“நிர்மலன், எனக்கு… எனக்குக் கலியாணம் முடிஞ்சுது. அதால இனி எனக்கு எடுக்காதிங்கோ. நான் சந்தோசமா வாழுறன். திரும்பத் திரும்ப எடுத்து அதைக் கெடுத்துப்போடாதிங்கோ.” என்றவள் அவனது பதிலை எதிர்பாராமலேயே கைபேசியை அணைத்திருந்தாள்.
துடித்துப்போனான் நிர்மலன்.
அவள் தான் பட்ட துன்பங்களைச் சொல்வாள், கண்ணீர் விட்டழுவாள், என்னை எப்ப கூப்பிடப் போறீங்க என்று கேட்பாள், நான் உணர்ச்சிவசப்பட்டு அழுதுவிடக் கூடாது. அவளைத் தேற்ற வேண்டும். தைரியம் கொடுக்க வேண்டும் என்று எத்தனையோ நினைத்து வைத்தவன் சத்தியமாக இதை நினைக்கவே இல்லை.
அவனுடைய வாழ்க்கையே அவள்தான் என்று அவனிருக்க, அவள் தனக்கென்று ஒரு வாழ்க்கையைத் தேடிக்கொண்டதும் அல்லாமல், அவளது சந்தோசத்தைக் கெடுக்க வேண்டாமாமா?
அவள் வாழ்வில் அவன் இல்லாமல் சந்தோசம் என்ற ஒன்று உண்டா என்ன? அப்படியெதுவும் அவனுக்கில்லையே?
மீண்டும் மீண்டும் பலமுறை அவன் முயன்றபோது அதற்குப் பிறகு அவள் கதைக்கவே இல்லை. மறுத்துவிட்டாள்.
அவள் சொன்னதை நம்பவும் முடியாமல், ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் திரும்பவும் பைதியமாகிப்போனான் அவன். வாழ்க்கையே கசந்தது. யாரையும் நம்பப் பிடிக்கவில்லை. உயிரை மாய்த்துக்கொண்டால் என்ன என்றுகூட யோசித்தான். எதிர்காலக் கற்பனைகள் அத்தனையிலும் அவனோடு அவள் இருந்தாளே. அந்த எதிர்காலம் முற்றிலுமாகச் சூன்யமாய்த் தெரிந்தது. ஒருகட்டத்தில் அது ஆக்ரோசத்தை கொடுத்தது.
‘எனக்குக் கல்யாணம் முடிஞ்சுது… நான் சந்தோசமா வாழுறன்… அதைக் கெடுத்துப்போடாதிங்கோ…’ இந்த வார்த்தைகளே அவனைச் சாகவும் வைத்தது. வாழ்ந்து காட்ட வேண்டும் என்கிற ஆவேசத்தையும் கொடுத்தது.
நம்பிக்கைத் துரோகி அவளே ‘சந்தோசமாக’ வாழும்போது அவன் ஏன் சாவைப் பற்றி யோசிக்க வேண்டும்?
தாயின் விடாத தொல்லையும் சேர்ந்துகொள்ள ஒரு வருடம் கழிந்தபோதுதான் திருமணத்துக்குச் சம்மதித்தான். உஷா அவன் வாழ்வின் பொற்காலம் தான். அவளின் அன்பு மெல்ல மெல்ல அவனை முற்றிலுமாக மீட்டுக்கொண்டு வந்தது. ஆரம்ப நாட்களில் அவனின் ஓட்டுதல் இல்லாத தண்மையைக்கூட பொறுத்துப்போய், அவனை மாற்றி உயிர்ப்புள்ள மனிதனாக மாற்றித் தந்த பெருமை அவளுக்கு மட்டுமே உண்டு. ஆனாலும், உள்ளே ஒரு வெறி. அவள் முன்னால் போய் நிற்க வேண்டும். நான் சந்தோசமாக வாழும் வாழ்க்கையைப் பார் என்று காட்ட வேண்டும்! நீ இல்லாமல் நான் ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை என்று முகத்தில் அறைந்தாற்போல் அவளை உணரவைக்க வேண்டும்!
அவளிடம் ஏமாந்ததை எண்ணி இன்றும் நெஞ்சு கொதித்தது.
வீதியால் செல்கையில் அவள் வீட்டைப் பார்த்தான். பாழடைந்து, பழுதடைந்து, பற்றைகள் மூடிக் கோரமாய்க் காட்சியளித்தது!
‘அவளும் இப்படித்தான் இப்போது இருப்பாள்!’
அடுத்தவாரம் சுவிசுக்க திரும்ப வேண்டும் என்கிற அளவில் நாட்கள் நெருங்கிவிட, அன்று எல்லோருமாகப் பக்கத்து ஊர் கோவிலுக்குச் சென்றார்கள். அவனுடைய அம்மாதான் ஏதோ வேண்டுதல் என்று அழைத்துச் சென்றார்.
காரிலிருந்து இறங்கியதுமே அவன் செல்வங்கள் அங்குமிங்கும் ஓடத்தொடங்கினர். உஷா பூசைப் பொருட்களைக் கையில் வைத்துக்கொண்டு பிள்ளைகளை அடக்க முடியாமல் சிரமப்பட, “நீ போ. பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு நான் வாறன்.” என்று உஷாவைப் பெற்றவர்களுடன் அனுப்பிவைத்தான்.
ஒரு வழியாகப் பிள்ளைகளைச் சமாளித்துக் கூட்டிக்கொண்டு கோவிலுக்கு அவன் சென்றபோது, சக்கர நாற்காலியில் இருந்த ஒரு பெண்ணின் தலையைக் கண்ணீரோடு அம்மா தடவிக்கொண்டிருந்தார். அந்தப் பெண்ணின் பக்கவாட்டுத் தோற்றம்தான் தெரிந்தது.
யார் என்கிற கேள்வி எழுந்தாலும் அவனுக்கும் மனம் பாரமாகிப் போயிற்று. முழங்காலோடு ஒரு காலில்லை என்று பார்க்கவே தெரிந்தது.
அங்கவீனர்கள் உற்பத்தி செய்யப்பட்ட தேசமல்லவா நம் தேசம்!
பிள்ளைகளோடு அவன் அவர்களை நெருங்க, அவ்வளவு நேரமும் அவனது தாயோடு கதைத்துக் கொண்டிருந்தவள் முகத்தைத் திருப்பி இவன் மனைவியைப் பார்த்துப் புன்னகைத்தாள். உஷாவின் கரங்கள் இரண்டையும் பற்றி, மென் புன்னகையோடு என்னவோ கதைத்தாள்.
அப்போதுதான் முகம் தெரிந்தது! தெரிந்த கணத்தில் அதிர்ந்துபோய் நின்றுவிட்டான் நிர்மலன்.
கண்மணி!
இது… அவளல்லவா!
‘எனக்குக் கல்யாணம் முடிஞ்சுது. நான் சந்தோசமா இருக்கிறன்… அதைக் கெடுத்துப்போடாதிங்கோ.’ நெஞ்சில் அறைந்தது அந்த வார்த்தைகள். இதுதானா அவள் சொன்ன சந்தோசம்? இதைத்தானா அப்படிச் சொன்னாள்?
நெஞ்சு வெடிக்கும் போலிருந்தது. எத்தனை ஆத்திரம்? எவ்வளவு ஆவேசம்? எவ்வளவு கோபம்? கடவுளே!
கால்கள் அவளை நோக்கி நகர மறுத்தன! கண்கள் அவளைவிட்டு அகல மறுத்தன! இதயத்தை மட்டும் தனியே இழுத்தெடுத்து யாரோ கசக்கிப் பிழியும் வலி!
‘இனி என்ன செய்வேன்?’ திரும்பியே வரமுடியாத பாதையில் பயணித்துவிட்டானே!
கட்டாயம் அவன் சுவிசுக்குத் திரும்பத்தான் போகிறான். தன் வாழ்க்கையைப் பார்க்கத்தான் போகிறான். குழந்தைகளோடு சந்தோசமாக இருக்கத்தான் போகிறான். மனைவியோடு வாழத்தான் போகிறான். ஆனாலும், இனி என்றைக்குமே இறக்கிவைக்க முடியாத பாரம் நெஞ்சை அழுத்தப் போகிறது. கட்டையோடு கட்டையாகப் போனால் மட்டுமே அது காணாமல் போகும் போலும்! அதுகூட உறுதியில்லை!
அவன் பார்த்துக்கொண்டு இருக்கையிலேயே தாயிடம் ஓடிய குழந்தைகளைக் கைகளை நீட்டி அழைத்தாள். கூச்சமும் வெட்கமுமாய்த் தாயின் கால்களைக் கட்டிக்கொண்டு முகத்தை மறைத்தவர்களிடம் என்னவோ கொஞ்சிக் கொஞ்சிப் பேசினாள். சற்று நேரத்திலேயே இருவரும் அவளோடு சேர்ந்துகொண்டனர். தன் நெஞ்சோடு அரவணைத்துக் கொஞ்சினாள். கண்களில் அத்தனை கனிவு! முகத்திலோ சாந்தம்!
தன் இழப்பை உணரவேயில்லையா அவள்! உயிரிலிருந்து உதிரம் கசிய, அந்த வலியைத் தாங்கமுடியாமல் அங்கேயே நின்றிருந்தான் நிர்மலன்.
அவனுடைய கண்மணியைக் கை விட்டுவிட்டானே!
அவனது மகளை மார்போடு அணைத்துக்கொண்டு திரும்பி அவனைப் பார்த்தாள். மென்மையாகப் புன்னகைத்தாள். அவனால் தான் அவளை எதிர்கொள்ள இயலவில்லை.
பார் பார் என்று தன் சந்தோசத்தைக் காட்ட வந்தவன் அவளைப் பார்க்க முடியாமல் நின்றான். அவள் வாழும் வாழ்க்கையைக் கண்கொண்டு காணமுடியாமல் நின்றான். வாய் திறந்து கதைக்ககூட இயலாமல் எல்லோரையும் இழுத்துக்கொண்டு திரும்பினான்.
“இங்க ஏனம்மா தனியா இருந்து கஷ்டப்படுறாய். அங்க… எங்கட ஊருக்கே வாவன். நாங்க எல்லோரும் இருக்கிறோம் தானே.” அவளின் நிலையைத் தாங்கமுடியாமல் கண்ணீரோடு சொன்னார் அவன் அன்னை, பத்மாவதி.
அதற்கு எதுவுமே சொல்லாத அவளின் கண்கள் அவனிடம் சொன்னது,
காலங்கள் கடந்தாலென்ன
கனவுகள் சிதைந்தாலென்ன
பாதைகள் மாறினாலென்ன
உன்மேல் நான் கொண்ட
உயிர் நேசம் சொல்கிறது
நெஞ்சே… நீ வாழ்க!