்தவனிடம் எந்தப் பதிலையும் பிரமிளாவால் பகிரமுடியவில்லை. பேசும் நிலையிலேயே அவள் இல்லை. தொண்டையெல்லாம் வறண்டு அடைத்துக்கொள்ள வெறுமனே சசிகரனைப் பார்க்க மட்டுமே முடிந்தது.
அந்தப் பார்வையில் எதை உணர்ந்தானோ, “என்ன மிஸ்?” என்றான் மீண்டும்.
ஒன்றுமில்லை என்பதுபோல் மிகவுமே சிரமப்பட்டுத் தலையை அசைத்தாள் பிரமிளா.
அந்த அவனுடைய பெயர் கௌசிகன் என்பதே சசிகரன் சொல்லித்தான் தெரியவருகிறது. அதற்குள் அவளைப் பற்றி என்னவெல்லாம் சொன்னான்? அவளால் நிற்கக்கூட முடியவில்லை.
“சசி சேர். இப்ப என்னால எதுவுமே கதைக்கேலாம இருக்கு. நான் கொஞ்ச நேரம் ‘மீட்டிங் ஹோல்’ ல ஓய்வா இருக்கப்போறன். அதுவரைக்கும் பிள்ளைகளையும் அப்பாவையும் நீங்க பாப்பீங்களா? பிளீஸ்?” கனத்துப்போன குரலில் மிகவுமே சிரமப்பட்டு வார்த்தைகளை உதிர்த்து, விழிகளால் கெஞ்சியவளை மிகுந்த இரக்கத்துடன் பார்த்தான் சசிகரன்.
இந்தப் பள்ளிக்கூடத்தின் மீது மிகுந்த பற்றுக்கொண்ட பழகுவதற்கு இனிமையான பெண். எதையுமே விருப்பத்துடனும் முழு ஈடுபாட்டுடனும் செய்கிறவள். அப்படியானவள், நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த இரண்டு நாட்களாக என்ன பாடுபடுகிறாள் என்று அவனும் அருகிலிருந்து பார்த்துக்கொண்டுதானே இருக்கிறான். அப்படியிருக்க, அவள் கேட்பதைச் செய்யாமல் விடுவானா?
“இது என்ன கேள்வி மிஸ்? நீங்க வீட்டுக்குப் போயிட்டு நிம்மதியா நித்திரைகொண்டு நாளைக்கு விடிய வந்தாலும் சரிதான். உங்களுக்கும் சேர்த்து ரெண்டு மடங்கு கவனமா நான் பாக்கிறன்!” இதமாய்ச் சொன்னான் அவன்.
“இங்கேயே கொஞ்சம் ஓய்வா இருந்தா போதும்.” என்றுவிட்டு, தனபாலசிங்கத்தைச் சென்று பார்த்தாள்.
அவர் திருநாவுக்கரசுடன் பேசிக்கொண்டிருந்தார். அவர்களின் வயதை ஒத்த இன்னொரு ஆசிரியரும் அங்கே இருக்க, அவர்களின் முகத்தை ஆராய்ந்தாள். அந்த அவன் இங்கே வந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஆக அவனின் இலக்கு அவள்தான். மீட்டிங் ஹோலில் தனியாகச் சென்று அமர்ந்துகொண்டாள்.
கொஞ்ச நேரமாவது கண்களை மூடி உறங்குவோம் என்றால் முடியாமல் மனது அமைதியிழந்து தவித்தது. இத்தனை உக்கிரம் கொண்ட ஒரு கோப முகத்தை அவளின் வாழ் நாளில் இன்றுதான் எதிர்கொண்டிருக்கிறாள். இப்படியான வார்த்தைகளையும் இன்றுதான் செவிமடுத்திருக்கிறாள்.
என்னைப் பற்றித் தெரியாதவன் எதைச் சொன்னால்தான் எனக்கென்ன என்று எவ்வளவுதான் தன்னைத் தானே தேற்ற முயன்றும் முடியாமல் உள்ளம் சஞ்சலப் பட்டுக்கொண்டே இருந்தது.
கூத்தடிக்கிறாளாம், ஆட்களைப் பார்க்க வைப்பதற்காக இதைச் செய்கிறாளாம், பதவி வெறியாம் என்று எத்தனை அபாண்டங்களைச் சில நிமிடங்களுக்குள் சுமத்திவிட்டான்.
தலை பாராங்கல்லாகக் கனக்க அப்படியே மேசையில் சாய்ந்து கண் மூடியவளின் முன்னேயும் வந்துநின்று உறுமினான் அவன்.
பெரும் சிரமத்துக்கு மத்தியில் அவன் நினைவுகளை உதறித் தள்ளினாள். உறக்கம் வராதபோதும் விழிகளை மூடி மனத்தை அமைதிப் படுத்தினாள். சற்றே தெம்பாக உணர்ந்த வேளையில் அங்கே வந்தான் சசிகரன்.
“இப்ப பரவாயில்லையா?”
அவளும் புன்னகைத்துப் பரவாயில்லை என்பதுபோல் தலையசைத்தாள்.
“இதுதான் எங்கட பிரமிளா மிஸ். இப்ப சொல்லுங்கோ, என்னவாம் கௌசிகன்?”
அவனுடைய பெயரைக் கேட்டதுமே மலர்ந்த அவளின் சிரிப்பு மீண்டும் மறைந்து போயிற்று. நடந்ததைச் சுருக்கமாகச் சொன்னாள்.
கேட்ட சசிகரனின் முகத்தில் கவலைக்கோடுகள் படிந்தன. “அந்தக் கௌசிகனைப் பற்றி எனக்கும் பெருசா தெரியாதுதான் மிஸ். ஆனா, தான் நினைச்சதை எந்த வழில போய் எண்டாலும் செய்துமுடிக்கிற ஆள் எண்டுதான் விசாரிச்ச இடத்திலயும் சொன்னவே.” என்றான்.
அதைக் கேட்டு அவள் முகத்தில் கோபம் படர்ந்தது.
“அப்பிடி என்ன செய்திடுவார் எண்டு பாப்போமே சேர்.” சசிகரனுக்குப் பதிலாகச் சொன்னாலும் அவளுக்குள்ளும் ஒரு நிமிர்வு வந்துவிட்டிருந்தது.
சசிகரனுடன் வெளியே வந்தவள், இருள் கவிழ்ந்துவிட்டதைக் கவனித்து அன்றைக்கு வீட்டுக்குப் போகிற பிள்ளைகளை வீட்டுக்கு அனுப்பி, அங்குத் தங்குகிற பிள்ளைகளுக்கு அதற்கான ஒழுங்கு செய்து கொடுத்தாள்.
தனபாலசிங்கத்திடம் சென்று அவருக்குக் கொடுக்க வேண்டிய மாத்திரைகளோடு வைத்தியரின் அனுமதியின் பெயரில் கலந்துவைத்த விட்டமின் மாத்திரையையும் அவர் அறியாமலேயே சேர்த்துக் கொடுத்தாள்.
எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு மீண்டும் சசிகரனிடம் வந்தாள். ஒரு மரத்தின் கீழே தெருவிளக்கின் துணையுடன் நாற்காலிகளில் இலகுவாக அமர்ந்துகொண்டனர் இருவரும்.