சுவரோரமாகக் கண்ணாடிக் கதவுகள் கொண்ட அலமாரி(ஷெல்ப்), அவனுக்கான முறையான அலுவலக மேசை, நாற்காலி, கணனி, கூடவே ஒரு உதவியாளருக்கான மேசை நாற்காலியும்.
அவனைச் சந்திக்க வருகிறவர்களை அமரவைத்து உபசரிக்க என்று கரையாக இருவர் அமரக்கூடிய வகையிலான சோபா, அதன் முன்னே குட்டி மேசை என்று கனகச்சிதமாக ஒரு அலுவலக அறை உருவாகிக்கொண்டிருந்தது.
கூடவே கல்லூரி சம்மந்தப்பட்ட அனைத்துத் தரவுகளும், ஆரம்பித்த காலம் தொடங்கி அதன் ஒவ்வொரு வளர்ச்சிகளும், மாற்றங்களும் கணனியில் ஒருவர் பதிந்துகொண்டிருந்தார்.
அடுத்த வாரம் தொடங்கிப் புதன்கிழமையும் வந்து சேர்ந்திருந்தது. பிரமிளாவும் கல்லூரிக்குச் சென்றுவிட, புத்தகசாலையில் வாசிக்க என்று எடுத்துவந்திருந்த புத்தகத்தில் ஆழ்ந்திருந்தார் தனபாலசிங்கம். அவரின் அருகில் தரையில் அமர்ந்திருந்து முருங்கைக் கீரை உருவிக்கொண்டிருந்தார் சரிதா.
அப்போது ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து ராஜநாயகமும் செல்வராணியும் இறங்கி வந்தனர். ‘ஏன் வருகிறார்கள்?’ என்று யோசித்தார் தனபாலசிங்கம். ஆயினும், “வாங்கோ!” என்று வரவேற்று அமரவைத்தார்.
செல்வராணிக்குத் தாங்கள் யார் வீட்டுக்கு வந்திருக்கிறோம் என்றே பிடிபடவில்லை. வீட்டுக்கு வந்த கணவர், “ஒரு இடத்துக்குப் போகவேணும். கெதியா(விரைவா) வெளிக்கிடு!” என்று ஆணையிட்டு அழைத்து வந்திருந்தார்.
யாழினி இருந்திருக்க, “எங்கயப்பா போறீங்க?” என்று தைரியமாகக் கேட்டிருப்பாள். செல்வராணியால் அது முடியாது. கேட்டால், “ஏன், மகாராணி சொன்னாத்தான் வருவீங்களோ?” என்கிற கேள்வி வரும்.
எனவே, புறப்பட்டு வந்து அமர்ந்திருந்தவருக்கு, இது யார் வீடு, ஏன் இங்கே வந்திருக்கிறோம் என்கிற யோசனை. என்றாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளவில்லை.
அங்கிருந்த இன்னொரு பெண்ணான சரிதாவைப் பார்த்து நட்பாகப் புன்னகைத்தார். அவருக்கு எங்கேயோ அவரைப் பார்த்த நினைவு. இருந்த குழப்பத்தில் கண்டுபிடிக்க முடியவில்லை.
“வீட்டை அழகா மனதுக்கு அமைதி தாறமாதிரி வச்சிருக்கிறீங்க.” கண்களால் ஒருமுறை வீட்டைச் சுற்றிப்பார்த்துவிட்டு மனதிலிருந்து சொன்னார் செல்வராணி.
அவர்கள் யார், எதற்காக வந்திருக்கிறார்கள் என்று புரியாதபோதும் சரிதாவும் முகம் மலரப் புன்னகைத்தார். “கலைச்சுப் போடுறதுக்குச் சின்ன ஆக்கள் இல்லாத வீடு. பிள்ளைகள் ரெண்டுபேரும் வளர்ந்த ஆக்கள். அதுதான் வச்சது வச்ச இடத்திலேயே இருக்கும்.” என்று இன்முகமாகவே பதிலளித்துவிட்டு,
“கதைச்சுக்கொண்டு இருங்கோ. தேத்தண்ணி கொண்டுவாறன்.” என்றபடி சமையலறைக்கு நடந்தார். ஏனோ அவருக்குச் செல்வராணியைப் பிடித்திருந்தது.
மனைவி ஆரம்பித்துவைத்த பேச்சை ராஜநாயகம் பற்றிக்கொண்டார். “என்ர மகனை உங்களுக்குத் தெரியும்தானே! கௌசிகன். பள்ளிக்கூடத்தின்ர நிர்வாகி.” என்றபோது அவரின் உதட்டில் ஒருவிதமான சிரிப்பு வழிந்தது.
அது எதற்கானது என்று புரியாமல் இருக்குமா தனபாலசிங்கத்துக்கு? ஒன்றும் சொல்லாமல், ஆம் என்பதுபோல் தலையை மட்டும் அசைத்தார்.
உள்ளே கேட்டுக்கொண்டிருந்த சரிதாவின் கைகள் ஒருமுறை இயக்கத்தை அப்படியே நிறுத்தியது. ‘அவனின் தாயா இவர்?’
“மகன் இண்டைக்குத்தான் இதைப் பற்றி என்னோட கதைச்சவர். அதுதான் சுடச்சுட வேலையை முடிப்பம் எண்டு உடனேயே வந்திட்டன்.” என்றார் மேலும்.
“சொல்லுங்கோ!” சுருக்கமாக ஊக்குவித்தார் தனபாலசிங்கம்.
“அவருக்கு உங்கட மகளைக் கேட்டு வந்திருக்கிறன். நீங்களும் மறுக்க மாட்டீங்க எண்டு தெரியும்.” அவர் சொல்லி முடிக்க முதலே, “அத எப்பிடி இவ்வளவு உறுதியா சொல்லுறீங்கள்?” என்று கேட்டுக்கொண்டு வந்து நின்றது சரிதா.
அவரால் அதற்குமேல் கணவர் இருக்கிறார், அவர் பார்ப்பார் என்று அமைதியாக இருக்கவே முடியவில்லை. எவ்வளவு தைரியம் என்று தாய் மனம் கொதித்தது.
“வீடு தேடி வந்த மனுசரிட்ட இப்படிக் கதைக்கக் கூடாதுதான். ஆனா என்னால பேசாம இருக்கேலாம இருக்கு. தயவு செய்து குறை நினைக்காதீங்கோ. எங்களுக்கு ரெண்டு பொம்பிளைப் பிள்ளைகள். ஒருத்தர் ஒரு குறை சொல்ல முடியாதபடிக்கு பொத்தி பொத்தி வளத்தனாங்கள்.(வளத்தோம் நாங்கள் – வளத்தனாங்கள்) அப்பிடியான பிள்ளையைத்தான் உங்கட மகன் சந்தி சிரிக்க வச்சவர். பிறகும் எந்த முகத்தை வச்சுக்கொண்டு இங்க வந்து பொம்பிளை கேக்குறீங்கள். எந்த நம்பிக்கையில எங்கட மகளை உங்கட மகனுக்குத் தருவோம் எண்டு நினைச்சனீங்கள்?” அவரின் சராமாரியான கேள்வியில் முகம் கறுத்துப்போனது ராஜநாயகத்துக்கு.
இதற்கு முன்னால் யாருமே அவரை இப்படிக் கேள்வி கேட்டதில்லை. கேட்க முடியாது. பிறப்பிலேயே செல்வந்தன். மூத்தவன் தலையெடுத்த பிறகு இன்னுமே ராஜமரியாதைதான். அப்படியிருக்க ஒரு பெண் தன்னைக் கேள்வி கேட்பதா? மனைவியை முறைத்தார் ராஜநாயகம்.
அப்போதுதான் செல்வராணிக்கு சரிதாவைப் பிடிபட்டது! கோயிலில் பார்த்த பெண்மணி! அந்தப் பெண்ணின் தாயார். கடவுளே! இந்தத் தாயின் வலியை நேரிலேயே பார்த்தவராயிற்றே!
அதைவிட, தன் மகனுக்குப் பெண் பார்க்க வந்திருக்கிறோம் என்பதே அப்போதுதான் அவருக்குத் தெரிந்தது. இதை முதலே சொல்லியிருக்க இதமாக எப்படிக் கதைப்பது என்றாவது யோசித்து இருப்பாரே. இப்போது நட்டாற்றில் தவிக்க விட்டதுபோல் விட்டுவிட்ட கணவரின் குணத்தை எண்ணி தனக்குள் வருந்தினார்.
“எனக்கும் ஒரு பொம்பிளைப் பிள்ளை இருக்கிறா. உங்கட வலி என்ன எண்டு விளங்குது அம்மா. எங்கட மகனுக்காக நான் மன்னிப்புக் கேக்கிறன். தயவு செய்து மன்னிச்சுக்கொள்ளுங்கோ!” மனதிலிருந்து சொன்னார் செல்வராணி.
“உங்கட மன்னிப்பு நடந்த எதையும் மாற்றப்போறது இல்ல. அதால இதைப் பற்றி இனிக் கதைக்க வேண்டாம்.” உறுதியாகச் சொன்னவரின் விழிகள் மெல்லிய வருத்தத்துடன் கணவரை நோக்கிற்று.
மணமாகிய இத்தனை காலத்தில் கணவரை மீறிக்கொண்டு அவராக ஒரு முடிவை, அதுவும் மூன்றாம் நபரிடம் தெரிவித்தது இதுதான் முதல் முறை. ஆனால் பொறுக்க முடியவில்லையே. அதற்குமேல் அங்கு நிற்க முடியாமல் அடுப்படிக்குள் புகுந்துகொண்டார்.
தனபாலசிங்கத்துக்கும் மனைவியின் பேச்சில் மாற்றுக்கருத்து இல்லை. எனவே, “திருமணம் எண்டுறது ஆயிரம் காலத்துப் பயிர். ஒருத்தரை ஒருத்தர் விளங்கி, அனுசரிச்சு, மதிச்சு, மற்றவரின்ர உணர்வுக்கு மதிப்புக்குடுத்து வாழவேண்டிய உறவு அது. அப்பிடி இருக்க, ஏற்கனவே நடந்த விசயங்கள் எங்கட மனதில பெரிய கசப்பை உண்டாக்கிப் போட்டுது. அந்தக் கசப்பை மறந்து கல்யாணம் வரைக்கும் போறது சரியா வராது.” என்று, அவரும் தங்கள் குடும்பத்தின் உணர்வைத் தெளிவாகவே எடுத்துரைத்தார்.
அவர்களின் மறுப்பை எல்லாம் ஒரு பொருட்டாக எடுப்பதற்கு ராஜநாயகம் தயாராகவே இல்லை. “எதுக்கும் மகளிட்ட கதைச்சுப்போட்டு நல்ல முடிவா சொல்லுங்கோ!” என்றார்.
“கேக்கிறன். ஆனா, நிச்சயமா மகள் சம்மதிக்க மாட்டா.”
அதற்கும் என்னவோ சொல்லப்பார்த்த கணவரின் கையைப் பற்றித் தடுத்துவிட்டு, “அண்ணா, நான் ஒருக்கா உங்கட அவவோட கதைக்கலாமா?” என்றார் செல்வராணி தயவாக.
“ஓம் அம்மா. சமையல் கட்டுலதான் நிக்கிறா. கதைங்கோ.” என்று அனுமதியளித்தார் தனபாலசிங்கம்.