மற்றைய பெட்டியினை அவள் புறம் நகர்த்திவிட்டு, “போட்டுவிடு!” என்றான் தன் கரத்தை நீட்டி.
எதையும் கிரகிக்க முடியாத நிலையில் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் பிரமிளா. மோதிரவிரல் கூசிக்கொண்டிருந்தது. கைகால்கள் நடுங்கின. மெல்ல வியர்க்க ஆரம்பித்திருந்தது.
“டீச்சரம்மாக்கு ஒரே விசயத்தை ரெண்டுதரம் சொல்ல வேணுமோ?” இலகு குரலில் சீண்டினான் அவன்.
நடுங்கிய அவளின் கரம் மெல்ல பெட்டியைத் திறந்து அவனுக்கான மோதிரத்தை வெளியே எடுத்தது. அவள் புறமாக நீட்டப்பட்டிருந்த அவனுடைய கரத்தைப் பற்றாமல், மோதிரத்தை மாத்திரமே இரண்டு விரல்களால் பற்றி, அவனுடைய மோதிர விரலினுள் நுழைத்தாள்.
அதைக் கவனித்துவிட்டு, “தாராளமா நீ விரலைப் பிடிச்சே போடலாம். நான் ஒண்டும் சொல்ல மாட்டன்.” என்று சிறு சிரிப்புடன் சொன்னான் அவன்.
என்னவோ பெரிய காதல் நாயகனைப் போன்று பேசியவனின் பேச்சினை ரசிக்க முடியவில்லை அவளுக்கு. முகம் மாறிவிடாமல் இருக்கப் பெரும் பிரயத்தனப்பட்டுக்கொண்டிருந்தாள்.
ஆனால் ஒன்று, அந்த மோதிரத்தை அணிவித்துவிட்டதன் பிற்பாடு அலைபாய்ந்துகொண்டிருந்த அவளின் மனதும் ஒரு நிலைக்கு வந்து சேர்ந்திருந்தது. இனி இதுதான் என் பாதை என்று விதிக்கப்பட்டிருக்கிறது. பயணித்துத்தான் பார்ப்போமே என்கிற முடிவுக்கு வந்திருந்தாள்.
“ரஜீவனை விடச் சொல்லுங்கோ!” தன் காரியத்தில் கண்ணாக இருந்தவளைச் சிறு சிரிப்புடன் நோக்கிவிட்டு, அவளுக்கு முன்னாலேயே மோகனனுக்கு அழைத்து, அவனை விடுவித்துவிடும்படி சொன்னான்.
அப்படியே மத்தியான உணவுக்கும் சொல்ல, “நான் போகோணும்!” என்று எழுந்தாள் அவள்.
வேகமாக அவளின் கரம் பற்றி, “என்ன அவசரம்? இரு!” என்றவனின் செயலில் அதிர்ந்து கையை இழுத்துக்கொண்டாள் அவள்.
அதைக் கவனித்தாலும் காட்டிக்கொள்ளாமல், “எனக்குப் பசிக்குது. எப்பிடியும் நீயும் சாப்பிட்டு இருக்கமாட்டாய். இரு, இருந்து சாப்பிட்டுப்போ!” என்றவனுக்கு எந்தப் பதிலும் சொல்லும் நிலையில் அவள் இல்லை.
மனம் அதிர்ந்துகொண்டிருந்தது.
உணவு வர அமைதியாக அதை அளைந்துகொண்டிருந்தாள் அவள்.
“சுவை பிடிக்கேல்லையா?”
‘சாப்பிட்டுப் பாத்தாத்தானே தெரியும்’ என்று நினைத்தாலும், “இல்ல… நல்லாருக்கு” என்றாள் முணுமுணுப்பாக.
“எங்கட கடைதான். ஏதாவது சரியில்லாட்டிச் சொல்லு மாத்தலாம்.”
‘உன்னைத்தான்டா முதல் மாத்தோணும். அதுக்கு வழி இருந்தா சொல்லு!’ வேகமாக உணவை உள்ளே தள்ளத் தொடங்கினாள்.
இப்படி ஒரு உணவு வேளைக்கே இந்தப்பாடாக இருக்கையில் எப்படி வாழும் நாட்களைக் கழிக்கப்போகிறாள்? இனி நாளாந்தம் துன்பமும் துயரமும்தான் அவளுக்கு எஞ்சப்போகிறதோ? இவனைச் சந்திக்கும் வரை இனிமையாகக் கழிந்த நாட்கள் நினைவில் வந்து துக்கத்தைப் பெருக்கிற்று!
அதைத் தாங்க முடியாமல் நிமிர்ந்து, “என்ர ஃபோட்டோவை போட்டது ஆர்? நீங்களா, உங்கட தம்பியா, இல்ல உங்கட அப்பாவா?” என்று கேட்டாள்.
அவன் பதில் சொல்லாமல் பார்த்தான்.
“சொல்லுங்கோ! ஆர் செய்தது?” பிடிவாதம் இருந்தது அவளிடம்.
“இனி தெரிஞ்சு என்ன செய்யப்போறாய்?”
அதென்ன இனி என்று மனம் வெகுண்டபோதும், “எனக்குக் கணவரா வாறவர் குறைந்த பட்ச நியாயஸ்தனாகவாவது இருக்கோணும் எண்டு நான் எதிர்பார்க்கிறன். அதால நீங்க உண்மையைச் சொல்லோணும்!” என்றாள் நேராக.
“சொல்லாட்டி என்ன செய்வாய்?”
எதுவும் செய்ய முடியாது என்கிற அகங்காரம்தானே இப்படிக் கேட்க வைக்கிறது? மனம் குமுற, “இந்தக் கல்யாணத்தை நிப்பாட்டுவன்.” என்றாள் வேண்டுமென்றே.
“முடிஞ்சா செய்துபார்!” என்றவன் உண்பதைத் தொடர்ந்தான்.
செயலற்ற ஆத்திரத்துடன் அவனை நோக்கி, “செய்யேலாது எண்டு நினைக்கிறீங்களா?” என்று சீறினாள் அவள்.
“நீ என்ன செய்தாலும் இந்தக் கல்யாணம் நடக்கும் எண்டு சொல்லுறன்.”
“அப்பிடி என்னத்தான் கட்டியாககோணும் எண்டு என்ன பிடிவாதம்? உங்களைப் பற்றின என்ர அபிப்பிராயம் என்ன தெரியுமா? ஈவு இரக்கமே இல்லாத ஒரு காட்டுமிராண்டி நீங்க எண்டுறதுதான். அந்தளவுக்கு அடி மனசுல இருந்து வெறுக்கிறன். அப்பிடியான என்னைக் கட்டியே ஆகோணும் எண்டு ஏன் நிக்குறீங்க?” உண்மையிலேயே அவளுக்கு அது புரியவே இல்லை.
“இந்தக் கேள்வியை அடிக்கடி கேக்கிறாய்.” என்றுவிட்டு, “நீதான்!” என்றான் அவன் உதட்டில் முளைத்த சிரிப்போடு.
“நானா?” நம்பாமல் பார்த்தாள் பிரமிளா.
“நீயேதான்! என்னை என்னட்டையே காட்டுமிராண்டி எண்டு சொல்லுறாய் பாத்தியா? இந்தத் திமிர்தான் என்னைச் சீண்டிக்கொண்டே இருக்கு. அதுதான்.”
“ஓ! என்னை மாதிரியே இன்னொருத்தி வந்து உங்களைச் சீண்டினா அவளையும் கட்டுவீங்களோ?”
“ஒண்டுக்கு ரெண்டு இருந்தா எப்பவும் வசதிதான்.” என்றான் அவன் எதற்கும் அசையாமல்.
இவனோடு கதைப்பதில் பிரயோசனம் இல்லை என்று புரிந்துபோயிற்று அவளுக்கு. ஆனால், அவனும் அவளும் யாரோவாக இருக்கும் பட்சத்தில் எதையாவது செய்து தொலை என்றுவிட்டு விலகிப்போகலாம். திருமணமாகி கணவன் மனைவியாக வாழப்போகிறோம் என்கையில் எப்படி அப்படி விடுவது?
“நான் முதல் கேட்ட கேள்விக்கு நீங்க பதில் சொல்லேல்ல.”
“அது தெரிஞ்சு என்ன செய்யப்போறாய்?” அவனும் சொல்வதாயில்லை.
“என்ர மனுசன் ஓரளவுக்காவது நல்லவர் எண்டு என்னை நானே ஏமாத்திக்கொள்ளத்தான்!” என்றாள் சினத்துடன். “பிடிக்குதோ இல்லையோ ஒரு விசயத்துல ஈடுபட்டா என்னால முடிஞ்சவரைக்கும் முழு மனசோட அதைச் செய்யோணும் என்று நினைக்கிறவள் நான். உங்களோட அமையப்போற அந்த வாழ்க்கையை முடிஞ்சவரை சீரா கொண்டுபோறதுக்கு உங்களைப் பற்றின எண்ணம் என்ர மனதில கொஞ்சமாவது நல்லதா இருக்க வேண்டாமா? அதாலதான் கேக்கிறன்.” இழுத்துப்பிடித்த பொறுமையோடு பேசினாள் அவள்.
அவளைப் பார்ப்பதைத் தவிர்த்து உணவில் கவனம் வைத்துக்கொண்டு, “சில கேள்விகளுக்குப் பதில் சொல்லேலாது.” என்றவனை வெறித்தாள் பிரமிளா.
என்னைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தத் தெரிகிறது. அவளை மறுக்கமுடியாத நிலையில் நிறுத்திச் சாதுர்யமாகத் திட்டம் தீட்டி, சரியாகக் காய்களை நகர்த்தவும் தெரிகிறது. அவள் சம்மதித்த நொடியிலேயே மாறிவிடாதபடிக்கு மோதிரத்தை மாற்றி, நான்தான் உன் கணவன் என்று அவள் மனத்தில் பதியவைக்கவும் முடிகிறது!
இப்படியெல்லாம் தான் நினைத்தபடிக்கு அவளை ஆட்டுவிக்கிறவன் அவளுக்கு மட்டும் உண்மையாக இருக்க மாட்டானாம் என்றால் என்ன நியாயம் இது? மனத்தில் வலி எடுக்க, விழியகற்றாமல் அவனையே பார்த்தாள் பிரமிளா.
அதை உணர்ந்து நிமிர்ந்தவன் அவளின் விழிகளில் எதைப் படித்தானோ, “பிர…” என்று என்னவோ சொல்ல ஆரம்பிக்கையிலேயே கை நீட்டித் தடுத்தாள் அவள்.
“நீங்க செய்திருந்தா அந்தக் குற்றத்துக்கு நீங்கதான் பொறுப்பாளி. தப்பித்தவறி உங்கட குடும்பத்தில இருக்கிற வேற ஆரோ செய்திருந்தாலும், நான் நேரடியா உங்களைக் கேட்டும் நீங்க சொல்லேல்ல. ஆக, அவே செய்திருந்தாலும் நீங்கதான் பொறுப்பாளி. என்னளவில அந்த ஃபோட்டோவை போட்டது நீங்கதான்!” என்றவள் அதற்குமேல் உண்ணப் பிடிக்காமல் எழுந்துகொண்டாள்.
எழுந்தவள் மனம் பொறுக்காமல், “திருமண வாழ்க்கை எண்டுறது நீங்க திட்டம் போட்டு நடத்திற காரியம் இல்ல. அதுல சம்மந்தப்பட்டிருக்கிறது ரெண்டு மனசு. அந்த மனங்கள் இணையாம மணவாழ்க்கை இனிக்காது. இது விளங்கிற காலம் வரேக்க நல்லா கவலைப்படுவீங்க!” என்றுவிட்டு அங்கிருந்த தண்ணீர் போத்தலை எடுத்துக்கொண்டு வெளியே போய்க் கையைக் கழுவினாள்.
அவனும் கொண்டுவந்து அவளிடமே கையை நீட்டினான். அவனுடைய அண்மையை உணர்ந்தவளின் தேகம் ஒருமுறை இறுகினாலும் ஒன்றும் சொல்லாமல் தண்ணீரை அவள் ஊற்ற அவனும் தன் கையைக் கழுவிக்கொண்டான்.
ஒன்றும் கதைக்காமல் கைப்பையினை எடுத்துக்கொண்டு நடந்தவளோடு கூட நடந்தான் கௌசிகன். அது பிடிக்காமல் அவளின் நடையின் வேகம் குறைந்தது. அவன் முன்னுக்கு அவள் பின்னுக்கு என்று நடந்து இருவரும் உணவகத்தை விட்டு வெளியேறினர்.
அவள் ஸ்கூட்டியின் புறம் நடக்க, “கவனமா போ!” என்றான் அவன்.
‘பெரிய அக்கறை!’ முகம் கடுக்க ஏறி அமர்ந்து ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டு புறப்படுகிறேன் என்று சொல்லாமலேயே புறப்பட்டிருந்தாள் அவள்.