அவனை நன்றாக முறைத்துவிட்டு படக்கென்று முதுகுகாட்டிப் படுத்துக்கொண்டாள் ஆரணி. சற்றுநேரம் இருவரிடமும் எந்தச் சத்தமும் இல்லை. அந்த அமைதி கொடுமையாக இருக்க அவளைத் தன்புறமாகத் திருப்பினான் அவன். அவள் மறுக்க, “நிக்கின்ர ஆராக்கு கோபம் எல்லாம் பெருசா வரும்போல இருக்கே.” என்றான் அவளின் பாணியில்.
அவளின் கோபம் கரைந்தே போயிற்று. அவன்புறமாகத் திரும்பிப் படுத்தாள். “லூசன் மாதிரி கதைச்சா கோவம் இல்ல கொலையே செய்வாள் நிக்கின்ர ஆரா.” என்றாள் முறைப்புடன்.
“சரியான ராங்கியடி நீ!” என்று கொஞ்சிவிட்டு, “இப்ப வேலைக்கு என்ன அவசரம் ஆரா? அதுதான் நான் ஒண்டுக்கு ரெண்டு வேலைக்குப் போறேனே. ஹயரும் வருது தானே.” என்றான் அவன்.
அதனால் தான் நானும் உழைக்க நினைக்கிறேன் என்று சொல்லவில்லை அவள். ஒருவருக்கு இருவராக ஓடினால் தூரம் பாதியாகிவிடுமே. “சும்மா தானேடா வீட்டுல இருக்கிறன். அதைவிட அந்தக் குழந்தைகளைப் பாக்க ஆசையா இருக்கு. பொழுதும் போகும். சம்பளம் எண்டும் ஒண்டு வரும். கஷ்டமா இருந்தாலோ பிடிக்காட்டியோ நானே நிண்டுடுவன்(நின்றுவிடுவேன்). முந்தியாவது நீ நாலுமணிக்கு வந்திடுவாய். இப்ப முழுநாளும் நீயுமில்லாம தனியா கஷ்டமா இருக்கு நிக்ஸ்.” அவன் மறுத்துவிடாதபடிக்குக் கெஞ்சினாள் அவள்.
அவளின் நிலை புரிந்தது. ஆனாலும் அவனால் சம்மதிக்க முடியவில்லை. “என்ன நினைக்கிறாய் எண்டு சொன்னாத்தானே எனக்கும் தெரியும்.” என்றாள் மீண்டும்.
“சும்மாவே வசதியா வாழ்ந்தவளை இங்க கொண்டுவந்து, அடிப்படை வசதிகூட இல்லாம வச்சிருக்கிறன் எண்டு மனம் குத்துது ஆரா. இதுல வேலைக்கும் அனுப்புறதா எண்டு இருக்கு. உன்ர அப்பா கேள்விப்பட்டா என்னைப்பற்றி இன்னும் மோசமா நினைப்பார்.” அவளிடம் மட்டும் தானே அவனாலும் மனத்தைத் திறந்து கதைக்க முடியும். அதில் உள்ளதைச் சொன்னான்.
“அப்பிடிப் பாத்தா, என்னாலதான் நீ படிச்ச படிப்புக்கு வேலை தேடாம கிடைச்ச வேலைய செய்றாய். என்னால தான் உன்ர அண்ணா உன்னைப் பேசினவர்(திட்டினவர்). மாமிக்கு உன்னில நம்பிக்கை இல்லாம போனதும் என்னாலதான். இதையெல்லாத்தையும் நினைச்சு நானும் கவலைப்படவா?” என்று நியாயம் கேட்டவளை நன்றாக முறைத்தான் அவன்.
“உன்னோட கதைச்சு வெல்லவே ஏலாது!”
“கதையை மாத்தாத நிக்கி. நானும் நீயும் ஒண்டு எண்டு நினைச்சா இப்பிடியெல்லாம் கதைக்கமாட்டாய். ரெண்டுபேரும் தான் காதலிச்சோம். ரெண்டுபேரும்தான் கல்யாணமும் கட்டினோம். ரெண்டுபேரும் தான் ஒவ்வொரு பிரச்சனையையயும் சமாளிக்கிறோம். அதேமாதிரி ரெண்டுபேருமே உழைச்சா கெதியா முன்னுக்கு வரலாம் தானே. வேலை செய்றதுக்கு ஒரு வழி இருந்தும் வறட்டுப் பிடிவாதத்தால அதை வீணாக்கிறது முட்டாள்தனமா புத்திசாலித்தனமா எண்டு நீயே முடிவு செய்திட்டுச் சொல்லு. இனி நான் இதைப்பற்றிக் கதைக்கமாட்டன்.” என்றுவிட்டு மீண்டும் திரும்பிப் படுத்துக்கொண்டாள் அவள்.
மீண்டும் அமைதி. தான் சொன்னவற்றைப் பற்றி யோசிக்கிறான் என்று புரிந்தது. உறங்கிவிடாமல் அவனுடைய பதிலுக்காகக் காத்திருந்தாள் ஆரணி. சற்று நேரத்தில் மீண்டும் அவளை வளைத்தது அவன் கரங்கள். ரகசிய முறுவல் புரிந்தாள் ஆரணி. “என்னை விடு!” முறுக்கிக்கொண்டு கோபமாய்ச் சொன்னாள்.
“நாடகமாடாம வாடி கிட்ட!” என்றவன் ஒரே இழுவையில் அவளைத் தன் கைகளுக்குள் கொண்டுவந்திருந்தான். “இந்த வாய் எவ்வளவு கதைக்குது? கட்டின மனுசன் எண்டுற மரியாதை இல்லாம வாயடிக்கிற வாய வாயாலேயே தைக்கவேணும்.” என்றவன், சொன்னதைச் செய்தான்.
மறுக்கவில்லை அவள். அவன் கேட்டதைக் கொடுத்தாள். அவனது பிடரி மயிருக்குள் நுழைந்த கரங்கள் அவன் செய்கையில் உண்டான தன் விருப்பத்தையும் அவனுக்கு உணர்த்திற்று! அவளின் பித்தனாகிப்போனான் நிகேதன்.
இதழ்கள் பிரிந்த பொழுதினில் இதயங்கள் இரண்டறக் கலந்து போயிருந்தன. சுகமான அமைதி. “ஓம் எண்டு சொல்லு நிக்ஸ்.” கெஞ்சலாய் கேட்டாள் ஆரணி.
“சரி போ! ஆனா, என்ன சின்னப் பிரச்சனை எண்டாலும் சொல்லவேணும்.” என்கிற நிபந்தனையோடு சம்மதித்தான் அவன்.
அடுத்தநாள் காலையில் அவர்கள் சொன்ன நேரத்துக்குச் சரியாக அலுவலகத்தின் முன் காத்திருந்தாள் ஆரணி. அதன் நிறுவனர் அபிராமி அவளின் தகமைகளை ஆராய்ந்தார். வேலைக்கான அனுபவம் இல்லை, இப்போதுதான் திருமணமாகி இருக்கிறாள், குழந்தைகள் வளர்த்த அனுபவமும் இல்லை என்று வெகுவாகவே தயங்கினார்.
“மிஸ், அனுபவம் இல்லை தான். ஆனா, ஆரம்பம் எண்டு ஒண்டு இருந்தா தானே அனுபவம் வரும். நான் கம்பனில வேலை செய்து இருக்கிறன். அந்த அனுபவம் இருக்கு. ஒண்டு அல்லது ரெண்டு கிழமை இங்க நான் வேலை செய்றன். என்ர வேலையை பாத்திட்டு தாறதா இல்லையா எண்டு நீங்க டிசைட் பண்ணுங்கோ.” எப்படியாவது இந்த வேலை கிடைத்துவிட வேண்டும் என்பதில் அவசரமாகச் சொன்னாள்.
“எங்க.. எந்தக் கம்பனி?”
ஒருகணம் தயங்கி, “ஆரணி இண்டஸ்ட்ரீஸ்.” என்றாள் மெல்ல.
அவரின் புருவங்கள் உயர்ந்தது. மன்னாரிலேயே முன்னணியில் நிற்கும் போட் தயாரிக்கும் தொழிற்சாலை. அப்படியே மீன்வளங்கள் அனைத்துமே அவர்களின் கைவசம் தான். அங்கிருந்து இங்கு வரவேண்டிய அவசியம்?
“அந்த வேலைய ஏன் விட்டீங்க மிஸஸ் நிகேதன்?” அவளின் பெயர் ஆரணி என்பது அவரின் பொறியில் இன்னும் தட்டாததால் விசாரித்தார்.
“அது.. திருமணத்துக்குப்பிறகு விட்டுட்டன்.” மழுப்பலாகப் பதில் சொன்னாள் ஆரணி.
கணவன் சம்மதிக்கவில்லை போலும் என்று எண்ணியபடி அவளின் தகமைகள் மீது மீண்டும் பார்வையை ஓட்டியவரின் விழிகள் ‘ஆரணி நிகேதனில்’ நிலைத்து வேகமாக நிமிர்ந்தது.
“நீங்க? ஆரணி..”
“அது என்ர அப்பா திரு சத்தியநாதன்ர நிறுவனம்.”
சற்றுநேரம் புருவங்களைச் சுருக்கி யோசித்தார். “பெரிய இடத்து பிள்ளையா இருக்கிறீங்கம்மா. இங்க உங்களுக்குச் சிரமமா இருக்கும் எண்டு நினைக்கிறன்.” அவளைப்பற்றி அறிந்துகொண்டவருக்கு அவளோடு பேசும் பாணியே மாறிப்போயிருந்தது.
“நான் திருமணமாகி போயிருக்கிறது மத்தியதர குடும்பம் தான். அதைவிட என்னால ஏலுமா எண்டு பார்க்காமலேயே இல்லை எண்டு சொல்லுறது.. கவலையா இருக்கு மிஸ். என்னால முடியும் எண்டு நான் நம்புறன். ஒரு சான்ஸ் தந்து பார்க்க மாட்டீங்களா? உங்களுக்குத் திருப்தி இல்லாட்டி அப்ப சொல்லுங்க, நான் போறன்.” என்றாள் அவள்.
அவளின் திடமான பேச்சு, தெளிவான விளக்கம் எல்லாம் அவரையும் கவர்ந்திருந்தது.
எனவே, “ஓகே! நாளையில இருந்து வாங்கோ. இங்க நான் வேலைய மட்டும் தான் பாப்பன். பெரிய இடத்துப்பிள்ளை எண்டுறதுக்காக எந்தச் சலுகைகளையும் எதிர்பார்க்கக் கூடாது. ஒவ்வொரு தாய் தகப்பனும் எங்களை நம்பி தங்கட குழந்தைகளைத் தந்திட்டுப் போறீனம். அதால நிறைய கவனத்தோட நாங்க நடக்கவேணும். குழந்தை பராமரிப்பு எண்டுறது சாதாரண விசயம் இல்லை. பொறுமை வேணும். நிதானம் வேணும். அவசரப்படக்கூடாது. எந்த நேரமும் குழந்தைகளைக் கவனிக்க வேணும். கை நீட்டக் கூடாது. சினக்கக் கூடாது. இந்த வளாகத்துக்கச் சின்னப்பிழை நடந்தாலும் அதுக்கு நாங்கதான் பொறுப்பு. அதை நான் விரும்புறேல்ல. இந்த ரெண்டு கிழமைக்கும் பேமெண்ட் இல்ல. அதுக்குப் பிறகு தொடர்ந்து வேலை தந்தால் அதுக்குச் சம்பளம் இருக்கு.” என்று தெளிவாகத் தன் விதிகளைச் சொல்லிமுடித்தார் அவர்.
அடுத்தநாள் அதிகாலையிலேயே எழுந்து நிகேதனோடு அவளும் புறப்பட, “எங்க போறீங்கள் ரெண்டுபேரும்?” என்று கேட்டார், அமராவதி.
கணவன் மனைவி இருவரின் பார்வையும் சந்தித்து மீண்டது. “ஆரணி டவுனுக்க இருக்கிற நர்சரில வேலைக்குச் சேர்ந்து இருக்கிறாள் அம்மா. இண்டைக்குத்தான் முதல் நாள்.” என்றான் நிகேதன்.
அமராவதி அம்மாவின் முகம் கடுத்தது. “அத என்னட்ட சொல்லவேணும் எண்டு அவள் நினைக்கேல்ல பாத்தியா? இதுதான் உன்ர அம்மாக்கு இவள் தாற மரியாதை. இதுக்கு நீயும் உடந்தை. அதுசரி, நாங்க எல்லாம் இப்ப செல்லா காசுதானே. எங்களுக்கு மதிப்பும் இல்ல. மரியாதையும் இல்ல!” கண்கள் கலங்கச் சொன்னவர் எழுந்து அறைக்குள் போய்விட, ஆரணியை முறைத்தான் அவன்.
“அம்மாட்ட சொல்லவேணும் எண்டு உனக்குத் தெரியாதா ஆரா?”
“ஒரு சந்தோசமான விசயத்தை நீ ஆரிட்ட சொல்ல ஆசைப்படுவ நிக்கி? நீ சொல்லுறதை கேட்டதும் சந்தோசப்படுற மனுசரிட்ட தானே? பிறகு எப்பிடி நான் மாமிட்ட சொல்லுவன். முதல் எங்க அவா என்ர முகம் பாத்து கதைக்கிறவா?” என்று படபடத்தாள் அவள்.
“நீ சொல்லாதது பிழை. அதை நியாயப்படுத்த காரணத்தை அடுக்காத.” என்றான் அவன்.
முதன் முதலாக வேலைக்குப் போகப்போகிறோம் என்கிற உற்சாகம் அவளுக்கு வடிந்து போயிற்று.
காரில் சென்றுகொண்டிருந்த இருவர் இடையேயும் என்றும் இல்லாத அமைதி. அது ஆரணியின் மனதை இன்னுமே கனக்கச் செய்தது. அவள் சொல்லாமல் இருந்தது தவறுதான். ஆனால், எப்படியும் அவரிடம் தன்னால் சொல்லியிருக்க முடியும் என்று இப்போதும் தோன்றவில்லை. மாமி மருமகள் என்றாலே உருவாகிப்போகிற விலகலா அல்லது அவள் அவருக்கு மருமகள் ஆனவிதம் பிசகியதாலா, இல்லை அமராவதி அம்மாவுக்கு அவளைப் பிடிக்காமலே போயிற்றா எதுவோ ஒன்று அவரும் அவளுமாக இருக்கும் தனிமைகளில் அவளைப் பொருட்படுத்தவே மாட்டார். முகம் கொடுக்கவே மாட்டார். அப்படியானவரிடம் என்ன சொல்வது என்கிற வீம்பு அவளுக்கும் இருந்ததுதான்.
எது எப்படியானாலும் இதோ நர்சரி வாசல் வரை வந்துவிட்ட பிறகும் ஒரு வார்த்தை பேசாத அவன் கோபம், அவளின் தொண்டையை அடைக்கச் செய்தது.
காரை விட்டு இறங்கப்போனவளின் கையைப் பற்றினான் அவன். அவள் ஆர்வத்துடன் திரும்பிப் பார்த்தாள். “எதைப்பற்றியும் யோசிக்காம சந்தோசமா போ ஆரா. குழந்தைகளோட நல்லா விளையாடு. இது எங்கட குழந்தைகளை வளக்கிறதுக்கு நீ எடுக்கிற ட்ரெயினிங்.” என்றான் அவன் குறுஞ்சிரிப்புடன்.
அவளின் அத்தனை மனச் சிணுக்கங்களும் பனியாய் கரைந்து போயிற்று. “கள்ள படவா! இவ்வளவு நேரமா இந்தச் சிரிப்பை காட்டாம ஆராவா கொடுமை படுத்திட்டியேடா!” என்று அவன் தலையில் தட்டிவிட்டு உற்சாகம் துள்ள விடைபெற்றுக்கொண்டாள் அவள்.