“அவனுக்கான தண்டனை குடுபட்டுக்கொண்டேதான் இருக்கு! எப்ப நீ பதில் சொல்லுறியோ அப்ப நிக்கும்!”
“இதுக்கு நீ கட்டாயம் அனுபவிப்பாய்.! மனம் நொந்து சொல்லுறன்! உண்மையான ஆம்பிளை தனக்குச் சமமான ஒருத்தனோடதான் மோதுவான். ஏழை பாலைகளிட்ட தன்ர வீரத்தைக் காட்டமாட்டான். ஒரு பொம்பிளையை வலுக்கட்டாயத்தில கல்யாணம் கட்டுற கேவலமான நிலைலதான் நீ இருக்கிறியா?”
அவளின் எந்தக் கேள்வியும் அவனைச் சற்றும் பாதிக்கவில்லை. “நீ நேரத்தை இழுக்க இழுக்க அவன் அங்க அனுபவிக்கிற துன்பம் கூடிக்கொண்டே போகும்!” என்றான் இலகுவாக.
அவளுக்கோ அவனை அடித்து நொருக்கலாமா என்கிற அளவுக்கு ஆத்திரம் பொங்கியது. “இவ்வளவு சொல்லுறன் உனக்கு மண்டையில உரைக்கவே இல்லையா? உன்னை எனக்குப் பிடிக்கேல்ல பிடிக்கேல்ல பிடிக்கேல்ல!” என்று கிட்டத்தட்டக் கத்தினாள் அவள்.
அவன் அசையவே இல்லை. “உனக்கு நேரடியா காட்டினாத்தான் விளங்கும் போல! இந்தமுறை லைவ்வா பார்!” என்றவன் அவனுடைய கைப்பேசியில் எதையோ அழுத்திவிட்டுத் திருப்பி அவளிடம் காட்டினான்.
பார்த்தவளின் விழிகள் கலங்கிப் போயிற்று! ஒரு அறையில் அன்றைக்குப் போலவே அடி வாங்கிய நிலையில் கைகள் இரண்டும் கட்டப்பட்டுக் கிடந்தான் ரஜீவன். அவளுக்காக அந்தச் சின்ன பெடியன் எவ்வளவைத்தான் தாங்குவான்?
“ஏன் இப்படிச் செய்றாய்? எனக்கு உன்னைப் பிடிக்காது. உன்னில துளியும் மதிப்பு இல்ல. நானும் நீயும் வாழ்க்கையில இணைஞ்சா அது ரெண்டு பேருக்கும் நரகமாத்தான் இருக்கும். உனக்கும் சேர்த்துத்தான் சொல்லுறன். தயவு செய்து அவனை விட்டுடு. அப்பிடியே என்னையும் விட்டுடு.” கிட்டத்தட்டக் கெஞ்சினாள் அவள்.
“மரியாதை மரியாதை எண்டு மல்லுக்கட்டினவள் நல்ல மரியாதை தாறாய்!” என்றான் அவன்.
ஒரு நிமிடம் நிதானித்தாள் அவள். “சொறி!” என்றுவிட்டு, “உங்களுக்கு விளங்கேல்லையா? உங்களுக்கும் எனக்கும் என்ன ஒத்துப் போயிருக்கு? ஒரு நட்பு? ஒரு புரிந்துணர்வு? ஒரு மரியாதை? எதுவுமே இல்ல. இந்தப் பள்ளிக்கூடத்தில உங்களை அப்பப்ப பாக்கிறதையே என்னால சகிக்க முடியேல்ல. அப்பிடி இருக்க, அடி மனதில இருந்து வெறுக்கிற ஒருத்தனோட ஒரே வீட்டுல எப்பிடி வாழுவன்? எப்பிடிக் குடும்பம் நடத்துவன்? நரகம் அது! இதுக்கு நீங்க என்ர கழுத்த நெறிச்சு கொன்று போடலாம்!” என்றவளை முகம் இறுக வெறித்தான் அவன்.
அதுவும் சில நொடிகள்தான்! பின் பேசி முடித்தாயிற்று என்பதுபோல் தன் இருக்கையிலிருந்து எழுந்துகொண்டான்.
“இண்டைக்குப் பள்ளிக்கூடம் முடியிற வரைக்கும்தான் உனக்கு டைம். அதுக்கிடையில நீ சம்மதம் எண்டு எனக்குச் சொல்லோணும். இல்லையோ அதுக்குப் பிறகு நீ சம்மதிக்காட்டியும் திருமணம் நடக்குமே தவிர அவன் திரும்பி வரமாட்டான்! எப்பவும்!” என்றவன் அங்கிருந்து வெளியேறியும் இருந்தான்.
திக்பிரம்மை பிடித்தவள் போன்று அப்படியே சமைந்திருந்தாள் பிரமிளா. மனம் மட்டும் கடவுளே கடவுளே என்று அந்தரித்து அரற்றிக்கொண்டிருந்தது.
இப்படி அமர்ந்திருக்கும் நேரம் இதுவல்ல, இங்கு அவள் கடத்தும் ஒவ்வொரு நொடிகளும் அங்கு ஒருவனுக்கு நரகமாகக் கழியும் என்று மனம் எடுத்துரைத்தது. முதல் வேலையாக ரஜீவனின் அன்னைக்கு அழைத்து, “கவலைப்படாதீங்க ஆன்ட்டி. ஒண்டும் நடக்காது. கெதியா அவன் வந்திடுவான்.” என்றவள், ராதாவிடமும், “வெளிய எங்கயும் சும்மா போக வேண்டாம், கவனமா இரு. அப்பிடி முக்கியமா எங்க போறதா இருந்தாலும் போற இடத்தைப் போகமுதல் எனக்குச் சொல்லு!” என்று சொல்லிவிட்டு வைத்தாள்.
அவளுக்கு இதைப் பற்றித் தந்தையோடு கதைக்கவேண்டி இருந்தது! அரை நாள் விடுப்பினை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு ஓடியவளை ஒரு புன்னகையோடு பார்த்திருந்தான் கௌசிகன்.
இலக்கினைச் சரியாகத் தீர்மானித்து, எறிகிற பந்து எங்கே பட்டு எந்தத் திசையில் பறக்கும் என்று கணிக்க முடியாவிட்டால் அவனெல்லாம் என்ன கெட்டிக்காரன்?
தந்தையின் அருகில் ஓடிப்போய் அமர்ந்துகொண்டு, “அப்பா…” என்று ஆரம்பித்து அனைத்தையும் சொல்லிமுடித்தாள் பிரமிளா.
“படுபாவி! நல்லாவே இருக்கமாட்டான்! போயும் போயும் அவன்ர கண்ணில போய் என்ர பிள்ளை பட்டுட்டாளே! அக்கிரமக்காரன் அநியாயக்காரன்!” கேட்ட சரிதா அவனைத் திட்டித் தீர்த்தார்.
எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுவிட்டு, “நீ என்னம்மா முடிவு செய்திருக்கிறாய்?” என்று, மெல்ல வினவினார் தனபாலசிங்கம்.
பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தாள் அவள். முடிவெடுக்கும் அதிகாரம் அவளுக்கு வழங்கப்படவில்லையே. அவன் எடுத்த முடிவை ஏற்றுக்கொள் என்றுதானே பணிக்கப்பட்டிருக்கிறாள்.
அவளின் தலையை மென்மையாக வருடிக்கொடுத்தார் அவர். அந்த ஸ்பரிசம் அவளின் அலைப்புறுதல்களை மெல்ல மெல்ல நீவிவிட்டது; மனதை ஒருநிலைப் படுத்தியது; தெளிவாகச் சிந்திக்க வைத்தது.
சற்றுநேரம் அப்படியே இருந்துவிட்டுப் பேச ஆரம்பித்தவளின் குரலில் திடம் வந்திருந்தது. எதையும் எதிர்நோக்கும் வல்லமைகொண்ட வழமையான பிரமிளா மீண்டிருந்தாள்.
“உண்மையா இந்தக் கேள்விக்கு என்னட்டப் பதில் இல்லை அப்பா. ஆனா, நான் நேசிக்கிற, என்னை நேசிக்கிற என்ர சொந்தங்களை விட எனக்கு வேற எதுவும் முக்கியம் இல்லை. அதால இந்தக் கல்யாணத்துக்கு ஓம் எண்டு சொல்லப்போறன்.” முடிவாகச் சொன்னாள் அவள்.
அதிர்ந்துபோனார் சரிதா. “என்ன விசர் கதை கதைக்கிறாய் பிள்ளை. ஆருக்காகவும் நீ அவனைக் கட்ட வேண்டாம். நான் சம்மதிக்க மாட்டன்! ஆராவது தெரிஞ்சே குரங்குன்ற கைல பூமாலையைக் குடுப்பினமோ? என்னப்பா நீங்களும் கேட்டுக்கொண்டு பேசாம இருக்கிறீங்கள். பிள்ளைக்கு எடுத்துச் சொல்லுங்கோ!” என்று பரிதவித்தார் அவர்.
தனபாலசிங்கம் எதையும் பேசவில்லை. அவளையே பார்த்தார்.
“அவர் குரங்கா இருக்கலாம். ஆனா நான் பூமாலை இல்லையம்மா. அவ்வளவு கோழையாவா என்னை வளர்த்து இருக்கிறீங்க?” என்று கேட்டாள் அவள்.
“அதுக்காக உன்னை அவனுக்குத் தாரைவாக்கச் சொல்லுறியாம்மா? இதுக்கா ஆசையாசையா உன்னை வளத்தோம். நல்லவன்ர கைல பிடிச்சுக் குடுத்து, குழந்தை குட்டி எண்டு நீ நல்லா இருக்கிறதை பாக்கிற ஆசை எங்களுக்கு இருக்காதாம்மா? நாளைக்கு இதே ரஜீவனைத் திரும்பவும் பிடிச்சு அடிச்சு எங்களை எல்லாம் சாகச் சொன்னா சாவமோ?” பட்டென்று கேட்டார் சரிதா.
அதுதானே! அன்னையின் கேள்வியில் இருந்த நியாயத்தில் தந்தையைப் பார்த்தாள் பிரமிளா. “இதைப் பற்றிக் கதைக்கோணும் அம்மா. ஆனா, அதுக்காக இப்ப ரஜீவன் என்ன ஆனாலும் சரி எண்டு விடேலாது. அவன் பாவம் எல்லா.”
“அவன் பாவம்தான். நான் பாக்க வளந்த பிள்ளை. ஆம்பிளை பிள்ளை இல்லாத குறைய எனக்குத் தீத்தவன் அவன்தான். அதுக்காக நீ இவனைக் கட்டேலுமா? போலீசுக்குப் போவம் பிள்ளை. போலீஸ் கொண்டுபோய் இவனுக்கு நாலு போடட்டும்!”
“அதெல்லாம் நடக்கும் எண்டுற நம்பிக்கை எனக்கு இல்லை அம்மா. வீடியோ ஆதாரத்தோட குடுத்த பள்ளிக்கூடப் பிரச்சினைக்கே இன்னும் போலிசிட்ட இருந்து ஒரு பதில் இல்ல. அப்படியே நடந்தாலும் அது நடக்கிறதுக்கு முதல் ரஜீவன் என்ன ஆவான் எண்டு சொல்லுங்கோ?” கௌசிகன் சொன்னதைச் செய்வான் என்று அறிந்திருந்த பிரமிளாவுக்குத் திருமணத்தைத் தவிர வேறு எதுவுமே உசிதமான முடிவாக எட்டவே இல்லை.
அவன் செய்யமாட்டான் சும்மா மிரட்டுகிறான் என்றெல்லாம் அவள் யோசிக்கவே இல்லை. அவன் செய்வான். அவனால் முடியும். இதல்ல இதற்கு மேலும் முடியும். அவளின் மனம் அடித்துச் சொன்னது. இப்படியான ஒருவனா அவளின் வாழ்க்கைத் துணை? கடவுளே!
இதுக்கு வேற வழியே இல்லையா? அவளின் சீரிய சிந்தனைக்குள் எதுவுமே புலப்படவில்லை.
“நீங்க ஏன் அப்பா இன்னும் பேசாமயே இருக்கிறீங்க? உங்களுக்குத் தெரிஞ்ச ஆக்கள் பெரிய இடங்கள்ல இருக்கினம் தானே. அவேட்ட உதவி கேக்கேலாதோ(கேக்க இயலாதோ)?” கணவருக்கு அதெல்லாம் பிடிக்காது என்று தெரிந்திருந்தாலும் அதெல்லாம் பார்க்கிற நேரமா இது? அகப்பட்டுக்கிடப்பது மகளின் எதிர்காலம் என்பதில் கேட்டார் சரிதா.
“அதெல்லாம் வேண்டாம்மா.” அப்பா அவளுக்காக மற்றவர்களிடம் உதவி என்று சென்று நிற்பது பிடிக்காமல் வேகமாகச் சொன்னாள் பிரமிளா.
கோபத்தோடு சரிதா என்னவோ சொல்ல வரவும், “பிள்ளைக்கு ஏதாவது குடிக்கக் குடம்மா!” என்றவரின் பார்வை மனைவியை அடக்கியது.
மனக்குமுறலோடு அவர் உள்ளே சென்றுவிட, “அம்மாச்சி! அம்மா கேக்கிறது எல்லாமே சரியான கேள்விகள்தான். அதுக்கு எங்களிட்ட ஒழுங்கான பதில் இல்ல. அப்பிடியே இந்தக் கல்யாணம் நடந்தாலும் தினம் தினம் நீ பெரும் சவால்களைச் சந்திக்க வேண்டிவரும். நிறையப் போராடவேண்டி வரும். நிம்மதியில்லாத ஒரு வாழ்க்கைதான் அமையும். நீ தைரியமானவள்தான். கெட்டிக்காரிதான். ஆனா, எங்களால முடியாததும் இந்த உலகத்துல நிறைய இருக்கு. எங்களையே பார், இந்த ஊர்ல மதிப்பும் மரியாதையுமாத்தான் வாழுறோம். நல்ல பதவில இருக்கிற நிறையப்பேரைத் தெரியும். ஆனாலும் ஒரு பிரச்சனை எண்டு வரேக்க என்ன செய்ய முடிஞ்சது சொல்லு?” என்று உள்ளதை எடுத்துரைத்தார் அவர்.
“பரவாயில்லை அப்பா. நான் போராடிப் பாக்கிறன். எப்பிடியோ ஆரையோ கட்டத்தானே போறன். இந்தக் கல்யாணத்தால நான் நேசிக்கிற நாலு பேருக்கு நல்லது நடக்குமெண்டால் எனக்கு வேற எந்தக் கவலையும் இல்ல.” என்றாள் தெளிவாக.
அப்படிச் சொன்ன மகளைக் கூர்ந்தார் தனபாலசிங்கம். ரஜீவனை மட்டும் அவள் மனத்தில் வைத்துப் பேசவில்லை என்று புரிந்தது.
“நான் அந்த ஆளுக்கு எடுத்து ஓம் எண்டு சொல்லப்போறன் அப்பா.” என்று எழுந்தவளிடம், “நல்லா யோசிச்சு முடிவு எடுக்கோணும் அம்மாச்சி.” என்றார் தனபாலசிங்கம்.
“என்ன யோசிச்சாலும் இந்தக் கல்யாணத்தைத் தடுக்கேலாது அப்பா. எப்பிடியோ நடக்கும். அந்த ஆள் நடத்தும். நான் சம்மதம் சொல்லி நடந்தா ரஜீவனாவது தப்புவான். இங்க பாருங்கோ, அவன்ர அம்மா இதுக்கிடையில ஆறுதரம் ஃபோன் செய்திட்டா. அவவை கொஞ்சம் யோசிச்சுப் பாருங்கோ. பாவம் எல்லா.” கைப்பேசியைக் காட்டிச் சொன்னவளிடம்,
“உன்னைப் பற்றி நீ யோசிக்க மாட்டியாம்மா?” என்று ஆழ்ந்த குரலில் கேட்டார் தகப்பன்.
அப்படியே நின்றுவிட்டாள் பிரமிளா. அந்தக் கேள்விக்குப் பதிலிறுக்க முடியாமல் கண்ணைக் கரித்துக்கொண்டு வந்தது.
தொண்டை அடைக்க அவரைப் பாராமல் மெல்லிய குரலில், “நேர்மையான ஒருத்தரைக் கட்டி, நிம்மதியான வாழ்க்கை வாழ ஆசைப்பட்டனான்தான் அப்பா. வாழ்க்கையில இதுவரைக்கும் ஆசைப்பட்டது எல்லாம் நடந்ததால இது எனக்கு நடக்காது எண்டு எழுதி இருக்குப்போல.” என்றாள் கண்களை எட்டாத ஒரு முறுவலோடு.
வேதனையோடு தந்தை நோக்க, “நீங்க கவலைப்படாதீங்க அப்பா. நல்லவன் எண்டு நம்பிக் கட்டுற ஒருத்தன் அப்பிடி இல்லை எண்டு கட்டினபிறகு தெரிஞ்சா வாழ்க்கையில போராடிப் பாக்கிறேல்லையா? அப்பிடி நினைச்சு வாழ்ந்து பாக்கிறன்.” என்றவள் கைபேசியை எடுத்து, அவனுக்கு அழைக்கப் பிடிக்காமல் செய்தி அனுப்பினாள்.
“நான் சம்மதம் சொல்ல முதல் உங்களோட கதைக்கோணும்.”
தன் ஹோட்டலின் பெயரைக் குறிப்பிட்டு, ‘அங்க நிக்கிறன் வா’ என்று உடனேயே பதில் அனுப்பினான் அவன்.
மனம் முழுக்க மண்டிக்கிடந்த வெறுப்புடனும் வேதனையுடனும் அவனைச் சந்திக்கப் புறப்பட்டாள் பிரமிளா.