அவள் ஆரணி 15 – 1

மாலை நேரத்தில் ஒரு பீட்ஸா ஹட்டில் டெலிவரி போயாகச் சேர்ந்திருந்தான் நிகேதன். அந்த வேலை மாலை ஐந்துக்குத் தொடங்கி இரவு பதினொன்று பன்னிரண்டு என்று பலமாதிரியும் முடிந்தது. காலையில் ராஜேந்திரனிடம் ட்ரைவர், மாலையில் டெலிவரி போய், யாராவது கேட்டுவந்தால் ஹயர் வேறு போய்வந்தான். ஓய்வு என்பதே இல்லை.

பக்கத்துவீட்டு ஷர்மிளா அக்கா புதுச் சீட்டுத் தொடங்குவதாக எதேற்சையாகச் சொல்லவும், நிகேதனிடம் கேட்டு தானும் ஒன்றுக்கு வருவதாகச் சொன்னாள் ஆரணி.

அமராவதி அம்மாவுக்கு அதில் மிகுந்த கோபம்.

“இப்பதான் ஆசைப்பட்ட கோயில், குளம் எண்டு போய்வாறோம். அது பிடிக்கேல்லையாமா அவளுக்கு?”

“வாற வருமானத்தை எல்லாம் செலவு செய்தா கயலுக்குக் கல்யாணம் கனவில மட்டும் தான் நடக்கும். பரவாயில்லையா?” பட்டென்று திருப்பிக் கேட்டாள் ஆரணி.

‘அண்ணா சுடிதார் வாங்கித் தாறீங்களா’, ‘ஹோட்டலுக்குப் போவோமா’, ‘எனக்குச் செலவுக்குத் தாறீங்களா’ என்று வாரத்துக்கு ஒரு செலவு கயலினி நிச்சயம் வைத்திருப்பாள். அமராவதி அம்மாவும் அப்படித்தான். நிகேதனும் அவர்கள் கேட்டால் என்ன இக்கட்டில் இருந்தாலும் கொடுத்துவிடுவான். தாய்க்கோ தங்கைக்கோ அவர்கள் கேட்டதைச் செய்துகொடுத்துவிட்டு வருகிற நிகேதனின் முகத்தில் தெரிகிற மலர்ச்சியையும் திருப்தியையும் பார்க்கிற ஆரணியால் அதைத் தடுக்கவும் முடிவதில்லை. ஆனால், இப்படியே போனால் அவர்கள் எங்கே முன்னேறுவது? ஆரம்பிக்காமலே இருக்கும் தாம்பத்தியத்தால் இரவுகளைக் கடக்கத் திணறும் நிகேதன் அவளின் வேதனையைப் பெருகிக்கொண்டே போனான். இதை யாரிடம் சொல்வது? அந்தக் கோபமெல்லாம் அவர் மீது பாய்ந்திருந்தது.

“என்ன சொல்லுறாள் எண்டு பாத்தியா? இதுதான் நீ கூட்டிக்கொண்டு வந்தவளின்ர லட்சணம். எங்க இருந்தடா பிடிச்சனி. கண்டறியாத பொம்பிளை!” என்றவர், விடுவிடு என்று அறைக்குள் சென்றுவிட, ஆரணியை முறைத்தான் நிகேதன்.

“கொஞ்சம் பாத்து கதைக்கமாட்டியா ஆரா?”

“பாத்துக் கதைச்சா கயலின்ர கல்யாணம் நடந்திடுமா? காசு இல்லாம கல்யாணமே நடக்காது எண்டு நீதானே சொன்னனீ நிக்கி. மறந்திட்டியா? இல்ல எங்கட கல்யாணத்துக்கு மட்டும் தான் அந்த ரூலா?”

பதில் சொல்லமுடியாத கேள்விகளைக் கேட்பதில் வல்லவள் ஆயிற்றே! சினம் பொங்க, “பேசாம போடி!” என்றான் தலையைப் பிடித்துக்கொண்டு.

“உள்ளதை சொன்னா என்ர வாய அடைக்கிறது.” அவனுக்குக் கேட்கும்படியே புறுபுறுத்துவிட்டுப் போய், இஞ்சித்துண்டு ஒன்றைத் தட்டிப்போட்டு பிளேன் டீயினைக் கொண்டுவந்து அவனிடம் நீட்டினாள்.

அவளை நிமிர்ந்து பார்த்தான் அவன். முகத்தைத் திருப்பிக்கொண்டாள் ஆரணி. “நீயும் உன்ர தேத்தண்ணியும்! வந்திட்டா முகத்தை நீட்டிப் பிடிச்சுக்கொண்டு!” எரிச்சலுடன் மொழிந்துவிட்டு எழுந்துபோனான், அவன்.

‘ஆடாதடா நிக்கி!’ என்று அவனை முறைத்தாலும், தன்னையே குட்டிக்கொண்டாள் ஆரணி. இன்றைக்கு அதிசயமாக வேலை குறைவாம் என்று நேரத்துக்கு வந்திருந்தான் அவன். அதற்குள் ஒரு சின்னச் சண்டையை உருவாக்கி, அவன் நிம்மதியைப் பறித்துவிட்டாள். ‘அறிவுகெட்ட ஆரா! மாமியாரோட சண்டை பிடிக்கிறதிலையே குறியா இருக்கிறத விட்டுட்டு கட்டினவனை கொஞ்சம் கவனி!’ என்று தன்னையே திட்டிக்கொண்டவள் வேகமாகக் கப்புடன் அறைக்குச் சென்றாள்.

அங்கே அவன் டெரசில் அமர்ந்து இருப்பது தெரிய, கப்பை வைத்துவிட்டு தானும் நெருங்கி அமர்ந்துகொண்டாள்.

“ஆரா கதைச்சது பிழைதான். நிக்கிக்கு கோவமா?”

அவனிடம் அசைவில்லை.

“ஆரா பாவமெல்லா. கொடுமைக்கார மாமியார், முறைக்கிற மச்சாள் எண்டு நாள் முழுக்கத் தனியா இருக்கிறவளோட நிக்கியும் கதைக்காம இருந்தா அவள் ஆரோடதான் கதைப்பாளாம்?” விளையாட்டுப்போல் சொன்னாலும் அதில் இருந்த உண்மையில் குரல் எழும்பாமல் போயிற்று அவளுக்கு.

மெல்ல அவளைத் தன் கைகளுக்குள் கொண்டுவந்தான் நிகேதன். அவளின் முகம் நிமிர்த்தி விழிகளுக்குள் கூர்ந்தான். காரணமற்ற அச்சமொன்று மனதினில் கலக்கத்தை உண்டாக்கியிருந்த போதிலும் சமாளிப்பாகப் புன்னகை புரிந்தாள் அவள். ஆனால், அந்த விழிகளில் தென்பட்ட அலைபாய்தலை கண்டுகொண்டான் அவளின் நாயகன்.

“தனியா இருக்க ஏலாம இருக்கா?”

அதைக் கேட்கையில் அவன் விழிகளில் படர்ந்திருந்த நேசத்தில் அவளுக்குக் கண்ணைக் கரித்துக்கொண்டு வந்தது. வேகமாகச் சமாளித்துக்கொண்டு கண்ணைச் சிமிட்டினாள்.

அவனுக்குச் சிரிப்பு வந்தது. “சரியான போக்கிரியடி நீ!” என்றான் அவளின் கன்னம் கிள்ளி.

சில நொடிகளை அவனது கைகளுக்குள்ளேயே கரைத்துவிட்டு, “நான் கதைக்கிறது பிழை எண்டால் சொல்லு இல்ல பேசு. ஆனா என்னோட கதைக்காம இருக்காத நிக்கி.” என்றாள் ஆரணி. அவள் முகத்தையே கணநேரம் பார்த்துவிட்டு, அவளின் இதழ்களைத் தன் உதடுகளினால் பேசவிடாமல் செய்தான் அவன்.

விழிகளை விரித்தாள் அவள். இப்போதெல்லாம் அவளோடு சரசமாட அவன் வருவதில்லை. கட்டுப்பாட்டை இழந்துவிடுவோம் என்கிற பயத்தில் விலகியே நிற்பான்.

“என்ன பார்வை?”

வேகமாகத் தானும் தன் இதழ்களை அவன் உதடுகளில் ஒற்றி எடுத்துவிட்டுச் சிரிப்புடன் புருவங்களை உயர்த்தினாள் அவள்.

பதிலுக்குப் பதில் கொடுக்காமல் விடவே மாட்டாள். அது எதுவா இருந்தாலும். மெதுவாக நகைத்தான் அவன். “நான் தந்தாத்தான் தருவியா?”

“தராட்டியும் தருவன்.”

“அப்ப தா.”

“நீ முதல் அறைக்க வாடா!”

அப்படியே அவளைத் தூக்கிக்கொண்டான் நிகேதன்.

—————–

வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்க என்று அவர்களின் வீட்டிலிருந்து சற்றுத் தள்ளியிருக்கும் குட்டி டவுனுக்கு நடந்து வந்திருந்தாள் ஆரணி. நான்கு கடை ஏறி இறங்கி, நல்லது கெட்டது ஆராய்ந்து பார்த்து வாங்குவதில், அவளுக்கு மிகுந்த பிடிப்பு உண்டாகியிருந்தது. நிகேதனுக்கு இதில் துளியும் விருப்பம் இல்லை. “தனியா போகாத. நான் வந்து வாங்கித் தாறன்.” என்பான். அவனுக்கு நேரமில்லை என்பதில் அவள் அதைக் காதில் விழுத்துவதில்லை.

இன்றும் இரண்டு கைகள் நிறைய மாலிகைச்சாமான்கள் வாங்கிக்கொண்டு நடந்து வந்துகொண்டிருந்தாள். சிவப்பு நிற மினி கூப்பர் ஒன்று அவளைக் கடந்துபோனது. அவளிடம் இருந்த அதே வகை. அதைப் பார்த்ததும் உதட்டினில் முறுவல் அரும்பிற்று. இப்படி, உச்சி வெயிலில் இரண்டு கைகளும் வெட்ட வெட்ட பைகளைச் சுமந்துகொண்டு நடப்போம் என்று அப்போதெல்லாம் நினைத்தும் பார்த்ததில்லை.

எப்போதும் இளைப்பாறும் பெருத்து வளர்ந்த ஆலமரத்தைக் கண்டதும், அதன்கீழ் இருந்த வாங்கிலில் சென்று அமர்ந்துகொண்டாள். அது ஒரு நர்சரி வளாகம். வீதியோரமாகவே அமைந்திருந்தது. கூடவே, ஒன்றிலிருந்து மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு டேக்கெயார் மாதிரி இணைத்து நடத்தினர்.

போதுமான பரப்பளவில் இடுப்பளவு உயரத்தில் சுற்றிவர கம்பி வேலி அமைத்திருந்தனர். அதில் வெளியே நின்று பார்க்கவே எல்லாம் தெரிந்தது. குழந்தைகளுக்குத் தேவையான சறுக்கி, ஊஞ்சல், மணலில் விளையாடும் திட்டி போன்றவை முன்னுக்கு இருக்க, ஓங்கி வளர்ந்திருந்த மரங்கள் அளவான வெயிலை மட்டுமே உள்ளே விட, அதன் கட்டடங்கள் பிண்ணுக்காக இருந்தது. எப்போதும் ஏதோ ஒரு வயதினர் வெளியே விளையாடிக்கொண்டு இருப்பதில் அதிலிருந்து இளைப்பாறியதும் ஆயிற்று, குழந்தைகளை வேடிக்கை பார்த்ததும் ஆயிற்று என்று, அந்த இடத்தை ஆரணி தெரிவு செய்து வைத்திருந்தாள்.

சும்மா பார்வையைச் சுழற்றியபோது வேலைக்கு ஆள் தேடுவதாக நோட்டிஸ் ஒட்டப்பட்டிருந்ததைக் கவனித்தாள். அனுபவம் இருந்தால் முன்னுரிமை உண்டாம். ஆனால் அவள் ஏன் முயற்சிக்கக் கூடாது? நொடியில் முடிவு செய்து அலுவலகம் சென்று விசாரித்தாள்.

பொறுப்பானவர் இல்லை என்று அடுத்தநாள் எட்டுமணிக்கு வரச்சொன்னார்கள். அன்று, நிகேதன் வர இரவு பதினொன்று தாண்டியிருந்தது. உணவை முடித்துக்கொண்டு சோர்வுடன் கட்டிலில் சரிந்து கண்ணை மூடியவனின் அருகில் சென்று அமர்ந்தாள், ஆரணி.

அந்தச் செய்கையிலேயே ஏதோ பேசப் பிரியப்படுகிறாள் என்று பிடிபட, “என்ன ஆரா?” என்றான் விழிகளைத் திறக்காமலேயே.

நடந்ததைச் சொல்லி, “நாளைக்குப் போய் வேலை கேக்கட்டா நிக்கி?” என்றாள் தயக்கத்துடன்.

அவன் விழிகளைத் திறந்து அவளைப் பார்த்தான். அவளால் அவன் பார்வையை எதிர்கொள்ள இயலவில்லை. “உனக்கும் என்னில இருந்த நம்பிக்கை போயிட்டுது போல.” என்றான் அவன்.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock