வாடிப்போயிருக்கும் செடி நீருக்காகத் தாகத்துடன் காத்திருப்பதில்லையா? அப்படி இருந்தது அவள் கேட்டவிதம்.
“உனக்குக் கவலையாவே இல்லையா?” கேட்டே விட்டான் நிர்மலன். அவனால் முடியவில்லை. நடிக்க முடியவில்லை. ஒன்றுமே நடக்காதது போல் பேச முடியவில்லை.
அவளை வெறுத்த நாட்களில் கூட மறக்கமுடியாமல் கிடந்த நினைவுகள். இன்று.. நெஞ்சை ரணப்படுத்திக் காயப்படுத்தி இரத்தத்தைக் கசியவைத்தது.
அவ்வளவு நேரமாக மெல்லிசைபோலப் பேசிக்கொண்டிருந்தவள் இப்போது அமைதியானாள்.
ஆனால் அவன் வாயைத் திறந்தான்.
“பதில் சொல்லு கண்மணி!”
அந்தக் ‘கண்மணி’யில் அவள் உடைந்தாள். எத்தனை வருடங்களுக்குப் பிறகு அவன் வாயிலிருந்து அவள் பெயர் உதிர்கிறது. அவனின் கண்ணின் மணியாக இருந்தவள் இன்றைக்கு வெறும் கண்மணி. யாருமே அற்ற அநாதை கண்மணி. அவனைக்கூட தாரை வார்த்துக்கு கொடுத்துவிட்ட பாவப்பட்ட கண்மணி. அவளது கண்மணிகளிலிருந்து நீர்மணிகள் உருண்டு மார்பை நனைத்தன. கடிதங்கள் எழுதும் நாட்களில் எல்லாம் காதல் சொட்டும் கண்களை வரைந்து அருகில் மணி என்றுதான் எழுதுவான். அவனது ‘கண்ணான கண்மணியாம்’. இன்று? அவனில்லாத அநாதை கண்மணி!
இன்றும் அவளிடம் அந்தக் கடிதங்கள் இருக்கிறது. அத்தனை இடர்பாடுகளுக்கும் இன்னல்களுக்கும் மத்தியிலும் குடும்பம் முதற்கொண்டு சொந்தபந்தம் வரைக்கும் எல்லாவற்றையும் தொலைத்தாலும் அவன் வரைந்த மடல்களை மட்டும் தொலைக்கவேயில்லை. அவைதான் அவளின் ஆறுதல், ஆசுவாசம் எல்லாமே!
“நீங்க சந்தோசமா வாழவேணும் எண்டுதான் ஆசைப்பட்டனான். இவ்வளவு நாளும் எப்பிடி இருக்கிறீங்கள் எண்டு தெரியாம இருந்தது. இப்ப நீங்க மனுசி பிள்ளைகள் எண்டு சந்தோசமா வாழுறதைப் பாத்த பிறகு நிம்மதியா இருக்கிறன். எதுக்குக் கவலை?” கரகரத்த குரலில் மெல்ல வினவினாள்.
என்ன இவள்? அவனை இன்னுமின்னும் மோசமானவனாக மாற்றிக்கொண்டு இருக்கிறாளே. ‘கொஞ்சம் திட்டனடி! எப்படியடா நான் ஒரு வார்த்தை சொன்னதும் அப்படியே என்னைக் கைகழுவி விட்டுட்டுப் போனாய் எண்டு கேளடி.’ அவன் உள்ளம் அழுதது. என்ன செய்தும் தீர்க்க முடியாத பாவத்தை இழைத்துவிட்டானே!
“நீ சந்தோசமா இருக்கிறியா கண்மணி?”
அவள் காதினுள் ஆழ்ந்து ஒலித்தது அவன் குரல்.
சந்தோசமாக இருக்கிறாளா? அவள் அவளையே கேட்டுக்கொண்டாள். இதழலோரம் விரக்தியான புன்னகை ஒன்று தவழ்ந்தது. ஏன் இருக்கிறாள், யாருக்காக இருக்கிறாள் என்றே தெரியாமல் இருப்பவள் எப்படிச் சந்தோசமாக இருக்க முடியும். அரும்பிய கண்ணீரை கண்களைச் சிமிட்டி சரி செய்தாள்.
கண்ணயரும் ஒவ்வொரு இரவிலும் அவள் கேட்பது ‘காலையில் விழிக்கக் கூடாது.’ என்றுதான். ஆனால் என்ன தினமும் விழித்துவிடுகிறாள்.
கடவுளால் கூட இரக்கம் காட்டப்படாத அவள் எப்படி இருப்பாள்?
“எனக்கு என்ன குறை? நான் சந்தோசமாத்தான்..” எனும்போதே, “பொய் சொல்லாத கண்மணி!” என்று பொறுக்கமுடியாமல் சீறிவிட்டான் நிர்மலன்.
அந்த வார்த்தைகள் அவனை எப்படிக் கொல்லும் என்று தெரியாதா?
“ஏன் கண்மணி? ஏன் அப்பிடிச் சொன்னனீ? காலத்துக்கும் எதையும் மாத்த முடியாத நிலைல என்ன நிக்க வச்சிட்டியே? ஏன் கண்மணி? இந்த நிலைல நீ இருக்கிறது தெரிஞ்சும் கையைக் கட்டிக்கொண்டு நிக்க வச்சிட்டியே.. ஏன் கண்மணி?” தாங்கமுடியாமல் குமுறினான். “இனி என்னால என்னடி செய்யேலும்? உன்ன பாத்து சாகிற வரைக்கும் அழப்போறன். அதுதான் உன்ர விருப்பமா? அதுக்குத்தான் ஆசைப்பட்டியா?”
இதென்ன? அவன் ஏன் இத்தனை துயர் கொள்கிறான்? காரணமே இல்லாமல். மனம் பரிதவித்துப் போக அவசரமாகச் சொன்னாள் அவள்.
“நீங்க இப்படிக் கலங்க அவசியமே இல்ல நிர்மலன். அந்த நேரம் எனக்கு வாழ்க்கையே வெறுத்துப் போச்சு. அடிபாட்டுல என்ர குடும்பம் அழிஞ்சு, நான் படுகாயம் பட்டு, அண்ணாவும் வீரச்சாவு எண்டு தெரிஞ்சபிறகு அநாதை மாதிரி வீதில கிடந்த நேரம் எல்லாமே மரத்துப் போச்சு. வலி, அழுகை, கதறல், காயம், ரெத்தம் எண்டு காதில கேட்டதும் கண்ணால பாத்ததும் மரண ஓலத்தை மட்டும் தான். ஒற்றைத் துணி கூட இல்லாத வெறும் உடம்பு, பாதி உடம்பு, காயப்பட்ட உடம்பு எண்டு பாத்துப் பாத்து உணர்வு எல்லாம் செத்துப் போச்சு நிர்மலன். இதெல்லாம் மெல்ல மெல்ல ஆறி வந்த பிறகும் விரக்தியின் உச்சத்தில தான் இருந்தனான். வாழ்க்கையில பற்று இல்ல. வாழ விருப்பம் இல்ல. ஒரு காலும் இல்ல. உயிர் வாழவே பிடிக்கேல்ல. எனக்கு எப்ப சாவு வரும் எண்டுதான் நினைச்சு இருக்கிறன். உங்கள்ள கூட அந்த நேரம் காதல் இருந்ததா எண்டு எனக்குத் தெரியாது. பிறகு எப்பிடி உங்களுக்கு நான் ஒரு நல்ல துணையா இருப்பன் சொல்லுங்கோ? உங்களை எப்படிச் சந்தோசமா வச்சிருப்பன் சொல்லுங்கோ? நீங்க வாழ வேண்டாமா? அண்டைக்கு நான் பட்டுப்போன மரம். துளிர்க்காது எண்டு நினைச்சன். ஆனா நீங்க.. என்ர நிர்மலன் வாழுற காலம் வரைக்கும் சந்தோசமா வாழவேணும். அதுதான் அப்படிச் சொன்னனான்.” கரகரத்த குரல் என்றாலும் மென்மையாகச் சொன்னவளின் வார்த்தைகளில் அவன் விழிகளில் இருந்து இரு கண்ணீர் துளிகள் கழன்று விழுந்தன.
“அண்டைக்கு நான் யோசிக்காம கதைக்க இல்ல நிர்மலன். எனக்குக் கல்யாணம் நடந்திட்டுது எண்டு சொல்லேக்கையே உங்களோட நான் சேரக் கூடாது எண்டு முடிவு செய்துதான் சொன்னனான். உண்மைய சொல்லி இருந்தா கடைசிவரைக்கும் என்னைக் கைவிட்டிருக்க மாட்டீங்க எண்டும் எனக்குத் தெரியும். நாங்க சேராம இருந்ததுக்கு நான் மட்டும் தான் காரணம். உங்களுக்கு இந்தக் குற்ற உணர்ச்சி தேவையே இல்ல. நீங்க கண்டதையும் நினச்சு உங்களை வருத்தாதீங்கோ.”
இப்போது கூட அவனைத் தேற்றும் அவளை என்ன செய்ய?
“நான் உன்னை வெறுத்திடுவன் எண்டு கூட நீ யோசிக்க இல்லையா?”
“உயிரா நேசிச்ச மனம் ஏமாற்றத்தை தாங்காம பொங்கும் தானே.” அதற்கும் அவளிடம் பத்திலிருந்தது.
துக்கத்தில் தொண்டை அடைத்தது அவனுக்கு. “தெரிஞ்சும் என்னை அந்த நிலைல நிப்பாட்டிப்போட்டாய்!” குற்றம் சாட்டினான் அவன்.
அதனால் பாதிப்படையவில்லை அவள்.
“பரவாயில்ல நிர்மலன். இண்டைக்கு நீங்க வாழுற இந்த வாழ்க்கையைப் பார்க்கேக்க நான் செய்தது சரி எண்டுதான் இப்பவும் என்ர மனம் சொல்லுது. அதால எனக்குக் கவலையே இல்ல.” மனதாறச் சொன்னாள்.
“உன்னைப்பற்றி யோசிக்கவே மாட்டியா நீ?” தொண்டை அடைக்கக் கேட்டான்.
“என்னைப்பற்றித் தனியா யோசிக்க ஒண்டும் இல்ல. எனக்கு நீங்க சந்தோசமா இருக்கவேணும். எந்தக் கவலையும் இல்லாம நிம்மதியா குழந்தை குட்டிகளோட உங்கட மனுசியோட நிறைவா வாழவேணும்.”
‘போடி! நீயும் உன்ர காதலும்!’ இயலாமை கோபமாகப் பொங்கியது.
தன் மனதை உணர்த்திய நிறைவோடு இணைப்பை அவள் துண்டித்துவிட்டாள். அவளின் நினைவுகளைத் துண்டிக்கமுடியாமல் அந்த உரையாடலிலேயே சுழன்றுகொண்டிருந்தது நிர்மலனின் மனம்.
உன்னோடு நான் கண்ட
கற்பனைகள் அத்தனையும்
என் துணையோடு
நிறைவேறிக் கொண்டிருக்க,
என் கண்மணி
துடுப்பற்ற படகாய்
துணையற்று நீ நிற்கக்கண்டு
துடிதுடித்துப் போகிறதடி
உனைச் சுமந்த நெஞ்சமது!
நான் வாழவே நீ வழி தந்தாய்.
நீ வாழவே என் கண்மணி
என்ன செய்யப் போகிறேன்?