அறையின் வெளிக்கதவைத் திறந்து வைத்தும் தாங்க முடியாத அளவில் புழுங்கித் தள்ளியது. “அவிச்சுக் கொட்டுதடா! உடம்பெல்லாம் ஒட்டுது. குளிச்சா நல்லம் போல இருக்கு.” என்று சிணுங்கினாள் ஆரணி.
“கிணத்தடிக்குத்தான் போகோணும். வா!” என்று எழுந்தவன், அப்படியே அமர்ந்து அவளைப் பார்த்தான்.
“என்ன?”
“குளிச்சிட்டு என்ன போடப்போறாய்?” அந்தக் கேள்வியே அவன் குரலை உள்ளுக்கு இழுத்துக்கொண்டது. ஒரு நைட்டி வாங்கக்கூடி அவனிடம் பணமில்லை.
உள்ளாடைகள்? தோன்றிய கேள்வியைத் தனக்குள்ளேயே புதைத்துக்கொண்டு அப்படியே அமர்ந்திருந்தான். வக்கற்றவன் என்று அவன் நெஞ்சே அவனைக் குத்தியது.
“டேய்! போதும் சோக கீதம் வாசிச்சது! எழும்பி வா! நாங்க கட்டி பத்து வருசமா போயிட்டுது? இன்னும் ஒருநாள் கூட முடியேல்ல. ஒண்டுமே இல்லையே எண்டு அழுறதுக்கு ஒண்டும் நடக்கேல்ல. அமையிற சூழ்நிலையை எப்படிச் சமாளிக்கிறம் எண்டுறதுதான் கேள்வி. நான் சமாளிப்பன், நீ வா. இரவில வெளில தனியா போக எனக்குப் பயம்!” என்று அவனையும் இழுத்துக்கொண்டு கிணற்றடிக்கு நடந்தாள்.
“கிணத்தடிக்கு போறீனம்(போகிறார்கள்) அம்மா.” ஜன்னல் வழியே அவர்கள் செல்வதைக் கண்டுவிட்டுச் சொன்னாள் கயலினி.
‘இனி இதையெல்லாம் பாக்கவேணும் போலக்கிடக்கு!’ சினத்தில் தனக்குள்ளேயே சிடுசிடுத்த அமராவதி, “வா! சாந்தி வீட்டை போயிற்று வருவம்!” என்று அவிழ்ந்து கிடந்த கொண்டையை அள்ளிக் கொண்டையிட்டுக்கொண்டு அவளுடன் வெளியே நடந்தார். கூடப்பிறந்த தங்கை வீட்டில் இருக்க, கொஞ்சம் கூட யோசனையே இல்லாமல் ஒருத்தியை கூட்டிக்கொண்டு வந்ததும் இல்லாமல் அவளோடு சோடி போட்டுக்கொண்டு திரிந்தால் அவளின் மனம் கெட்டுவிடாதா? வந்தவளுக்குத்தான் அறிவில்லை என்றால் இவனுக்குமா பொறுப்பில்லை? அதுசரி! அது இருந்திருக்க இப்படி ஒரு காரியத்தைச் செய்திருப்பானா? அவரின் மனம் பொருமித் தள்ளியது.
கேட் திறந்து சாற்றப்படும் சத்தத்தில் எட்டிப் பார்த்தான் நிகேதன். இருவரும் வெளியே செல்வது தெரிந்தது. அவனுக்கும் தன் செய்கையின் பாரதூரம் விளங்காமல் இல்லை. ஆனால், வேறு வழியும் இல்லாமல் போயிற்றே.
தன்னைச் சுற்றி நடப்பதை அறியாத ஆரணி அவர்கள் வீட்டுக் கிணற்றை எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தாள். பெரிய ஆழமில்லை. அதன் முன்னே சீமேந்தினால் சதுர வடிவில் இழுத்த நிலம். அதை ஓலைக்கிடுகினால் மறைத்துக் கட்டியிருந்தார்கள். கிணற்றுக்குப் பக்கத்தில் ஒரு டாங்க். அதனோடு தொடராக உடைகளைத் துவைப்பதற்கு ஏற்றவாறு சீமெந்தினால் ஆன கட்டு ஒன்று சரிவாகக் கட்டப்பட்டிருந்தது.
பார்த்த கணமே அவனுக்குத்தான் அவளைப் பிடித்தது. அது காதலில்லை. ஒருவித ஈர்ப்பு. அவளின் நிமிர்வில், தைரியத்தில் வந்த பிரமிப்பு. அது அவளைக் கவனிக்க வைத்தது. கவனிக்கக் கவனிக்க அவள் அவனின் ரசனைக்குரியவளாக இருந்தாள். ஒரு நாளைக்கு ஒரு முறையேனும் கண்டால்தான் அமைதிகொள்வான். அவளைக் காணாவிடில் மனம் தேடி அலையும். அப்படி அவளிடம் என்ன இருந்தது என்று கேட்டால் தெரியாது. மெல்ல மெல்ல அவன் உள்ளம் அவள் பால் நகருகிறது என்று உணர்ந்தபோது விலகிநின்று துன்பத்தைத் தான் அனுபவித்தான். ஆனால்.. அவள் என்ன செய்தாள்?
“ஹல்லோ பாஸ்! கனவு கண்டது காணும். தண்ணிய அள்ளி ஊத்துங்க!” அவள் குறும்புடன் சொல்ல, பழைய நினைவுகள் கொடுத்த உந்துதலில் தண்ணீர் நிறைந்திருந்த வாளியை அப்படியே உயர்த்தி அவள் தலையில் கவிழ்த்தான் நிகேதன்.
“ஐயோ.. அம்மா!” திடீரென்று எதிர்பாராமல் உடல் முழுவதையும் நனைத்துவிட்ட கடுங்குளிரில் நடுங்கிப்போனாள் ஆரணி.
அவனுக்கும் தன் செயல் அப்போதுதான் உறைத்தது. “யோசிக்காம ஊத்திட்டனடி.”
“நடுங்குது நிக்ஸ்!” மழையில் நனைந்த கோழிக்குஞ்சினைப் போல நடுங்கியவளைக் கண்டு பரிதாபமாகப் போயிற்று அவனுக்கு!
“சுடு தண்ணி வச்சுக் கொண்டுவரவா?” அவன் கேள்வி அவனுக்கே அர்த்தமற்றதாகப் பட்டது. இனி வச்சு, அது சூடாகி வரும்வரையில் அவள் இப்படியே நிற்கமுடியுமா? அவளுக்கும் புரிந்தது. அதைவிட எத்தனை நாட்களுக்குச் சுடுதண்ணீர் குளியல் பொருந்தும்?
“இல்ல இப்பிடியே குளிக்கிறன். பழகத்தானே வேணும்!” அவனிடமிருந்து விலகி, ஒரு பிடிவாதத்துடன் தேகம் நடுங்க நடுங்கத் தலையில் அள்ளி ஊற்றியவளைக் கண்டு உறைந்துபோய் நின்றான் நிகேதன்.
இப்படி எத்தனையைப் பழகப்போகிறாள்? அதைவிட அவளின் மன உறுதி? அதைக்கண்டு அவனே நடுங்கிப்போனான். அந்தளவுக்கு வேகம் கொண்டு கிடுகிடு என்று தேகம் நடுங்கியும் விடாமல் ஊற்றிக்கொண்டிருந்தாள்.
அவள் அணிந்திருந்த ஆடைகளை அலசி, கொடியில் உலரப்போட்டான் அவன். குளித்துவிட்டு வந்தவளுக்கு உதறல் போகவேயில்லை. பெரிய துவாலையால் தலையைத் துடைத்துவிட்டான். போர்வையை எடுத்து அவளை சுற்றி இறுக்கமாகச் சுற்றினான். அப்போதும் நடுக்கம் நிற்காமல் கட்டிலுக்குள் சுருண்டுகொண்டாள் ஆரணி.
ஓடிப்போய் நல்ல சூடாக தேநீர் ஊற்றிக்கொண்டு வந்து கொடுத்தான். தானும் வேறு உடைக்கு மாறிக்கொண்டு வந்து அவளருகில் படுத்து, போர்வைக்குள் சுருண்டு இருந்தவளை தன்னோடு இழுத்துக்கொண்டான். சத்தமேயில்லாமல் அவனுக்குள் அடங்கினாள் ஆரணி.
“பிழையான முடிவு எடுத்திட்டதா நினைக்கிறியா?”
அவனுக்குள் அடங்கி இருந்தவள் மெல்ல முகத்தை மட்டும் விலக்கி அவனைப் பார்த்தாள்.
“ஒரு குளிர் என்ர காதலை அசைச்சுப் பாக்கும் எண்டு நினைக்கிறியா நிக்ஸ்? எனக்கு நடுங்குதுதான். பழக்கமில்ல தான். எப்பிடி இதப் பழகிறது எண்டுதான் யோசிக்கிறன். விலகுறது எப்பிடி எண்டில்ல.”
அவன் விழிகளில் நேசம் பெருகிற்று. “இருட்ட முதலே குளிச்சா இவ்வளவு குளிர் இருக்காது!” பட்டுப்போன்ற கூந்தலை வருடியபடி சொன்னான்.
அவனுடைய அணைப்பு மெல்ல மெல்ல இறுகியது. ஆரணி உணர்ந்தும் விலகாமலிருந்தாள். போட்டுக்கொண்ட தீர்மானங்கள் புதையுண்டு கொண்டிருக்க, அவனுடைய தேவைகள் அவளுக்குள் தேடலாக மாறத் தொடங்கியது.
“நிக்ஸ்! வேண்டாமடா!” பலகீனமான குரலில் மறுத்தாள்.
“என்ன வேண்டாம்? நானா?” காதுக்குள் தீ மூட்டினான் அவன். அவனையே அவள் மறுத்துவிட்டது போன்ற கோபம் அந்தக் கேள்வியில்.
எப்படிச் சொல்லுவாள்? காதல் கொண்டு மணந்தவனின் கையணைப்புக்குள் இருந்துகொண்டு, கரைந்துவிடு அவனுக்குள் தொலைந்துவிடு என்று கூக்குரலிடும் உள்ளத்தோடு மறுப்பது இலகுவாயில்லை. கண்ணோரமாய்க் கண்ணீர் துளிகள் பூப்பூத்தது!
“இப்ப வேண்டாம் நிக்ஸ்!” உணர்வுகள் உந்தும் பொழுதுகளில், அறிவும் அதுகொண்டு எடுத்த முடிவுகளும் தோற்றுவிடுமே! அதில் விருப்பமில்லை அவளுக்கு. “வாழ்க்கையை இன்னுமே சிக்கலாக்க வேண்டாம் நிக்ஸ்.”
அவன் பதிலே சொல்லவில்லை. அவளை விட்டு விலகவும் இல்லை. “என்னையும் உன்னையும் யாராலயும் பிரிக்கமுடியாத இடத்துக்கு வந்தாச்சு நிக்ஸ். இப்போதைக்கு இது போதுமே! இனி முன்னுக்கு வருவோமடா. அதுக்குப்பிறகு சந்தோசமா ஆரம்பிப்போம்.” சிறு குழந்தைக்குச் சொல்வதுபோலச் சொன்னாள்.
அவனோ அசையவில்லை.
“என்ன?”
“ம்ம்!” என்றான் அவன்.
“கோவமா?”
“பாதுகாப்பா ஆரம்பிப்பமா?” தன்னைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளும் எல்லையை அவன் தாண்டிவிட்டான் என்று விளங்கிற்று அவளுக்கு.
பதில் சொல்லாமல் அமைதியாக அவனுக்குள் ஒன்றினால் ஆரணி. அவள் சொல்லாமலேயே அவளின் மனது அவனுக்குப் புரிந்தது. மெல்ல மெல்ல அவனுடைய ஆசைகள் மட்டுப்பட்டது. தான் கொண்ட அவசரமும் விளங்கியது. அழுத்தமாய் அவளின் இதழில் முத்தமொன்றைக் கொடுத்துவிட்டு மெல்ல விலகினான். ஆரணியின் முகம் மலர்ந்தது.