அன்று திங்கள் கிழமை. வளமை போன்று பல்கலைக்குத் தோழிகளுடன் வந்திருந்தாள் யாழினி. கொண்டுவந்து விடுவதற்கும் கூட்டிக்கொண்டு போவதற்கும் டிரைவரோடு காரினை ஏற்பாடு செய்திருந்தான் கௌசிகன். கிட்டத்தட்ட ஒருவித ஜெயில் வாழ்க்கை. கம்பசுக்கு மட்டுமே அனுமதி. மூச்சு முட்டிப்போய் வீட்டில் இருப்பவளுக்குப் பல்கலையில் இருக்கும் பொழுது மட்டுமே மிகுந்த சந்தோசமாகக் கழியும்!
‘நாசமா போறவன்! சும்மா இருந்த என்னை வீடியோ எடுத்து என்ர சந்தோசத்தையே பறிச்சிட்டான், எருமை!’ என்று, ரஜீவனை அவள் திட்டித் தீர்க்காத நாளே இல்லை.
அன்றும் அவளை இறக்கிவிட்ட டிரைவரின் தலை மறைந்ததும், “வாங்கடி வாங்கடி!” என்று, தயாராக நின்ற தோழிகளை அழைத்துக்கொண்டு பல்கலைக்கு எதிர்புறத்தில் இருந்த ஹோட்டலுக்குள் நுழைந்தாள். பேச்சும் சிரிப்புமாகத் தேநீரோடு உளுந்துவடையும் நல்ல உறைப்புச் சம்பலையும் ஒரு வெட்டு வெட்டிவிட்டு வெளியே வந்தவளின் முன்னே வந்து நின்றான் அவன்! அன்று வீடியோ எடுத்தவன்.
பார்த்ததும் பயந்து போனாள். அருகில் நின்றவளின் கையை இறுக்கிப் பற்றியவளின் கைகால்களில் பெரும் நடுக்கம்.
“என்ன? திரும்பவும் வீடியோ எடுக்கப் போறியா?” நடுக்கத்தைக் காட்டிக்கொள்ளாமல் துணிந்து அதட்டினாள்.
“அண்டைக்கு நான் வீடியோ எடுத்தது பெரிய பிழை. உங்கட அண்ணால இருந்த கோபத்தில அதைச் செய்திட்டன். எண்டாலும் செய்திருக்கக் கூடாது. அதால… முடிஞ்சா…” ஒரு பிடிவாத வேகத்தில் சொல்லிக்கொண்டு வந்தவனின் வார்த்தைகள் தடக்கத் தொடங்கிற்று! பார்வையை அவளிடமிருந்து திருப்பி புறவெளியில் அலையவிட்டு தன்னைச் சமாளிக்க முயன்றான்.
அதிர்ச்சியில் விழிகள் விரிய அவள் பார்வை அவன் முகத்திலேயே குத்திட்டு நின்றது. வலப்பக்கக் கண்ணில் இன்னுமே இருந்த கன்றல், உதட்டில் தெரிந்த வெடிப்பு, கழுத்தில் கிடந்த காயம் எல்லாம் பார்த்தவளுக்கு அப்போதும் தொண்டைக்குள் எதுவோ சிக்கிக்கொள்ள, அவன் மீண்டும் அவள் புறமாகத் திரும்பினான்.
“தயவு செய்து என்னை மன்னிச்சுக்கொள்ளுங்கோ! எனக்கும் ஒரு தங்கச்சி இருக்கிறா. அதை மறந்து நடந்தது பெரும் பிழை.” என்றான், அவள் விழிகளையே பார்த்து.
இந்த மன்னிப்புக்கு என்ன பதில் சொல்வது, இதை எந்த முறையில் ஏற்பது என்று தெரியாமல் தடுமாறினாலும் அவளுக்கு இப்போது சினமும் சீற்றமும் பொங்கிற்று.
இவன் செய்த வேலையால் எவ்வளவு பயந்தாள். எவ்வளவு அழுதாள். கனவில் கூடக் கண்ட கண்ட கருமாந்திரக் காட்சிகளில் எல்லாம் அவள் முகம் தெரிந்ததே. இவனால் தானே அவளுக்கு இத்தனை கட்டுப்பாடுகள். ஒரு மன்னிப்பை வந்து கேட்டுவிட்டால் எல்லாம் முடிந்துவிடுமா? ‘எளியவன்! என்ர நிம்மதியையே கெடுத்துப்போட்டு மன்னிப்புக் கேக்கிறானாம் மன்னிப்பு!’
“அவ்வளவு அடிச்சுக் கேட்டும் செய்யேல்ல எண்டு சொல்லிப்போட்டு, இப்ப என்ன மன்னிப்பும் மண்ணாங்கட்டியும்?” என்று வெடித்தாள் யாழினி.
“உங்களையும் கூப்பிட்டு கேட்டவே தானே. நீங்க ஏன் காட்டிக் குடுக்கேல்ல?” என்று திருப்பிக் கேட்டான் அவன்.
‘ஆக.. இவன் அம்மாஞ்சி இல்ல..’ பிழை செய்துவிட்டதால் மட்டுமே பணிந்து நிற்கிறான் என்று விளங்கிவிட, “உண்மையைச் சொல்லி இருந்தா உன்னைக் கொன்று போட்டிருப்பினம் எண்டுதான் சொல்லேல்ல!” என்று சிடுசிடுத்தாள்.
“அதால தான் நானும் சொல்லேல்ல. அதைவிட எனக்குத் தண்டனை தாற தகுதி உங்கட அண்ணாக்களுக்கு இல்ல. உங்களுக்கு மட்டும் தான் இருக்கு. நான் என்ன செய்தா நீங்க சமாதானம் ஆவீங்களோ அதைச் சொல்லுங்கோ செய்றன்!”
அந்த அடி வாங்கியும் இப்பவும் அண்ணாக்களுக்கு அவன் பயப்படவில்லை என்பது அவளை ஏதோ ஒரு வகையில் உசுப்பியது. கூடவே இவனால் தானே அவளுக்கு இத்தனை கெடுபிடி என்கிற கோபமும் சேர்ந்துகொள்ள, “போற வழியில ஒரு புட்பால் விளையாடுற கிரவுண்ட் இருக்கு. நான் வந்து சொல்லுற வரைக்கும் அதைச் சுத்தி ஓடு! போ! அப்பயாவது உன்ர கொழுப்புக் குறையுதா பாப்பம்!” என்றுவிட்டு, “வாங்கடி போவம்!” என்றபடி அவனைக் கடந்து நடந்தவள் நின்று திரும்பினாள்.
அவனும் பார்க்க, “போட்டாச்சா?” என்றாள்.
“என்ன போட்டாச்சா?”
“இல்ல, ஆசையா வந்து வீடியோ எடுத்தியே அதை நெட்டுல, கண்ட கருமாந்திர சைட்ல எல்லாம் போட்டாச்சா எண்டு கேட்டனான்.”
அவள் சொன்ன விளக்கத்தில் அவன் முகம் கன்றிப் போயிற்று!
“அதை உடனேயே டிலீட் செய்திட்டன்.”
“இத நான் நம்புவன் எண்டு நினைக்கிறியா?” ஏளனத்தோடு கேட்டாள் அவள்.
“எனக்கு அப்பா இல்ல. அம்மா மட்டும் தான். அம்மா எண்டா எனக்கு உயிர். என்ர அம்மா மேல சத்தியமா சொல்லுறன். அந்த வீடியோவை நான் பாக்கக்கூட இல்லை. டிலீட் செய்தாச்சு. நீங்க பயப்பிடுற மாதிரி எதுவுமே நடக்காது!” என்றான் நிதானமான குரலில்.
அந்தக் குரல் அதுவரை அவளுக்குள் இருந்த பெரிய பாரத்தை, பயத்தை ஒன்றுமே இல்லாமல் இலகுவாக்கிற்று! மனதில் அமைதி சூழ அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து அகன்றுபோனாள்.
—————
கல்லூரிக்குள் நுழைந்தவளைக் கண்டுவிட்டு முகமன் கூறிக்கொண்டு வந்தான் சசிகரன். “லீவு எப்பிடிப் போச்சு மிஸ்?”
“ஏன்டா எடுத்தோம் எண்டு நினைச்சு நினைச்சு போச்சுது சேர்.” என்று முறுவலித்தாள் அவள். “இங்க இந்த ஒரு கிழமையும் உங்களுக்கு எப்பிடிப் போச்சு?” என்று விசாரித்தாள். அதற்குள், மற்றைய ஆசிரியர்களின் முகமன்னுக்கும் நலன் விசாரிப்புக்கும் பதில் கொடுக்கத் தவறவில்லை அவள். சிலர் மெய்யான அன்புடன் தந்தையைப் பற்றி விசாரித்ததும் மனதுக்கு இதம் சேர்த்தது.
“பெருசா ஒரு மாற்றமும் இல்லை மிஸ். ஆனா, அடுத்த வருசம், முதலாம் வகுப்புக்கு சேர்க்கிற பிள்ளைகளிட்ட டொனேஷன் வாங்கப்போயினம் போல எண்டு திருநாவுக்கரசு சேர் சொன்னவர்.” என்று தான் அறிந்ததைப் பகிர்ந்துகொண்டான் அவன்.
“திருநாவுக்கரசு சேர் அப்பாவோடயும் இதைப்பற்றிக் கதைச்சவர் போல. பாப்பம்..” அப்படியே சென்று பதிவேட்டில் தான் வந்ததைப் பதித்துவிட்டு வந்தவளிடம், “மிஸ், இன்றைக்கு டீச்சர்ஸ் மீட்டிங் அரேஞ் செய்திருக்கு. பிரேயர்ஸ் முடிஞ்சதும் மண்டபத்துக்கு வாங்கோ.” என்று தெரிவித்தான் பியூன்.
கடவுள் வழிபாடு முடிந்ததும் ஒன்றுகூடல் ஆரம்பித்தது. அந்தத் தவணைக்கான பரீட்சைகள் பற்றி, பாடத்திட்டங்களை முடிக்காத ஆசிரியர்கள் எப்படி முடிப்பது என்பது பற்றி என்று பொதுவாக உரையாடி ஆலோசனைகள் முடிவுகள் எல்லாம் வழங்கப்பட்டது. பிரமிளாவுமே அதில் கலந்துகொண்டாள். நிர்வாக சபைத் தலைவன் என்கிற பெயரில் அங்கே அமர்ந்திருந்தாலும், இது ஆசிரியர்கள் சம்மந்தப்பட்டது என்று அவர்களையே பேச விட்டுவிட்டு அமைதியாகக் கவனித்துக்கொண்டிருந்தான் கௌசிகன்.
கடைசியாகத் திரு தனபாலசிங்கத்துக்குப் பிரியாவிடை வழங்க ஏற்பாடு செய்வது பற்றிய பேச்சு எழுந்தது. எல்லோரின் கண்களும் ஒருமுறை அவளிடம் பாய ஒரு கோபம் சுர்ர் என்று எழுந்தாலும் அடக்கிக்கொண்டு சாதாரணமாக அமர்ந்திருந்தாள். எல்லோருமே அதற்கு ஆதரவு தெரிவிக்க, அவளிடம் அபிப்பிராயம் கேட்டான் கௌசிகன்.
“இதைப்பற்றி என்ன நினைக்கிறீங்க மிஸ் பிரமிளா?”
“இதுல என்னுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு என்ன இருக்கு? எனக்கும் சம்மதம் தான்.” இதழ்களில் ஒரு மென்னகையைத் தவழ விட்டபடி சொன்னாள் அவள்.
அவன் விழிகள் ஒருகணம் அவள் முகத்திலேயே நிலைத்துப் பின் விலகிற்று.
“பிறகு என்ன? மிஸ் பிரமிளாவுக்கே இதுல சம்மதம் எண்டால், பழைய அதிபரின் பிரிவுபசாரத்தைக் கோலாகலமா கொண்டாட வேண்டியதுதான்!” என்று, அந்த ஒன்றுகூடலை முடித்துவைத்தான் அவன்.
அவள் அங்கிருந்து வெளியேறும்போது, “தடுப்பாய் எண்டு நினைச்சன்?” என்றான்.
அவள் நின்று நேராக அவனைப் பார்க்க, “ஓ.. மரியாதை! தடுப்பீங்க எண்டு நினைச்சன் டீச்சரம்மா.” என்றான், உதட்டுக்குள் சிரிப்பை மென்றபடி.
எரிச்சல் தான் வந்தது. “நீங்க நினைக்கிறமாதிரி நான் நடப்பன் எண்டு நினைக்கிறதே கொஞ்சம் அசட்டுத் தனமா தெரியேல்லையா?” என்று திருப்பிக் கேட்டாள் அவள்.
தைரியமாக அவனை அவனிடமே அசடு என்கிறாளே. மெலிதாக நகைத்தான் அவன். பார்வை அவள் மீதே இருக்க, “சிந்தனைகள் ஒரே மாதிரி இணைஞ்சா நல்லா இருக்கும் போலத்தான் இருக்கு.” என்றான் இளம் முறுவலுடன்.
அந்தப் பேச்சின் பொருள் புரியாமல் புருவங்களைச் சுருக்கி விழிகளால் வினா தொடுத்தாள் பிரமிளா.
“டீச்சரம்மாக்கு விளங்காத ஏரியா கூட இருக்குப்போல.”
அவன் சொன்னது இப்போதும் அவளுக்குப் புரியவில்லை தான். என்றாலும், “மற்றவையப்போல எல்லாம் எனக்குத்தான் தெரியும் எண்டு மண்டைக்கனம் பிடிச்சு அலையுற ஆள் நானில்லை.” என்று பதிலிறுத்தாள்.
அவன் இப்போது வாய்விட்டே சிரித்தான். “மண்டைக்கனம் கூடாதுதான். ஆனா எல்லாம் தெரிஞ்சவே அப்படி நினைக்கலாம் தானே.” என்றான் விடாமல்.
“கற்றது கையளவாம். கேள்விப்பட்டதில்லையா நீங்க? எல்லாம் எனக்குத் தெரியும் எண்டு நினைக்கிறதுக்குப் பெயர்தான் மண்டைக்கனம்.”
“டீச்சரம்மா எல்லா. கதைச்சு வெல்ல ஏலுமா?”
‘என்னோட கதைச்சுத்தான் வெல்லேலாது. உன்னோட மனுசன் கதைப்பானா?’ என்று நினைத்தவளுக்குச் சிரிப்பு பொங்கிக்கொண்டுவர அதை அடக்கினாள்.
ஆனாலும் அடக்கப்பட்ட சிரிப்பில் பளபளத்த விழிகளைக் கண்டுவிட்டான் அவன். ஆச்சரியமாக நோக்கி, “என்னைப்பற்றி என்னவோ மகா மோசமா நினைக்கிறாய் எண்டு தெரியுது. என்ன எண்டு சொல்லு? இல்லாம இங்க இருந்து போக விடமாட்டன்.” என்றான் பொய் மிரட்டலாக.
சட்டெனத் திகைத்தாள் பிரமிளா. இப்படியொரு இலகுவான மனநிலை எப்போது எப்படி உருவாகிற்று.
வேகமாகப் பார்வையை அகற்றிக்கொண்டு, “வகுப்புக்கு நேரமாச்சு.” என்றுவிட்டு அங்கிருந்து விரைந்தோடினாள் அவள்.
போகிறவளையே பார்த்திருந்தவனுக்கு, அன்னையின் கூற்று நினைவுக்கு வந்தது.
‘அளவான உயரம், அதுக்கேத்த உடம்பு, நல்ல வடிவா சாரி கட்டி, லட்சணமான முகத்தோட கண்ணை மூடி கும்பிட்டவளை என்னால மறக்கவே ஏலாம இருக்கு. நீ ஒருக்கா உன்ர கோபதாபங்களை விட்டுப்போட்டு அவளைப்பார். உனக்கும் பிடிக்கும்.’
உண்மைதான். அழகிதான்! அவன் மனமும் ஒப்புக்கொண்டது! அதைக்காட்டிலும் அவளின் நிமிர்வும் தைரியமும் தான் அவனைச் சவாலுக்கு அழைத்தது.
நேற்றானால் அரக்கன், காட்டுமிராண்டி என்றாள். இன்றைக்கானால் தலைக்கனம் பிடித்தவன் என்கிறாள். ஒவ்வொரு முறையும் அவனை அவள் மதிப்பதே இல்லை. துச்சமாகத்தான் நோக்கியிருக்கிறாள், வார்த்தைகளை வீசியும் இருக்கிறாள். எவ்வளவுதான் அடக்கினாலும் நிமிர்ந்தே நிற்கிறவளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தால் எப்படி இருக்கும்?
அவன் உதட்டோரம் சிரிப்பில் துடித்தது!