“இப்பதான் கொலீஜால வந்தவள். சாப்பிட்டுக் கொஞ்சம் களை ஆறட்டும்!” என்றார் அமராவதி கயலினியை முந்திக்கொண்டு.
அவன் விடவில்லை. “அங்க என்னம்மா வெட்டி முறிக்கிற வேலையா? சும்மா ஒதுக்கிறதுக்கு ஹெல்ப் தானே. போய்ச் செய் கயல்!” என்றவனின் விழிகள் கயலையே கூர்ந்தன.
அந்தப் பார்வையை எதிர்கொள்ள முடியாமல், அவளும் எழுந்து சென்றாள்.
“நானே செய்வன். நீ போய்ப் படி!” என்று திருப்பி அனுப்பிவைத்தாள், ஆரணி.
தப்பித்தோம் பிழைத்தோம் என்று கயல் அறைக்குள் ஓடிவிட, அதற்குமேல் எதுவும் செய்ய முடியாதவனாக அங்கேயே அமர்ந்திருந்தான், நிகேதன். அவன் பார்வை அவனுக்கு முதுகைக் காட்டியபடி வேலைகைளைப் பார்த்துக்கொண்டிருந்தவளின் மீதே இருந்தது.
அவன் வீட்டில் இருக்கும் பொழுதுகளில் அவனை விட்டு விலகமாட்டாள் ஆரணி. கதைப்பதற்கு யாருமற்று காலையில் இருந்து தனியாகவே இருப்பதாலோ என்னவோ மாலையில் அவன் வந்துவிட்டால் அவனோடு ஒட்டிக்கொண்டும் உரசிக்கொண்டும் தனகிக்கொண்டும் இருந்து அவன் பொறுமையைத்தான் சோதிப்பாள். அப்படியானவள் இன்று அவன் வீட்டில் இருந்தும் தனியாக ஒதுங்கி நிற்கிறாள்.
கயல் சாதாரணமாகத்தான் கேட்டாள். ஆரணியும் இத்தனை நாள் தன் மனதிலிருந்த குறையைத்தான் சொன்னாள். அவளைப் பிடிக்கிறதோ இல்லையோ, ஒரு பெண் மாற்றுடை கூட இல்லாமல் இருக்கிறாள் என்று தெரிந்தும் மனிதாபிமானத்தோடு உதவாத தங்கை மீதுதான் பிழையும் கூட. மூத்தவன் தான் உன் அண்ணன் அவனிடம் கேள் என்று அன்னை சொன்னபோது, நானும் உனக்கு அண்ணாதான் என்று தன் உரிமையை நிலைநாட்டப் பணம் கொடுத்ததோடு அவனும் நிறுத்தியிருக்க வேண்டும். மாறாக, அவளின் அண்ணனாகவே ஆரணியைக் கடிந்தவன், தான் அவளுக்குக் கணவனும் கூட என்பதை அக்கணத்தில் சிந்திக்க மறந்துதான் போனான்.
திருமண வாழ்க்கை புதிது. மனைவி, தங்கை, தாய் என்று மூவரையும் ஒரு சமநிலையில் கொண்டுபோகும் வித்தையும் அவனுக்குப் புதிதுதானே. முதன் முதலில் உருவான சிக்கலில் அவன் சறுக்கிவிட்டது புரிந்துபோயிற்று!
எழுந்து சமையலறைக்குச் சென்றான். அவனது அரவம் உணர்ந்தும் திரும்பிப் பார்க்காததிலேயே அவளின் கோபத்தின் அளவை உணர்ந்தான். போடி என்று முறுக்கிக்கொண்டு போகமுடியவில்லை. தொண்டையைச் செருமினான். பாத்திரங்களை எடுத்து அங்கும் இங்கும் வைத்தான். அவள் அசையவேயில்லை. கஷ்டம் தான்போல! உதட்டைப் பிதுக்கியவனும் தோல்வியை ஒப்புக்கொள்வதாக இல்லை.
“நான் ஏதாவது செய்யவா?”
“தேவையில்லை. எல்லாம் முடிஞ்சுது!”
அவனை வெட்டுவதிலேயே குறியாக இருக்கிறாள் என்று விளங்கிற்று.
“எனக்குத் தேத்தண்ணி வேணும்.” என்றுவிட்டு அறைக்குள் நுழைந்து டெரெசில் அமர்ந்துகொண்டான்.
எப்படியும் கொண்டு வரத்தானே வேண்டும்! அந்த எண்ணம் தந்த சிரிப்பில் மீசைக்கடியில் உதடுகள் விரிந்தன. அவன் எதிர்பார்த்ததுபோலவே தேநீர் கோப்பையுடன் வந்தாள் அவள். அங்கிருந்த மரக்குற்றியின் மேல் கோப்பையை வைத்துவிட்டுத் திரும்பி நடந்தவளை இழுத்துத் தன்னருகில் இருத்திக்கொண்டான்.
“விடு நிக்கி!” என்றபடி அவள் திமிர, உதட்டில் விரல் வைத்து பக்கத்து அறையில் தங்கை இருப்பதைச் சைகையில் காட்டினான். அதை உணர்ந்து அவள் அமைதியான அந்தக்கணமே வேகமாக அவள் இதழ்களைச் சிறை செய்தான் அவன்.
சத்தமின்றி விடுபடப்போராடியவள், அவன் பிடிவாதம் உணர்ந்து மெல்ல மெல்ல அடங்கினாள். அலைப்புற்றுக் கொண்டிருந்த மனது அந்த முத்தத்தில் அப்படியே அமைதியாகிப்போனது என்னவோ உண்மைதான். தான் விட்ட தவறை விளக்கும் வகை தெரியாமல் உதடுகள் வழியே அவன் மன்னிப்பை வேண்ட அதை உணர்ந்தவளோ கண்ணீரின் வழியே அதை ஏற்றுக்கொண்டாள்.
அவள் தைரியசாலிதான். ஒற்றை வார்த்தைக்குப் பத்து வார்த்தைகள் திருப்பிக் கொடுப்பாள் தான். அது மற்றவர்களுக்கு. அவனுடைய சின்னச் சிடுசிடுப்பைக் கூட தாங்கிக்கொள்ள முடிவதில்லை. அதை உணர்ந்தவனும் அவளைத் தன் மார்போடு அணைத்துக்கொண்டான். கன்னம் வருடி அவளின் முகம் பார்த்தான்.
நடந்ததைப்பற்றிப் பேச இருவருக்குமே வாய் வரவில்லை. அதைவிட மனமில்லை. சற்று நேரத்துக்குமுன் பெரிதும் சஞ்சலப்பட்டிருந்த இருவர் மனமும் இப்போது நிறைந்து நிர்ச்சலனமாய் மற்றவர் மீது நேசத்தைச் சொல்லியபடி இருந்தது. இதைச் சாதித்துக்கொடுத்தது ஒற்றை முத்தம்!
ஆரணியின் முகத்தில் முறுவல் அரும்பிற்று. அவளையே கவனித்துக்கொண்டு இருந்தவன் சிறு சிரிப்புடன் என்ன என்று புருவம் உயர்த்தினான். “ஒரு கிஸ்ஸ தந்து நடந்தத ஒண்டுமே இல்லாம ஆக்கிட்டடா!” என்றாள் அவள்.
அவனுடைய சிரிப்பு விரிந்தது. “இதேமாதிரி எப்பவும் சிரிச்சமுகமாவே இரடி! இல்லாட்டி என்னவோ செய்யுது!” என்றவன் ஆசையோடு மீண்டும் ஒருமுறை தன் உதடுகளை அவளின் இதழின் மீது ஒற்றி எடுத்தான்.
அதன் பின்னான நாட்கள் பெரிய சலசலப்பற்று நகர்ந்தது. நிகேதனிடம் மட்டும் தேவையானவற்றைப் பேசும் அளவுக்கு அமராவதியும் கயலினியும் முன்னேறி இருந்தனர். ஆரணியோடான உறவு அப்படியே இருந்தது. எப்போது சமாதானமாகி வருகிறார்களோ அப்போது வரட்டும் என்று அவளும் விட்டுவிட்டாள்.
வேலைகளுக்கு விண்ணப்பித்து நேர்முகத் தேர்வுகளுக்கும் சென்றுவந்தான், நிகேதன். ஒன்றில் கிடைக்கவில்லை அல்லது ராஜேந்திரனிடம் வாங்கும் சம்பளத்தை விடக் குறைவான தொகை சொன்னதில் இவன் மறுத்தான்.
அன்று, அவன் வேலை முடிந்து வந்தபோது வீட்டினரோடு அவர்களின் தெருவிலேயே இருக்கும் பகவதி ஆன்ட்டியும் நின்றிருந்தார். “என்ன?” என்றான் ஆரணியிடம்.
“அங்கிளுக்கு இண்டைக்கு இரவு ஒரு மணிக்கு ஃபிளைட்டாம் நிக்ஸ். வேன் காரன் வாறன் எண்டு சொல்லிப்போட்டு, மறந்துபோய் வேற ஹயர் போய்ட்டானாம். இப்ப அவசரத்துக்கு வேற வேன் காரர் ஒருத்தரும் அம்பிடேல்லையாம்(அகப்படவில்லையாம்). நீ கூட்டிக்கொண்டு போவியா எண்டு கேட்டவா.” என்று விசயத்தைச் சொன்னாள், ஆரணி.
“போறதுக்கு மட்டும் குறைஞ்சது ஏழு மணித்தியாலம் பிடிக்கும் நிக்கி. போய்வந்து ரெஸ்ட் எடுக்காம நீ வேலைக்கும் ஓடவேணும்.” ராஜசேகருக்கு வேலை நேரத்துக்குப் பிறகு அவரது காரை அவன் என்ன செய்கிறான் என்பது பற்றிக்கூடக் கவலையில்லை. ஆனால், வேலைக்கு லீவு எடுப்பதோ பிந்தி வருவதோ பிடிப்பதில்லை. அதனால் அதையும் எடுத்துச் சொன்னாள், ஆரணி.
எஞ்சி இருப்பது அவன் மட்டுமே என்றாகிப்போக, மறுத்துவிடுவானோ என்று பயந்துபோனார் பகவதி. “காசு கூட எண்டாலும் போட்டுத்தாறன், மாட்டன் எண்டு சொல்லாம வாய்யா!” என்றார் கெஞ்சலாக.
“அது ஒண்டும் வேண்டாம். நீங்க வேகமா வெளிக்கிடுங்கோ. நான் குளிச்சிட்டு ஓடிவாறன்!” என்று அவரை அனுப்பி வைத்துவிட்டு, முதல் வேலையாக ராஜசேகரனுக்கு அழைத்து விடயத்தைச் சொன்னான்.
அவர் சம்மதித்ததும், “அங்கிளுக்கு ஓகேயாம்! நீ ஒரு பிளாஸ்க்ல தேத்தண்ணியும், தண்ணியும் எடுத்து வை. சாப்பாடு வேண்டாம்.” என்றான் ஆரணியிடம்.
“நானும் வரட்டாடா? நித்திரை கொள்ளாம போய்வர வேணும். இடைல நிக்கவும் ஏலாது. எனக்குப் பயமா இருக்கு!” மனதில் சஞ்சலத்துடன் கேட்டாள், அவள்.
“கார் டிக்கில ஸூட்கேஸ் எல்லாம் வைக்கலாமோ தெரியாது. சீட் அதுக்கும் வேணும். நீயும் வந்தா கஷ்டம். ஆன்ட்டியும் வாறா தானே. நான் அவவோட கதைச்சுக்கொண்டு வந்திடுவன். அப்பப்ப நேரம் கிடைக்கேக்க ஃபோன் பண்ணுறன்.” என்றவன், வேகமாகக் குளித்துத் தயாராகி வந்தான்.
ஆரணிதான் அவனை அனுப்பிவிட்டு மனம் முழுக்கப் பயத்தைச் சுமந்தபடி அலைந்துகொண்டிருந்தாள். இதுவரை இப்படியான பெரும் தூரங்கள் அவன் பயணித்ததில்லை. இந்த நீண்ட தூரப்பயணம் முற்றிலும் புதிது. கடவுளை வேண்டியபடி இரவு ஒரு கண் தூங்காமல் விழித்திருந்தவளுக்கு, காலையில் ஏழுமணிக்கே பிரசன்னமாகி நிம்மதியைக் கொடுத்தான், நிகேதன்.
உறக்கமற்று நீண்ட தூரம் வாகனமோட்டியதில் சிவப்பேறிய கண்கள், களைத்துச் சோர்ந்த முகம், கலைந்த கேசம், கசங்கிய ஆடை என்று முற்றிலும் ஓய்ந்துபோயிருந்தான். பகவதி அம்மா ஆயிரம் நன்றிகளைச் சொல்லி விடைபெற்றுக்கொள்ள, அறைக்குள் வந்ததும் சட்டைப் பையிலிருந்து இருபதினாயிரம் ரூபாயை எடுத்து அவளின் கையில் திணித்தான். “சரியா அரைமணி நேரம் கழிச்சு எழுப்பிவிடு ஆரா!” என்றுவிட்டு உடைகூட மாற்றாமல் கட்டிலில் விழுந்தான்.
போய்வந்த ஹயருக்கான பணம் என்று தெரிந்தது. சொன்னதுபோலவே அரைமணி நேரத்தில் எழுந்து, குளித்து வேலைக்குத் தயாரானவனைப் பார்க்கப் பாவமாய்ப் போயிற்று. இன்னுமே கண்கள் நெருப்புத் துண்டுகளாகச் சிவந்துபோய்க் கிடந்தது.
“இண்டைக்கு ஒருநாள் அங்கிளிட்ட லீவு கேட்டுப் பாக்கிறியா?” அவனருகில் அமர்ந்து கேட்டாள், ஆரணி.
“கேக்கவே ஏலாது ஆரா. கட்டாயம் வேலைக்கு வரவேணும் எண்டு நேற்றே சொல்லிட்டார்.” என்றவன், அவளின் மடியில் தலை சாய்த்துக்கொண்டான்.
மெல்ல கேசத்தை வருடிக்கொடுத்தாள் ஆரணி. இன்னுமொரு பத்து நிமிடங்களை உறக்கத்தில் கழித்தவன் எழுந்து புறப்பட, “இந்தக் காசை கொண்டுபோய்க் குடு நிக்கி! அவரின்ர கார் எல்லா.” என்று சொல்ல, அவனும் வாங்கிக்கொண்டு புறப்பட்டான்.
அங்கே ராஜசேகரிடம் கொடுக்க, அவன் முகத்தைப் பார்த்துவிட்டு, “இரவிரவா நித்திரை முழிச்சு ஓடினது நீ. பிறகு ஏன் காச எனக்குத் தாறாய்? நீயே வச்சிரு. பெட்ரோல் மட்டும் நிரப்பிவிடு!” என்று முடித்துவிட்டார், அவர்.
அவரளவில் சத்தியநாதனின் மருமகன் அவரது டிரைவர். அதுவே போதுமாயிருந்தது. இந்தப் பணமெல்லாம் எந்த மூலைக்கு.