அவள் ஆரணி 22

ஆர்.ஜே இண்டஸ்ட்ரீஸ்

அன்றுபோலவே இன்றும் கணவனும் மனைவியுமாக வந்தனர். பஸ்ஸில் அல்ல. அவர்களுக்கே சொந்தமான வேனில். ஆரணி பூரிப்புடன் நிகேதனைப் பார்த்து அழகாய்ச் சிரித்தாள். சொந்த வாகனத்துக்கு உரிமையாளனாக மாறிவிட்ட சந்தோசம் அவன் முகத்திலும்.

“ஹேய் லேடி கேர்ள்! வா வா வா!” அவர்களைக் கண்டதும் அன்றுபோலவே எழுந்துவந்து பாசமாக வரவேற்றார் ராஜேந்திரன். “நீயும் வா நிகேதன்!” அழைத்துச் சென்று அமரவைத்து, பிரகாஷ் மூலமாகப் பழச்சாறு தருவித்துக் கொடுத்தார்.

“பிறகு? எப்படிப் போகுது திருமண வாழ்க்கை?”

“சண்டையும் சச்சரவுமா நல்ல சந்தோசமா போகுது அங்கிள்.” நிகேதன் சிரித்துக்கொண்டு சொன்னான்.

இவன் இப்படியெல்லாம் அவரிடம் உரிமையாய் கதைப்பான் என்று நினைத்திராத ஆரணி, அளவான முறுவலோடு அவனை முறைத்தாள்.

எல்லாப்பக்கமும் கைவிடப்பட்ட நிலையில் நின்றவனுக்கு வேலை தந்தவர் என்பதால், அவரைத் தன் நலன்விரும்பியாகவே மனதில் வரித்திருந்தான், நிகேதன்.

“அப்ப சண்டையில ஆர் சட்டை கிழியும்?”

“என்ன அங்கிள். உங்களுக்கு என்னைவிட எக்ஸ்பீரியன்ஸ் கூட. பிறகும் இப்பிடிக் கேட்டா நான் என்ன சொல்ல?” என்றவனின் கையிலேயே ஒன்று போட்டாள் ஆரணி.

“இப்ப உங்கட கண்ணுக்கு முன்னுக்கே என்ன நடந்தது எண்டு பாத்தீங்க தானே.” என்று இன்னுமே வாரினான் நிகேதன்.

“பிறகு என்ன? இதே சந்தோசத்தோட அங்கிளுக்கு இன்னுமொரு சந்தோசமான செய்தியை சொல்லலாமே ஆரா? அதுக்குப்பிறகும் சத்யா எப்பிடிக் கோபத்தைப் பிடிச்சு வச்சிருக்கிறான் எண்டு பாக்கலாம்.” என்றார் ராஜேந்திரன்.

அவர் எதை மனதில் நிறுத்திக் கேட்கிறார் என்று உணர்ந்து முறுவலித்தாள் ஆரணி.

“சந்தோசமான செய்திதான் அங்கிள். ஆனா நீங்க நினைக்கிறது இல்ல.” என்றுவிட்டு, “நிக்கியும் எத்தனை நாளைக்குத்தான் உங்களுக்கு டிரைவராவே இருக்கிறது. அதுதான் நாங்களே ஒரு வேன் வாங்கிட்டோம் அங்கிள்.” இனிய குரலில் தெரிவித்தாள் ஆரணி.

அவரின் முகத்தில் மெல்லிய கருமையின் சாயல் படிந்தது. நிகேதனும், என்ன இவள் இப்படிக் கதைக்கிறாளே என்று அவளை அதிருப்தியாகப் பார்த்தான்.

“எனக்கும் அது கவலை தான் ஆரா. ஆனா சத்யா.” என்றவரை அதற்குமேல் பொய்யுரைக்க அனுமதிக்கவில்லை ஆரணி.

“பரவாயில்லை அங்கிள். எல்லாமே நல்லதுக்குத்தான் நடந்திருக்கு.” என்று இடையிட்டுச் சொல்லிவிட்டு, “நாங்க வந்ததே உங்களுக்கு நன்றி சொல்லத்தான் அங்கிள். நீங்க நிக்கியை டிரைவரா போட்டபடியாத்தான் அவன் எவ்வளவு நல்ல டிரைவர் எண்டு எங்களுக்குத் தெரிய வந்தது. இப்ப ஒரு வாகனத்துக்கு சொந்தக்காரனாவும் ஆகிட்டான். இல்லையோ காலத்துக்கும் ஒரு கம்பெனில மாதச் சம்பளத்துக்கு கூலிக்காரனா தான் இருந்திருப்பான்.” என்று புன்னகைத்தாள் அவள்.

முகத்தின் சிரிப்பு மறைய அவளைப் பார்த்தார் ராஜேந்திரன். இவளின் பேச்சில் நிகேதனுக்குப் பெரும் அதிர்ச்சி. “என்னடி கதைக்கிறாய்?” என்று அவள் புறமாகத் திரும்பி வாய்க்குள் அதட்டினான்.

“என்ன ஆரா எல்லாத்தையும் மறந்திட்டியாம்மா? உனக்குச் செய்ததைச் சொல்லிக்காட்ட எனக்கு விருப்பமில்லை. ஆனா, வேலை இல்லாம நிண்ட உன்ர புருசனுக்கு வேலை குடுத்து சாப்பாட்டுக்கு வழி செய்தவன் இந்த அங்கிள் தான்! அதுக்காக உன்ர அப்பா என்னோட எவ்வளவு சண்டை பிடிச்சவன் எண்டு எனக்குத்தான் தெரியும்!” மீசையில் மண் கிடப்பதை அறியாமல் தான் விழவேயில்லை என்று சாதிக்க முனைந்தார் அவர்.

அவளோ சிரித்தாள். “நான் ஏழை வீட்டு மருமகளா இருக்கலாம். ஆனா பணக்கார வீட்டு மகள் அங்கிள். சின்ன வயதில இருந்தே கம்பனி, பாக்டரி எல்லாம் பாத்தவள். நீங்க நினைச்சிருந்தா ஒரு நல்ல வேலை நிக்கிக்குக் குடுத்திருக்கலாம். ஆனாலும் குடுக்கேல்ல. காரணம் அப்பா இல்ல. அதுவும் தெரியும் எனக்கு.” என்றவள் அதற்குமேலும் அவரின் பேச்சைக் கேட்கப் பிடிக்காமல் எழுந்துகொண்டாள்.

“எதுக்காக இத நீங்க செய்தாலும் எங்களுக்கு நல்லதுதான் நடந்திருக்கு அங்கிள். அதுக்கு நன்றி. போயிட்டு வாரோம்!” என்றுவிட்டு நிகேதனோடு வெளியேறினாள்.

வேனில் ஏறி அமர்ந்ததும், “என்ன ஆரா இதெல்லாம்?” என்று, அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்டான் நிகேதன்.

“பின்ன வேற என்ன செய்யச் சொல்லுறாய்? அவர் செய்தது உனக்குத் தெரியுமா?” என்று கேட்டு நடந்ததைச் சொன்னாள் ஆரணி.

திகைப்புடன் அப்படியே அமர்ந்துவிட்டான் நிகேதன். ஒரு மனிதர் அவனை டிரைவராக்கிவிட்டு தனக்குள் சிரித்து மகிழ்ந்திருக்கிறார். அதை அறியாமல் பெரும் நன்றியுடனும் மதிப்புடனும் அவருடன் பழகியிருக்கிறான் அவன். அவனைப்பற்றி என்ன நினைத்திருப்பார்? ஏமாளி என்றா? அல்லது, கையாலாகாத்தவன் என்றா? நினைக்க நினைக்க அவன் கண்கள் கோபத்தில் சிவந்தது.

“இதை ஏன் இவ்வளவு நாளா நீ என்னட்ட சொல்லேல்ல?”
“சொல்லி இருந்தா அவரின்ர முகம் பாத்திருப்பியா? இல்ல, தொடர்ந்து வேலைக்குத்தான் போயிருப்பியா? அதுதான் சொல்ல இல்ல. அம்மா சொன்னதும் நேரா அவரிட்ட போய்க் கேக்கவேணும் மாதிரித்தான் இருந்தது. ஆனா, அவசரப்படுற விசயம் இல்ல இது. பொறுமையா இருந்து சாதிச்சு காட்டவேணும் எண்டுதான் இவ்வளவு நாளும் வாயை மூடிக்கொண்டு இருந்தன்.”

எதற்காக எப்பாடு பட்டேனும் ஒரு வாகனம் வாங்கிவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தாள் என்று இப்போது விளங்கியது அவனுக்கு. இருந்தாலும் அவன் அல்லவா இங்கே முட்டாளாகி இருக்கிறான். எல்லாவற்றையும் அறிந்திருந்தவள் கூட ஒரு வார்த்தையும் சொல்லவில்லையே.

சினத்துடன் வாகனத்தை சீறவிட்டான் நிகேதன்.

வீடு வந்தபின்னும் அவளுக்கு முகம் கொடுக்கவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டுப் பொறுமை பறக்க அவன் முன்னால் வந்து நின்றாள் ஆரணி.

“இப்ப என்ன கோபம் உனக்கு?”

“நீ ஏன் இதை முதலே என்னட்ட சொல்ல இல்ல? சொல்லியிருக்க அந்த நிமிசமே வேலையை விட்டுட்டு வேற வேலை தேடி இருப்பன்.”

“அதாலதான் சொல்ல இல்ல.”

“ஓ..! வேற வேலை தேடுறதுக்கு அந்தாளிட்டயே வேலை செய்து கேவலப்படுறது பெட்டர் எண்டு நினைச்சிட்டாய் போல!”

“இல்லடா நிக்கி..” என்றவளைப் பேசவிடாமல் கைநீட்டித் தடுத்தான், அவன்.

“இவ்வளவு நாளும் அந்தாள் என்னைக் கேவலமா நினைச்சிருக்கு. முட்டாளாக்கி இருக்கு. ஆனா நான் அங்கிள் அங்கிள் எண்டு தலைல வச்சு கொண்டாடி இருக்கிறன். எல்லாம் தெரிஞ்சும் நீயும் வாயை மூடிக்கொண்டு இருந்திருக்கிறாய்! இதுல நீங்க ரெண்டுபேரும் என்ன கதைக்கிறீங்க எண்டு ஒண்டும் விளங்காம லூசு மாதிரி முழிச்சுக்கொண்டு நிக்கிறன் நான். அவரிட்ட போக முதலாவது நீ எனக்குச் சொல்லியிருக்கலாம்.” என்றுவிட்டு, அதற்குமேல் அங்கு நில்லாமல் அறைக்குள் புகுந்துகொண்டான் நிகேதன்.

திகைத்து நின்றுவிட்டாள் ஆரணி. இந்தக் கோணத்தில் அவள் சிந்திக்கத் தவறியிருந்தாள் தான்! ஆயினும், பேசிக்கொண்டு இருக்கையில் இதென்ன முகத்தைத் திருப்பிக்கொண்டு போவது? பின்னாலேயே போய்ச் சண்டை பிடிக்கவேண்டும் போலொரு உந்துதல் வந்தாலும் அடக்கிக்கொண்டாள்.

மாலையும் ஆனது. இரவு உணவை முடித்துவிட்டு, “சாப்பாடு ரெடி!” என்றாள்.

தொலைக்காட்சியின் முன்னே குடியிருந்தவன் எழுந்துவர, போட்டுக்கொடுத்தாள்.

அப்போதும் தன்பாட்டுக்கு உண்டுவிட்டுப் போய்ப் படுத்துக்கொண்டான் அவன். இடையில் சுகிர்தனோடு கார்மெண்ட்ஸ் ட்ரிப் பற்றிப் பேசுவது கேட்டது. நாளையில் இருந்தே ஆரம்பிக்கிறான் என்று விளங்கிக்கொண்டாள், ஆரணி. அதையாவது சொல்ல வருவான் என்று நினைக்க, அதற்கும் வரவில்லை.

‘அவ்வளவு கோவமாடா! பாப்பம் நானா நீயா எண்டு!’

சமையலறையை ஒதுக்கிவிட்டு இரவு அறைக்குள் வந்தபோதும் படுத்திருந்தவன் இவளைத் திரும்பியும் பார்த்தான் இல்லை. கடுப்புடன் முதுகு காட்டிப் படுத்துக்கொண்டாள் ஆரணி. அப்போதும், அங்கிருந்து எந்தச் சமாதானக்கொடியும் பறக்கவில்லை.

ஆரணிக்குத்தான் அவனின் கையணைப்பு இல்லாமல் உறக்கம் வருவேனா என்று இருந்தது. புரண்டு புரண்டு படுத்து, ‘நான் உறங்காமல் இருக்கிறேன். என்னைச் சமாதானப்படுத்துடா’ என்று சமிக்ஞையும் கொடுத்துப்பார்த்தாள். ஒரு கட்டத்தில் முடியாமல் தலையைத் தூக்கிப் பார்க்க, அவன் நெஞ்சு சீராக ஏறி இறங்கிக் கொண்டிருந்தது.

‘அடப்பாவி! என்னை அம்போ எண்டு விட்டுட்டியேடா!’ என்றவளுக்குத் தன் ரோசத்தைக் கைவிட முடியவில்லை. மெல்ல நகர்ந்துவந்து அவனை உரசும் தூரத்தில் உரசாமல் படுத்துக்கொண்டாள். அதன்பிறகுதான் உறக்கமே வந்தது.

காலையில் கைப்பேசியின் அலாரத்தில் கண்விழித்தபோது, நிகேதனின் கையணைப்புக்குள் இருந்தாள், ஆரணி.

‘ஆகா! நித்திரையில ரோசத்தைக் கைவிட்டுட்டம் போலவே!’ மெதுவாக அவன் கைகளில் இருந்து நழுவி வந்தவளுக்கு இப்போது கோபம் மருந்துக்கும் இல்லை. ஆனாலும், ஒரு ஊடல். இன்னும் சற்று நேரத்தில் கார்மெண்ட்ஸ் ட்ரிப்புக்காக அவனும் எழுந்துவிடுவான் என்று தெரிந்து வேகமாகக் காலை உணவைத் தயாரித்தாள்.

அவள் எண்ணியதுபோலவே எழுந்து குளித்து உடைமாற்றிக்கொண்டு வந்தான், அவன். “ஆரா, வெளிக்கிட்டு நில்லு, கார்மெண்ட்ஸ் போயிட்டு வந்து நானே கொண்டுபோய் விடுறன்!” புது வேலையின் முதல் நாள் பரபரப்பில் நேற்றைய சண்டையை மறந்தே போயிருந்தான், அவன்.

‘பெரிய இவன் மாதிரி நேற்று முழுக்கக் கோபம் சாதிச்சுப்போட்டு இப்ப ஒண்டுமே நடக்காத மாதிரி நடிக்கிறான்!’ அவன் சொன்னது காதிலேயே விழாதவள் போன்று தண்ணீரைக் கொண்டுவந்து வைத்தாள், ஆரணி.

“நீயும் வா சாப்பிட!” அதற்குள் சுகிர்தன் அழைத்தான். “இன்னும் அஞ்சு நிமிசத்துல வந்திடுவன்.” என்று அவனுக்குச் சொல்லிவிட்டு வேகமாய் உணவை முடித்தான், அவன்.

“அம்மாவும் இண்டைக்கு வருவா ஆரா.” ஷூவை அணிந்து வேன் திறப்பை எடுத்துக்கொண்டு வேகமாக வாசலை நோக்கி நடந்தவன், அப்போதுதான் நேற்றைய சண்டை நினைவில் வர சட்டென்று நின்றான்.

இன்னுமே அவள் இழுத்துப் பிடித்து வைத்துக்கொண்டிருந்த கோபத்தைக் கண்டு அவன் உதட்டினில் முறுவல் அரும்பிற்று! அவளின் கரம்பற்றி இழுத்துத் தன்னிடம் கொண்டுவந்தான்.

“நிக்கின்ர ஆரா கோவமா இருக்கிறாள் போலவே?” அவள் கன்னம் வருடி வினவினான்.

அவனை ஒரு முறைப்பு முறைத்துவிட்டு அவள் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். அவளின் தாடையைப் பற்றித் தன்னைப் பார்க்க வைத்தான் அவன். “இந்த வாய் கதைக்காட்டி, சிரிக்காட்டி, சண்டை பிடிக்காட்டி நிக்கிக்கு என்னவோ குறைஞ்ச மாதிரி இருக்கே. என்ன செய்வம்?”

அப்போதும் அவனை முறைத்துவிட்டு பார்வையைத் திருப்பிக்கொண்டாள் ஆரணி.

“இந்த வாயை இப்ப கதைக்க வைப்பமா இல்ல காதலிக்க வைப்பமா?” அவள் உதட்டினை வருடிவிட்டபடி யோசித்தான். “கதைக்க வைக்க நேரமில்லை. காதலிக்க வைப்பம்!” என்றவனின் உதடுகள் தன் இணையினை முழுமையாகத் தழுவியது.

இடையில் சுகிர்தனின் அழைப்பு வர, வேகமாய் அவளை விடுவித்துவிட்டு, அதைவிட வேகமாய் இன்னுமொரு அவசர முத்தமொன்றைப் பதித்துவிட்டு ஓடினான், அவன்.

உதட்டுக்குள் அடக்கிய சிரிப்புடன், வாகனத்தை லாவகமாக எடுத்துக்கொண்டு பற்கள் தெரியச் சிரித்தபடி அவளுக்குக் கையை ஆட்டிவிட்டுப் போகும் அவனை ரசித்துக்கொண்டு நின்றாள் ஆரணி.

அதன்பிறகான அவர்களின் வாழ்க்கையில் ஏறுமுகம் தான். வீட்டுச் செலவையும் சீட்டுக் கட்டுவதையும் ஆரணி பார்த்துக்கொண்டாள். காலையும் மாலையும் கார்மெண்ட்ஸ் ட்ரிப். இதற்கிடையில் தெரிந்தவர் அறிந்தவருக்கு டாக்சியாகவும் பயன்படுத்திக்கொண்டனர். ஒரு பள்ளிக்கூட ட்ரிப் கூட பிடித்துக்கொண்டனர். கூடவே, விமானநிலைய ஹயர், கோவில் குளங்களுக்குப் போவதற்கு, விசேசங்களுக்கு என்று எதற்கு கேட்டாலும் மறுக்காமல் ஓடி உழைத்தான் நிகேதன். நிகேதன் ஒரு ஹயரில் நின்றால் அடுத்து வருவதைச் சுகிர்தன் எடுத்துக்கொண்டான், அப்படியே சுகிர்தன் ஹயரில் இருந்தால் அவனுக்கு வருவதை இவன் எடுத்துக்கொண்டான்.

மாதா மாதம் லோன் கட்டியும் கணிசமான தொகை கையில் மிஞ்சியது. ஆனாலும், ஒருநாள் ஹயர் இல்லாவிட்டாலும் ‘வீட்டில சும்மா இருக்கிறன்’ என்று நிகேதன் புலம்பியதில், அவளின் சென்டரிலேயே ஆட்களைப் பிடித்தாள், ஆரணி.

முதல் வேலையாக அவளின் கைபேசி நம்பரைக் கொடுத்து ‘என். எஸ். டிராவல்ஸ்’ என்று பெயரிட்டு விசிட்டிங் கார்ட் அடித்து எல்லோருக்கும் கொடுத்தாள்.

இரண்டு வருடங்கள் எப்படி ஓடியது என்றில்லாமல் ஓடியே போயிற்று! அதற்குள் தோள் கொடுக்கத் தோழனாய் சுகிர்தனும் இருந்ததில் அவர்களுக்குச் சொந்தமாக இன்னும் இரண்டு வேனும் சேர்ந்திருந்தது.

நிகேதன் தன் தமையனிடம் சொன்னதுபோலவே, இரண்டு வருட முடிவில் கயலினிக்குத் திருமணத்துக்குப் பார்க்கச் சொன்னான்.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock