அவன் சொன்ன உணவகத்துக்கு வந்துசேர்ந்தவளை அழைத்துக்கொண்டு உள்ளே நடந்தான் கௌசிகன். அங்கே கட்டட வேலைகளும் ஒரு பக்கமாக நடந்துகொண்டு இருந்தது. அமர்ந்திருந்து உண்ணுகிற இடத்தையும் தாண்டி உள்ளே அவன் நடக்க, எங்கே அழைத்துப்போகிறான் என்கிற கேள்வியோடு பின்தொடர்ந்தாள்.
உணவகத்தின் பின்பக்கம் வந்து அங்கிருந்து வெளியேயும் வந்திருந்தனர். அங்கே, சற்றுத் தள்ளி அரைவாசிக்குச் சுவராலும் அதற்கு மேலே கண்ணாடியாலும் அமைக்கப்பட்டிருந்த அறையின் கதவைத் திறந்து அழைத்துப்போனான். அதுவும் கிட்டத்தட்ட அலுவலக அறையின் அமைப்பில் காட்சி தந்தது.
‘இதுவும் அவனுடையதுதான் போலும்’ எண்ணம் அதுபாட்டுக்கு ஓட, அவன் காட்டிய இடத்தில் அமர்ந்துகொண்டாள் பிரமிளா.
“சொல்லு; என்ன கதைக்கோணும்?” அவளைப் பார்ப்பதற்கு வசதியாக அமர்ந்துகொண்டு மிக மிக இயல்பாகக் கேட்டான் அவன்.
அது அவளுக்கு முரண்டியது. ஒரு பெண்ணை இக்கட்டான நிலையில் நிறுத்தித் திருமணத்துக்குச் சம்மதிக்கச் சொல்லி வற்புறுத்திவிட்டு, எதுவுமே நடவாதவன் போல் பேச எப்படி முடிகிறது? உள்ளே குத்தாதா? குற்ற உணர்ச்சி குன்ற வைக்காதா?
அவளால் முடியவில்லையே! அவனை இயல்பாக எதிர்கொள்ள முடியாமல் மனது உறுத்திக்கொண்டே இருக்கிறதே. என்ன செய்கிறாய் நீ? இவனைப் போன்ற ஒருவனோடா உன் வாழ்க்கையைப் பிணைத்துக்கொள்ளப் போகிறாய்? உன்னால் முடியுமா? மனத்துக்கு ஒப்பாத காரியத்துக்கு எப்படிச் சம்மதிக்கப் போகிறாய் என்று மனது கேள்விகளாகக் கேட்டு அவளைக் குதறிக்கொண்டிருக்கிறது.
பொறுக்கமாட்டாமல், “உங்களைப் பிடிக்கவே பிடிக்காத ஒருத்தியை ஏன் இப்பிடி வற்புறுத்துறீங்க? இதால உங்களுக்கு என்ன கிடைக்கப்போகுது?” என்று கேட்டாள் அவள்.
“ஓ! நீ இன்னும் முடிவுக்கு வரேல்ல போல!” என்றபடி மணிக்கட்டைத் திருப்பிப் பார்த்துவிட்டு, “இன்னும் அரை மணிநேரம் இருக்கு. நிதானமா யோசி!” என்றவனை வெறுப்புடன் நோக்கினாள் பிரமிளா.
“என்ர கேள்வியை மதிச்சுப் பதில் சொல்லக்கூட விரும்பாத நீங்க எதுக்காக என்னைக் கட்ட நினைக்கிறீங்க? மனைவியா வாறவளை மதிக்கோணும். அவளையும் சகமனுசியா நடத்தோணும். அந்த எண்ணம் உங்களுக்கு என்னில இல்லை. பிறகும் ஏன் இந்தக் கல்யாணம்? பக்கத்திலையே வச்சுக் கேவலப்படுத்தவா? அதுக்கு நான் அடங்கிப்போவன் எண்டு நினைக்கிறீங்களா? உங்கட வாழ்க்கையும் சேர்ந்துதான் நரகமா போகப்போகுது!”
அவள் என்ன சொல்லியும் அவன் அசையவே இல்லை. “அது நடக்கிற நேரம் பாப்பம்!” என்றான்.
மரமண்டை போன்று நான் நினைத்ததைத்தான் செய்வேன் என்று நிற்பவனை அடித்து நொறுக்குகிற அளவுக்கு எரிச்சலும் கோபமும் பொங்கிற்று அவளுக்கு.
“உங்களுக்கு நான் சொல்லுறது விளங்குதா இல்லையா? எனக்கு உங்களைப் பிடிக்கேல்ல. அடி மனதில இருந்து வெறுக்கிறன்.” முகத்தில் அடித்தாற் போன்று அப்படியே சொன்னாள்.
“ஓகே! எல்லாருக்கும் எல்லாரையும் பிடிக்காதுதான்! வேற என்ன கதைக்கோணும்?”
அவளுக்கு மனம் விட்டே போயிற்று! இவனிடம் பேசுவதற்குச் சுவரில் முட்டிக்கொள்ளலாம்! ஆற்றாமையோடு கடைசி முறையாக என்று எண்ணிக்கொண்டு, “உங்கட முடிவில மாற்றம் இல்லையா?” என்று வினவினாள்.
“மாறுற முடிவுகளை நான் எடுக்கிறேல்ல!” என்றான் அவன்.
அவள் முற்றிலுமாகத் தளர்ந்துபோனாள்.
“திரும்பவும் நீங்க இப்பிடி நடக்கமாட்டீங்க எண்டு என்ன நிச்சயம்?”
அவன் ஒருமுறை புருவங்களைச் சுருக்கினான். பின், “அதுக்கு அவசியம் வராது!” என்றான்.
“உங்களை நான் நம்ப மாட்டன்.” பட்டென்று சொன்னாள் அவள்.
“எனக்கு நீ வேணும்! அதுவரைக்கும்தான் இதெல்லாம் நடக்கும்!”
அவன் சொன்னதைச் சகித்துக்கொள்ள முடியாமல், “என்ன கண்ராவிக்கு நான் உங்களுக்கு வேணும்?” என்று சிடுசிடுத்தவளைக் குறுஞ்சிரிப்புடன் நோக்கினான் அவன்.
“சொன்னா நீ அடிக்க வருவாய்!” என்றான் நகைக்கும் குரலில்.
‘பெரிய காதல் மன்னன்!’ முகச்சுளிப்புடன் பார்வையைத் திருப்பிக்கொண்டாள் பிரமிளா.
அவன் பார்வை தன் மீது இருப்பது பிடிக்காமல், ஒரு முடிவோடு நிமிர்ந்து, “இதுக்குப் பிறகும் இந்த மிரட்டல் வெருட்டல் எதுவும் இருக்கக் கூடாது. இதுதான் கடைசியா இருக்கோணும். கல்யாணத்துக்குப் பிறகும் இப்பிடி ஏதாவது நடக்குமா இருந்தால், பொறுத்துப் போகமாட்டன். என்ர மான அவமானத்தில உங்களுக்கு அக்கறை இல்லாம இருக்கலாம். ஆனா உங்கட குடும்ப மான அவமானம் உங்களுக்கு முக்கியம்தானே!” என்றாள் அவள்.
அவன் சின்ன சிரிப்புடன் அவளையே பார்த்திருந்தான்.
“இனி உங்களாலையோ உங்கட குடும்பத்தில இருக்கிற யாராலையுமோ ரஜீவனுக்கு எந்தப் பிரச்சனையும் வரக் கூடாது!”
“அது அவன்ர கைலதான் இருக்கு!”
“இல்ல! உங்கட கைலதான் இருக்கு! நீங்க இனி அவனைத் தொடவே கூடாது!”
“ஓகே! ஓகே! உனக்காக இனி அவனைத் தொடமாட்டன்!” என்னவோ அவளுக்காக அவன் விட்டுக்கொடுப்பதுபோல் சொன்ன விதத்தில் அவளுக்குப் பற்றிக்கொண்டு வந்தது.
“உங்களையோ உங்கட வார்த்தையையோ நான் நம்பமாட்டன்! ஆனா, என்ன காரணத்துக்காக இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிக்கிறன் எண்டு நான் சொல்லிட்டன். அதுல எதுக்குப் பிரச்சனை வந்தாலும் இந்தக் கல்யாண வாழ்க்கை கேள்விக்குறியாகும்! மற்றும்படி எனக்கு ஓகேதான். ரஜீவனை விடச்சொல்லுங்கோ!” அவன் முகம் பாராமல் சொன்னாள் அவள்.
“சொல்லுறதைத் தெளிவா சொல்லு! எனக்கு நேரடியான பதில் வேணும்!” என்றான் அவன்.
பிரமிளாவுக்கு அது சிரமமாயிருந்தது. சம்மதம் சொல்லத்தான் வந்தாள். அதைக் குறித்துத்தான் இவ்வளவு நேரமும் பேசினார்கள். ஆனபோதிலும் அந்தச் சம்மதத்தை நேரடியாகச் சொல்லமுடியாமல் தொண்டை அடைத்துக்கொண்டது.
வாக்குத் தவறாமை அவளின் வாழ்வின் அடிநாதம். பேச்சுக்காக என்று எதையும் பேசியதும் இல்லை; பேசியதிலிருந்து மாறியதும் இல்லை. அப்படியானவள் மனது ஒப்பாத ஒரு வாக்கினைக் கொடுத்துவிட முடியாமல் மனத்துக்குள் பெரும் போராட்டம் ஒன்றை நடத்தினாள்.
“நீ எப்ப எந்த முத்தை உதிர்ப்பாய் எண்டு காத்துக்கொண்டு இருக்க எனக்கு நேரமில்லை!” இறுக்கமான குரலில் அவன் உரைத்தபோது, “எனக்கு இந்தக் கல்யாணத்துல சம்மதம்!” என்று, மனனம் செய்ததை ஒப்பிப்பது போன்று ஒப்பித்து முடித்தாள் பிரமிளா.
“முடிவாத்தான் சொல்லுறியா?”
நிமிர்ந்து நேராக அவனைப்பார்த்தாள் அவள். “சொன்ன சொல்லுல இருந்து மாறுற பழக்கம் எனக்கில்லை!”
“நல்லது!” சின்னச் சிரிப்புடன் உரைத்தவன் எழுந்து தன் பின் பொக்கெட்டிலிருந்து இரண்டு குட்டிப் பெட்டிகளை எடுத்து மேசையில் வைத்தான்.
‘என்ன செய்கிறான்?’ ஒருவித அதிர்வுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்.
ஒன்றினைத் திறந்து அதற்குள் இருந்த மோதிரத்தை எடுத்து அவளின் கையைக் கேட்டுத் தன் கையை நீட்டினான்.
தன் கைகளை அவசரமாக உள்ளுக்குள் இழுத்துக்கொண்டு, “இதெல்லாம் இப்ப என்னத்துக்கு? வீட்டுல எல்லாம் கதைச்சுப் பேசின பிறகு செய்யலாம்.” என்று தடுமாற்றத்துடன் சொன்னாள் பிரமிளா.
“அது பிறகு. இப்ப, எனக்கு நீ உனக்கு நான் எண்டு எங்களுக்க நாங்களே நிச்சயிக்க வேண்டாமா?” என்றவன் அவளின் அனுமதியை எதிர்பாராமல், அவளின் கையை எட்டிப் பற்றி, மெல்லிய நீண்ட மோதிர விரலில் தன் நிச்சய மோதிரத்தை அணிவித்துவிட்டான்.
ஒருகணம் அவள் இதயம் நின்று பின் பெரும் சத்தத்துடன் தடதடக்க ஆரம்பித்திருந்தது. பேச்சால் மட்டுமல்லாமல் சிந்தனை செயல்களால் கூட அவளை அவனுக்கானவளாக அவளிடமே உறுதிப்படுத்திவிட்டான் என்று உணர்ந்தபோது, இவனிடம் எதிலுமே மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என்கிற உணர்வுதான் அவளுக்குள் மேலோங்கிற்று!