அடுத்தநாள் காலை கல்லூரிக்குச் சென்றவளை அழைத்தான் கௌசிகன்.
“என்னோட கொஞ்சம் வாறியா? கதைக்கோணும்.” அழைப்பைப் போல் தோற்றமளித்தாலும் அதன்பின்னே மறைந்து கிடந்தது அவனுடைய உத்தரவே!
ஏற்கனவே திருமணத்துக்குக் கேட்டான் என்பதில் அவன் முகத்தைக் கூடப் பார்க்கப் பிடிக்காத அளவில் வெறுப்புற்று இருந்தவள் அந்த உத்தரவில் வெகுண்டாள்.
முன்னரைப் போன்று பிடிக்காவிட்டாலும் நிர்வாகியாயிற்றே என்று பொறுமையை இழுத்துப் பிடித்துப் பதில் சொல்லக்கூட முடியவில்லை. அந்தளவில் என்னை மணக்கக் கேட்க எவ்வளவு தைரியம் இவனுக்கு என்று மனம் புகைந்துகொண்டே இருந்தது.
அதில், “உங்களோட கதைக்கிறதுக்கு எனக்கு ஒண்டுமில்லை!” என்றுவிட்டு நடந்தாள்.
“நடக்கப்போற கல்யாணத்தைப் பற்றிக் கதைக்கிறதுக்குக் கூடவா உன்னட்ட ஒண்டும் இல்லை?”
நடக்கப்போற கல்யாணமாம்! அந்தளவுக்கு உறுதியா? சீற்றம் பெருக, “ஆருக்கு ஆரோட நடக்கப்போகுது?” நிறுத்தி நிதானமாகக் கேட்டாள் அவள்.
“உனக்கு என்னோட!” அமர்த்தலாகச் சொன்னான் அவன்.
“நல்ல கற்பனை!”
அவன் விழிகள் இடுங்கின!
“எப்பிடி? எனக்கு உங்களோட கல்யாணமா? நேர்மையும் நியாயமும் தவறாம நடக்கோணும் எண்டு வாழுற ஒரு டீச்சர் நான். எனக்குத் துணையா வாறவரும் நியாயவாதியா, நேர்மையாளனா இருக்கோணும். இதெல்லாம் என்ன எண்டு கூடத் தெரியாத உங்களை மணக்கச் சம்மதிப்பேனா? கொஞ்சமாவது யோசிச்சுக் கேக்க மாட்டீங்களா? உங்களுக்கு வேணுமெண்டால் எங்கட சம்மந்தம் கிடைக்காத ஒண்டா இருக்கலாம். ஆனா எங்களுக்கு நீங்க ‘வேண்டவே வேண்டாம் சாமி’ எண்டுற சம்மந்தம். இனி கனவில கூட இந்தக் கருமத்தை எல்லாம் நினைக்காதீங்க!” இது பள்ளிக்கூடம், கட்டுப்பாட்டை இழந்துவிடக் கூடாது என்பதெல்லாம் ஒரு வினாடி மறந்துவிட, நேற்றிலிருந்து அவளின் நிம்மதியைப் பறித்திருந்த மனக்கொதிப்பை அவன் முகத்திலேயே கொட்டிவிட்டு அங்கிருந்து அகன்றுபோனாள் அவள்.
அப்போதுதான் மனது கொஞ்சமேனும் சமாதானமாயிற்று! மரியாதையாக விருப்பமில்லை என்று சொன்னபிறகும் என்னவோ கல்யாணம் நிச்சயமே ஆனதுபோல் பேசினால் வாங்கிக் கட்டத்தான் வேண்டும்! எவ்வளவுக்கு என்றுதான் பொறுமையாகப் போவது?
தாடை இறுக அவளையே பார்த்துக்கொண்டு நின்றான் அவன்.
அதன் பிரதிபலிப்பாக மத்தியான இடைவேளையின்போது அவன் முன்னே அமர்ந்திருந்தாள் பிரமிளா. அமர வைத்திருந்தான். அதுவும் திருநாவுக்கரசு மூலமாக நிர்வாகியாக அழைப்பு விடுத்திருந்தான்!
மீண்டும் திருமணப் பேச்சை ஆரம்பிக்கட்டும் நன்றாகக் கொடுக்கிறேன் என்று கருவிக்கொண்டு அவள் இருக்க, அவனோ கல்லூரியைப் பற்றி விசாரித்துக்கொண்டிருந்தான்.
“உன்ர அப்பா அந்த பில்டிங்க எப்பிடிக் கட்டினவர்?”
“பழைய மாணவர்களிட்ட காசு சேர்த்து.”
“லாப்?”
“அது அமெரிக்க மிஷன் குடுத்த காசும், இன்னும் ஆரோ அப்பான்ர பிரெண்டும் உதவி செய்தவர்.”
“ஆர் அது? உனக்குத் தெரியுமா?”
“நான் இந்தப் பள்ளிக்கூடத்தின்ர பழைய அதிபரின் மகள்தான். அதுக்காக எல்லாம் எனக்குத் தெரியும் எண்டு இல்ல. அதைவிட அப்பா எதையுமே இல்லீகலா செய்யேல்ல. எல்லாமே ரெக்கோர்ட்ல இருக்கும். இருக்கிற கோப்புகள்(பைல்ஸ்) எல்லாத்தையும் ஒழுங்கா பாத்தாலே விளங்கும். அப்பா தெளிவாத்தான் எல்லாம் நோட் செய்து வச்சிருப்பார். அப்பிடியும் விளங்காட்டி இதையெல்லாம் என்னைக் கேக்கிறதை விடத் திருநாவுக்கரசு சேரை கேக்கிறதுதான் சரியா இருக்கும்.” பொறுமையை இழுத்துப்பிடித்துக்கொண்டு சொன்னாள்.
“விளையாட்டு மைதானம் கட்ட ஒதுக்கியிருக்கிற அந்தக் காணி?”
“அது பள்ளிக்கூடக் காணி.” அவன் முகம் பாராமல் பதிலளித்தாள் அவள்.
“அது நீங்க குடுத்ததுக்குப் பிறகு. அதுக்கு முதல்?”
எதற்கு இதையெல்லாம் குடைந்துகொண்டிருக்கிறான்? அந்தக் காணிக்கு அவர்கள் என்ன காசா கேட்டார்கள். விடாமல் கேள்விகளால் துளைத்தவன் மீது மிகுந்த எரிச்சலுற்றாள் பிரமிளா.
“எங்கட காணியைப் பள்ளிக்கூடத்துக்குத் தேவை எண்டு அப்பா அன்பளிப்பா குடுத்தவர்.” என்று சிடுசிடுத்தாள்.
“அப்பா குடுத்தவரா இல்ல நீ குடுத்தியா?”
“ஆர் குடுத்தா என்ன? அது இப்ப பள்ளிக்கூடத்துக்குச் சொந்தமான காணி! அவ்வளவுதான்!”
அவளுக்காக அவளின் அப்பா வாங்கிய சீதனக்காணி. அதை அவள்தான் அன்பளிப்பாகக் கொடுத்தாள். அவளுடைய கல்லூரிக்கு ஆசையாக முன்வந்து அவள் செய்த ஒன்று. அதை இவனைப் போன்ற மனிதர்களிடம் பகிர மனமில்லை.
இப்படி, அவளை வைத்துக் கேள்வியாகக் கேட்டுக்கொண்டிருக்க, அவளுக்கு அழைப்பு வந்தது. கைப்பேசி அதிர்ந்துகொண்டு இருந்தாலும் உணர்ந்தவள் காட்டிக்கொள்ளாமல் அமர்ந்திருக்க, “எடுத்துக் கதை. ஏதும் முக்கியமான அலுவலா இருக்கப்போகுது.” என்றான் அவன் கண்கள் பளபளக்க.
அப்படிச் சொன்னது சந்தேகத்தைத் தூண்ட எடுத்துக் காதுக்குள் கொடுத்தாள்.
“தங்கச்சி, நான் ரஜீவன்ர அம்மா கதைக்கிறன். தம்பிய கடத்தி வச்சிருக்கினமாம். அவனை விடவேணும் எண்டால் நீ என்னவோ சொல்லோணுமாம். உன்ன கெஞ்சிக் கேக்கிறன்மா, என்ர பிள்ளையை விட்டுடச் சொல்லு! அவனுக்குப் படிப்புச் சொல்லிக்கொடுத்து ஆளாக்கினது உங்கட குடும்பம்தான். அதுக்கெண்டு இன்னும் எவ்வளவுக்கு அவனைச் சித்திரவதை செய்வீங்க? எனக்கு இருக்கிறது அவன் ஒருத்தன்தான். உன்னில பாசம் வச்ச பாவத்துக்கு அவனை எனக்கு இல்லாம ஆக்கிப்போடாத. நீ நல்லாருப்பாய். அவங்கள் கேக்கிறதைச் சொல்லி என்ர பிள்ளையை எனக்குத் தாம்மா!” என்று அந்தப்பக்கமிருந்து அழுதார் அவர்.
ஒருகணம் திகைத்துப்போனாள் அவள். என்ன நடக்கிறது? என்ன சொல்கிறார் அவர்? ஒன்றும் புரிய மறுத்தது. முன்னால் இருப்பவனைப் பார்த்தாள். அவன் ஆர்வமாக இவளையே பார்த்துக்கொண்டு இருந்தான்.
வேகமாகத் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு, “சரியம்மா. நான் அலுவலா நிக்கிறன். கொஞ்சத்தில(கொஞ்ச நேரத்தில) திரும்ப எடுக்கிறன்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
மனம் பதறிக்கொண்டிருந்தாலும் நிமிர்ந்து, “வேற என்ன தெரியவேணும் உங்களுக்கு?” என்றாள்.
அவளின் நிதானமான கேள்வியில் அவன் மிகுந்த வியப்புடன் விழிகளை விரித்தான்.
“தைரியசாலி மட்டுமில்ல நீ மனத்திடமானவளும்தான். உன்ன நான் தவறவிடலாமா?” என்றவனின் பார்வை இப்போது அவளை வருடியது.
அது பிடிக்காமல் முகத்தைச் சுளித்தாள் பிரமிளா. ஆனால், இதே வார்த்தைகளை இவன் முதலும் சொல்லியிருக்கிறான்! ஆக, இவன் நேற்று இன்று முடிவு செய்து திருமணத்துக்குக் கேட்கவில்லை. முதலே திட்டமிட்டிருக்கிறான். மனத்தில் இனம்புரியாத பயநடுக்கம் ஓடியது.
“என்ன சொல்லுறீங்க? எனக்கு ஒண்டும் விளங்கேல்ல.” எதையும் காட்டிக்கொள்ளாமல் கேட்டாள்.
அவன் புன்னகை விரிந்தது. நாற்காலியில் நன்றாகச் சாய்ந்துகொண்டு கேட்டான். “என்னவாம் ரஜீவன்ர அம்மா?”
‘ஆக இவனேதான். இந்த நாசக்காரனேதான்! அதுசரி இந்த ஊருக்க கடத்தல் அடிதடி எல்லாம் இவனைத் தவிர வேற ஆர் செய்வீனம்.’
“எதுக்கு அவனைக் கடத்தி வச்சிருக்கிறீங்க?” அவளும் நேரடியாகவே விசயத்துக்கு வந்தாள்.
“என்னைக் கட்டுறதுக்கு ஓம் எண்டு சொல்லு, விடுறன்.”
திடுக்கிட்டாள் பிரமிளா. அடுத்த மிரட்டல்!
“அதுக்கும் அவனுக்கும் என்ன சம்மந்தம்?”
“உன்ர குடும்பத்தில ஆரைத் தூக்கலாம் எண்டு பாத்தன். உன்ர அம்மா அப்பாவைத் தூக்கினா நாளைக்கு அது எனக்கு அவமானம். என்ன இருந்தாலும் என்ர மாமா மாமிக்கு எண்டு ஒரு கௌரவம் இருக்கோணும். உன்ர தங்கச்சி படிக்கிற சின்ன பிள்ளை. உன்ன… வேற எவனையும் தூக்க விடமாட்டன். நானே தூக்கோணும். வேற ஆர் எண்டு யோசிச்சதில அகப்பட்டவன் அவன். உன்ர விசுவாசி. நீ சம்மதிக்கிற வரை அவன் வரமாட்டான்.”
இதென்ன அநியாயம் என்று மனம் வெகுண்டாலும் நிதானம் இழக்கவில்லை அவள். அவளின் பதட்டம் அவனின் வெற்றியல்லவா!
“நல்லது. எவ்வளவு காலத்துக்கு எண்டாலும் வச்சிருங்கோ. அவன் ஒரு ஆம்பிளை. எப்பிடியும் சமாளிப்பான். இந்தக் கடத்தலுக்குப் பயந்து நான் அடிபணிய மாட்டன்.” என்றவள் வெளியேறுவதற்காக எழுந்துகொள்ள, “அவன் ஆம்பிளை சரி. அவனுக்கு ஒரு தங்கச்சியும் இருக்குத்தானே.” என்று அவன் சொல்லி முடிக்க முதலே, “என்ன உளர்றீங்க?” என்று சீறினாள் அவள்.
“பெண்களோட மானம் உங்களுக்கு அவ்வளவு சீப்பா?”
“என்ன விடு. உனக்கு அது சீப் இல்லத்தானே. நீ அந்த மானத்தோட விளையாடாம இருந்தா சரி. இல்லாட்டி எனக்கும் உனக்கும் வித்தியாசம் இல்லாம போய்டும்.” மிகவும் இலகுவாகச் சொன்னான் அவன்.
“என்ன மாதிரியான மனுசன் நீங்க? அடுத்தவன் வீட்டு பொம்பிளைகளுக்கும் ஒரு மனம் இருக்கும், அந்த மனதிலையும் விருப்பு வெறுப்பு இருக்கும் எண்டு யோசிக்கவே மாட்டீங்களா? இப்படியான உங்களை மணக்கச் சம்மதிப்பேன் எண்டு எப்பிடி நினைச்சீங்க?”
அவன் பதில் சொல்லாமல் அவளையே பார்த்திருந்தான்.
“மரியாதையா அவனை விடுங்க! திரும்பவும் அடிச்சுச் சித்திரவதை செய்யாதீங்க!”
“அது உன்ர கைலதான் இருக்கு!”
அப்படிச் சொன்னவனை மிகுந்த வெறுப்புடன் நோக்கினாள் பிரமிளா.
“செய்யமாட்டன் எண்டு நினைக்காத. திரும்பவும் என்ர தங்கச்சிக்கு முன்னால போய் நிண்டவனுக்குத் தண்டனை வேண்டாமா?” என்றதும் அதிர்ந்து நோக்கினாள் அவள்.
“என்ன பாக்கிறாய். அவன் போன நிமிசமே எனக்கு நியூஸ் வந்திட்டுது. ஆனாலும் ஏன் விட்டு வச்சனான் எண்டு நினைக்கிறாய். இப்பிடி அவன் எனக்குத் தேவைப்படுவான் எண்டு தெரிஞ்சுதான்.”
கடவுளே! அனைத்தையும் முதலே திட்டமிட்டுக் கவனமாகக் காய் நகர்த்தியிருக்கிறான். இவன் உண்மையிலேயே பயங்கரமானவன்தான்.
“ஆனா ஒண்டு! நான் நியாயவான். விடிய(காலை) உன்னைக் கதைக்கக் கூப்பிட்டனான். நீ வந்திருந்தா அவனைத் தூக்கியிருக்க மாட்டன். கதைக்க வராம இருந்து என்னைச் செய்ய வச்சது நீதான். அதால இதுக்கு முழுக்க முழுக்க நீதான் காரணம்!” என்றவனை வெறித்தாள் பிரமிளா.