பல்கலைக்கழகம் முடிந்து வாசலுக்கு வருகையிலேயே காருடன் காத்திருந்தான் வாகன ஓட்டி. சினத்தில் முகம் சிவக்க, “எளியவன்! நேரம் தவறாம வந்திடுவானடி!” என்று, தோழிகளிடம் வாய்க்குள் திட்டிக்கொண்டே சென்று காரில் ஏறினாள் யாழினி.
‘எல்லாம் அந்த எருமையனால வந்தது. வந்து மன்னிப்பு கேட்டா சரியா போச்சா. இனி பயப்படத் தேவையில்லை, வீடியோ வெளில வராது எண்டு அண்ணாட்ட யார் சொல்லுறது? சொன்னா எப்பிடி உனக்குத் தெரியும் எண்டு கேப்பார். அதுக்கு என்ன பதிலைச் சொல்லுறது? எளியவன்! அவனைப் பிடிச்சு மிதிச்சிருக்க வேணும். விட்டுட்டன்.’ என்று திட்டிக்கொண்டு வந்தவளின் விழிகளில் அவனே பட்டான்.
அதுவும், ‘இனி என்னால் முடியவே முடியாது’ என்று சொல்லும் களைத்த தோற்றத்தில், அணிந்திருந்த ஷர்ட் முழுமையாக வேர்வையில் குளித்திருக்க, தளர்வுடன் அவள் சொன்ன கிரவுண்டில் ஓடிக்கொண்டு இருந்தான்.
“அடப் பாவிப்பயலே!” வாய்விட்டே அதிர்ந்துபோனாள் யாழினி.
“என்ன தங்கச்சி?” அவள் பேசியத்தைக் கேட்டுத் திரும்பி வினவினார் வாகன ஓட்டி.
“என்ன என்னது? ஒண்டுமில்ல ஒண்டும் இல்ல! நீங்க ரோட்டை பாத்து காரை ஒட்டுங்கோ.” என்று படபடத்தவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.
இருந்த கோபத்தில் வாய்க்கு வந்த எதையோ சொன்னவள் சொன்ன கணமே அதை மறந்தும் போயிருந்தாள். அதை சிரமேற்கொண்டு செய்வான் என்று கிஞ்சித்தும் எண்ணியிருக்கவில்லை. இப்போது என்ன செய்வது?
காரை நிறுத்தச் சொல்லிப் போக முடியாது.
உடனேயே கைபேசியை எடுத்து வாட்ஸ் அப்பில் தோழி விஜிதாவுக்குச் சேட் செய்தாள்.
“அடியேய்! அந்த எருமையன் கிரவுண்டில ஓடிக்கொண்டு இருக்கிறானடி!”
“எந்த எருமையன்?” விஜிதாவுக்கு என்ன தெரியும்?
“நீ அடுத்த எருமை. அவன்தான். விடிய வந்து நிண்டு மன்னிப்புக் கேட்டானே. அந்த லூசன் தான். எனக்கு வாற விசருக்குக் கன்னம் கன்னமா அவனுக்கு வெளுக்கப் போறன் பார்!” அவள் இருந்த பதட்டத்தில் வார்த்தைகள் எல்லாம் கண்டபாட்டுக்கு வந்து விழுந்தது.
“ஓ.. அவனா? அநியாயத்துக்கு நல்லவனா இருப்பானோடி? சரி சரி நீ டென்சன் ஆகாத! இப்ப என்ன செய்வம்?”
“அந்த லூசனிட்ட நான் போகேலாது. மரியாதையா வீட்டை போகட்டாம் எண்டு நீ ஒருக்கா போய்ச் சொல்லி விடுறியா. அண்ணா போட்ட அடியில வந்த காயமே அவனுக்கு இன்னும் ஒழுங்கா மாறேல்ல. இதுல இது வேற. பெரிய உத்தமன் எண்டு நினைப்பு.” என்று இருந்த கடுப்பில் கடுகடுத்தாள்.
“நானாடி? என்ன சொல்லுறானோ தெரியாதே. உன்னட்ட அவன்ர ஃபோன் நம்பர் இல்லையா? ஃபோன்ல சொல்லன்.” தயக்கத்துடன் சொன்னாள் விஜிதா.
“அவன் என்ர லவ்வர் பார். போன் நம்பர்ல இருந்து வீட்டு விலாசம் வரை தெரிஞ்சு வச்சிருக்க. அவன்ர பெயர் என்ன எண்டு கூட எனக்குத் தெரியாது. எளியவன்.. அவனுக்கு என்னைத் தெரியாது. எனக்கு அவனைத் தெரியாது. ஆனாலும் பாரு என்னைப் போட்டு என்ன பாடு படுத்துறான் எண்டு. கைல கிடைச்சானோ சம்பல் போட்டு ரொட்டியோட சாப்பிட்டுடுவன்!”
அவள் சொன்னதைக்கேட்டு விஜிதாவுக்குச் சிரிப்பை அடக்கமுடியவில்லை.
“அம்மா தாயே போதும்! இத கேக்கிறதுக்கு அவனிட்டையே போய்ச் சொல்லுறன். வை!” என்று வைக்கப்போனவள், “எதுக்கும் நீ ஃபோனை கையிலேயே வச்சிரு! என்ன அவசரம் எண்டாலும் உனக்குத்தான் ஃபோனை போடுவன்!” என்றுவிட்டு சேட்டிலிருந்து வெளியேறினாள் அவள்.
வீட்டுக்கு வந்ததும் அறைக்குள் புகுந்துகொண்டு உடையைக் கூட மாற்றாமல் கைப்பேசியையே பார்த்தபடி அமைதியற்று அமர்ந்திருந்தாள் யாழினி.
“சாப்பிட வராம என்னம்மா செய்றாய்?” என்று குரல் கொடுத்தார் செல்வராணி.
“கத்தாதீங்கம்மா. வாறன் பொறுங்கோ!” இருந்த விசருக்கு அன்னையுடன் ஏறுப்பட்டாள் அவள்.
“வரவர உனக்கும் உன்ர கொண்ணாக்களின்ர குணம் வருது போல.” என்று அவர் சொல்வது கேட்டும் அசையவில்லை.
சற்று நேரத்தில் அழைத்தாள் விஜிதா. காதில் வைத்ததுமே, “போய்ட்டானாடி?” என்று வினவினாள்.
“அவர் எங்க போறது. நீ வந்து சொல்லாம போகமாட்டாராம்.”
அவள் மரியாதை கொடுத்துப் பேசியதிலேயே அவனும் அருகில்தான் நிற்கிறான் என்று விளங்கிவிட, “நீ ஃபோனை அவனிட்ட குடு! இண்டைக்குக் குடுக்கிறன் கிழி!” என்று, பல்லைக் கடித்தாள் யாழினி.
அவன் வாங்கி, “ஹலோ..” என்று சொல்லி முடிக்க முதலே, “டேய்! நீ என்ன அரை லூசா இல்ல முழு லூசா? நான் வந்து சொல்லாம போகமாட்டன் எண்டு சொன்னியாம். உன்னால எனக்கு இங்க ஜெயில் வாழ்க்கை. வீட்டை விட்டு வெளியில எங்கயும் போகேலாது. அடைபட்டுக் கிடக்கிறன். செய்றதையும் செய்துபோட்டு வந்து நிண்டு ஒரு சொறி சொன்னா கதை முடிஞ்சுதா? அண்ணாட்ட யார் கதைக்கிறது? இல்ல ‘இனி எனக்கு எந்தப் பயமும் இல்லை, அவன் வீடியோவை டிலீட் செய்திட்டானாம்’ எண்டு எப்பிடிச் சொல்லுறது? அவரிட்ட இதைப்பற்றிக் கதைச்சா நீ வந்து சொன்னதைப் பற்றிச் சொல்லவேணும். அப்படிச் சொன்னா செய்தது நீதான் எண்டு தெரியவரும். பிறகு உன்ன கொன்டே போடுவார். அதுக்குத்தான் ஆசைப்படுறியா நீ?” அவன் உருவாக்கிவிட்ட சிக்கல்களால் மிகுந்த சினத்தில் இருந்தவள் பொரிந்து தள்ளினாள்.
தான் யோசிக்காமல் செய்த ஒரு காரியம் அந்தப் பெண்ணை எந்தளவுக்கு முடக்கியிருக்கிறது என்பதை அப்போதுதான் புரிந்துகொண்டவன் மிகுந்த குற்ற உணர்ச்சிக்கு ஆளாகிப்போனான்.
“உண்மையாவே சொறி. இப்படியெல்லாம் நடக்கும் எண்டு நான் யோசிக்கவே இல்ல.
“உன்ர சொறிய கொண்டுபோய் ரோட்டுல திரியிற விசர் நாய்க்கு போடு!” பட்டென்று சொன்னாள் அவள்.
“உங்கட கோபம் எனக்கு விளங்குது. அது போறதுக்கு இன்னும் என்ன செய்ய எண்டு சொல்லுங்கோ, செய்றன்.” தணிவாகக் கேட்டான் அவன்.
“நீ ஒரு கருமமும் செய்யவேண்டாம். என்ர கண்ணிலையே படாம போய்த் தொலை!” திரும்பத் திரும்ப அவன் அப்படிக் கேட்ட எரிச்சலில் சீறினாள் அவள்.
அவனுக்கு ஒரு மாதிரி ஆகிப்போயிற்று! “இனி உங்களுக்கு முன்னால வரமாட்டன். ஆனா கோபம் போயிட்டுதா?” என்றான் மெல்லிய குரலில்.
“போகாட்டி என்ன செய்றதா பிளான்?”
“இன்னும் ஓடுவன்.”
“உன்ன.. எனக்கு வாற விசருக்கு வந்தன் எண்டு வை உன்ன தள்ளி விழுத்திப்போட்டு ஏறி நிண்டு உளக்குவன்!” என்றவளின் கோபத்தில் அவனுக்கே சிரிப்பு வந்துவிடும் போலாயிற்று!
“சரி வாங்கோ. இங்கேயே நிக்கிறன்.” இலகு குரலில் சொன்னான்.
“என்ன பெரிய உத்தமன் எண்டு நினைப்போ? விசரா விசரா! உனக்கு மண்டைக்க ஒரு மண்ணாங்கட்டியும் இல்லையாடா?”
“இல்லாத படியாத்தான் உங்கள வீடியோ எடுத்து இவ்வளவு சிக்கலுக்க மாட்டி விட்டிருக்கிறன்!” கேலிபோல் சொன்னாலும் அவன் குரலில் விரவிக்கிடந்த வேதனையை அவள் கண்டுகொண்டாள்.
இருந்தாலும் கோபம் போகமாட்டேன் என்றது. “காணும் நடிச்சது! எனக்கு எரிச்சலை கிளப்பாம மரியாதையா வீட்டை போய்ச்சேர்! மறந்தும் இனி எனக்கு முன்னால வந்து நிண்டுடாத!” என்றவளின் பேச்சில் மனமும் முகமும் வாட, “சொறி!” என்றான் அவன் உள்ளே போன குரலில்.
“நீயும் உன்ர சொறியும்! ஃபோனை அவளிட்ட குடு! ஏய்.. பொறு பொறு உனக்கு என்ன பெயர்?” என்று அவசரமாகக் கேட்டாள் அவள்.
“ரஜீவன்…” என்றவன் தயங்கி, “உங்கட பெயர் என்ன?” என்றான் மெல்ல.
“தெரிஞ்சு என்ன செய்யப்போறாய்? அவளிட்ட ஃபோனை குடு! அப்படியே உன்ர ஃபோன் நம்பரையும் குடு.” என்று விரட்டினாள்.
“என்ர ஃபோனை உங்கட அண்ணா உடைச்சிட்டார். இப்ப என்னட்ட ஃபோன் இல்ல. தங்கச்சின்ர நம்பர் இருக்கு. தரவா?” ஏன் எதற்கு என்கிற கேள்வியற்றுப் பதில் சொன்னான் அவன்.
“அவளின்ரய வச்சு நான் என்ன செய்ய? நீ ஃபோனை விஜிட்ட குடு!”
“சரி.” என்றுவிட்டுக் கொடுத்தான் அவன்.
“நீ வாடி! இனி அவன் போவான்!”
“ம்ம்…” என்றபடி அவனை விட்டு நகர்ந்து வந்துவிட்டு, “ஏய் யாழி என்னடி நீ துள்ளுறாய் அவன் பம்முறான். எனக்கு ஒண்டுமா விளங்க இல்ல!” என்றாள் சிரிப்புக் குரலில் விஜிதா.
அதைக்கேட்ட யாழினியின் உதட்டிலும் சிரிப்பு மலர்ந்தது.