நீ வாழவே என் கண்மணி 3 – 1

நாட்கள் ஒன்றும் அப்படியே உறைந்துவிடவில்லை. அவனது வாழ்க்கையும் எங்கும் தேங்கிவிடவில்லை. மனைவி பிள்ளைகளோடு சுவிசுக்கு வந்து சேர்ந்துவிட்டான். வழமைபோல வீடு, வேலை, மனைவி, பிள்ளைகள் என்று அவனது பொழுதுகள் கழிந்துகொண்டுதான் இருந்தது. எதுவும் மாறவில்லை.

ஆனால், மனது? அதிலே ஏறிவிட்டிருந்த பாரம்? ஐயோ… அவளை விசாரிக்காமல் அப்படியே கைகழுவி விட்டோமே என்று நெஞ்சை அரிக்கும் அந்த வலி? சக்கரநாற்காலியில் அவளைக் கண்ட காட்சி? அவனைக் கண்டதும் விழிகளை மலர்த்தி அவள் சிந்திய புன்னகை? இனி என்ன செய்யப் போகிறேன் என்று உள்ளத்தை அழுத்தும் வேதனை? எதுவும் அகலமறுத்தது.

அவள் சொன்ன வார்த்தைகளை அப்படியே நம்பியவன், அவன்மீது அவள் கொண்ட காதலை ஏன் நம்பாமல் போனான்? ‘நீ மறந்தால் இறந்துவிடுவேன்’ என்றாளே, அதை எப்படி மறந்தான்? இனி என்ன செய்வான்? எதுவுமே முடியாதே.

ஊர்ப்பக்கம் அவள் வராமல் இருந்ததற்கான காரணம் கூட, அவள் வந்தால் அவளின் நிலைபற்றி அவனுக்குத் தெரியவரும், அதைத் தங்கமாட்டான், அந்தக் குற்ற உணர்ச்சி கூட அவனுக்கு வேண்டாம் என்பதா? ஐயோ கண்மணி.. என்னை முழுக்க முழுக்க கெட்டவனாக ஏனடி மாற்றினாய்? தனக்குள் கிடந்தது துடித்தான் நிர்மலன்.

எந்த நிலையிலிருக்கிறாள் என்று அறிந்துகொண்ட இன்றும் எதுவும் செய்ய முடியாத கையறு நிலை வேறு அவனை இன்னுமே வதைத்தது!

சிரிப்பைத் தொலைத்து, சதா சிந்தனையின் வசமாயிருக்கும் கணவனை உஷாவும் கவனித்துக்கொண்டுதான் இருந்தாள். என்னவோ கிடந்து அவன் மனதை வாட்டுகிறது என்று மட்டும் தெரிந்தது. அவனாகச் சொல்லுவான் என்று எதிர்பார்க்க, எதையுமே பகிர்ந்தானில்லை.

அன்று சனிக்கிழமை. மற்றைய நாட்களானால் சனியில் வீட்டிலேயே இருக்க விடமாட்டான். ஞாயிறுகளில் கடைகள் பூட்டு என்பதால், சனிக்கிழமைகளில் சாப்பாடு முதற்கொண்டு அவர்களின் பொழுது கழிவது முழுக்க வெளியேதான். அவள் ஏதாவது விசேசமாகச் சமைக்கிறேன் என்றாலும் முறைப்பான். அப்படியானவன், பிள்ளைகளைக் கூட வெளியே கூட்டிச் செல்லாமல் சோபாவில் கண்களை மூடிச் சரிந்திருந்தான்.

அதற்குமேல் அவனாகச் சொல்லட்டும் என்று காத்திருக்கும் பொறுமையின்றி, பிள்ளைகளை அவர்களின் அறையில் விளையாட விட்டுவிட்டு அவனருகில் வந்து அமர்ந்தாள் உஷா.

அவளை உணர்ந்து அவன் பார்க்க, “என்னப்பா? என்ன கிடந்து உங்கட மனதை அரிக்குது? எனக்குச் சொல்ல மாட்டீங்களா?” என்று, மென்மையாக அவன் கன்னம் வருடிக் கேட்டாள்.

அவன் விழிகளில் பெரும் வலி.

“சொன்னா நீ தங்கமாட்ட உஷா.” விழிகள் எங்கோ தொலைவை வெறிக்கத் துயரோடு சொன்னான்.

அவளுக்கும் சுருக்கென்று நெஞ்சில் வலித்தது.

“துணையா நீங்க நிக்க மாட்டீங்களா?”

அந்த வார்த்தைகள் மனதைத் தொட்டுவிட நெஞ்சோடு மனைவியை அணைத்துக்கொண்டான் நிர்மலன். விழிகளினோரம் கசிந்தது அவனுக்கு. கணவனின் மார்பில் தலை சாய்த்தது அவளுக்கும் பெரும் ஆறுதலாய் இருந்தது.

“உன்னை மாதிரியே என்னை நம்பின ஒருத்திக்குத் துரோகம் செய்திட்டன்.” அவள் முகத்தைப் பற்றி, அவள் விழிகளையே பார்த்துச் சொன்னான் அவன். ஐயோ ஐயோ என்று அவன் நெஞ்சு கிடந்து தவிப்பதை அவன் கண்களில் கண்டாள்.

கேட்டதும் துடித்துப்போனாள். அவள் விழிகளும் தானாய் கலங்கிற்று! ஆனால், நிதானமாக யோசித்தாள். அவளுடைய கணவனால் ஒரு பெண்ணுக்குத் துரோகம் செய்ய முடியாது! அவளுக்குத் தெரியும்! நம்பிக்கை பிறந்தது.

“என்ன நடந்தது?” கலக்கமின்றி இதமாகக் கேட்டாள்.

“நான் சொல்லப்போறது உன்ர மனதுக்கு இதம் தராதம்மா.” வேதனையோடு சொன்னான் நிர்மலன். அவளையும் கைவிட்டு, இவளுக்கும் மறைத்து என்று என்னவோ அவன் மிகுந்த தரம் தாழ்ந்து போய்விட்டது போலுணர்ந்தான்.

“கவலையும் தராதப்பா” நம்பிக்கையோடு சொன்னாள் உஷா.

“என்னைப்பற்றி உங்களுக்கும் உங்களைப்பற்றி எனக்கும் தெரியாம இருக்க நானும் நீங்களும் நேற்று கல்யாணம் முடிச்ச புதுத் தம்பதிகள் இல்ல. எட்டு வருசம் வாழ்ந்திருக்கிறோம். ரெண்டு பிள்ளைகள் இருக்கு. எனக்கு என்ர மனுசனைப் பற்றியும் தெரியும். அவருக்கு என்னை எவ்வளவு பிடிக்கும் எண்டும் தெரியும். அதால ஒண்டுக்கும் யோசிக்காம நீங்க சொல்லுங்கோ!” அனுசரனையாக அவள் சொல்லிமுடிக்க முதலே, ஆறுதல் தேடும் குழந்தையாய் மனைவியை இறுக்கி அணைத்திருந்தான் நிர்மலன்.

எவ்வளவு பெரிய வார்த்தைகள்! அவளே உணர்ந்திருக்க மாட்டாள், இந்த வார்த்தைகள் தன் கணவனை எந்தளவுக்கு ஆற்றுப்படுத்தும் என்று. தெம்பூட்டும் என்று. ‘கடவுளே.. என்ர வாழ்க்கையில எத்தனை அற்புதமான பெண்களைத் தந்திருக்கிறாய்.’ அவனது நலத்தை மட்டுமே நாடும் அவள். அவனை உயிராய் நம்பும் இவள்!

மென்மையாகக் கேசத்தைக் கோதிக்கொடுத்தாள் உஷா.

அவளது வருடலிலும் அணைப்பிலும் தைரியம் வரப்பெற்றவன் மனைவியிடம் தன் இளமைக்காலத்து காதலைச் சொன்னான்.

“அவள் எங்க இருக்கிறாள், அவளின்ர நம்பர் என்ன எண்டு எனக்குத்தான் எதுவும் தெரியாது. ஆனா அவளுக்கு, என்ர வீட்டு விலாசத்தில இருந்து நம்பர் வரைக்கும் எல்லாம் தெரியும். அவளை நான் துலைச்சுப்போட்டு(தொலைத்துவிட்டு) நிக்கிற மாதிரி அவளும் என்னைத் தேடித் தவிக்கக்கூடாது எண்டு எதையுமே நான் மாத்த இல்ல. எல்லாம் இருந்தும் அவள் என்னைத் தேடிக் கூப்பிடேல்ல எண்டதும் அவளின்ர உயிருக்கு ஏதும் நடந்திட்டுதோ எண்டுதான் பயந்துகொண்டு இருந்தனான். ஒருவழியா கண்டுபிடிச்சுக் கதைச்சா கல்யாணம் நடந்திட்டுது எண்டு சொல்லுறாள். என்னால நம்பவும் முடியேல்ல நம்பாம இருக்கவும் முடியேல்ல. உண்மையாவே யாரையோ கட்டியிருக்கிறாள்; அதாலதான் அவள் என்னைத் தேட இல்ல. தொடர்புகொள்ளவும் இல்ல. நானா தேடிக் கண்டுபிடிச்சதும் உண்மையைச் சொல்லி இருக்கிறாள் எண்டு அவ்வளவு கோவம். அப்பதானே, முகாமில சனம் எல்லாம் ஒண்டா இருக்கேக்க அவன் இவளைக் கட்டினது, இவள் அவனைக் கட்டினது எண்டு ஆயிரம் கதைகள் வந்தது. அப்படி இவளும் எண்டு.. உயிரோட இருந்தும் அவள் என்னைத் தொடர்பு கொள்ளாம இருக்க வேற எந்தக் காரணமும் இல்லையே. அந்தளவு தடுமாறிப்போற ஆளா அவள் எண்டு அவளை வெறுத்த அளவுக்கு இந்த உலகத்தில வேற ஆரையுமே வெறுக்கேல்ல நான்.” எப்படியெல்லாம் வெறுத்தோம் என்கிற நினைவில் தாங்கமாட்டாமல் தலையைக் கைகளால் தாங்கிக் கொண்டான் நிர்மலன்.

“பிறகு உன்னோட கலியாணம். ஆரம்பம் எந்த உணர்வுமே இல்லாமத்தான்.. அம்மாவோட நச்சரிப்புத் தாங்காமத்தான் உன்னைக் கட்டினான். ஆனா, என்ர வாழ்க்கை நானே எதிர்பார்க்காத அளவு சந்தோசமா மாறிப்போச்சு. நீ மாத்திப்போட்டாய். எல்லாம் நிறைவா இருந்தும் மனதில மட்டும் ஒரு கோபம். என்னை ஏமாத்திப்போட்டாள், துரோகம் செய்திட்டாள் எண்டு. அவளை நம்பி ஏமாந்துட்டனே எண்டு. இந்தமுறை இலங்கைக்குப் போனதே ‘சந்தோசமா’ வாழுறன் எண்டு சொன்னியே, நான் வாழுற சந்தோசமான வாழ்க்கையைப் பார், என்ர மனுசி பிள்ளைகளைப் பார் எண்டு காட்டத்தான். ஆனா, அண்டைக்குக் கோயில்ல வச்சு சக்கர நாற்காலியில அவளைக் கண்ட அந்த நிமிசம்.. நான் செத்தே போய்ட்டன் உஷா. அவள் சொன்ன சந்தோசம் அதுதானா எண்டு. என்னை என்னாலேயே மன்னிக்க முடியேல்லை.” சொன்னவன் தன்னையே வெறுத்தான். தன் முட்டாள் தனத்தை எண்ணி ஓராயிரம் முறை நொந்தான்.

“இதுல இவ்வளவு நாளும் அவளைப்பற்றி நினைவு வரேக்க அவ்வளவு கோபம் வரும். அவளை மகா கேவலமானவளா நினைச்சிருக்கிறன். ஆனா யோசிச்சுப் பார்த்தா பக்கா சுயநலவாதியா நான்தான் நடந்திருக்கிறன். துணையா நிண்டிருக்க வேண்டிய நேரத்தில கடவுளே.. என்ன நினைச்சிருப்பாள்.. ஒரு வார்த்த சொன்னதும் ஓடிப்போயிட்டான் எண்டு தானே.” அவனால் அவனையே மன்னிக்க முடியவில்லை.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock