மூத்த மகன் குடும்பத்தோடு வருகிறான் என்றதுமே, மாலினியும் குழந்தைகளும் தரையில் இருந்து உண்ணமாட்டார்கள் என்று சொல்லி, பிளாஸ்ட்டிக் சாப்பாட்டு மேசையும் நாற்காலிகளும் வாங்கிப் போடச் சொல்லியிருந்தார் அமராவதி. அந்த மேசையில், நிகேதன் வாங்கிக்கொண்டு வந்த இரவு உணவைப் பாத்திரங்களுக்கு மாற்றி, கொண்டுவந்து வைத்தாள் ஆரணி. பெரிய மக் ஒன்றில் சில்லென்று குளிர் தண்ணீரையும், கழுவிய தட்டுக்களையும் வைத்துவிட்டு அவர்களை அவள் அழைப்பதற்குள், “சரி தம்பி வா, வந்து சாப்பிடு. கொழும்புல இருந்து இங்க வரைக்கும் கார் ஓடிக்கொண்டு வந்ததுல களைச்சுத் தெரியிறாய். சாப்பிட்டு நேரத்துக்கே படுத்து எழும்பினா உடம்புக்கும் சுகமா இருக்கும்.” என்று பெரிய மகனை அழைத்தார், அமராவதி.
“மாலினி நீயும் வாம்மா. பிள்ளைகளுக்கும் குடுத்துச் சாப்பிடு. கயல் அண்ணிய கவனி.” என்று மகளுக்கும் ஏவிவிட்டு, பேரப்பிள்ளைகளைத் தானே அழைத்து வந்து போட்டுக்கொடுத்தார்.
“என்ன மாமி, மூண்டு நேரமும் கடைச் சாப்பாடு தானோ?” என்றபடி வந்து அமர்ந்தார் மாலினி.
“வீட்டுச் சாப்பாடு சாப்பிட்டா உன்ர வயிறுதானம்மா கெட்டுப்போகும்!” அவளின் சமையல் குறித்தான அவரின் நக்கலை ஆரணி கருத்தில் கொள்ளவில்லை. மாறாக நிகேதனை அழைப்பாரா என்று கவனித்தாள். அவர்களைத் தவிர, இன்னும் இரண்டு ஜீவன் அங்கே இருக்கிறார்கள் என்கிற நினைப்பே இன்றி, மூத்த மகனின் குடும்பத்துக்குப் பார்த்து பார்த்துப் பரிமாறினார். நிகேதனைப் பார்த்தாள் ஆரணி. தொலைக்காட்சியில் கவனமாக இருப்பதுபோல் காட்டிக்கொண்டு அமர்ந்திருந்தான். இறுகியிருந்த தாடையும், ரிமோட்டை இறுக்கிப் பற்றியிருந்த கரமும், அவன் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள மிகவுமே போராடுகிறான் என்று உணர்த்தியது.
ஆரணியால் பொறுக்க முடியவில்லை. அவளை அவமதித்தால் கூடத் தூக்கிப் போட்டுவிட்டுப் போய்விடுவாள். அவனுக்கு ஒன்று என்றால் முடியாதே. அண்ணா குடும்பம் வருகிறது என்று விடுமுறை எடுத்துக்கொண்டு நின்றது இப்படி அவமானப்படத்தானா?
“நிக்ஸ்! நீயும் வா, சாப்பிட!” யாரைப்பற்றியும் யோசிக்காமல் அவனை அழைத்தாள்.
தொலைக்காட்சியிலிருந்து விழிகளை அகற்றி அவளைப் பார்த்தான் நிகேதன். அவள் விழிகளில் தெரிந்த பிடிவாதத்துடன் கூடிய அழைப்பில், தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு எழுந்து வந்தான்.
வேகமாக ஒரு தட்டினை எடுத்து வைத்து உணவை இட்டு, “சாப்பிடு!” என்றாள் பாசத்தோடு. தண்ணீரையும் ஒரு கப்பில் ஊற்றி வைத்துவிட்டு அவனருகிலேயே நின்றுகொண்டாள். இதையெல்லாம் பார்க்காததுபோல் பார்த்துக்கொண்டிருந்த மாலினிக்கு எரிச்சல் தான் வந்தது. ஒழுங்கான உழைப்பு இல்லை; பொறுப்பு மருந்துக்கும் இல்லை. இதில் உயிர் காதலாம்.
“உங்களுக்கு முன்னாலேயே அவன் இவன் எண்டு சொல்லுப்படுது. இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா மாமி? நானும் உங்கட மூத்த மகனை கண்டபாட்டுக்குக் கூப்பிடலாம் போல இருக்கே!” மாலினி கேட்கத் துடித்துப்போனார் அமராவதி.
அவரின் விழிகள் வேகமாகப் பெரிய மகனிடம் ஓடியது. அந்த வீட்டின் தலைச்சம் பிள்ளை. அதுநாள் வரை அவர்களை எல்லாம் பொறுப்பாகப் பார்த்தவன். இளமையைக் கடந்து வாழ்வின் பல படிகளைக் கடந்த அடையாளங்கள் முகத்தில் தெரிய அமைதியாக உண்டுகொண்டிருந்தான். அவனது மனைவியேயானாலும் அவனை மரியாதை இல்லாமல் அழைப்பதா? அதை அவர் அனுமதிப்பதா?
“நீயெல்லாம் அப்பிடிக் கூப்பிட மாட்டாய் பிள்ளை. கொழும்பில பிறந்து வளந்தாலும் அடங்காபிடாரி குணம் உன்னட்ட இல்ல. உன்ர குடும்பத்தை மட்டுமில்ல எங்களையும் ஒரு குறை இல்லாம பாத்தவள் நீ. அதுக்கு நல்ல குணம் இருக்கோணும், நல்ல வளப்பு இருக்கோணும். உன்னைப்போய்ச் சும்மா பேச்சுக்கும் கண்டதுகளோடையும் ஒப்பிடாத!” மகனை மருமகள் அப்படி அழைத்துவிடக் கூடாது என்பதற்காகவே சற்று அதிகமாகவே தூக்கிப்பிடித்தார், அமராவதி.
நிகேதனின் பொறுமை பறந்து போயிற்று. இருந்தும், விழிகளையும் கையையும் இறுக்கி மூடித் தன்னை அடக்கப் பார்த்தான். முடியாமல் போகவே சோற்றுத் தட்டைப் பிடித்துத் தள்ளிவிட்டு சரக்கென்று எழுந்து போனான். நல்லகாலம் பாத்திரம் ஒன்று இடையில் இருந்ததில் அவன் தட்டு தரையில் விழாமல் அதில் மோதி நின்றது. ஒரு நொடி எல்லோருமே திகைத்துப் போயினர். ஆரணிக்கு என்ன செய்வது என்று தெரியாத நிலை. திகைத்து நின்றுவிட்டு அவன் பின்னே ஓடினாள்.
சின்ன மகனிடம் இப்படி ஒரு கோபத்தை அமராவதி சத்தியமாக எதிர்பார்க்கவே இல்லை. அவளைச் சொன்னால் இவனுக்கு எரிகிறதா என்று மனம் புகைந்தது. கூடவே, பெரிய மருமகளின் முன்னே கிடைத்த அவமரியாதையில் முகம் சிவந்து போனது.
“இப்ப என்ன நடந்தது எண்டு உங்கட தம்பிக்கு இவ்வளவு கோவமாம்? அண்ணா அண்ணி எண்டு ஒரு மரியாதை இல்லாமல் என்ன செயல் இது?” என்று பொங்கிய மாலினியை, “விடு மாலினி! கதைச்சு கதைச்சு பிரச்சினைய பெருசாக்காத!” என்று அடக்கினார், சகாதேவன்.
ஆரணி அவனைத் தேடிக்கொண்டு சென்றபோது, வீட்டின் பின்பக்கம் கைகளைப் பின்னுக்கு கட்டிக்கொண்டு வானத்தை வெறித்தபடி நின்றிருந்தான் அவன்.
“நிக்கி..”
அவனிடம் சத்தமில்லை.
“நிக்ஸ் பிளீஸ்..” என்ன சொல்லிச் சமாதானம் செய்வது என்று தெரியாத தவிப்புடன் அழைத்தாள், அவள்.
“போய் அவேயே(அவர்களை) கவனி நீ.” திரும்பி அவளைப் பாராமல் சொன்னான் அவன்.
இப்போது அவனுக்குத் தனிமை தேவைப்படுகிறது என்று புரிந்தது. மேலே பேச அவளுக்கும் வரவில்லை. ஆனால், எப்படியாவது அவனைச் சமாதானம் செய்துவிடத் துடித்தாள். எப்படி? அது வீட்டின் பின் பக்கம். யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அப்படியான இடத்தில் வைத்து அவளால் எதையும் பேசிவிட முடியாது. அவனைத் தனியே விட்டுப் போக மனதே இல்லாதபோதும் வேறு வழியற்று வீட்டுக்குள் நடந்தாள்.
அங்கே, “கயலுக்குப் படிப்பு முடிஞ்சதும் ஒரு கல்யாணத்தைப் பாருங்கோ! இனியும் அவளை இங்க வச்சிருக்கிறது சரியா வரும் எண்டு நான் நினைக்கேல்ல.” என்று சொல்லிக்கொண்டிருந்தார் மாலினி.
அவரின் பேச்சில் அதிர்ந்துபோய்த் தமையனைப் பார்த்தாள் கயலினி. படித்து முடித்து இரண்டு வருடமாவது வேலைக்குப்போய், ஆசைப்பட்டதை வாங்கி உடுத்தி வாழவேண்டும் என்று பல கனவுகள் அவளுக்குள். இவரானால் அனைத்தையும் கவிழ்த்துக் கொட்டிவிடுவார் போலவே.
சகாதேவனும் தங்கையைத்தான் பார்த்தார். அவளின் கலக்கம் நிறைந்த பார்வையை உள்வாங்கியவர், “முதல் அவள் படிப்பை முடிக்கட்டும். பிறகு மிச்சத்தைப் பாக்கலாம். கல்யாணத்துக்கு என்ன அவசரம்!” என்றார் பொதுவாக.
அவள் நின்றுவிட்ட மூச்சை மெல்ல இழுத்துவிடுகையில், உள்ளே வந்த நிகேதன், “கயலின்ர கல்யாணம் என்ர பொறுப்பு. அதைப்பற்றி நீங்க யோசிக்க வேண்டாம்.” என்றான் தமையனிடம்.
“அப்ப கடைசிவரைக்கும் அவள் இந்த வீட்டிலேயே இருந்து கண்ணீர் வடிக்க வேண்டியதுதான்.” அமராவதியிடம் இருந்து உடனேயே பதில் சீறிக்கொண்டு வந்தது.
முகம் கருக்கத் தாயைப் பார்த்தான் நிகேதன். அவர் அவனை மதிக்காமல் மூத்தவனிடம் பேசினார். “உன்னைக் கேக்கிறது நியாயமில்ல தம்பி. ஆனா எனக்கும் வேற ஆர் இருக்கீனம் சொல்லு? என்னைக் கொண்டுபோய் எங்கயாவது ஒரு மடத்தில விட்டாலும் பரவாயில்ல. உன்னைக் கெஞ்சிக் கேக்கிறன். கூடப்பிறந்த பாவத்துக்கு அவளுக்கு ஒரு மாப்பிள்ளையைப் பாத்து கட்டி வச்சுவிடு! காலத்துக்கும் நீ நல்லாருப்பாய். உன்ர நல்ல மனசுக்கு உன்ர பிள்ளைகளுக்கு எந்தக் குறையும் வராது பார்!” என்றார் கன்னங்களில் கண்ணீர் வழிய.
நிகேதன் அன்னையை வெறித்தான். அவன் காயப்படுவான் என்று தெரிந்தே சொல்லப்பட்ட வார்த்தைகள். அதைப்பற்றிப் பேசுவதோ விளக்கம் கேட்பதோ வீண். தன் பார்வையைத் தங்கையின் புறமாகத் திருப்பினான். “கயல் இங்கப்பார், படிப்பை முடிச்சபிறகு வேலைக்குப் போய் உனக்குப் பிடிச்சமாதிரி இருக்க ஒரு ரெண்டுவருசம் போதுமா?” என்று நேரடியாக அவளிடமே கேட்டான்.
அவள் ஆம் என்பதாகத் தலையை ஆட்ட, சகாதேவனிடம் திரும்பி, “சரியா மூண்டு வருசத்தில அவளுக்கு மாப்பிள்ளையை நீங்க பாருங்கோ. செலவு என்ர பொறுப்பு!” என்றான் தெளிவாக.
தாயிடம் திரும்பி, “இப்ப சந்தோசம் தானே? நான் நடத்திவைக்காட்டியும் உங்கட மகன் நடத்தி வைப்பார். உங்கட மகளுக்குக் கல்யாணம் கட்டாயம் நடக்கும்!” என்றவன், மனதின் புழுக்கம் தாங்கமாட்டாதவன் போன்று வீட்டை விட்டே வெளியேறி நடந்தான்.
மனம் உடைந்துபோயிற்று அவனுக்கு. தன்னை மடத்தில் விட்டாலும் பரவாயில்லையாம். அவருக்குக் கேட்க வேறு யாரும் இல்லையாம். தமையனுடைய பிள்ளைகள் நல்லா இருப்பார்களாம். அப்போ அவனுடைய வாரிசுகள்? உதிக்க முதலே அப்பம்மாவின் வாயினால் சாபத்தை வாங்கப் போகிறார்களா?
ஆரணியின் நிலையும் அதேதான். அமராவதி அம்மாவின் பேச்சிலும் செயலிலும் மனம் துடித்தது; ஆத்திரத்தில் பொங்கியது; அவமானத்தில் சீறியது. இருந்தபோதிலும், நிகேதனுக்குக் கொடுத்த வாக்குக்காக ஒற்றை வார்த்தை பேசவில்லை.
அமராவதிக்கு அது மிகப்பெரிய ஆச்சரியம் தான். அவளின் இயல்புக்கு மாலினியையே ஒரு கை பார்த்திருக்க வேண்டும். யாருமறியாமல் அவளைக் கவனித்துக்கொண்டேதான் இருந்தார். அவளின் அமைதிக்கான ரகசியத்தை அவரால் கண்டு பிடிக்கவே முடியவில்லை.
கயலினியின் திருமணத்தை நிகேதன் பொறுப்பெடுத்துக்கொண்டதில் மாலினிக்குப் பெருத்த நிம்மதி. இத்தனை நாட்களாக மொத்தக் குடும்பத்தையும் கணவர் பார்த்தத்தை ஏற்றுக்கொண்டவரால், நிகேதன் தலையெடுத்த பிறகும் கணவர் தான் அவர்களுக்கு எல்லாம் செய்யவேண்டும் என்பதில் சிறிதும் உடன்பாடில்லை. அவருக்கும் இரண்டு குழந்தைகள் உண்டே. அவர்களின் எதிர்காலத்தைப் பற்றியும் யோசிக்க வேண்டுமே. குடும்பப் பொறுப்பு இரண்டு ஆண்களுக்குமானதுதானே. பொறுப்பை நிகேதனும் எடுத்துக்கொள்ளத்தானே வேண்டும்.
சகாதேவனுக்கும் மாலினிக்கும் அமராவதி அம்மாவின் அறை கொடுக்கப்பட்டுவிட, சின்னவர்களுக்குத் தங்களின் அறையில் உறங்குவதற்கு ஏற்பாடு செய்தாள் ஆரணி. அவர்களுக்குத் துணையாக நிகேதன் அங்கேயே தரையில் படுத்துக்கொண்டான். இரு அறைகளிலும் ஒவ்வொரு கட்டில் தான். அதுவும் இருவர் மட்டுமே படுக்கக் கூடியது. எனவே பெண்கள் மூவரும் பாய் தலையணையோடு ஹாலுக்கு வந்திருந்தனர்.
ஆரணியால் அவர்களின் அருகில் உறங்க முடியவில்லை. மனதும் அமைதியற்று நடந்தவற்றையே மீண்டும் மீண்டும் நினைத்துக்கொண்டிருந்தது. அவர்கள் இருவரும் உறங்கிவிட்டார்கள் என்று தெரிந்ததும், மெல்ல எழுந்து கதவைத் திறந்துகொண்டு வெளியே சென்று தானே அமைத்த டெரசில் சத்தமின்றி அமர்ந்துகொண்டாள். குவிந்துகிடந்த இருளுக்குள் மெல்லிய ஒளிக்கீற்றாவது தென்பட்டுவிடாதா என்று மனம் அலைபாய்ந்தது.
சற்று நேரத்தில் அவள் அருகில் வந்து அமர்ந்தான் நிகேதன்.
இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அவன் கைகள் அவளை ஆதரவாக அணைத்து மார்பில் தங்கியது. ஆரணியும் வாகாக அவனுக்குள் அடங்கினாள். அவளின் உச்சியில் உதடுகளை ஒற்றி எடுத்தான் அவன். வார்த்தைகளே அற்ற அந்த ஆறுதலில் அவன் இடுப்பைக் கட்டிக்கொண்டு மார்புக்குள் முகத்தைப் புதைத்துக்கொண்டாள் ஆரணி.


