“உனக்குக் கேட்டதா?”
“பக்கத்தில தானே நிண்டனான். நீ கடுப்புல கத்தினது நல்லாவே கேட்டது.”
“பின்ன என்னடி? அவனால எனக்கு எவ்வளவு கெடுபிடி சொல்லு. இதுல மன்னிச்சிடுங்கோ அது இது எண்டா விசர் வருமா வராதா சொல்லு?”
“ம்ம்.. அவனும் பாவம் தான்டி. தெரியாம செய்துபோட்டு உன்னட்ட மாட்டி முழிக்கிறான்.”
“ஹாஹா… விடடி! எனக்கும் ஒரு அடிமை சிக்கியிருக்கிறான்!” இருந்த கோபத்தை, ஆத்திரத்தை, சினத்தை எல்லாம் அவனிடம் கொட்டியதாலோ என்னவோ இலகுவாகவே சொல்லிச் சிரித்தாள் யாழினி.
அன்று கல்லூரி முடிந்து வீட்டுக்கு வருகிற வழியில் பழக்கடையில் நிறுத்தி அப்பாவுக்குப் பழங்கள் கொஞ்சம் வாங்கிக்கொண்டு வந்த பிரமிளா அங்கே ஹாலில் தகப்பனுடன் அமர்ந்திருந்தவனைக் கண்டு திகைத்தாள்.
வேகமாக அவனோடு அமர்ந்திருந்து பேசிக்கொண்டிருந்த அப்பாவைப் பார்த்தாள். ‘இவனையெல்லாம் வீட்டுக்க விடலாமா?’ என்றுதான் ஓடியது. ஆமை புகுந்த வீடு உருப்படாதாமே! இவன் புகுந்த இந்த வீட்டுக்குள் இனி என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ?
காரணமற்ற சஞ்சலம் மனத்தைக் கவ்வ, தன்னைச் சமாளித்து, “வாங்கோ!” என்று சம்பிரதாயத்துக்கு வரவேற்றுவிட்டு வீட்டுக்குள் வேகமாகச் சென்று மறைந்துகொண்டாள்.
அவள் வந்தது, தன்னைக் கண்டு அதிர்ந்தது, தகப்பனிடம் கண்ணால் கேள்வி கேட்டது என்று எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தான் கௌசிகன்.
அவளுக்குத் தன் வரவு பிடிக்கவில்லை என்று விளங்கிற்று! ஆனால், அவனுக்கு அவளின் வரவு பிடித்திருந்தது. நீண்ட ஹான்ட்பேக் ஒருபக்கத் தோளில் தொங்க, அதே கை சில புத்தகங்களை நெஞ்சோடு பிடித்திருக்க, சேலை முந்தானையைச் சுழற்றிப் போட்டிருந்த மற்ற கையில் ஒரு பையினைப் பற்றியபடி வாசலில் செருப்பைக் கழற்றியவளின் தோற்றம் வெகுவாய்க் கவர்ந்தது.
உள்ளே வந்தவள் தன்னை அங்கே எதிர்பாராததில் ஒருநொடி திகைத்தாலும் சமாளித்து வீட்டுப்பெண்ணாக வரவேற்றது மிகுந்த அழகாய் இருந்தது.
சரிதா அவனுக்குப் பழச்சாறு கொண்டுவந்து கொடுத்தார். அவரின் முகமும் சரியாய் இல்லை. தன் அறையில் இருந்து வெளிப்பட்டு வீட்டின் பின்புறம் நோக்கி நடந்தவளிடம், “உனக்கும் தரட்டாம்மா?” என்று வினவினார்.
“ஊத்துங்கோம்மா வாறன்.” அவளுக்குப் பசித்தது. அவனை வைத்துக்கொண்டு சாப்பிட முடியாது. இப்போதைக்குப் பழச்சாறையாவது அருந்துவோம் என்று எண்ணியபடி கிணற்றடிக்கு நடந்தாள்.
‘காரக் காணேல்லையே. எங்கயும் தள்ளி நிப்பாட்டினானோ?’ என்று யோசிக்கையில் தான் அவர்களின் வீட்டைக் கடந்து சற்றுத் தள்ளி நிற்கும் மரத்தின் நிழலில் நின்ற ஒரு கார் நினைவிலாடியது. சில்வர் நிறத்தை மனம் குறிப்பெடுத்தாலும் இவனெல்லாம் இங்கே வருவான் என்று நினைத்துப் பார்த்தாளா என்ன?
‘இண்டைக்கு என்ன பிரச்னையைப் புதுசா தூக்கிக்கொண்டு வந்திருக்கிறானோ கடவுளுக்குத்தான் வெளிச்சம்!’ முகம் கழுவிக்கொண்டு வந்தவளின் கையில் பழச்சாறினைக் கொடுத்தார் சரிதா.
“குடிங்கோ தம்பி. இந்த வெயிலுக்கு இதமா இருக்கும்.” என்று உபசரித்தார் தனபாலசிங்கம்.
“உங்களுக்கு இல்லையா?” அவனுக்கும் பிரமிளாவுக்கும் கொடுக்கப்பட்டபோதும் அவருக்குக் கொடுக்கப்படாததைக் கவனித்துவிட்டுக் கேட்டான் அவன்.
“மருந்து மாத்திரைகள் எடுக்கிறபடியா நேரத்துக்கே சாப்பிட்டுடுவன். இனி என்ன எண்டாலும் ஒரு மூண்டு மணித்தியாலம் கழிச்சுத்தான். மற்றும்படி கேட்டாலும் கிடைக்காது!” பிரமிளாவை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு நகைத்தார் தனபாலசிங்கம்.
“மகளதிகாரம் போல!” என்றவனின் விழிகளும் அவளிடம் தான் இருந்தது. பள்ளிக்கூடத்துக்கு என்று நடு உச்சி பிரித்து இட்ட கொண்டை அப்படியே இருக்கச் சற்றே கலைந்த முடிச் சுருள்கள் ஒன்றிரண்டு பிரிந்து நிற்க, சேலையில் கழுவித் துடைத்த முகத்துடன் நின்றிருந்தாள் அவள்.
அதுவரை, கல்லூரி வளாகத்தில் ஒருவித இறுக்கம் சூழ்ந்த ஆசிரியையாக மட்டுமே பார்த்தவளை வீட்டுப் பின்னணியில் ஒரு குடும்ப அமைப்பில் ஒரு பெண்ணாக மட்டுமே காண்பது என்றுமில்லாத வகையில் அவனுக்குள் ஒரு தாக்கத்தை உண்டாக்கிற்று.
மகளுடன் நின்றிருந்த சரிதாவின் மனமோ தன் பெண்ணைக் கேவலப்படுத்தியவன் என்ன தைரியத்தில் தங்கள் வீட்டுக்கே வந்து அமர்ந்திருக்கிறான் என்று உள்ளுக்குள் புழுங்கிக்கொண்டு இருந்தது. கணவரின் கண்ணசைவுக்குக் கட்டுப்பட்டுத்தான் உபசரித்தார். நெஞ்சுக்குள் மண்டிக்கிடந்த வெறுப்பு எப்போது போவான் என்று எண்ண வைத்தது.
அவன் பழச்சாற்றினை அருந்தத் தொடங்கவும் தனபாலசிங்கம் பேச்சினை ஆரம்பித்தார்.
“பள்ளிக்கூட நிர்வாகம் நிர்வகிக்கக் கூடிய மாதிரி இருக்கா?”
“சிரமம் எண்டு சொல்லமாட்டன். ஆனா இன்னும் எந்தச் சிரமத்தையும் சந்திக்கேல்ல. இப்பதானே ஆரம்பம். போகப்போக எல்லாம் சரியா வரும்!” என்று பதிலளித்துவிட்டு, பார்வை ஒருமுறை பிரமிளாவிடம் சென்று மீள, “உங்கட மகள் வந்து சொல்லியிருப்பா எண்டு நினைக்கிறன். உங்களுக்கு ஒரு பிரியாவிடை வழங்க பள்ளிக்கூடம் முடிவு எடுத்திருக்கு. அதுக்கு முறைப்படி நானே வந்து அழைக்கிறதுதான் உங்களுக்கான மரியாதை எண்டுதான் வந்திருக்கிறன்.” என்று தான் வந்த காரணத்தை விளக்கினான். பின், “அந்தப் பிரிவுபசார விழாவுக்கு நீங்க வந்து சிறப்பிக்க வேணும்!” என்று முறையாக அழைப்பும் விடுத்தான்.
என்ன தடுத்தும் முடியாமல் பிரமிளாவின் இதழோரம் வளைந்து மீண்டது! அவனே வந்து அழைப்பதுதான் மரியாதையாம்! என்ன மாதிரியான மனிதன் இவன்? அவனே முச்சந்தியில் வைத்துக் கேவலப்படுத்துவானாம். பிறகு கௌரவ விழா எடுக்க அழைப்பு விடுப்பானாம்!
சற்றுநேரம் அவன் சொன்னதை நன்றாக உள்வாங்கிவிட்டுப் பின் நிதானமாகப் பதில் சொன்னார் தனபாலசிங்கம்.
“நான் எப்பவோ அந்தப் பள்ளிக்கூடத்தில இருந்து விருப்ப ஓய்வு பெற்றுட்டேன் தம்பி. பணியில இருந்து நீங்கின ஒருவருக்குப் பிரியாவிடை குடுக்கிறேல்ல. முதல், ஒரு இடத்தில நீண்டகாலம் சேவையாற்றின ஒருவருக்குப் பிரிகிற நேரத்தில செய்கிற வழியனுப்பலுக்குப் பெயர்தான் பிரியாவிடை. அது இப்ப எனக்குத் தேவையில்லை.”
மிகச் சரியான வார்த்தைப் பிரயோகங்களுடன் நாசுக்காகவும் தெளிவாகவும் சொல்லவேண்டியதை மிகச்சரியாகச் சொல்லி மறுத்தபோது, தந்தையை எண்ணி எப்போதும்போல் பெருமை கொண்டாள் பிரமிளா.
மீட்டிங் நடந்த அன்றே இதைப்பற்றிப் பகிர்ந்துகொண்டிருந்தாள் தான். ஆனால், போகிறீர்களா அப்பா என்றோ போகவேண்டாம் என்றோ சொல்லவேயில்லை. அப்பா எந்த முடிவை எடுத்தாலும் அது சரியாகத்தான் இருக்கும் என்று தெரியும்.
அவன், முகத்தில் எந்த உணர்வையும் காட்டிக்கொள்ளவில்லை. “சில விரும்பத்தகாத செயல்கள், அசெளகரியமான நிகழ்வுகள் நடந்து போச்சுதுதான். அதுக்காக உங்கட மாணவிகள் நடத்துற இந்த நிகழ்வுக்கு வரமாட்டன் எண்டு நீங்க சொல்லக்கூடாது.” அவனும் அவர் பிரியம் கொண்டிருக்கும் மாணவியரை முன்னிறுத்தி அழைத்தான்.
தனபாலசிங்கம் அவனை அறிந்துகொண்டவராகப் புன்னகைத்தார். “என்ர பிள்ளைகள் நான்தான் வேணும் எண்டு உறுதியோடு நிண்டு நடத்தின அந்தப் போராட்டமே ஆயிரம் பிரியாவிடைக்குச் சமன் தம்பி. அவே எனக்கு வாங்கித் தந்த வெற்றி, வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைச்சதுக்கும் மேல. நிர்வாகம் அவமதிச்சாலும் நான் படிப்பிச்ச என்ர பிள்ளைகள் என்னைக் கொண்டாடித்தான் அனுப்பி வச்சவே. அந்தச் சந்தோசமே எனக்குக் காணும்.” அவரின் முடிவில் அவர் தெளிவாகத்தான் இருக்கிறார் என்று அவனுக்கு வெளிப்படுத்தினார்.
“அந்தப் பள்ளிக்கூடத்தின் ஆசிரியையாக உங்கட மகள் கூப்பிட்டாலும் இதே பதில்தானா?” என்றவனின் விழிகள் ‘அவரைக் கூப்பிடு’ என்று அவளிடம் சைகை செய்தது.
‘என்ன உரிமையில் கண்ணால் பேசுகிறானாம்’ என்று மனம் கடுத்தாலும் அதைப் புறம் தள்ளி, தன்னைக் கேள்வியாக நோக்கிய தகப்பனிடம், “அந்தப் பள்ளிக்கூடத்துக்கு டீச்சர் எண்டுறதுக்கு முதல் நான் உங்கட மகள் அப்பா. என்ர அப்பாவை அவமதிச்ச இடத்துக்கு நான் கூப்பிட மாட்டன்.” என்றாள் அவள்.
“இப்படி ஆளாளுக்கு மனதில சுமந்து திரியிற கசப்புகளை நீக்கி திரும்பவும் நாங்க ஒன்றிணைஞ்சு பணியாற்ற இந்தப் பாராட்டு விழா உதவியா இருக்குமே. அனுபவம் மிகுந்த உங்கட அப்பாட ஆலோசனைகளை விரும்பிக் கேட்க எங்கட நிர்வாகம் ஆவலாத்தான் இருக்கு.” அவனும் இலகுவில் பின்வாங்குகிறவன் அல்ல என்று காட்டினான்.
இப்போது மட்டும் இவனுக்கு மரியாதை தானாக வருகிறதோ? சினம் மிக, “அவ்வளவு ஆவல் இருந்திருந்தாலோ நீங்க சொல்லுறது உண்மையா இருந்தாலோ அவரைப் பதவில இருந்து தூக்கி இருக்க மாட்டீங்க.” என்று, பட்டென்று திருப்பிக்கொடுத்தாள் பிரமிளா. “செய்றதை எல்லாம் செய்துபோட்டு எப்பிடி ஒண்டுமே நடக்காதமாதிரி கதைக்கிறீங்க?”
“இப்ப என்ன, பதவி தந்தா மட்டும் தான் சேவை செய்வீங்களா?” அவன் பேச்சிலும் அனல் வீசத் தொடங்கியது.
பிரமிளாவுக்கும் பற்றிக்கொண்டு வந்தது. “சேவை எண்டால் என்ன, அதை எந்த லாபமும் பாக்காம, சுயநலம் பாக்காம செய்றது எப்பிடி எண்டு தெரியாத நீங்க
இப்பிடித்தான் கேப்பீங்க. அதால எனக்குக் கோவம் இல்லை. எல்லாத்தையும் காசோட கணக்குப் பாக்கிற உங்களால இப்பிடித்தான் யோசிக்க முடியும். நல்ல மாதிரி யோசிக்க நல்ல மனம், நல்ல குணம், நல்ல சிந்தனை, சமூக அக்கறை இதெல்லாம் கொஞ்சம் வேணும்.” என்று மூச்சிரைக்கப் படபடத்தாள் அவள்.
“அம்மாச்சி…” என்ற தகப்பனின் விழிகள், ‘வீட்டுக்கு வந்திருப்பவரிடம் இதெல்லாம் என்னம்மா?’ என்று கேட்டது.
தந்தைக்குக் கட்டுப்பட்டு அவள் தன்னை அடக்கிக்கொள்ள முயல, அவன் முறுவலித்தான். “உங்கட மகளின்ர கோபத்தைப் பாக்கவே பயமா இருக்கு சேர். நேர்மையான பெண்களின் கோபங்கள் நெருப்புக்குச் சமமானவையாம் எண்டு எங்கயோ வாசிச்சனான். அதால அந்தக் கோபத்தை நான் வளர்க்க விரும்பேல்ல.” என்று சிரித்தபடி எழுந்துகொண்டான் அவன். “உங்கட முடிவை மாத்தி விழாவுக்கு வரமாட்டீங்களா?” என்று, இலகு குரலில் மீண்டும் வினவினான்.
அந்தக் குரலுக்கு மறுக்கத் தனபாலசிங்கமே சிரமப்பட்டார். ஆயினும் தன் கருத்திலிருந்து மாறாமல், “குறை நினைக்க வேண்டாம் தம்பி. இதெல்லாம் திரும்பவும் சங்கடத்தைத் தான் உருவாக்கும். சில நிகழ்வுகளை நல்லதோ கெட்டதோ மறக்கவேணும். அப்படியான நிகழ்வுகளைத் திரும்பவும் மீட்டுப்பார்க்க எனக்குப் பெரிய விருப்பம் இல்லை. ஓய்வை நிம்மதியா கழிக்க நினைக்கிறன்.” என்று, நயமாகவே சொல்லி அவனுக்கு விடைகொடுத்தார் அவர்.