அவள் ஆரணி 26 – 1

உறக்கம் கலையும்போதே ஆரணிக்குத் தலை விண் விண் என்று வலித்தது. நெற்றிப்பொட்டை அழுத்தி அழுத்தி விட்டபிறகுதான் விழிகளை மெல்லத் திறக்க முடிந்தது. அருகில் நிகேதன் உறங்கிக்கொண்டு இருந்தான். ‘எப்போது வந்தான்?’ அழைப்பிதழ் கொடுக்கப்போனவர்கள் இரவு வந்து, உணவை முடித்துக்கொண்டு புறப்பட்டபோதும் அவன் வரவில்லை. ஹயராக வவுனியா சென்று இருந்தான். அவனிடம் சகாதேவன் கைபேசியில்தான் விடைபெற்றுக்கொண்டார். அதன்பிறகும் அவள் கடைசியாகப் பன்னிரண்டு அரைக்கு நேரம் பார்த்த நினைவு.

உறக்கத்தில் கூட விலகிப் படுத்திருந்தவனின் கோபம் புரிந்தபோது, நெஞ்சில் வேதனை எழுந்தது. திருமண வீட்டில் வெறும் கழுத்துடன் நிற்கப்போகிறோம் என்கிற சிந்தனை அவளுக்கே வரவில்லை. ஆனால், அவனுக்கு வந்திருக்கிறது. மற்றவர்கள் அவளைக் குறைத்து மதிப்பிட்டுவிடக்கூடாது என்று நினைத்திருக்கிறான். கூடவே அவளுடைய விருப்பத்தையும் நிறைவேற்றி இருக்கிறான்.

அமராவதி சொன்னதுபோல பல லட்சங்களில் பணம் செலவாகியிருக்கும். இதனால் இன்னுமே நெருக்கடிக்கு ஆளாகுவான். கடன்காரனாக நிச்சயம் மாறுவான். இருந்தும் எதைப்பற்றியும் யோசிக்காமல் அவளுக்காக அதைச் செய்திருக்கிறான். அந்த அன்பை உணராமல், அமராவதி கண்டதையும் பேசினார் என்பதற்காக அவள் பேசியதும், கொடியைக் கழற்றப்போனதும் தவறுதானே. அதை அணிவிக்கையில் எவ்வளவு ஆசையாக அணிவித்தான். அதைப்போய் ‘கழுத்த நெரிக்குது, நெஞ்ச அறுக்குது.’ என்று அவள் சொன்னபோது எப்படித் துடித்திருப்பான்?

விழிகள் கலங்கிப் போயிற்று அவளுக்கு. அமராவதியின் மீது கோபம் கொண்டவள் அவனை யோசிக்க மறந்துபோனாள். கடவுளே.. மீண்டும் நெற்றிப்பொட்டை அழுத்திவிட்டாள். தலை வெடிக்கும் போல் இருந்தது. விழிகளை இறுக்கி மூடித் திறந்தபோது அவன் விழித்து, அவளைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தான்.

ஆரணியின் நெஞ்சு படபடக்கத் தொடங்கிற்று. அவனையே பார்த்திருக்க அவன் எழுந்து கிணற்றடிக்கு நடந்தான். அவளின் முகம் அப்படியே சுருங்கிப் போயிற்று. இந்த மௌனக் கோபம் அவளைக் கூறு போட்டது. சமாதான முயற்சியாக வேகமாக எழுந்து, முகம் கழுவி, தலையை வாரிக்கொண்டு ஓடிப்போய் அவனுக்குத் தேநீர் போட்டாள். அதற்குள் அவன் குளித்துவிட்டு வந்தான்.

“தேத்தண்ணி?” அறைக்கே கொண்டுபோய் அவனிடம் நீட்டினாள்.

“வச்சிட்டுப் போ!” முகம் பாராமல் பதில் சொன்னவனின் செய்கையில் முகம் வாடிவிட, “ஆறமுதல் குடி.” என்றுவிட்டு மீண்டும் ஓடிப்போய் வேக வேகமாகப் புட்டு அவித்து, சம்பல் அரைத்து, மிளகாயைப் பொறித்து எடுத்தாள்.

புட்டும் சம்பலும் என்றால் அவனுக்கு மிகுந்த விருப்பம். அதுவும் முதல்நாள் வைத்த மீன் கறியும் உடன் புட்டும் என்றால் உயிரையே கொடுப்பேன் என்பான். அவள் கேலி செய்தாலும், ‘அந்தச் சிவனே புட்டுக்கு மண் சுமந்தவராம். நான் எல்லாம் எந்த மூலைக்கு..’ என்றுவிட்டு இன்னும் இரண்டுவாய் அதிகமாகச் சாப்பிடுவான்.

அவன் தயாராகி வெளியே வர, “சமையல் முடிஞ்சுது. சாப்பிட்டு போ நிக்கி.” என்று அழைத்தாள்.

ஒன்றும் சொல்லாமல் வந்து அமர்ந்தான் அவன். போட்டுக் கொடுத்துத் தானும் அமர்ந்து சாப்பிட்டாள். உணவு உள்ளே இறங்குவேனா என்று அடம் பிடித்தது. அவனுக்குப் பிடித்த பிட்டு. கோபம் கொஞ்சமாவது குறைந்திருக்குமா என்று ஆவலோடு பார்த்தாள். அவனோ தட்டில் பார்வையைப் பதித்துச் சாப்பிட்டுக்கொண்டு இருந்தான். மீண்டும் அவளுக்குக் கண்ணைக் கரித்துக்கொண்டு வந்தது. பேசாமல் இருந்து இப்படி வதைக்கிறானே. அதற்குமேல் அங்கே இருந்தால் அவனுக்கு முன்னாலேயே அழுதுவிடுவோம் என்று தெரிந்து எழுந்துகொண்டாள், ஆரணி.

அவன் உணவை முடித்துக்கொண்டு புறப்படுவது தெரிந்தது. போய்வருகிறேன் என்று சொல்லவே இல்லையே. அவ்வளவு கோபமா? மெல்லிய அதிர்வுடன் நிகேதனையே பார்த்தாள். கதவருகில் தொங்கிக்கொண்டிருந்த வேன் திறப்பினை எடுத்துக்கொண்டு செருப்பையும் மாட்டிக்கொண்டு அவன் வெளியேறுவது தெரிந்தது.

அவளுடைய நிக்கி அவளைப் புறக்கணிக்கிறான்! நெஞ்சை அடைத்த துக்கத்தை நெஞ்சுக்குள்ளேயே விழுங்கிக்கொண்டு ஓடிப்போய்க் கேட்டை திறந்து வைத்துக்கொண்டு நின்றாள். எப்போதும் அவளருகில் நிறுத்தி, ஒரு, “வரட்டா?” வோடு முகம் முழுக்க மின்னும் சிரிப்புடன் உதடுகளைக் குவித்து அவன் தந்துவிட்டுப் போகிற முத்தத்துக்காக அவள் காத்திருக்க, அவன் அவளைக் கடந்து வீதியில் இறங்கி மறைந்தே போனான்.

சற்றுநேரம் அசையக்கூட முடியாமல் போயிற்று அவளுக்கு. நேரமாவதை உணர்ந்து ஒரு மாத்திரையை விழுங்கிக்கொண்டு செண்டருக்குப் புறப்பட்டாள்.

வாசலிலேயே வைத்து அவளைப் பிடித்தார் அபிராமி. “நேற்றே மெசேஜ் அனுப்பினான். ஏன் ஒரு பதிலும் போடேல்ல ஆரணி?”

“என்ன மெசேஜ் மிஸ்?” குழப்பத்துடன் வேகமாகத் தன் ஃபோனை எடுத்துப் பார்த்தாள்.

அடுத்தகட்ட பயிற்சி கொழும்பில் மூன்று நாட்கள் நடப்பதாகவும், அதில் கலந்துகொள்ளப் போகிறாயா என்றும் கேட்டிருந்தார் அவர். அவள் முறையான பயிற்சியோடு இங்கே பணிபுரிய வரவில்லை. பிறகு பிறகு அந்த வேலையில் உண்டான ஈடுபாட்டில் அவளே கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டியபோது, இப்படியான பயிற்சிகளுக்கு அவளை அனுப்பிவைத்தார் அபிராமி.

“கலியாண வேலை பிஸில பாக்கேல்லை போல. ஆனா, நீர் போகாம விடமாட்டீர் எண்டு எனக்குத் தெரியும் தானே. அதால நானே உம்மை லிஸ்ட்ல சேர்த்திட்டன் ஆரணி. எனக்கும் கடைசி நேரம் தான் நியூஸ் வந்தது. அதால இண்டைக்கே வெளிக்கிடவேணும். நாளைக்கு விடிய அங்க கிளாஸ் இருக்கு. இந்த முறை ஜெர்மனில இருந்து வந்து பயிற்சி தருகினம். நீங்க தங்கப்போற ஹோட்டல்ல தான் செமினாரும் நடக்கப்போகுது. பில் நான் கட்டிட்டேன். பிறகு உமக்கு அந்த மெயில் அனுப்பி விடுறன். நீர் என்ர எக்கவுண்டுக்கு காச டிரான்ஸ்பர் செய்துவிடும்.” என்றுவிட்டுப் போனார் அவர்.

இதெல்லாம் அவள் பயிற்சிக்குப் போகிற ஒவ்வொரு முறையும் நடப்பதுதான். ஆனால், அவன் கோபமாக இருக்கிறபோது அவளுக்குப் போக மனமேயில்லை.

“இந்த முறை போகாம விட்டா என்ன மிஸ்?” அவரைத் தேடிச் சென்று தயக்கத்துடன் வினவினாள்.

அவள் இப்படிக் கேட்பாள் என்று எதிர்பாராதவருக்கு மெல்லிய திகைப்புத்தான். “போகாம விட்டா பே பண்ணின காசு திரும்பி வராது ஆரணி. ஆனா ஏன் போகாம விட? கலியாண வேலை இருக்கு என்ன. ஆனா மூண்டு நாள் தானே. சமாளிக்க மாட்டீரா? இப்பிடி ஒரு சான்ஸ் திரும்ப எப்ப கிடைக்கும் எண்டு தெரியாது. இவ்வளவு காலமும் இலங்கை ஆக்கள் தான் பயிற்சி தந்தது. இந்த முறை.. சொன்னேனே ஜேர்மன் குரூப் எண்டு. போனா நிறையப் படிக்கலாம். உமக்கும் இதே மாதிரி ஒரு செண்டர் ஆரம்பிக்க விருப்பம் இருக்கு எண்டு எனக்குத் தெரியும். நிச்சயமா அதுக்கு இந்த செமினார் பெரிய ஹெல்ப்ப இருக்கும். என்ன சிரமம் எண்டாலும் தயவுசெய்து போயிட்டு வாரும்.” என்று கட்டாயப்படுத்திச் சொல்லிவிட்டுப் போனார் அவர்.

அவரே இவ்வளவு சொல்கிறார் என்றால் நிச்சயம் இது முக்கியமான செமினாராகத்தான் இருக்கும் என்று ஆரணிக்குப் புரிந்தது. இப்போது அவளுக்கும் தவறவிட மனமில்லை. வெளியே வந்து நிகேதனுக்கு அழைத்தாள்.

எடுக்கவில்லை. ஹயரில் இருந்தால் எடுக்கமாட்டான் தான். வாகனம் ஓடுகிறபோது வாகன ஓட்டிகள் கைபேசியில் பேசினால் விபத்துக்களை உண்டாக்கி தம் உயிருக்கே உலை வைத்துவிடுவார்களோ என்று வருகிறவர்கள் விரும்புவதில்லை என்பதால் எடுக்கமாட்டான். கூடவே ஆரணிக்கும் அதில் விருப்பமில்லை. அவனும் அதைச் செய்ய மாட்டான். எனவே பேச வேண்டுமானால் ஒரு மெஸேஜையோ இப்படி ஒரு மிஸ்கோலையோ கொடுத்துவிடுவாள். நேரம் அமைகிறபோது அவன் அழைப்பான்.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock