அன்று ஞாயிற்றுக்கிழமை. ரஜீவனைப் பார்க்கப் போயிருந்தாள் பிரமிளா. அவன் நன்றாகவே தேறியிருந்தான். காயங்கள் எல்லாம் இப்போது கன்றலாக மட்டுமே மாறிப்போயிருந்தது.
“நாளையில இருந்து வேலைக்குப் போகப்போறன் அக்கா.” என்று சொன்னான் அவன்.
தன்னை மறந்து தடுமாறிப்போகிற சமயங்கள் தவிர்த்து எப்போதுமே ஒரு பயபக்தியுடன் மிஸ் என்றே அழைப்பான். ஆனால் நடந்த சம்பவத்துக்குப் பிறகு எந்தத் தயக்கமுமின்றி அக்கா என்றே அழைப்பதைப் பிரமிளாவும் கவனிக்காமல் இல்லை.
அவளுக்கும் இத்தனை அடிகள் வாங்கியபிறகும் ‘அவளுக்காகத்தான் இதைச் செய்தேன்’ என்று சொல்லாத அவன் மீது எப்போதும் இல்லாத பிரியம் உருவாகிப் போயிருந்தது.
எனவே, “அதுக்கு முதல் உனக்குக் கட்டாய வேலை ஒண்டு இருக்கு ரஜீவன்.” என்றாள் பிரமிளா.
அவன் கேள்வியாகப் பார்த்தான்.
“நீ ஒரு பொம்பிளைப் பிள்ளைக்குச் செய்தது மகா பிழை. அப்பிடி இருந்தும் அவா உன்னக் காட்டிக் குடுக்கேல்ல. அவாட்ட போய் மன்னிப்புக் கேள். இந்த சொறி எல்லாம் சொல்லப்படாது. கண்ணப் பாத்து உண்மையா வருந்திக் கேக்கோணும். செய்வியா?” என்றாள்.
“கட்டாயம் அக்கா. நான் செய்தது பிழை எண்டு எனக்கும் தெரியும்.”
“தேவையில்லாத எந்தக் கதையும் கதைக்காத. அவா கோபத்துல என்ன சொன்னாலும் பெருசா எடுக்காத. மன்னிப்பு மட்டும் கேட்டுட்டு வந்துசேர்!” என்றுவிட்டுப் புறப்பட்டாள்.
வீடு நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தவளுக்கு நாளைக்கு மீண்டும் கல்லூரிக்குப் போகப் போகிறோம் என்கிற எண்ணம், அங்கே கௌசிகன் இருக்கிறான் என்பதையும் தாண்டிக்கொண்டு உற்சாகத்தைப் பரப்பியது!
ரஜீவனும் தேறிவிட்டான். மெல்ல மெல்ல இனி எல்லாம் நன்றாகும். அவளும் தேவையில்லாமல் எதிலும் கலந்துகொள்ளாமல் சற்றே ஒதுங்கிக்கொண்டால் ஆயிற்று என்று பலதையும் எண்ணிக்கொண்டு நடந்தவளின் அருகே, ஒரு கார் வந்து நின்றது!
யார் என்று யோசிக்கவே தேவையில்லாமல் அந்தச் சில்வர் நிறம் அதன் சொந்தக்காரனைக் காட்டிக்கொடுத்தது. அதுவரை இருந்த இலகுத்தன்மை அகல, காரிலிருந்து இறங்கியவனைப் பார்த்தாள்.
“ஒவ்வொரு நாளும் வீடு தேடிப்போய்ச் சுக விசாரிப்பு எல்லாம் நடக்குது. அந்தளவுக்கு நன்றிக்கடன் பட்டு இருக்கிறீங்க போல!” காரைச் சுற்றிவந்து கைகளைக் கட்டிக்கொண்டு காரில் சாய்ந்தபடி நக்கலாகச் சொன்னான் அவன்.
‘அவளைக் கண்காணிறான்!’
இவன் யார் என்னைக் கண்காணிக்க? எரிச்சலில் வேண்டுமென்றே பதில் சொல்லாமல் நின்றாள்.
“நீ விழுந்து விழுந்து கவனிக்கிறதுலேயே தெரியுது. அவன் உனக்காகத்தான் அதைச் செய்திருக்கிறான் எண்டு.”
“மற்றவைக்கு மரியாதை குடுக்கிற பழக்கமே இல்லையா உங்களுக்கு?”
“இஞ்ச நீ டீச்சரும் இல்ல, நான் நிர்வாகியும் இல்ல. என்னை விட வயசு குறைஞ்ச சின்ன்…ன பிள்ளைய ஒருமையில் கதைக்கிறது பிழை இல்லையே?”
‘சின்ன்ன பிள்ளையாம்’ குதர்க்கத்துக்குப் பிறந்த இவனுக்கெல்லாம் அவளால் பதில் சொல்ல இயலாது. இத்தனை நாட்களாக இல்லாமல் இருந்த தலைவலி மீண்டும் வந்துவிடும் போலிருக்க, அவனுக்குப் பதில் சொல்லாமல் தொடர்ந்து நடக்கத் தொடங்கினாள் பிரமிளா.
“இந்த அலட்சியம் உனக்கு ஆகாது டீச்சரம்மா!” அழுத்தமாக எச்சரித்தான் அவன். “நீயா உண்மையச் சொன்னா உனக்கும் நல்லது, அவனுக்கும் நல்லது!”
பதில் சொல்லாமல் விடமாட்டான் என்று புரிந்துவிட, நின்று திரும்பினாள் பிரமிளா.
“என்ன உண்மை தெரியோணும் உங்களுக்கு? அவன் ஏழை வீட்டுப் பிள்ளை. சின்ன வயதில இருந்து எங்கட வீட்டுலதான் வளந்தவன். என்னட்டத்தான் படிச்சவன். அவன் எனக்குத் தம்பி மாதிரி. அவனுக்கு ஒண்டு எண்டால் நான் போய்ப் பாக்கிறதும் கவனிக்கிறதும் சாதாரணமா நடக்கிற ஒண்டு. இதெல்லாம் விளங்குறதுக்கு நல்ல மனசும், அந்த மனசுல கொஞ்சமாவது ஈரமும் இருக்கோணும்!” என்று படபடத்தாள் அவள்.
பொறுமையாகப் பேசுவோம், விலகிப் போவோம் என்று எவ்வளவு நினைத்தாலும் விடாமல் வந்து மீண்டும் மீண்டும் தொல்லை தருகிறவனை எப்படிக் கையாள்வது என்று அவளுக்கு மெய்யாகவே புரிய மறுத்தது.
“ஈரம் இருக்கப்போய்த்தான் சும்மா நாலு தட்டுத் தட்டிப்போட்டு விட்டிருக்கிறன்.” என்றான் அவன்.
‘மாட்டை அடிச்ச மாதிரி அடிச்சுப்போட்டு நாலு தட்டாம்.’ மனம் கொதித்துவிட்டது அவளுக்கு. “ஈவு இரக்கமே இல்லாத அரக்கன் நீங்க! உங்களுள்ள ஈரமா? கடவுள் எண்டு ஒருத்தன் இருந்தா உங்களுக்கு இதுக்கெல்லாம் நல்ல பதிலடி கிடைக்கோணும்!”
அவனோ அவள் சொன்னதைக் கேட்டு நகைத்தான். “நான் அரக்கன். ஆனா ஒரு பொம்பிளைப் பிள்ளைய வீடியோ எடுத்தவன் நல்லவன்! அப்பிடியா? அதுசரி, பிளான் போட்டுக் குடுத்தவளே நீதானே. அப்ப அவன் உனக்கு நல்லவன் தான்!”
“நான் ஒரு டீச்சர். என்னட்டப் படிக்கிற பிள்ளைகளுக்குப் புத்தகத்தை மட்டும் இல்ல, ஒழுக்கத்தையும் நேர்மையையும் சேர்த்துச் சொல்லிக் குடுக்கிறவள். அப்படியான எனக்கு உங்களை மாதிரி மோசமா நடக்கத் தெரியாது. ஏன் யோசிக்கக் கூட வராது!” என்றுவிட்டு, அதற்குமேல் நிற்காமல் விரைந்து நடந்தாள்.
அன்று முழுக்க அவனுடன் பேசுவதற்காகக் காத்திருந்த செல்வராணி, வீடு வந்த மகனின் முகத்தைப் பார்த்ததும் சோர்ந்து போனார்.
கணவர் அன்றுதான் கொழும்புக்குப் புறப்பட்டுச் சென்றிருந்தார். இத்தனை நாட்களாக அவர் இல்லாத பொழுதில் மகனைப் பிடிக்கவும் முடியாமல், அப்படியே சந்தர்ப்பம் அமைந்தாலும் எந்த நேரம் என்றில்லாமல் வந்துவிடும் கணவரின் காதில் அவர் கதைப்பது விழுந்ததோ கதை சரி என்கிற பயத்திலும் வாயை மூடிக்கொண்டு இருந்தார்.
இன்று அவர் இல்லை என்ற தைரியத்தில் மீண்டும் மகனிடம் திருமணம் பற்றிப் பேசத் தயாராகிக்கொண்டு இருக்க அவனோ பாறையைப் போல் முகத்தை வைத்துக்கொண்டு வந்து நிற்கிறான்.
‘இனி இவனிடம் எதை எப்படி என்று கேட்பது, பேசுவது?’
ஏமாற்றத்துடன் நடமாடியவர் இரவு உணவுக்காக வந்து அமர்ந்தவனுக்கு இதமான சூட்டில் உணவினைப் பரிமாறினார்.
கதைப்போமா வேண்டாமா என்கிற குழப்பத்திலேயே அவர் அங்கேயே நிற்க, உணவு முடிகிற தறுவாயில்தான் அன்னை தன்னையே பார்த்துக்கொண்டு நிற்பதை உணர்ந்து நிமிர்ந்து கேள்வியாகப் புருவங்களைச் சுருக்கினான் அவன்.
“சாப்பிடு தம்பி. கறி இன்னும் கொஞ்சம் வைக்கவா?” என்று தடுமாறினார் அவர்.
“உங்களுக்கு இப்ப என்ன சொல்லோணும்?”
“இல்லையப்பு. ஒண்டும் இ…” என்றவரின் பேச்சை அவன் பார்வை நிறுத்தியது.
“அது… உன்ர கல்யாணம்…”
“எப்ப பாத்தாலும் உங்களுக்கு இந்தக் கதைதானா? பேசாம போங்கம்மா!” என்று எரிந்துவிழுந்தான் அவன்.
ஏமாற்றத்தில் அவர் முகம் அப்படியே சுருங்கிப் போயிற்று. ஆனாலும் ஆரம்பித்ததை விடவும் மனமில்லை.
“இல்ல. அந்தப் பிள்ளையோட கதைச்சு…”
“இதுக்குப் பதில உங்களுக்கு நான் அண்டைக்கே சொல்லிட்டன்.” என்று அவரின் பேச்சை இடையிலேயே முறித்தான் அவன்.
“இல்ல தம்பி! நீ அந்தப் பிள்ளையைத்தான் கட்டோணும்.” அவரை மீறி அவரின் குரல் சற்றே உயர்ந்துவிட்டதில்,
“கட்டாட்டி?” நாற்காலியில் நன்றாகச் சாய்ந்துகொண்டு நிதானமாகக் கேட்டான் அவன்.
பதறிப்போனார் செல்வராணி. ‘மடச்சி! அவன்ர குணம் தெரிஞ்சும் குரலை உயாத்திப்போட்டியேடி!’ மனம் அலறியது!
ஆனாலும் விடாமல், “உனக்குக் கல்யாணமே இல்ல தம்பி.” என்றார் தைரியத்தைத் திரட்டிக்கொண்டு.
“ஓ! அந்த முடிவு உங்கட கைலதான் இருக்கோ?” நிதானமாய்க் கேட்டான் அவன்.
கண்களில் கண்ணீர் நிறைந்தே விட்டது செல்வராணிக்கு. அந்த வீட்டில் அவரின் நிலையை ஒற்றைக் கேள்வியில் உரைத்துவிட்டானே! சட்டெனக் கெஞ்சலில் இறங்கினார்.
“கோபப்படாம அம்மா சொல்லுறதையும் கொஞ்சம் கேள் தம்பி. எப்பிடியும் நீ கல்யாணம் கட்டத்தான் வேணும். அந்தப் பிள்ளையும் ஒரு குறை சொல்லேலாத நல்ல பிள்ளை. இன்னும் என்ர கண்ணுக்கையே நிக்கிறாள். அளவான உயரம், அதுக்கேத்த உடம்பு, நல்ல வடிவா சாறி கட்டி, லச்சணமான முகத்தோட கண்ணை மூடிக் கும்பிட்டவளை என்னால மறக்கவே ஏலாம இருக்கு. நீ ஒருக்கா உன்ர கோபதாபங்களை விட்டுப்போட்டு அவளைப் பார். உனக்கும் பிடிக்கும். ‘அந்த அக்கா நல்ல வடிவு அம்மா’ எண்டு யாழியும் சொன்னவள். பொறுப்பான பிள்ளை அப்பு. உனக்கு நல்ல மனுசியா மட்டுமில்ல, எங்களுக்கு அருமையான மருமகளா, உன்ர தம்பி தங்கச்சிக்கு பொறுப்பான அண்ணியா கட்டாயம் இருப்பாள். அந்தக் குடும்பமும் ஒரு குறை சொல்லேலாத நல்ல குடும்பம்.” வேகவேகமாக அவளைப் பற்றி நல்லவிதமாக அடுக்கிவிட்டு ஆவலோடு அவன் முகத்தையே பார்த்தார்.
“இன்னும் ரெண்டு இடியப்பம் வைங்க!” என்றான் அவன்.
அவரின் முகம் அப்படியே விழுந்துவிட்டது. இனி இதைப் பற்றிப் பேச முடியாது! தட்டைச் சுழற்றி எறிந்துவிட்டுப் போகக் கூடியவன். எனவே வாயை மூடிக்கொண்டார். அவரளவில் இன்றைக்கு இவ்வளவு பேசியதே பெரும் சாதனைதான்.