தன்னுடன் என்னவோ பேசப் பிரியப்படுகிறாள் என்பதை உணர்ந்து சசிகரன் பார்க்க, “பள்ளிக்கூடத்துக்கு வந்த ரவுடி கும்பலைப் பற்றி எனக்கு என்னவோ போலீஸ் நேர்மையா விசாரிக்கும் எண்டுற நம்பிக்கை இல்ல சசி சேர். நாங்க எங்கட மாவட்ட நீதிபதிக்கு நடந்ததை எல்லாம் ஒரு மனுவா எழுதிக் கையளிச்சா என்ன? அவர் உத்தரவு போட்டால் போலீஸ் நியாயமா விசாரிக்கத்தானே வேணும்?” என்று ஆலோசனை கேட்டவளின் கூர்மை மிகுந்த மதியினை எண்ணித் தனக்குள் வியந்தான் சசிகரன்.
“குடுக்கலாம் மிஸ். என்ர பிரென்ட் ஒருத்தன் லோயர்தான். அவனிட்ட கேட்டா முறையா எப்பிடி அதைச் செய்றது எண்டு சொல்லுவான். அப்பிடியே செய்வோம். கௌசிகன்தான் நடக்கிற எல்லாத்துக்குமே மெயின் எண்டேக்க(எனும்போது) நாங்களும் கொஞ்சம் பெரிய இடத்துக்கு மூவ் பண்ணுறதுதான் புத்திசாலித்தனம்.” என்று அவள் சொன்னதை ஆமோதித்தான் அவன்.
“அமெரிக்க மிஷனிட்ட இருந்து இன்னும் ஒரு பதிலும் வரேல்லையா?”
“இப்ப வரைக்கும் இல்ல. நாளைக்குக் கல்வி அமைச்சரை அல்லது அவரின்ர ‘பிஏ’வைச் சந்திக்கப்போறன். அவே மூலம் மெயில் அனுப்பினா இன்னும் நல்லம் எண்டு நினைக்கிறன்.” என்றவள், அப்படியே அமைதியாகிப்போனாள்.
எழுதப்படாத கரும்பலகைகளும் மாணவிகளால் நிரம்பிப்போகாத வகுப்பறைகளும் மொட்டை அடித்த மரத்தைப் போல வெறுமையாகக் கிடந்தன. மீண்டும் பழைய மாதிரி ஆகிவிடாதா, உங்கள் பள்ளிக்கூடத்தை உங்களிடமே தந்துவிடுகிறோம் என்று சொல்லிவிட மாட்டார்களா என்று உள்ளம் ஏங்கிற்று.
சசிகரன் கைமறைவில் ஒரு கொட்டாவியை வெளியேற்ற, “நீங்க போய்ப் படுங்கோ சேர்.” என்றவள், தான் இருக்கும்வரை அவன் நகரமாட்டான் என்று தெரிந்து தானும் எழுந்துகொண்டாள்.
அவள் முகத்தில் இன்னுமே மறையாமல் இருந்த வாட்டத்தைக் கவனித்துவிட்டு, “நாளைக்கு நல்ல பதில் கிடைக்கும் மிஸ். கவலைப்படாம நித்திரை கொள்ளுங்கோ!” என்றுவிட்டுத் தன்னிடத்துக்குச் சென்றான் அவன்.
விடியலும் வேகமாய் வந்து சேர்ந்தது. அன்றைக்கு நிறைய வேலைகள் இருந்ததில் நன்றாக விடிவதற்கு முதலே வீட்டுக்கு விரைந்தாள்.
வேகமாகக் குளித்து, உடை மாற்றித் தயாராகி, நல்ல முடிவு கிடைத்துவிட வேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொண்டு வெளியே வந்து, சார்ஜுக்குப் போட்டிருந்த கைப்பேசியை எடுக்கப்போனாள்.
வயரைக் கழற்றியபோது ஒளிர்ந்த திரையில் ஒரு ஜிமெயில் வந்திருப்பதற்கான குறியீடு விழவும் சட்டென்று உள்ளம் பரபரத்துப்போனது. உள்ளே நுழைந்து பார்க்க, அமெரிக்க மிஷன்தான் பதில் அனுப்பியிருந்தது.
அதில்,
நடந்த அசம்பாவிதங்களை அறிந்து தாங்கள் மிகவும் கவலையாக இருப்பதாகவும், தங்களின் அமைப்பால் உருவாக்கப்பட்ட அந்தக் கல்லூரியில் பலர் அறுபது வயதைத் தாண்டி எழுபது வயது வரை அதிபராக இருந்ததையும் சுட்டிக்காட்டி, அந்த அதிபர்களால் அக்கல்லூரி சிறப்பாக நடந்ததையும் எடுத்துக்காட்டி, தனபாலசிங்கத்தின் விருப்பின் படி அவரே அதிபராக இயங்க வேண்டும் என்றும், ஏற்கனவே ‘சேவைக் காலம் முடிந்த பிறகும் சேவையாற்ற விரும்புவதாக’ அவர் அனுப்பியிருந்த கோரிக்கையைத் தாங்கள் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்திருந்தனர்.
கூடவே, இத்தனை வருடங்கள் சேவையாற்றிய ஒரு அதிபரை முன்னறிவித்தலின்றி அநாகரிகமான முறையில் வெளியேற்றியதை வன்மையாகக் கண்டித்திருந்தனர். நிர்வாகக் குழுவில் நியாயமற்று இயங்குபவர்களை நீக்கிவிட்டு, புதிய உறுப்பினர்களை நியமித்து, புதுக்குழு அமைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டும் இருந்தார்கள். இதனைத் தற்போதைய நிர்வாகக் குழுவுக்கும் தாங்கள் மெயில் மூலம் தெரிவிப்பதாகவும் எழுதப்பட்டிருந்தது
அதை வாசித்த பிரமிளாவுக்கோ துள்ளிக்குதிக்க வேண்டும் போலொரு சந்தோசம். அவள் வாசித்து விளங்கிக்கொண்டது உண்மைதானா என்று மீண்டும் மீண்டும் வாசித்துத் தெளிந்தாள். கடவுளே! பட்ட சிரமத்துக்கு எல்லாம் கைமேல் பலன் கிடைத்துவிட்டதே! எத்தனை பாடுபடுத்தினார்கள்? இனி எந்த முகத்தை வைத்துக்கொண்டு கல்லூரிக்குள் வருவார்களாம்?
“அம்மாஆ…!” ஆனந்தமும் உற்சாகமுமாய் அவள் கூவி முடிப்பதற்குள்ளேயே அவளின் கையிலிருந்த கைப்பேசி இசைபாடியது.
தீபன் அழைத்துக்கொண்டிருந்தான். இருந்த சந்தோசத்தில் உடனேயே காதுக்குக் கொடுத்து, “சொல்லு தீபன்!” என்றாள் உற்சாகக் குரலில்.
“அக்கா?” அவன் இருந்த அந்த நிலையிலும் அவளின் உரிமையான அழைப்பில் ஒருகணம் தடுமாறிப்போனான் அவன்.
“என்ன எண்டு சொல்லடா?” அவனை உணரும் நிலையில் அவள் இல்லை. அவ்வளவு சந்தோசத்தில் இருந்தாள்.
கழிந்தது இரண்டு நாட்கள்தான். ஆனால், அந்த இரண்டு நாட்களுக்குள் மனத்தால் அனுபவித்துவிட்ட பயம், கவலை, துன்பம் என்று எவ்வளவு? அத்தனையும் தீர்ந்து போயிற்றே!
அவளின் கூப்பிட்ட குரலுக்கு விரைந்து வந்த சரிதாவும் என்ன என்று கண்களால் கேட்க, பொறுங்கோ அம்மா என்று கையால் காட்டிவிட்டு, தீபனின் பேச்சுக்குக் காதுகொடுத்தாள்.
“எங்க… இப்ப எங்க அக்கா நிக்கிறீங்க நீங்க?” அவன் குரலில் இருந்த பதற்றம் அப்போதுதான் கொஞ்சமாய்ப் புத்தியில் பட்டது.
“வீட்டுலதான் நிக்கிறன். ஏன் கேக்கிறாய்?” எனும்போதுதான் தேவை இல்லாமல் அதுவும் இப்போதெல்லாம் அவன் அவளுக்கு அழைப்பதில்லை என்பதும் அதை அவள்தான் நிறுத்தி வைத்தாள் என்பதும் நினைவில் வந்தன.
அப்படி வரும்போதே, “அங்கேயே இருங்கோ. நீங்க இஞ்ச பள்ளிக்கூடம் இண்டைக்கு வர வேண்டாம்.” என்றான் அவன் அவசரமாக.
“அங்க வராம இஞ்ச இருந்து நான் என்ன செய்ய? முதல் என்ன விசயம் தீபன்? அதைச் சொல்லும்!”
“அக்கா அது… இண்டைக்கு வராதீங்க நீங்க. இஞ்ச பள்ளிக்கூடத்தில நான் நிக்கிறன். ரஜீவன் நிக்கிறான். அமரன் அண்ணாவும் வந்திட்டார். சசி சேர் எல்லாரும் நிக்கிறோம். அதால நீங்க வீட்டுலையே இருங்கோ. வெளில எங்கயும் போக வேண்டாம்.” அவன் சொன்னதைக் கேட்டவளுக்கு என்னவோ பிரச்சனை என்று புரிந்துபோயிற்று.
“உங்க எல்லாருக்கும் பள்ளிக்கூடத்தில என்ன அலுவல்? தேவை இல்லாம அங்க வர வேண்டாம் எண்டு சொன்னனான் எல்லா. முதல் என்ன பிரச்சனை எண்டு சொல்லும்?”
அவன் அப்போதும் என்னவோ சொல்லிச் சமாளிக்கப் போக, “நீ ஃபோன வை. இப்ப நான் அங்க வாறன்!” என்றவளிடம், “இல்ல இல்ல. நான் சொல்லுறன். ஆனா நீங்க வராதீங்க.” என்று அவசரமாக அவளைத் தடுத்தான் அவன்.
“சொல்லு, என்ன பிரச்சனை?”
“அது… அது பேப்பர்ல… நீங்க… உங்கட…” இவன் சொல்லி முடிக்கப் போவதில்லை என்றதும், என்னவோ பத்திரிகையில் அவளைப் பற்றி வந்திருக்கிறது என்று ஊகித்து, “என்ன பேப்பர்?” என்றாள் பிரமிளா.
“புதினம். அதுல…” என்றான் அவன்.
“சரி நீ வை!” என்றுவிட்டுச் சரிதாவிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டவளுக்குச் சிந்தனை ஓடியது.
அது ஒரு இரண்டாம் தரப்பத்திரிகை. அதிலே அவளைப் பற்றி என்ன வர இருக்கிறது? நேற்று வந்து நேரில் சொன்னதைப் பேப்பருக்குக் கொடுத்திருப்பானாய் இருக்கும்.
‘நீ என்னைப் பற்றி என்ன சொன்னா எனக்கென்ன? அதுதான் வாயால கதைக்காம செய்கையால் உன்ர முகத்தில கரியைப் பூசி விட்டுட்டனே!’ இதழோரம் ஏளனமாக வளைய சந்தியில் இருந்த கடையில் ஸ்கூட்டியை நிறுத்தி, புதினத்தில் ஒன்றை வாங்கினாள்.
அதைத் தரும்போது கடைக்காரரின் பார்வையில் தெரிந்த வித்தியாசத்தைக் கண்டு புருவத்தைச் சுருக்கினாலும் அதைப் பற்றி ஆராய நேரமில்லாமல் பிரித்துப் பார்த்தவள் பார்த்த நொடியே ஆடிப்போனாள்.
கைகால்கள் எல்லாம் நடுங்கின. அவமானத்தில் முகம் அப்படியே இரத்தமெனச் சிவந்துவிடக் கண்கள் கலங்கிப் போயிற்று!
பள்ளிக்கூட வளாகத்தில் மார்புச் சேலை ஒரு பக்கமாக விலகியிருக்க, தரையில் விழுந்து கிடந்தாள் பிரமிளா. அதைப் புகைப்படமாகப் போட்டிருந்தார்கள். அடுத்த நொடியே பத்திரிகையை மூடிவிட்டவளின் நெஞ்சம் எங்கும் கனல் பற்றி எரிந்தது.
தேள் கொட்டியேவிட்டதே! இதற்கு அவன் அவளைக் கண்ட துண்டமாக வெட்டிப்போட்டிருக்கலாம். சந்தோசமாக இறந்துபோயிருப்பாள். எத்தனை இழிவான காரியத்தைச் செய்துவிட்டான். இவனும் ஒரு பெண்ணின் வயிற்றில்தானே பிறந்திருப்பான்.
அப்படி அவனால் என்ன செய்துவிட முடியும் என்று நினைத்தாளே! செய்துவிட்டானே! ஒரு பெண்ணை எங்கே அடித்தால் அவளை வேரோடு சாய்க்க முடியுமோ அங்கே அடித்துவிட்டானே!
இனி என்ன செய்வாள்? சிந்தையில் எதுவும் வர மறுத்தது.