அவளது வீட்டின் முன்னே வாகனம் சென்று நின்றது.
“வீடு வந்திட்டுது கண்மணி!” குரலைச் செருமிக்கொண்டு சொன்னான்.
“ஆருமே இல்லாத வீட்டை என்னால பாக்கேலாது நிர்மலன். திரும்ப அங்கேயே கொண்டுபோய் விடுங்கோ.” அவன் மார்பிலிருந்து தலையை எடுக்காமலேயே மறுத்துத் தலையசைத்தாள்.
“உனக்கெண்டு இவ்வளவு பெரிய காணியும் வீடும் இருக்கேக்க, ஆரோ ஒரு ஆக்களின்ர காணியில ஏன் அநாதை மாதிரி இருக்கவேணும்?” நெஞ்சிலிருந்து பாரத்தை மறைத்து இதமாக எடுத்துச் சொன்னான் அவன்.
“இங்க வந்தா மட்டும் நான் அநாதை இல்லையா?” உன் உலகமாக நான் வருகிறேன் என்றவனைக்கூட இன்னொருத்தியிடம் தூக்கிக் கொடுத்துவிட்டு இப்படிக் கேட்கிறவளிடம் என்ன சொல்லுவான்?
“இல்ல! நான் உயிரோட இருக்கிற வரைக்கும் நீ அநாதை இல்ல. இறங்கு!” என்றான் அழுத்தி.
மெல்லத் திரும்பி நீர் நிறைந்த விழிகளால் வீட்டைப் பார்த்தாள். சுற்றிவர வளர்ந்துவிட்ட பற்றைகள் துப்பரவு செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. வீடு, அதற்குச் செல்லும் பாதை எல்லாமே திருத்தப் பட்டிருந்தது.
அவள், அண்ணா, அம்மா, அப்பா என்று எல்லோருமாக வாழ்ந்த வீட்டுக்குள் எப்படித் தனியாகப் போவாள்? நெஞ்சு நடுங்க, அம்மா அப்பாவோடு அந்த வீட்டிலிருந்து பயத்தோடு வெளியேறிய நாள் நினைவில் வந்தது.
போகமுதல் அவள் முத்தமிட்டுப் பிரிந்த ரோஜா செடி எங்கே? அண்ணா நட்ட மாமரம் எங்கே? அப்பாவின் செவ்விளநீர் தென்னைகள் எங்கே? ஐயோ.. அம்மாவின் முருங்கை மரத்தைக் கூடக் காணவில்லை. எதையுமே காணவில்லை. அவளும் அந்த வீடும் மட்டும் வாழ்ந்த வாழ்க்கையின் எச்சங்களாக மிஞ்சிப்போய் நிற்கிறார்கள்.
“வா..!” அவன் அவளைத் தூக்கியதை உணரவேயில்லை அவள். தேகமெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தது. மீண்டும் அவளைச் சக்கர நாற்காலியில் இருத்தி மெல்ல அவனே தள்ளிக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தான்.
வாசலுக்குப் போனதும் கால்களை வைத்து நடக்கவேண்டும் போலிருந்தது. அவளால் முடியாதே. விம்மல் ஒன்று பெரிதாக வெடித்தது. கைகள் இரண்டாலும் வாயை இறுக்கிப் பொத்திக்கொண்டாள்.அவள் பிறந்து, வளர்ந்து, ஓடி ஆடி விளையாடிய வீட்டில் கால்வைக்கக் காலில்லை அவளுக்கு.
“நிர்மலன் ப்ளீஸ்.. நான் வீட்டை மிதிக்கவேணும்.. கால்.. கால் வைக்கப்போறன்..” பெரும் பரிதவிப்போடு பின்னால் திரும்பி அவனிடம் சொன்னாள்.
அவள் படும்பாட்டைக் கண்டவனின் விழிகளிலும் கண்ணீர்!
நெஞ்சு கனக்க, அவளை மெல்ல எழுப்பி ஒற்றைக் காலில் நிறுத்தினான். முதல் பாதடி அந்த வீட்டினுள் பட்ட நொடி, தேகமெங்கும் அதிர்வலைகள் தாக்க அப்படியே மடிந்து சரிந்தவள் விறாந்தையில் விழுந்து கதறித்தீர்த்தாள்.
ஒன்பது வருடத்து அழுகையை, ஒன்பது வருடத்துத் துயரை, ஒன்பது வருடத்துப் பாரத்தை அழுது தீர்த்தாள். அங்கே, பற்றைகளை வெட்டிக்கொண்டு இருந்தவனும் காரோட்டியும் என்னவோ ஏதோ என்று பதறிக்கொண்டு ஓடிவந்தனர். அவளைப் பார்த்த அவர்களின் கண்களிலும் கண்ணீர்.
சொல்லித் தெரியவேண்டியதில்லையே இந்தத் துயரெல்லாம்!
நிர்மலனாலும் தேற்ற முடியவில்லை. தேற்றும் நிலையில் அவனுமில்லை. அவளது அண்ணன் கதிரோன் இரண்டு வயது பெரியவன் என்றாலும் அவனது நண்பன். அவனின் இழப்பு நிர்மலனையும் தாக்கியது.
அவளை அழட்டும் என்று விட்டுவிட்டான். அதன்பிறகாவது தெளிந்து அவளைப் பற்றியும் அவள் யோசிக்கட்டும். அழுது அழுது ஓய்ந்தவளின் அழுகை விம்மலாக மாறி, சின்னச் சின்னக் கேவலாக வந்து நின்றபோது, “கண்மணி! காணும் எழும்பு, வா!” என்றவன் பூவைப்போலத் தூக்கி அங்கே இருந்த சோபாவில் அவளை இருத்தினான்.
உள்ளே சென்று தண்ணீர் எடுத்துவந்து பருகச் செய்தான். ஈரத்துணியைக் கொடுக்க நன்றி சொல்லி முகத்தைத் துடைத்துக்கொண்டவளுக்கு, ஒருமுறை அந்த வீடு முழுவதும் நடந்துபார்க்க வேண்டும் போலிருந்தது. அம்மா அப்பாவின் அறையை, சுவாமி அறையை, அண்ணாவின் அறையை, சமையலறையை எல்லாவற்றையும்.. ஒரு சுவரைக்கூட விடாமல் தடவிப்பார்க்க வேண்டும் போலிருந்தது.
அப்போது தேநீரை நீட்டியது ஒரு கரம். யார் என்று பார்த்தவளின் விழிகளில் வியப்பு! இது அவன்.. அன்று துயிலுமில்லத்தில் பார்த்தவன்.
“இவர்தான் வீடு முழுக்கத் துப்பரவாக்கினவர். இப்ப தோட்டத்தையும் செய்துகொண்டு இருக்கிறார். பெயர் காந்தன். எங்கட பள்ளிக்கூடத்திலதான் படிச்சவர். நினைவிருக்கா உனக்கு?” அறிமுகம் செய்துவைத்தான் நிர்மலன்.
“எங்கட பள்ளிக்கூடத்திலையோ?” வியப்போடு கேட்டவள் மறுத்துத் தலையசைத்தாள். “ஆனா இவரைப் பாத்திருக்கிறன்.” என்றவள், துயிலுமில்லத்தில் சந்தித்தத்தைச் சொன்னாள்.
“ஆனா கதிரோன்ர தங்கச்சி நீங்க எண்டு எனக்குத் தெரியாது.” சொல்லும்போதே தொண்டை அடைத்தது காந்தனுக்கும்.
“அண்ணாவைத் தெரியுமா?” ஆவல் மின்னக் கேட்டாள்.
“அவனும் நானும் ஒரு படையணிதான். நான் காயப்பட்டுப் போய்ட்டன். பிறகுதான் தெரியும் அவன் வீரச்சாவு எண்டு. அண்டைக்கு நீங்க யாரிட்ட வந்தனீங்க எண்டு கவனிக்க இல்ல.” என்றான் காந்தன்.
அன்று, மனைவியை இழந்த துயரில், விரக்தியின் எல்லையில் நின்றவன் கவனித்திருக்கச் சந்தர்ப்பம் இல்லைதான்.
நால்வருமே தேநீரைப் பருகினர். கதிரோனைப் பற்றி நிறையச் சொன்னான் காந்தன். அதுவும், அவளைப் பற்றிய கவலைதான் கடைசிநாட்களில் அவனை அரித்தது என்று அறிந்தபோது நின்றிருந்த கண்ணீர் மீண்டும் அரும்பியது அவளுக்கு.
“நீங்க ஆரையோ விரும்புறீங்க எண்டும்..” பேச்சுவாக்கில் ஆரம்பித்துவிட்டவன் அதை எப்படிச் சொல்வது என்று தெரியாமல் நிறுத்திவிட, சட்டென்று வியப்புடன் நிர்மலனிடம் பாய்ந்தது அவள் விழிகள். அவர்களது காதல் அவர்களைத் தாண்டி வேறு யாருக்கும் தெரியாது என்றல்லவா நினைத்திருந்தார்கள்.
“அண்ணாக்கு எப்பிடித் தெரியுமாம்?”
“அது தெரியாது. ஆனா, தனக்குத் தெரியும் எண்டு தெரியாம, நீங்க நல்லபிள்ளைக்கு நடிப்பீங்களாம் எண்டு, கடைசியா லீவுல வந்து நிண்டுட்டு திரும்பி வந்தநேரம் சொல்லிச் சிரிச்சவன். பெடியன் நல்லவனாம் எண்டும் சொன்னவன்.”
ஒருமுறை அவளது செல்போன் வைத்த இடத்தில் காணவில்லை என்று தேடி, பிறகு அலமாரிக்குள் இருந்தது நினைவு வந்தது. ஆமாம்! அப்போது அண்ணா விடுமுறையில் ஒருவாரம் வந்திருந்தான் தான். அதுதான் அவன் கடைசியாக வந்திருந்துவிட்டுப் போனது.
மீண்டும் கலங்கத் தொடங்கியவளிடம், “அழுதது போதும் கண்மணி! கொஞ்சநேரம் இங்கேயே இரு. சாமானை இறக்கிவிட்டா அவரைப் போகச் சொல்லலாம்.” சொல்லிவிட்டு மூவருமாக இறக்கிவைத்தனர்.
மதிய உணவும் கடையிலிருந்தே வருவிக்கப்பட்டுவிட, சாப்பிட்டவளை கட்டாயப்படுத்தி உறங்கவைத்தான்.
உறங்கி எழுந்தவள், அவனும் காந்தனோடு சேர்ந்து வேர்க்க விறுவிறுக்கக் காணியைத் துப்பரவு செய்துகொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு அழைத்தாள்.
“நீங்க ஏன் இதெல்லாம் செய்றீங்கள்? விடுங்கோ.”
“அதைவிடு! இப்ப பரவாயில்லையா?” மென்மையாகக் கேட்டான்.
“ம்ம்..” என்று தலையசைத்தாள்.
“எனக்கு வீடு முழுக்கப் பாக்கவேணும் போலக்கிடக்கு. கூட்டிக்கொண்டு போறீங்களா?”
“வா!” கைகால்களைக் கழுவிக்கொண்டு வந்து கரம் பற்றி எழுப்பினான். ஒற்றைக் காலில் துள்ளித் துள்ளி நடப்பதைக் காணச் சகியாமல், வாங்கிவைத்திருந்த ஊன்றுகோள்களைக் கொண்டுவந்து கொடுத்தான்.
ஒவ்வொரு சுவரிலும் சாய்ந்து நின்று ஆத்மார்த்தமாக அந்த நாட்களோடு வாழ்ந்து, ஒவ்வொரு அறையாகப் பார்த்து, அன்று சலசலத்த வீடு இன்று மௌனித்துப் போயிருக்கும் நிஜத்தை கசப்போடு விழுங்கி அவள் முடிக்கையில் மாலைப்பொழுது வந்துவிட்டிருந்தது.
“இரவுக்கு அம்மா சாப்பாடு கொண்டுவருவா. சாப்பிட்டுட்டு நிம்மதியா படு. நாளைக்கு ஒரு வேலை இருக்கு.” என்றவன், காந்தனுக்கும் பணத்தைக் கொடுத்து, அன்றைய கணக்கை முடித்து அனுப்பி வைத்தான்.
“இதெல்லாம் என்னெண்டு நான் திருப்பித்..”
“எனக்குக் கோபத்தைக் கிளப்பாத கண்மணி!” ஒரே பேச்சில் அவளது வாயை அடைத்துவிட்டான் நிர்மலன்.
பத்மாவதி அம்மாவோடு பழங்கதைகள் பேசி, சிரித்து, அழுது, ஏங்கி, மௌனமாகக் கண்ணீர் வடித்து என்று எப்போது உறங்கினாளோ தெரியாது, ஆனால் அதிகாலை நேரத்துப் பறவைகளின் இன்னிசை கேட்டதுமே எழுந்துவிட்டாள்.
மனதுக்குப் பெரும் இதமாகத்தான் இருந்தது. எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு சொந்த வீட்டில் உறங்கி எழுந்திருக்கிறாள். அவன் வாங்கித் தந்த ஊன்றுகோள்களின் உதவியோடு தானாகவே நடந்து சென்று முகம் கழுவி, தலையிழுத்து, மனதார கடவுளைக் கும்பிட்டு தேநீர் வைத்தது கூட அவளுக்கு உற்சாகத்தைத் தந்தது. சின்னதாகத் தன்னம்பிக்கையை உருவாக்கியது.
‘இங்க வந்ததும் நல்லதுதான். ஒரு பிடிப்பு வந்திருக்கு!’ மனதில் எண்ணிக்கொண்டாள்.
அவளுக்குத் தேவையான அளவில் அந்த வீட்டில் புதிதாக எல்லாமே வாங்கி வைத்திருந்தான் நிர்மலன். அவள் தேநீரை கப்பில் ஆற்றும்போதே அவனும் வந்துவிட்டான். குளித்துப் புது உடையில் உற்சாகமாக வந்தவனைப் பார்க்கவும் நன்றாக இருந்தது.
“தேத்தண்ணியா? எனக்கும் கொண்டா!” என்று வாங்கிப் பருகினான்.
அப்படியே அவளறியாமல் அவள் முகத்தையும் ஆராய்ந்தான். தெளிந்த வானம்போல இருந்தது. விழிகளை அந்த வீட்டை சுற்றியே வட்டமிட விட்டுவிட்டு இதழில் பூத்திருந்த குட்டிச் சிரிப்புடன் தேநீரை ரசித்துப் பருகியவளைப் பார்க்கையில் அவன் மனமும் நிறைந்து போயிற்று!
மாறிவிடுவாள்! மாற்றிவிடலாம்! நம்பிக்கை வந்திருந்தது அவனுக்கு.