தனக்கு வழங்கப்பட்ட விடுப்பை மறுக்க வேண்டும் போலொரு ஆத்திரம் பிரமிளாவுக்குக் கிளம்பிற்று! பிறகு, பிரயோசனமற்ற விடயங்களுக்காக அவனுடன் மோதி வெறுப்பைச் சம்பாதித்து என்ன காணப்போகிறாள்?
இங்கே தொடர்ந்து பணியாற்றுகிறாளோ இல்லையோ முதலில் இந்த மனவழுத்தம் அகல வேண்டும். அப்போதுதான் எதையுமே அவளால் தெளிவாகச் சிந்திக்க முடியும்.
அன்று வீட்டுக்குப் புறப்படுகையில் எதிரில் அவனைக் கண்டாள். இனி ஒரு கிழமைக்கு இவனின் முகத்தில் முழிக்கத் தேவையில்லை என்று பெரும் நிம்மதியுடன் புறப்பட்டாள்.
வீட்டுக்குப் போய் நன்றாக அள்ளித் தலைக்கு முழுகி அம்மாவின் கையால் வயிறு முட்ட வாங்கிச் சாப்பிட்டுவிட்டு நன்றாக உறங்கி எழுந்தாள். ரஜீவனைப் போய்ப் பார்த்துவந்தாள்.
அடுத்த நாளே சசிகரனுடன் கதைத்து, அந்த லோயரை சென்று சந்தித்தாள். தன்னிடம் இருந்த வீடியோக்கள், ஃபோட்டோக்கள் எல்லாவற்றையும் காட்டி, அவரைக்கொண்டே முறையாக மனு ஒன்றை எழுதி வைத்துக்கொண்டாள்.
திங்கள் அன்று அதை மாவட்ட நீதிபதியிடம் கையளிக்க வேண்டும். ஞாயிறு மாலையே மனம் அரிக்கத் துவங்கிற்று. நாளைக்குப் பள்ளிக்கூடம் போகலாமா? எடுத்த விடுமுறையை இரத்துச் செய்யலாமா என்று ஓடிக்கொண்டே இருந்தது.
அப்போதுதான் என்றைக்குமே தன்னால் எதற்காகவும் விட்டுக்கொடுக்க முடியாத சொந்தம் அந்தக் கல்லூரி என்று நன்றாகப் புரிந்தது.
திங்கட்கிழமை நினைத்தது போலவே மாவட்ட நீதிபதியிடம் மனுவைக் கையளித்தாள். அவரும் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியது மனதுக்கு ஆறுதலாயிருந்தது.
எது நடந்து முடிந்திருந்தாலும் கல்லூரிக்குள் நுழைந்து மாணவியரைத் தாக்கிய காடையரை இனம் கண்டே ஆக வேண்டும். கூடவே, அதற்குக் காரணமாக இருந்தவர்கள்… என்ன காரணமாக இருந்தவர்கள்? செய்தது அந்தக் கௌசிகன்தான். அவளுக்கு நன்கு தெரியும். அதை ஆதாரத்துடன் ஒப்பிக்க வேண்டும். அதற்குத்தான் இத்தனையும்.
அவள் ஆதாரத்துடன் பிடித்தபிறகு அவன் தன் முகத்தை எங்கே கொண்டுபோய் வைக்கிறான் என்று அவள் பார்க்க வேண்டும்.
இதோ புதன் கிழமையும் புலர்ந்து நகரத் தொடங்கிற்று! இந்த மூன்று நாட்களும் நன்றாக உறங்கி எழுந்தாள். அம்மாவின் கையால் நன்றாகச் சாப்பிட்டாள். தீபாவுக்குத் தானே அழைத்து அலட்டினாள். அப்பாவுடன் போதுமான அளவுக்கு நேரத்தைச் செலவிட்டாள்.
வாசிக்க வேண்டும் என்று எண்ணி வைத்திருந்த புத்தகத்தைப் புத்தகசாலையிலிருந்து எடுத்துவந்து வாசித்தாள். அதைப் பற்றி அப்பாவிடமும் கலந்துரையாடினாள். எல்லாமே நன்றாகத்தான் போனது. ஆனாலும் அவள் அவளாக இல்லை. தன் முக்கிய பாகத்தை இழந்ததுபோல் தவித்துப்போனாள். அவளின் நாட்கள் முழுமை அடையவேயில்லை. புதன் மாலைக்குமேல் தாக்குப்பிடிக்க முடியாமல் கல்லூரிக்குச் சென்றாள்.
செக்கியூரிட்டி குமரன் இவளைக் கண்டதும் ஆச்சரியமாகப் பார்த்தான். முகத்தில் இறுக்கத்துடன் கேட்டை நோக்கி அவள் நடக்க, ஒன்றும் சொல்லாமல் கதவைத் திறந்துவிட்டான்.
மாலைப்பொழுது என்பதில் ஆளரவமற்று அமைதியாகக் காட்சியளித்தது கல்லூரி! உள்ளே நடந்தவளுக்கு நெஞ்சு பாரமாகிற்று.
முன்னரெல்லாம் ஆவலாக ஓடி வருவாள். எல்லாவற்றையும் ஓடி ஓடிச் செய்வாள். விளையாட்டுப் போட்டியா? தமிழ்த்திறன் போட்டியா? பட்டிமன்றமா, இல்லை கவிதை, கட்டுரைப் போட்டியா? எதையும் விட்டுவைக்கமாட்டாள்.
அதுவும் மற்றைய கல்லூரிகளுடன் போட்டி என்றால் போதும், என்னவோ அவளே போட்டிக்குப் போகிறவள் போன்று விடவே மாட்டாள்.
இன்றோ மனத்தில் ஒரு சோர்வு. நெஞ்சமெல்லாம் பாரம். இந்தக் கல்லூரியை விட்டு விலகியும் நிற்கமுடியாமல் மனம் ஒன்றி வேலை செய்யவும் முடியாமல் என்ன வேதனை இது? இதனால் அவன் என்ன சாதித்தான்? வெற்றி பெற்று என்ன சுகம் கண்டானாம்?
மனம் கிடந்து பரிதவிக்கத் தன் வகுப்பறைக்கு நடந்தாள்.
இதே கல்லூரியில் மாணவியாக இருந்து ஆசிரியையாக வந்ததாலோ என்னவோ, மாணவியரின் எண்ணங்களும் அவளுக்கு விளங்கும், ஆசிரியர்களின் எண்ணங்களையும் உள்வாங்கிக்கொள்ள முடிந்திருக்கிறது.
உக்கிரமான வெயில் காலங்களில் மரங்களின் கீழேதான் பெரும்பான்மையான ஆசிரியர்கள் வகுப்பு நடத்துவார்கள். ஆசிரியர் அமர்ந்திருந்து பாடமெடுக்க, மாணவியர் நிற்பது சிரமம் என்பதால் மாணவியரும் அமர்வதற்காக அந்தந்த மரத்தின் கீழே அரைவட்டம் அளவில் மரக்குற்றிகள் அடிக்க வைத்திருந்தாள்.
கல்லூரியின் பணத்திலிருந்து அதற்கெல்லாம் ஒதுக்க முடியாது என்று தனபாலசிங்கம் சொன்னபோது, அவளின் சம்பளத்தில் இதையெல்லாம் செய்திருக்கிறாள். அதைப் பார்த்துவிட்டு அவரும் தன் பங்குக்கு ஒரு பகுதி தந்திருக்கிறார்.
சாதாரணத் தரம், உயர் தரத்துக்குத் தேவையான ‘பாஸ் பேப்பர்ஸ்’ புத்தகங்கள், பயிற்சிப் புத்தகங்கள், தனியார் கல்வி நிறுவனங்களில் கற்பிக்கும் புத்தகங்கள் என்று எல்லாவற்றையும் வாங்கிப்போட்டு, கல்லூரி லைப்ரரியையே மிகச் சிறப்பான லைப்ரரியாக மாற்றி இருக்கிறாள்.
கனிகள் தரும் மரங்களிலிருந்து கிடைக்கும் பழங்கள் எல்லாமே மதியப்பொழுதில் இலவசமாக ஒவ்வொரு வகுப்புக்கும் பகிர்ந்து அளிக்கப்படும். இதற்காகவே கட்டடங்களின் பின் பகுதியில் நிறைய கனிகள் கொடுக்கும் மரங்களை நட்டு வளர்த்து இருக்கிறாள். வளர்த்துக்கொண்டும் இருக்கிறாள்.
‘என் அப்பாதான் அதிபர்’ என்கிற எண்ணம்தான் இதற்கெல்லாம் காரணம் என்றாலும், அந்தச் சலுகையை அவள் அவளுக்காக என்றைக்குமே பயன்படுத்தியதே இல்லை.
இனி இதெல்லாம் சாத்தியமா? இந்தக் கல்லூரியில் கௌசிகன் தொடர்ந்து இருந்தால் அவளால் நீண்ட நாட்களுக்கு நிலைத்திருக்க முடியாது என்றே தோன்றியது. இன்னொரு கல்லூரியில் கற்பிப்பதை எண்ணிக்கூடப் பார்க்க முடியவில்லை. என்னதான் செய்யப் போகிறாளோ?
மனத்தில் பாரத்துடன் திரும்பியவள் திகைத்தாள். அங்கே வாசலில் சாய்ந்தபடி கைகளைக் கட்டிக்கொண்டு அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் கௌசிகன்!
இவனைச் சந்தித்துவிடக் கூடாது என்றுதானே மாலைவரை காத்திருந்து வந்தாள்.
இந்த நேரம் இங்கு இவனுக்கென்ன வேலை? அதுசரி! நிர்வாகசபைத் தலைவன் அவனிடம் கேட்கவா முடியும்? அவனோடு எதைப்பற்றியும் கதைக்க மனமில்லாமல் அவள் நடக்க, அவனோ அசைந்தானில்லை. அவன் விட்டால்தானே அவள் வெளியேற முடியும்.
“லீவு எப்பிடிப் போச்சு?”
“நல்லா போச்சு!” சுருக்கமாக உரைத்துப் பேச்சைத் தவிர்த்தாள்.
தான் நினைப்பதை மட்டுமே நடத்துகிறவன் அல்லவா அவன்.
“இன்னும் ரெண்டு நாள் இருக்கு என்ன?” என்று பேச்சை வளர்த்தான்.
இதெல்லாம் இவன் ஏன் நினைவு வைத்திருக்கிறானாம்?
“ம்ம்…” என்றவள், இன்னுமோர் அடி எடுத்துவைத்துக் குறிப்புக் காட்டினாள்.
அவனெல்லாம் மரத்துக்குச் சமன் போலும். அசையவேயில்லை.
“இந்தப் பள்ளிக்கூடத்த நிறையப் பிடிக்குமோ?”
அவனை வெறித்தவளின் விழிகளில் நீர் கோர்க்கும் போலிருக்க வேகமாகத் திரும்பிக்கொண்டாள்.
“வேலை செய்ற இடத்தை ஆருக்குத்தான் பிடிக்காது?”
வேலை என்கிற பதமே பொருந்தாமல் ஒலித்தது. இதை அவள் வேலையாகப் பார்ப்பதே இல்லை. கடமை? அதுவும் இல்லை. தொழில்? சேவை? சேச்சே! அவள் வாழ்வின் ஒரு அங்கம். அதிலிருந்து பிரிந்துபோக அவளைத் தூண்டுகிறானே.
செயலாற்ற முடியாத ஒரு ஆத்திரம் மனத்தில் பொங்கிற்று!
கரும்பலகை அருகே நெருங்கியவள் சோக் கட்டியினை எடுத்து, ‘கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக!” என்று அந்தக் கரும்பலகை முழுவதிலும் இடம்பிடிக்கும் வண்ணம் பெரிதாக எழுதினாள். அவளைப் போலவே அந்தக் கரும்பலகையும் கம்பீரமாக எழுந்து நின்றது.
“நீங்களும் படிச்சு இருக்கிறீங்கதானே?” அவனை நேராக நோக்கிக் கேட்டுவிட்டு அந்த வகுப்பறையை விட்டு வெளியேறி நடந்தாள்.
என்ன சொல்லிவிட்டுப் போகிறாள் இந்தப் பெண்? கற்றபடி அவன் நடக்கவில்லையாமா? ‘வறட்டுத்தனமான கொள்கைகள் நிரம்பியவள் போலும்!’ அவனுக்கு அவளின் கோபம் அர்த்தமற்றதாகத் தோன்றிற்று.