நீ வாழவே என் கண்மணி 2 – 1

இரண்டாயிரத்து எட்டாம் வருடம் நாட்டுப்பிரச்சனை மெல்ல மெல்ல அதிகரிப்பதை உணர்ந்து, அவனை சுவிசுக்கு அனுப்பப் பெற்றவர்கள் தயாரானபோது, அவளைப் பிரியப்போகிறோம் என்கிற துயர் கொடுத்தத் துணிச்சலில்தான் அவளிடம் முதன் முதலாக அவன் கதைத்ததே!

ஒருநாள் மாலை, அவர்கள் வீட்டுக்கு முன்னால் நின்ற கொண்டல் மரத்தில், அவள் பார்க்கும் வகையில் ஒரு துண்டைச் செருகிவிட்டுச் சென்றான் நிர்மலன். யாரும் பார்க்காத நேரம் பார்த்து அதை எடுத்துப் படித்தாள் அவள். அதில் எழுதியிருந்ததன் படி கோவிலுக்கு அவள் வந்து சேர்ந்தபோது மெல்லிய இருள் கவியத் தொடங்கியிருந்தது.

முதன் முதலாகத் தனிமையில் சந்திக்கிறார்கள்.

படபடப்பும் பயமுமாக அவனருகில் வந்து நின்றவளிடம், “சுவிசுக்கு போகப்போறன்..” என்று அவன் சொன்னதும், அதிர்ச்சியில் விரிந்த அவள் விழிகளிலிருந்து பொலபொலவென்று கண்ணீர் கொட்டிற்று!

அந்தக் கண்ணீரைக் கண்டபோது எந்தளவு தூரத்துக்கு வலித்ததோ அந்தளவு தூரத்துக்கு நெஞ்சு நிறைந்துபோனது. காதலியின் கடைக்கண் பார்வைக்கே தவமாய்த் தவமிருந்தவன் அவன். அந்தக் கண்களிலிருந்து கண்ணீர் அவனுக்காக வழிந்தால்?

நெஞ்சில் நிறைந்திருந்த நேசம் உந்த சட்டென்று அவளின் கன்னங்கள் இரண்டையும் தன் கைகளால் துடைத்துவிட்டான்.

“நீ இப்பிடி அழுதா நான் எப்பிடிப் போறது?”

“நீங்க இல்லாம எப்பிடி… நான் தனியா…” சிவந்திருந்த விழிகள் மீண்டும் கலங்க அவன் முகம் பார்த்து ஏக்கத்தோடு அவள் கேட்டபோது, காலம் காலமாய்க் காதலோடு வாழ்ந்துவிட்ட திருப்தியை அனுபவித்திருந்தான் நிர்மலன்.

ஒவ்வொரு நாட்களையும் வாழ்கிறோம் தான். ஆனால், சில நாட்கள் தான் நம் வாழ்க்கையாகிப் போகிறது. அந்த நாட்களில் தான் மொத்த வாழ்க்கையையுமே வாழ்ந்திருப்போம். அப்படித்தான் அவனும்! அன்றுதான் வாழ்ந்தான். அந்த நாள் தான் அவனது மிகுதி வாழ்க்கையாகவும் மாறிப்போனது!

“ஏன் தனியா? போகேக்க எப்பிடியாவது ஒரு செல் வாங்கித் தந்திட்டுப் போறன். ஒவ்வொரு நாளும் எடுப்பன். ஸ்கைப்ல கதைக்கலாம். சரியா?” இதமாகச் சொன்னான்.

அவள் தெளியாத முகத்தோடு தலையசைக்க, “இவ்வளவு நாளும் கண்ணால பாத்துகொண்டு மட்டும் தானே இருந்தோம். இனி கதைக்கப் போறோமே. அத நினச்சுப்பார்.” என்றான் குறும்புச் சிரிப்போடு.

அப்போதுதான் அதுநாள் வரை அவர்களைத் தடுத்து நிறுத்தியிருந்த வெட்கத்தையும் கூச்சத்தையும் தடுமாற்றத்தையும் உடைத்துக்கொண்டு, அவர்கள் இருவரும் பேசிக்கொள்கிறார்கள் என்பதே புலப்பட, வெட்கத்தோடு புன்னகைத்தாள் அவள். அவன் சொன்ன சேதி நெஞ்சை அழுத்தியதில் அதை உணரத் தவறியிருந்தாள்.

“இப்போதைக்கு நல்லா படி. எனக்கு அங்க விசா கிடைச்சதும் முதல் வேலையா உன்ன கூப்பிட்டுடுவன். அதால கவலைப்படாம இரு என்ன!” என்றான் கனிவோடு.

சம்மதமாகத் தலையசைத்தாள்.

விழிகளில் கலக்கம் சூழ, நிமிர்ந்து அவனையே பார்த்து, “என்னை மறந்திட மாட்டிங்க தானே…” என்று கேட்கையிலேயே கேவல் வெடித்தது. “பிறகு… பிறகு நான் செத்திடுவன்…” என்றாள்.

அன்று துடித்துப்போனான் நிர்மலன். இன்று நெஞ்சு கொதித்தது. எப்படியெல்லாம் ஏமாந்திருக்கிறான். எவ்வளவு பெரிய பச்சோந்தி அவள்! அவனை இளிச்சவாயனாக மாற்றியவள் மீது ஆத்திரமும் ஆவேசமும் பொங்கிற்று!

இன்று காதலின் வலி அவனிடம் இல்லைதான். மருந்தாக வந்து மனக்காயத்தை ஆற்றியவள் அவன் மனைவி! அவனது காதலும் நேசமும் பாசமும் அவளிடம் மட்டும்தான். ஆனால், ஒரு ஏமாற்றுக்காரியை நம்பினேனே, அவளிடம் ஏமாந்து போனேனே என்பதுதான் இன்னும் நெஞ்சில் நின்றது.

அன்று சற்றும் உணரவில்லையே! மகுடிக்கு மயங்கும் பாம்பாய் அவளிடம் மயங்கிக் கிடந்தானே! அந்தளவுக்குச் சிறந்த நடிகை அவளா? அல்லது, மிக மோசமான ஏமாளி அவனா? ஆத்திரமும் ஆவேசமும் தான் வந்தது.

ஆனால் அன்றோ, “உன்ன மறந்திட்டு நீ இல்லாம உயிரோட இருப்பன் எண்டு நினைச்சியா?” என்றான் உள்ளம் உருக. அவள் முகம் தாமரையாக மலர்ந்தபோது, அந்த மலரை வாடாமல் பாதுகாப்பேன் என்று சபதமும் பூண்டான்!

அதன்பிறகு அவன் சுவிசுக்கும் வந்துவிட, அவர்களின் காதல் செல்பேசி வழியாக ஆத்மார்த்தமாக வளர்ந்துகொண்டே இருந்தது. அப்படித்தான் அவன் நினைத்திருந்தான்.

வருடம் இரண்டாயிரத்து ஒன்பது! உலகத் தமிழர்களையே உலுக்கிப்போட்ட கோர வரலாறு நடந்த வருடமது! உயிர்களும், உடல்களும், அற்புதக் காதல்களும், உயிரினும் மேலான பெண்களின் கற்புகளும் கயவர்களால் களவாடப்பட்ட வருடம்! இன்னும் பல்லாயிரம் வருடங்கள் கடந்தாலும் ஆறாத வடுவை ஆழமாகப் பதித்துவிட்ட வருடமது!

உள்நாட்டு யுத்தம் உச்சத்தைத் தொட்டதில், இடம்பெயர்வில் ஆளாளுக்குத் தொலைந்து போனதில் அவளின் இருப்பு எங்கே என்று தெரியாது அவன் துடித்துப்போனான்.

அவளின் குடும்பத்தில் யாரையும் காணோம்!

உயிரோடு இருக்கிறாளா? இருந்தாலும் நலமாக இருக்கிறாளா? என் கண்மணி என்னென்ன துயர்களை அனுபவிக்கிறாளோ? துணைக்கு நான் இல்லாமல் போனேனே. நான் இங்கே பாதுகாப்பாக இருக்க அவள் அங்கே என்ன பாடு படுகிறாளோ? கடவுளே எல்லோரையும் காப்பாற்று. அவளையும் பாதுகாத்துக்கொள் என்று அவன் மனமும் உதடுகளும் இடைவிடாது உச்சரித்தபடியே இருந்தன. உறக்கம், உணவில்லாது பைத்தியகாரனாகவே மாறிப்போனான்.

ஒரு வழியாக நடந்த கோரங்கள் எல்லாம் முற்றுக்கு வந்து வீட்டினரின் தொடர்பு கிடைத்ததும், அவள் எப்படி இருக்கிறாள் என்று எடுத்ததுமே கேட்கத் துடித்த நாவைப் பெரும் பாடுபட்டு அடக்கி, பெற்றவர்களை விசாரித்து, சொந்தங்களை விசாரித்து, பிறகு ஊராரை விசாரிக்கிறேன் பேர்வழி என்று அவளைப் பற்றிச் சுற்றிவளைத்து அவன் கேட்டபோது, “அவேன்ர குடும்பம் உயிரோட இருக்கோ இல்லையோ தெரியாது தம்பி.” என்றார் பத்மாவதி.

வந்த கோபத்துக்கு அவரிடம் தன்னை மறந்து கத்திவிட்டு வைத்துவிட்டான். உடலின் நடுக்கம் தீரவே நீண்ட நேரமெடுத்தது.

அவனின் அவள் எப்படி அவனை விட்டுவிட்டுப் போவாள்? இங்கே அவன் இதயம் இன்னும் துடித்துக்கொண்டுதானே இருக்கிறது. இருக்காது! கடைசிவந்தாலும் இருக்காது. அவள் உயிரோடு நன்றாக இருப்பாள். என்னைத் தொடர்பு கொள்வாள் என்று மனம் அழுத்திச் சொன்னது.

உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அவளின் அழைப்புக்காகக் காத்திருந்தான்.

அடுத்த நிமிடமோ செவிகளை வந்தடைந்த செய்திகள் ஒவ்வொன்றுமே அவன் குலையை நடுங்க வைத்தன. மனம் நடுங்க, தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் நண்பர்கள் என்று ஒவ்வொருவராகத் தேடித்தேடி அழைத்து, “கண்மணிய பாத்தீங்களாடா?” என்று கேட்டபோது, யாருக்கும் அவளைப் பற்றித் தெரியவில்லை. நாட்கள் நகர்ந்துகொண்டே இருந்தது. வீட்டிலோ பெண் பார்க்கத் தொடங்கியிருந்தனர். நிர்மலன் தள்ளிப் போட்டுக்கொண்டே இருந்தான்.

அவனது முயற்சி மட்டும் ஓயவேயில்லை. நீண்டநாள் தவத்துக்குக் கிடைத்த பலன்போல், நண்பன் ஒருவன் வவுனியா அகதிகள் முகாமில் அவளைக் கண்டேன் என்று சொன்னபோது அழுதே விட்டான் நிர்மலன்.

போதும்! இது போதும்! இனி எப்படியும் அவளைத் தேடிக் கண்டு பிடித்துவிடுவேன். எப்படி இருந்தாலும் அள்ளி அணைத்துக்கொள்வேன். அவளிடம் எப்படியடி இருக்கிறாய், என்ன கஷ்டம் எல்லாம் பட்டாய் என்று கேட்டு, அவள் பட்ட துயர்களையும் துன்பங்களையும் நான் வாங்கிக்கொண்டிட வேண்டும்!

எனக்கு ஏனடி அழைத்துக் கதைக்கவில்லை என்று கேட்டு இரண்டு திட்டுத் திட்ட வேண்டும்!

நெஞ்சம் உந்த, நண்பனிடம் வவுனியாவில் போய் அவளைப் பார்க்கச் சொல்ல, அவனோ தன் மனைவி வயிற்றில் குழந்தையோடு வைத்தியசாலையில் இருக்கிறாள் என்றான். இவனின் தவிப்பையும் உணர்ந்து அவன் அவனது நண்பன் ஒருவனை வவுனியாவுக்கு அனுப்பினான். அங்கே, முகாமில் யாரும் உள்ளே போகவும் முடியாது, வெளியே வரவும் முடியாது. முகாமில் யார் யாரையோ பிடித்து, கெஞ்சி, தன் செல்பேசியை அவர்களின் மூலம் அவளிடம் கொடுத்துவிட்டு அவன் இவனுக்குச் சொல்லி, அந்த நம்பருக்கு இவன் அழைத்த அந்த நிமிடம்… அவளின் குரலைக் கேட்டுவிட அவனது ஆவி முதற்கொண்டு அந்தம் அத்தனையும் தவியாய்த் தவித்துப்போனது.

“ஹலோ…” மெலிந்து நலிந்து கேட்ட குரலில், எத்தனை எத்தனையோ கேள்விகள் கேட்டுவிடத் துடித்தவனின் அத்தனை துடிப்பும் அடங்க, அவளின் குரலை உள்வாங்கித் தன் உயிருக்குள் நிரப்பிக்கொண்டான்.

‘என் கண்மணி…’ அவனது உயிர்மூச்சு உச்சரித்தது!

முன் நெற்றிக் கேசத்தை அப்படியே ஒரு கைக்குள் அடக்கிக்கொண்டு காதில் செல்லைப் பொருத்தியபடி அப்படியே சோபாவில் கண்களை மூடிச் சாய்ந்துவிட்டான் நிர்மலன்.

“ஹ…லோ! நி…ர்…ம…லன்.” உடைந்து கேட்ட குரலில் அவனும் உள்ளுக்குள் உடைந்துபோனான்.

“ம்ம்.”

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock