“அவனை என்ன வேலை வெட்டி இல்லாம சும்மா ஊரைச் சுத்துறவன் எண்டு நினைச்சியா? ஒவ்வொரு செக்கனையும் காசாக்குறவன்! என்ன மதிச்சு உன்னைப் பாக்க வந்தவனைக் கேவலப்படுத்தி அனுப்பி இருக்கிறாய்!”
அலட்சியமாகத் தலையைச் சிலுப்பினாள் ஆரணி. “அவ்வளவு பிஸியானவன் தன்ர வேலைய மட்டும் பாத்திருக்க வேணும்! தேவையில்லாம என்னைப் பாக்க வந்திருக்கக் கூடாது.”
சத்தியநாதனுக்கு இரத்த அழுத்தம் ஏறிக்கொண்டு போயிற்று!
“தேவையில்லாத கதை என்னத்துக்கு? நீ என்ன சொன்னாலும் அவனோடதான் உனக்குத் திருமணம். அது மாறாது!” முடிவாகச் சொன்னார்.
“அது நடக்காது அப்பா! நான் விரும்புறது நிகேதனை. அவனைத்தான் கட்டுவன். ஒருத்தனை மனதில வச்சுக்கொண்டு இன்னொருத்தனை கட்டுற கேவலமான பழக்கத்தை நீங்க எனக்குச் சொல்லித் தரேல்ல!” அவளும் தெளிவாகச் சொன்னாள்.
இறுகிய தாடையும் கண்களில் ஏறிய சிவப்பும் அவர் கோபத்தை அடக்குவதைக் காட்டியது. வேறு யாராகவும் இருந்திருக்கப் பயத்தில் அடங்கிப் போயிருப்பர். அவள் ஆரணி! நிமிர்வும் தைரியமும் பிறப்பிலேயே கொண்டவள். தடுமாறவே இல்லை.
“நான் ஒருத்தனை விரும்புறன் எண்டு சொன்னபிறகும் இன்னொருத்தனைப் பாக்க அனுப்பி வச்சது அசிங்கம்! அதைச் செய்தது நீங்க!” அவரையே குற்றம் சாட்டினாள்.
“விரும்புறன் எண்டு சொல்லிக்கொண்டு கண்டவனையும் கண்ணுக்கு முன்னால கொண்டுவந்து நிப்பாட்டினதும் எதைப்பற்றியும் யோசிக்காம கட்டிவைக்க, உன்னை மாதிரி நானும் சின்னப்பிள்ளை இல்ல. அவன் உனக்குத் தகுதியானவனா, நாளைக்கு என்ர தொழிலையும் கொண்டு நடத்துறவனா, என்னையே தொழில்ல வெண்டு(வென்று) காட்டுறவனா இருக்கவேணும்! அதுக்குப் பிறப்பில இருந்தே சில தகுதிகள் வேணும். காச கையாளத் தெரியவேணும். நாலுபேரை தனக்குக்கீழ வச்சு வேலை வாங்கத் தெரியவேணும். எங்கட ஸ்டேட்டஸ்ல சரிக்குச் சமனா நிக்கத் தெரியவேணும். கூலி வேலைக்குக் கூடப் போகத் துப்பில்லாதவனுக்கு இதெல்லாம் எப்பிடித் தெரியும்? நீ சொன்னவன எனக்கு மருமகனா கொண்டுவந்தா எண்ணி ஒரு வருசத்துல நடுரோட்டுல வந்து நிண்டு, என்ர மானம் மரியாதையையும் சேர்த்து வாங்குவான்!” என்றவரின் பேச்சில் ஆரணியின் முகம் அவமானத்தில் சிவந்து போயிற்று!
சத்தியநாதனோ இப்போது யசோதாவை முறைத்தார். “நல்ல வளப்பு வளத்து வச்சிருக்கிறாய்! படி எண்டு அனுப்பிவச்சா காதல் எண்டு வந்து நிக்கிறாள்! அந்த அன்னக்காவடி எனக்கு மருமகனாம்! எந்தக் காலத்திலையும் நடக்காது, சொல்லிவை!”
யசோதாவுக்கு யார் பாக்கம் நிற்பது, யாரைச் சமாளிப்பது என்று தெரியாத நிலை. மனம் படபடவென்று அடித்துக்கொண்டது. அச்சத்துடன் மகளை நோக்கினார். அவள் விழிகளில் அனல் பறந்தது.
“நீங்க நினைக்கிறதும் நடக்காது அப்பா! இனி அவன்.. அந்த விபாகரன் என்னைப் பாக்க வரக்கூடாது! மீறி வந்தான்.. பிறகு நடக்கிற எதுக்கும் நான் பொறுப்பில்லை!” என்றாள் உறுதியான குரலில்.
“ஹா!” அலட்சியச் சிரிப்பைச் சிந்தியவரின் விழிகளில் ஒருவிதமான மினுமினுப்பு! “அவனுக்கு என்ன பெயர்.. நிக்.. நிகேதன் என்ன? அவன் இருக்கிற வரைக்கும் தானே நீ மாட்டன் எண்டு சொல்லுவாய்? இல்லாம போய்ட்டா?” அவர் கேட்டு முடிக்க முதலே, “அப்பா!” என்று குரல் உயர்த்தியிருந்தாள் ஆரணி!
யசோதாவே ஆடித்தான் போனார். “சத்யா, என்ன இது? கோபத்தில் என்ன கதைக்கிறது எண்டு இல்லையா?” என்று பதறினார். எவனாக இருந்தாலும் யாரோ ஒரு தாய் பெற்ற பிள்ளை தானே அவனும்!
சத்யநாதன் அசையவே இல்லை. இப்படி எத்தனைபேரை ஆட்டிவைத்திருப்பார். இல்லாமல், இந்த நிலைக்கு வந்திருப்பாரா என்ன? அவருக்கு இதெல்லாம் சுண்டைக்காய் விடயம்! அலட்சியப் புன்னகை ஒன்றை உதட்டினில் நெளியவிட்டார். “அதை உன்ர மகளுக்குச் சொல்லு! செல்லமா வளத்தா என்னவும் செய்யலாம் எண்டு நினைச்சிட்டாள் போல! பாசமா வளக்கத் தெரிஞ்ச எனக்கு அவளை வழிக்குக் கொண்டுவரவும் தெரியும் எண்டு சொல்லு!” என்றார் அதே சிரிப்புடன்.
“செல்லம் குடுத்தது நீங்க. கேட்டதெல்லாம் வாங்கிக் குடுத்ததும் நீங்க. இப்ப, ஒரு பிரச்சனை எண்டு வந்ததும், ‘என்ர மகளா?’ சும்மா கோவத்துல குதிக்கிறதை விட்டுட்டு உங்கட மகளுக்கு எடுத்துச் சொல்லுங்கோ! அடுத்த வீட்டுப் பிள்ளையில கைவைக்க எங்களுக்கு உரிமையில்லை!” யசோதாவுக்கு என்னவோ நடக்கக் கூடாதது நடக்கப் போவதுபோல உள்ளம் பதறியது. அப்பாவும் மகளும் பிடிவாதத்துக்குப் பெயர் போனவர்கள். எப்படிச் சமாளிக்கப் போகிறார்? வழியின்றித் தடுமாறினார்.
“என்ர வீட்டுல கைவச்சா அதுதான் நடக்கும்!”
அதுவரை தகப்பனையே அசையாமல் பார்த்திருந்த ஆரணி
அவரின் முன்னே வந்து நின்றாள். “செல்லமாத்தான் வளத்தனீங்க அப்பா. நான் கேட்டதெல்லாம் வாங்கித் தந்தனீங்க. படிச்ச படிப்பில இருந்து ஓடுற கார் வரைக்கும் நான் எடுத்த முடிவு எல்லாம் சரி எண்டு சொல்லிச் சந்தோசமா கொண்டாடுனீங்க. அந்தத் தைரியத்திலதான் மனத்துக்குப் பிடிச்சவனையும் காதலிச்சனான். அதுவும், காதலிக்கவேணும் எண்டு திட்டம் போட்டுக் காதலிக்க இல்ல. இவனைத்தான் காதலிக்கவேணும் எண்டு நினைக்கவும் இல்ல. என்ர மனம் அவனைத்தான் விரும்பினது அப்பா. அவன் நல்லவனா எண்டுதான் பாத்தேனே தவிர ஏழையா பணக்காரனா எண்டு பாக்கேல்லை. வாழ்க்கைக்கு நல்ல மனதுதான் தேவை எண்டு நினைச்சன். அப்பிடித்தான் நீங்களும் நினைப்பீங்க எண்டு நம்பினன். ஆனா நீங்களும் காசை வச்சுத்தான் ஆளை எடைபோடுற ஆள் எண்டு இப்பதான் தெரியவந்திருக்கு. தெரிஞ்சபிறகும் மனத்தப்பற்றி உங்களிட்டக் கதைக்கிறதுல அர்த்தமில்ல!” என்றவள் மிகுந்த நிதானத்தோடு கடைசி வார்த்தைகளை உதிர்த்தாள்.
“என்ன சொன்னீங்க? அவன் இருக்கிற வரைக்குமா? அவன் இல்லாட்டியும் நான் அவனுக்குத்தான் சொந்தம்! இப்பவே இந்த வீட்டை விட்டுப் போகப்போறன்! அவனைத்தான் திருமணமும் செய்யப்போறன்! உங்களால் என்ன செய்ய ஏலுமோ அதைச் செய்ங்க! நடக்கிறதைச் சந்திக்க எனக்குத் தைரியமிருக்கு!” என்றவள், அதிர்ந்து சிலையாகி நின்ற அன்னையை ஒரு பார்வை பார்த்துவிட்டு, வீட்டை விட்டு நடக்கத் தொடங்கினாள்.
ஒருநொடி திகைத்து நின்றுவிட்டு, “ஆரா நில்லு!” என்றபடி ஓடிவந்தார் யசோதா.
அவள் இந்தளவு தூரத்துக்குப் போவாள் என்று எதிர்பார்க்கவில்லை அவர்.
“அப்பாதான் கோவத்துல கதைக்கிறார் எண்டா நீயும் அவசரப்படாத ஆரா! என்ன பழக்கம் வீட்டை விட்டுப் போறது? நாலு சனத்துக்குத் தெரிஞ்சா என்ன கதைக்கும்? எவ்வளவு கேவலம்?” பதறிக்கொண்டு மகளுக்கு எடுத்துரைக்க முனைந்தார் அன்னை.
“இந்தளவுக்குக் கொண்டுவந்து விட்டது நீங்க ரெண்டுபேரும்தான் அம்மா. விருப்பமில்லை, கட்டித்தரமாட்டோம் எண்டு நீங்க சொல்லியும் வெளில போனேனா? இல்லையே! பொறுமையா இருந்து என்ர விருப்பம் என்ன எண்டு காட்டோணும் எண்டுதான் நினைச்சனான். ஆனா நீங்க? இன்னொருத்தனைக் கொண்டுவந்து மாப்பிள்ளையா நிப்பாட்டுறீங்க. தன்ர மகளைப் பாதுகாத்துக்கொண்டு யாரோ பெத்த மகனை ஆளே இல்லாம அழிக்கப்போறாராமே அப்பா. அதுக்கு விடமாட்டன் நான்! அவனுக்கு என்ன செய்றதா இருந்தாலும் என்னைத் தாண்டித்தான் நடக்கும்!” யசோதா தடுக்க தடுக்க விலகி நடந்தவளை இடைமறித்தது சத்தியநாதனின் குரல்.
“போறதுக்கு முதல் ஒண்ட நல்லா கேட்டுட்டுப் போ!”
வீட்டு வாயிலில் நின்றவரைத் திரும்பிப் பார்த்தாள் ஆரணி! அவரின் முகம் இறுகி கல்லைப்போன்று காட்சியளித்தது.
“இந்த வீட்டைத் தாண்டிப் போனா திரும்பி வரக்கூடாது. எனக்கு மகள் எண்டு ஒருத்தி இல்லவே இல்லை எண்டு தலை முழுகிடுவன்! இப்ப போயிற்று பிள்ளை குட்டியோட வந்து நிண்டா சேர்ப்பம் எண்டு மட்டும் நினைச்சிடாத!” என்று அவர் சொல்லும்போதே இதழோரம் வளையப் புன்னகைத்தாள் அவரின் மகள்.
“பயப்படாதீங்க அப்பா. கடைசி வந்தாலும் வரமாட்டன். ஒரு ரூபாய்க்குக் கூட உங்களிட்ட வந்து நிக்கமாட்டன். இவ்வளவு சொத்தும் எனக்குத்தான் வரும் எண்டு தெரிஞ்சும் எதுவுமே வேண்டாம் எண்டு உதறிப்போட்டுப் போறவளா திரும்ப வருவாள் எண்டு நினைக்கிறீங்க? என்ர நிகேதன் நாணயமானவன். அவனுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யத் தெரியாது! அவன் என்னைக் கைவிடமாட்டான். நானும் ஏமாந்துபோய் வந்து நிக்கமாட்டன்! வாழ்ந்து காட்டுவன்! நீங்களும் பாக்கத்தானே போறீங்க.” என்றவள் அதன்பிறகு அங்கே நிற்கவில்லை.