அத்தியாயம் 11
“அம்மாஆ!” அன்னையின் செயலில் அதிர்ந்து, அதட்டலோடு கூவிய சின்னமகனைப் பொருட்டில் கொள்ளும் நிலையிலேயே இல்லை செல்வராணி.
அழுகையும் ஆவேசமும் பொங்க, “உனக்கு முன்னால நிக்கப் பெத்த தாய் எனக்கே உடம்பு கூசுது! என்ன மனுசன் நீ? இண்டைக்கு அடிச்ச அடிய உனக்கு நான் சின்ன வயசிலேயே போட்டு வளத்திருக்கோணும்! செய்யாம விட்டது என்ர பிழைதான்!” என்று, விழிகள் வெறுப்பை உமிழச் சொல்லிவிட்டு, அவன் முகத்தைப் பார்க்கப் பிடிக்காதவராக வேகமாக அங்கிருந்து அகன்றார்.
பாறையென முகம் இறுகிவிட நட்ட மரமென நின்றான் கௌசிகன். கண்களில் கோபச்சிவப்பு! மிகுந்த சீற்றத்துடன் மோகனனின் புறமாகப் பார்வையைத் திருப்பினான்.
முகம் சிறுக்கத் தலைகுனிந்தான் அவன். “சொறி அண்ணா!” முணுமுணுத்தவனின் வார்த்தைகளைச் செவிமடுக்காமல், கையிலிருந்த புதினம் பேப்பரினைச் சுழற்றி அவன் முகத்திலேயே எறிந்துவிட்டு, அங்கிருந்து வெளியேறினான் அவன்.
புழுதி பறக்கக் காரைக் கிளப்பிச் சென்று, செல்லமுத்து நகைமாடத்தின் முன்தான் நிறுத்தினான். மூன்று மாடிகளில் இறுமாப்புடன் நெஞ்சை நிமிர்த்தி நின்ற மாடத்தைக் கண்டவனின் தாடை இறுகிற்று!
இறங்கிக் கதவை அறைந்து சாத்திவிட்டு வேக நடையில் சென்றவன் எதிரில் வந்தவனை ஓங்கி அறைந்தான். கண்களில் பூச்சி பறக்க, கன்னம் எரிய நின்றவன் எதற்கு அடித்தான் என்று தெரியாது முழித்தான்.
“ஆறுமணி தாண்டிட்டுது. லைட் போடாம என்னடா செய்றாய்?” என்று உறுமிவிட்டு அலுவலக அறைக்குள் புயலென நுழைந்து கதவை அறைந்து சாற்றினான்.
மேசையில் இருக்கிற அத்தனையும் பறந்தது. அடக்க முடியாத ஆத்திரத்தில் இரத்தம் கொதித்தது! அருவருப்புடன் அன்னை பார்த்த பார்வையே நெஞ்சில் நின்று சினத்தைக் கிளப்ப, இன்னும் எதையாவது போட்டு உடைக்க வேண்டும் போலொரு வெறி அவனை மிருகமாக மாற்றிக்கொண்டிருந்தது!
அறைக்குள் கேட்ட சத்தத்தில், கடையில் நின்ற அத்தனை பேரின் கண்களிலும் கெடிக் கலக்கம். அங்கே நெடுநாட்களாகக் கணக்காளராக இருக்கும் சுந்தரம், வேகமாக ராஜநாயகத்துக்கு அழைத்து விடயத்தைச் சொன்னார். அவர் விரைந்து வருவதற்குள் கண்ணில் பட்டவர்களை எல்லாம் கடித்துக் குதறியிருந்தான் கௌசிகன்.
வரும்போதே சின்ன மகனிடம் நடந்ததைக் கேட்டு அறிந்துகொண்டு வந்த ராஜநாயகம், அவனைச் சமாளித்து, மெதுவாக அழைத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றார்.
உள்ளே நுழைந்ததுமே அங்கிருந்த தாயையோ தம்பி தங்கையையோ திரும்பியும் பாராமல் கடுத்திருந்த முகத்தோடு அறைக்குள் புகுந்துகொண்டான் கௌசிகன்.
ராஜநாயகம் மனைவியைத் தீப்பார்வை பார்த்தார். “உனக்கு அறிவு எண்டுறது கொஞ்சமும் இல்லையா? ஆரோ ஒரு பொம்பிளை என்னவோ சொன்னாளாம். இவளுக்குக் கோவம் வந்ததாம். சொன்னவளுக்குத் திருப்பிக் குடுத்திட்டு வந்திருந்தா நீ ஒழுங்கான தாய். அதை விட்டுட்டு இங்க வந்து கை நீட்டி இருக்கிறாய்!” என்று பிள்ளைகளின் முன்னேயே பாய்ந்தார்.
கலங்கிவிட்ட கண்களோடு பார்த்த மகளையும், அங்கேயே இருந்த சின்ன மகனையும் நிமிர்ந்து பார்க்க முடியாமல் தலைகுனிந்தார் செல்வராணி. பிள்ளைகளின் முன்னே இப்படி மரியாதையற்றுத் திட்டினால் அவர்கள் எப்படி அவரை மதிப்பார்கள்?
“முதல் உனக்கு என்ன தெரியும் எண்டு கை நீட்டியிருக்கிறாய்? உலக அறிவு இருக்கா, இல்ல உள்ளூர் அறிவு இருக்கா? கோயிலுக்குப் போனமா சுவாமியைக் கும்பிட்டமா வந்தமா எண்டு இருக்கோணும்! அதைவிட்டுட்டு… இனி இப்பிடி ஏதாவது நடக்கட்டும்…” என்றுவிட்டு அவர் பார்த்த பார்வையில் பொசுங்கியே போனார் செல்வராணி.
உள்ளத்தைத் தின்ற வலியுடன் அறைக்குள் நுழைந்தவர் இரவு உணவுக்கும் வெளியே வரவேயில்லை.
மனது இற்றுவிட்டது போலிருந்தது. இப்படி அவர் பிள்ளைகளைத் திருத்துகிற ஒவ்வொரு பொழுதுகளிலும் அவரைத் திட்டி, அதட்டி, அடக்கித்தானே இன்றைக்கு மகன் இப்படி வந்து நிற்கிறான். இப்போதும் வந்து அவரையே திட்டினால் எப்படித் தாங்குவது?
செல்வராணி பத்திரிகையைக் காட்டியபோது, அந்தப் ஃபோட்டோவைப் பார்த்த அதிர்ச்சியில் வாயை இரு கைகளாலும் பொத்திக்கொண்ட யாழினிக்கு விழிகள் வெளியே வந்துவிடும் போலாயிற்று!
கோயிலில் பார்த்த அந்த அக்காவை அவளும் ரசித்தாளே. அந்த அக்கா இனி எப்படி வெளியே வருவார்? ஊராரின் முகம் எப்படிப் பார்ப்பார்? நினைக்க நினைக்க அவளுக்கும் கண்ணீர் பெருகிற்று.
சும்மாவே பெரியண்ணா என்றால் அவளுக்கு நடுங்கும். இப்போதோ அவனுக்கு முன்னால் போவதற்கே அஞ்சினாள். தாயுடன் சேர்ந்து அவளும் அறைக்குள்ளேயே முடங்கிவிட, இரவு உணவுக்கு நேரமாகியும் அவர்கள் வெளியே வரவில்லை என்றதும் ராஜநாயகத்தின் முகம் மீண்டும் கடுத்தது.
“வெளில போயிட்டு வாற ஆம்பிளைகளுக்குச் சாப்பாடு போடக்கூட நேரமில்லாம மகாராணி அப்பிடி என்னத்தை வீட்டுல இருந்து வெட்டிக் கிழிக்கிறாய்?” என்று அதற்கும் அவர் உறும, “அப்பா பேசாம இருங்க. அம்மா வருவா!” என்று சற்று நிதானத்துக்குத் திரும்பியிருந்த கௌசிகன் அதட்டிய பிறகே அடங்கினார் அவர்.
“அம்மா! இப்ப வாறீங்களா இல்லையா?” அவனுடைய ஒற்றைக் கேள்வியில் கண்களைத் துடைத்துக்கொண்டு வந்து பரிமாறினார் செல்வராணி.
இந்த வீட்டில வேலைக்கு மட்டும்தானா நான் என்று மனம் பொருமிக்கொண்டே இருந்தது. என்றுமில்லாமல் அன்றுதான் அவரே கோபப்பட்டிருக்கிறார். அந்தக் கோபத்துக்கு எந்தப் பலனும் இல்லை என்பது அவரை இன்னுமே வருத்தியது.
கண்ணீர் கன்னத்தைத் தொடவும் வேகமாகத் துடைக்கப்போனவர் உண்பதை நிறுத்திவிட்டு நிமிர்ந்து பார்த்த கௌசிகனின் பார்வையில் அப்படியே நின்றுவிட்டார். அவரின் கண்ணீர் கண்களுக்குள்ளேயே நின்று போயிற்று. அதன் பிறகு ஒரு துளி வெளியேறவில்லை.
இரவு முழுக்க அவரால் உறங்கவே முடியவில்லை. அந்தப் பெண்ணின் அன்னை திட்டிய திட்டலும் விட்ட சாபமும் நெஞ்சுக்குள் நின்று உலுக்கிக்கொண்டே இருந்தன. கண்ணீர் உகுத்தபடியே கிடந்தார். எப்பாடு பட்டாகினும் அந்தத் தாயின் கண்ணீரை அவர் துடைத்தே ஆக வேண்டும். அப்போதுதான் அவர்களின் குடும்பத்துக்கு விமோட்சணம் கிடைக்கும்!
ஆனால் எப்படி?
இரவிரவாக உறக்கமின்றித் தவித்தவர் அதிகாலையிலேயே மகனின் முன்னால் சென்று நின்றார்.
முகமெல்லாம் சிவந்து, வீங்கி, கண் மடல்கள் தடித்து வந்து நின்றவரைக் கண்டு ஒருநொடி புருவங்களைச் சுருக்கினான் கௌசிகன்.
‘என்னம்மா?’ என்று ஆதரவாக ஒரு கேள்வி அவனிடமிருந்து வந்தால், சொல்ல வந்ததைக் கொஞ்சம் இலகுவாகச் சொல்லலாமே என்கிற எதிர்பார்ப்புடன் அவர் பார்க்க, அவனோ அசையாமல் நின்றான்.
தைரியத்தை மெல்ல வரவழைத்துக்கொண்டு, “அந்தப் பிள்ளையைக் கோயில்ல பாத்த நிமிசமே உனக்குக் கட்டிவைக்கோணும் எண்டுதான் ஆசையா இருந்தது. என்ர கண்தான் பட்டுட்டுது போல. அதுதான் அந்தப் பிள்ளைக்கு நீயே இவ்வளவு பெரிய அவமானத்தைச் செய்துபோட்டாய் தம்பி!” என்று சொல்லும்போதே அவரின் விழிகள் திரும்பவும் கண்ணீரை உகுத்தன.
தாடை இறுக முகத்தைத் திருப்பிக்கொண்டு நின்றான் அவன்.
“பெண் பாவம் பொல்லாதது தம்பி. அந்தக் குடும்பத்தின்ர சாபம் எங்களை நிம்மதியா இருக்க விடாது. உனக்கும் ஒரு தங்கச்சி இருக்கிறாள். நாங்க செய்ற பாவம் பழி எல்லாம் எங்களுக்கேதான் வந்து விடியும். அது வேண்டாம் எங்களுக்கு. நீயே அந்தப் பிள்ளையைக் கல்யாணம் கட்டு தம்பி!” என்ற கணத்திலேயே விசுக்கென்று திரும்பி அவரை முறைத்தான் அவன்.
“பேசாம போங்கம்மா! விடியக்காலமா வந்து எரிச்சலைக் கிளப்பாம!” அவன் போட்ட சத்தத்தில் வேதனையோடு பார்த்தார் செல்வராணி.
“நீ எவ்வளவு பெரிய பிழையைச் செய்திருக்கிறாய் எண்டு உனக்கு இன்னும் விளங்க இல்ல தம்பி. அந்தப் பாவத்துக்கான சம்பளத்தை அனுபவிக்கிற நிலை வந்தா தாங்கமாட்டாய். அதாலதான் சொல்லுறன், அம்மா சொல்லுறதையும் கொஞ்சம் கேளப்பு!”
“உங்கள போகச் சொன்னனான்!” கெஞ்சியவரைச் சட்டையே செய்யவில்லை அவன்.
இவனை மாற்றவே முடியாதா என்கிற துயரோடு நோக்கியவரின் விழிகளில் ஒருவிதத் தீவிரம் மெல்ல மெல்ல வந்து குடியேறியது.
“நீ வளந்த பிள்ளை. இதுக்குமேல உன்னட்ட எப்பிடிச் சொல்லுறது எண்டு எனக்கும் தெரியேல்ல. ஆனா இந்த வீட்டுக்கு மூத்த மருமகள் எண்டு ஒருத்தி வந்தா அது அந்தப் பிள்ளையா மட்டும்தான் இருக்கோணும்! வேற ஒருத்தி வாற நிலைமை உருவாகினா உன்ர அம்மாவை நீ உயிரோட பாக்கமாட்டாய்!” பிசிரற்ற குரலில் சொல்லிவிட்டுத் தன் அறைக்கு வந்து சேர்ந்தார் செல்வராணி.
பல்கலைக்குத் தயாராகிக்கொண்டிருந்த யாழினிக்கு அன்னையைப் பார்க்கையில் பெரும் கவலையாய்ப் போயிற்று. அவரின் அருகில் வந்து அமர்ந்து கையைப் பற்றிக்கொண்டாள். “சும்மா எதையும் நினைச்சுக் கவலைப்படாதீங்கோ அம்மா. அண்ணான்ர குணம் உங்களுக்குத் தெரியும்தானே? நீங்க அவரிட்ட கதைக்கப் போனதே பிழை. அப்பாவோ அண்ணாக்களோ நீங்க சொல்லுறதைக் கேக்கவே மாட்டினம். பிறகும் ஏன் சொல்லப் போறீங்க?”
வீட்டில் இருக்கும் ஆண்களைப் பற்றி மிகவும் துல்லியமாகக் கணித்துவைத்திருக்கும் மகளை வேதனையோடு நோக்கினார் செல்வராணி. “அந்த அம்மா அழுத அழுகையை நீ பாக்கேல்லை பிள்ளை. பாத்திருந்தா இப்பிடிச் சொல்லமாட்டாய். அந்தப் பொம்பிளைப் பிள்ளையும் உன்ன மாதிரி ஒருத்தி தானே. அவளுக்கு எப்பிடி நியாயம் செய்யப்போறன் எண்டு எனக்குத் தெரியுதே இல்ல!” கண்ணீருடன் சொன்னவர் மீண்டும் கட்டிலில் சரிந்துகொண்டார்.
“நடக்கிறதுதான் நடக்கும். அந்த அக்காதான் எனக்கு அண்ணி எண்டால் யார் நினைச்சாலும் அதை மாத்தேலாது. அவாவே எனக்கு அண்ணியா வரோணும் எண்டு நான் கம்பசில இருக்கிற சரஸ்வதிட்ட கேக்கிறன் சரியா. நீங்க நிம்மதியா நித்திரை கொள்ளுங்கோ!” என்றுவிட்டு அவள் புறப்பட்டபோது, அந்த வீட்டின் ஆண்கள் மூவருமே வெளியே சென்றிருந்தனர்.