கயலினியின் திருமணம் எந்தக் குறையும் இல்லாமல் சீரும் சிறப்புமாக நடந்தேறியது. அவர்களின் இனசனம், சொந்தபந்தம், அயலட்டை எல்லோருமே ஆச்சரியப்படுகிற அளவுக்கு நடாத்தி முடித்தான் நிகேதன்.
கையில் பிடிக்க முடியாத அளவு சந்தோசத்தில் மிதந்துகொண்டிருந்தார் அமராவதி. அவருக்கு எல்லாமே கனவு போலிருந்தது. மங்களம் நிறைந்து முகம் ஜொலிக்க, புதுத் தாலிக்கொடி மின்ன கணவனோடு அமர்ந்திருந்த மகள், ‘இல்லை அம்மா, எல்லாம் நிஜம்’ என்று சொல்லிக்கொண்டிருந்தாள்.
சகாதேவனும் நெகிழ்ந்து போயிருந்தார். அவரின் தலையில் தான் விழப்போகிறது என்று பயந்துகொண்டிருந்த பெரும் சுமை ஒன்றை இன்றைக்கு நிகேதன் இறக்கி வைத்திருக்கிறான். இத்தனை காலமாக அவர் குடும்பத்தைப் பார்த்ததற்குச் சமனாக, ஒற்றை ஆளாக நின்று தங்கையின் திருமணத்தை முடித்து உனக்கு நான் எதிலும் குறைந்துவிடவில்லை என்று காட்டிய தம்பியை நெஞ்சார அணைத்துக்கொண்டார்.
“உன்னில எனக்கு நம்பிக்கை இருந்ததுதான். எண்டாலும் ஒரு பயமும் இருந்தது. ஆனா இண்டைக்கு மனதுக்கு நிறைவா இருக்கு நிகேதன்.” என்று அவனிடம் இயம்பிவிட்டு, “உன்ர சப்போர்ட் இல்லாம அவன் கயலுக்கு இவ்வளவும் செய்திருக்க ஏலாதம்மா. நீயும் அருமையான பிள்ளைதான்.” என்று ஆரணியிடமும் சொன்னார்.
நிகேதன் ஆரணி இருவருக்குமே கூடப் பெரும் நிறைவுதான். என்னவோ நேற்றுத்தான் பல்கலை வளாகத்துக்குள் காதலர்களாகச் சுற்றி வந்தது போலிருந்தது. இன்று பார்த்தால், கணவன் மனைவியாக நின்று ஒரு திருமணத்தையே முன்னெடுத்து சிறப்பாகச் செய்து முடித்திருக்கிறார்கள்.
“அது என்னவோ காலம் சரியில்ல போல. அதுதான் கொஞ்சக் காலம் பொறுப்பில்லாம இருந்திட்டான். மற்றும்படி என்ர மகன் கெட்டிக்காரன்.” என்று அவர்களின் பேச்சில் அமராவதியும் இணைந்துகொண்டார். பாசத்துடன் மகனின் முதுகை வருடிக்கொடுத்தார்.
இதையெல்லாம் பார்த்த ஆரணிக்கு மயக்கம் வந்துவிடும் போலிருந்தது. இவர் எப்போதிலிருந்து இவ்வளவு நல்லவராக மாறினார்? கேள்வியுடன் நிகேதனைப் பார்க்க, அவனும் அது புரிந்து அவளிடம் குறுநகை புரிந்தான்.
தங்கக் கரையில் கற்கள் மின்னும் பட்டு வேட்டி சட்டையில், நெற்றியில் காலையில் தீட்டிக்கொண்ட சந்தனம் குங்குமம் இன்னுமே அழியாமல் இருக்க, முகத்தில் களைப்பும் களையும் சரிசமனாகக் கலந்து தெரிய, முதுகைத் தடவிக்கொடுத்த அன்னைக்கு மகனாக அவர் அருகில் நின்றபடி அவளிடம் கண்ணால் சிரித்துக்கொண்டிருந்தவனைக் கண்டு அவளின் உள்ளம் கொள்ளை போயிற்று.
‘சொன்னாலும் சொல்லாட்டியும் நீ அழகன் தான்டா!’ மனம் சொன்ன கூற்றை அவனிடம் சொல்ல முடியாமல் சுற்றியிருந்தவர்கள் தடுத்ததால் அவள் இதழ்கள் குறும்பில் நெளிந்தது.
என்னவோ தன்னைப் பற்றித்தான் நினைக்கிறாள் என்று அவனுக்குப் புரிந்து போயிற்று. பொய்யான முறைப்புடன் பார்வையை வேகமாக அகற்றிக்கொண்டான்.
அடுத்த ஒரு வாரமும் சடங்கு, சம்பிரதாயம், கோயில், நேர்த்திக்கடன், விருந்தாடல் என்று நாட்கள் மின்னலாக விரைந்து மறைய அதன் பிறகுதான் குடும்பமே இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர். ராகவன் இன்னுமே மற்றவர்களோடு பெரிதாக இணைந்துகொள்ளாவிடினும் நல்லமாதிரித்தான் என்று பார்த்தவரையில் தெரிந்தான். கயலிடம் அன்பையும் அந்நியோன்யத்தையும் காட்டினான். அதுவே எல்லோருக்கும் போதுமாயிருந்தது.
கயலுக்கு இன்னுமே யாழ்ப்பாணத்தில் தான் வேலை. ராகவனுக்கு மன்னார். அவளின் மாற்றல் இரண்டொரு மாதத்தில் மன்னாருக்குக் கிடைக்கும் என்பதில் அதுவரை வழமை போலவே அவள் யாழ்ப்பாணத்திலும் ராகவன் தன் பெற்றோர் வீட்டிலும் வசிப்பதாகவும், கயல் இங்கே வந்தபிறகு இருவரும் இங்கே வசிப்பதாகவும் முடிவாயிற்று. இரண்டு வாரங்கள் முடிந்த நிலையில் புதுத் தம்பதியர் வேலைக்குப் புறப்பட்டனர்.
நிகேதனின் ஓட்டம் மீண்டும் ஆரம்பித்திருந்தது. கடனைக் கட்டவேண்டும். வாகனப் பாத்திரத்தை மீட்க வேண்டும். வட்டி வேறு வாயைப் பிளந்துகொண்டு நின்றது. பெரிய கடமை ஒன்றை முடித்திருக்கிறார்கள். ஆனாலும், ஆசுவாசமாக இருந்து இளைப்பாற முடியவில்லை.
அன்று வந்தவனின் முகமே சரியில்லை. என்ன என்று கேட்டால் நிச்சயம் சொல்லமாட்டான். நேரம் வேறு இரவு பதினொன்றைத் தாண்டி இருந்தது. அதில், எதுவும் பேசாமல் குளித்துவிட்டு வந்தவனுக்கு உணவைக் கொடுத்தாள்.
“நீ சாப்பிட்டியா? அம்மா?”
“இவ்வளவு நேரத்துக்குச் சாப்பிடாம இருப்பமா? அதெல்லாம் எப்பவோ முடிஞ்சுது. மாமி நித்திரையும் ஆகிட்டா. கொஞ்சம் நேரத்துக்கு வந்து சாப்பிட்டுத் திரும்பப் போகலாமே நிக்ஸ். இப்பிடி ஒவ்வொரு நாளும் லேட்டா சாப்பிடுறது உடம்புக்கு நல்லமில்லையடா.” இதமான குரலில் எடுத்துச் சொன்னாள் அவள்.
“கடன் முடியிறவரைக்கும் அதெல்லாம் பாக்கேலாது ஆரா. கொஞ்ச நாளைக்கு இப்பிடித்தான்.” என்றவன் அப்போதுதான் நினைவு வந்தவனாகச் சொன்னான். “எலெக்ஷன் ஆரம்பிக்கப் போகுது ஆரா. ஒரு எம்.பி ஹயருக்குக் கேட்டிருக்கிறார். ஒரு மாதத்துக்கு. நாலு வேனையும் கொண்டு போகப்போறம்.” என்றவனை மெல்லிய திகைப்புடன் பார்த்தாள் ஆரணி.
“என்னடா சொல்லுறாய்? ஒரு மாதத்துக்கா? இங்கேயா கொழும்பா?” இங்கு என்றால் அவ்வப்போது ஓடிவந்து அவளையும் பார்த்துக்கொண்டு போவான். கொழும்பு என்றால் எலெக்ஷன் முடிந்த பிறகுதான் காணலாம். போனமுறையாவது பதினைந்து நாட்கள். இந்தமுறை நினைக்கவே அவளுக்கு மலைப்பாயிற்று.
“கொழும்புதான். வேற வழியில்ல ஆரா. போய்வந்தா தொகையா காசு கிடைக்கும். சமாளிக்க மாட்டியா?” என்றான் அவளின் முகம் பார்த்து.
அவள் சிரமப்பட்டுத் தலையை ஆட்டினாள். “சமாளிக்கிறன். சமாளிக்கத்தானே வேணும்.” உள்ளே போய்விட்ட குரலில் இயம்பியவளின் கையைப் பற்றி அழுத்திக்கொடுத்தான் நிகேதன்.
அவன் இல்லாமல் இந்த வீட்டில் ஒரு நாளை கூட அவளால் கடத்த இயலாது என்று தெரிந்தாலும் கழுத்தை நெரிக்கும் கடனுக்கும் வட்டிக்குமிடையில் அவனுக்கு வேறு வழி தெரியவில்லை.
உணவுக்குக் குறைவிருக்காது. உறக்கத்தை மறக்கவேண்டியதுதான். தினமும் காலையில் ஆரம்பிக்கிற பிரச்சாரத்துக்கு இரவு வரை ஊர் ஊராக ஊர்ந்துகொண்டே இருக்க வேண்டும். பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ அவர்களின் கோஷங்களைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும். அவர்களின் ஆட்டங்களைச் சகிக்கவேண்டும். ஒருவன் குடியில் வருவான், இன்னொருவன் ஆணவத்தில் ஆடுவான், இன்னும் சிலர் சண்டைக்கு என்று அலைவார்கள்.
நிகேதனுக்கு வாகனம் வீடு போன்று சுத்தமாக இருக்க வேண்டும். அங்கே போனால் சோற்றுப் பருக்கையில் இருந்து சாராய நெடி தொடங்கிச் சேற்றுக்கால்வரை வாகனம் முழுவதும் பரவிப் படியும். அதையெல்லாம் தாங்கி, அரசியல்வாதிகளின் கோபதாபங்களுக்குத் தணிந்து, அவர்களின் அடிப்பொடிகளின் கூத்துக்களை லட்சியம் செய்யாமல் இருந்துவிட்டால் உண்மையிலேயே பார்த்துப் பாராமல் பெரும் தொகை கொடுப்பார்கள்.
இந்த ஒரு மாதத்துக்கும் பொறுமை என்பது மிகப்பெரிய ஆயுதம். அது இல்லையோ அவனுக்கும் வாகனங்களுக்கும் எந்த உத்தரவாதமும் இல்லை. நினைக்கவே ஆரணிக்கு உள்ளுக்குள் நடுங்கிற்று. பணச்சிக்கல் அவனை நெருக்குவது தெரிந்ததால் ஒன்றும் சொல்லாமல் இருந்தாள்.
அடுத்தநாள் நிகேதன் புறப்பட்டதும் சுகிர்தனுக்கு அழைத்து விசாரித்தாள். அவசரத்துக்கு வாங்கியதில் கடன்காசுக்கான வட்டி மிகவுமே அதிகம் என்றான் அவன். “அப்ப தெரியேல்ல ஆரணி. இருந்த அவசரத்துக்குக் காசு கிடைச்சா போதும் எண்டு இருந்தது. இப்ப ஒவ்வொரு மாதமும் வட்டி குடுக்கப் போனா அழுகை வரும்போல இருக்கு. மனச்சாட்சியே இல்லாம வாங்குறாங்கள். நிகேதன் பாவம். ஓடி ஓடி உழைக்கிறத வட்டியா கட்டுறான்.” என்று சுகிர்தன் சொன்னதைக் கேட்டதும் கண்கள் கலங்கிப் போயிற்று ஆரணிக்கு.
அன்று இரவு வீடு வந்தவனிடம் பேசாமல் தன் தாலிக்கொடியை எடுத்து நீட்டினாள்.
“இப்ப என்னடி?” என்றான் எரிச்சலுடன்.
“இத கொண்டுபோய் அடகு வச்சிப்போட்டு வட்டிக்காரனுக்குக் குடு.”
“ஆரா உண்மையா அடிக்கப்போறன் உனக்கு. இத கட்டினதில இருந்து நீ என்னப்போட்டு படுத்திற பாடு இருக்கே. பேசாம போ!” என்றான் மறையாத சினத்தோடு.
அவள் கோபப்படவில்லை. கட்டிலில் தலையைப் பற்றிக்கொண்டு அமர்ந்து இருந்தவனின் அருகில் அமர்ந்து அவனது தோளைப் பற்றினாள். “எமோஷனலா யோசிக்காம கொஞ்சம் நான் சொல்லுறதை கேளு பிளீஸ். மூளையால யோசி. இவ்வளவு மொத்த தாலிக்கொடிய தினமும் என்னால கழுத்தில காவ ஏலாது. நான் வீட்டுக்கும் போடுறேல்ல. வேலைக்கும் போட்டுக்கொண்டு போறேல்ல. வீட்டுல என்னவோ பூதத்தைக் காக்கிற மாதிரி பயந்து பயந்து எடுத்து வச்சிருக்கிறன். அதுக்கு அடகு வச்சா அது அங்க பக்குவமா இருக்கும். நீ கடன்பட்ட இடத்துல குடுக்கிற வட்டியோட ஒப்பிடேக்க அடகு கடை வட்டி ஒண்டுமே இல்ல. கடன் குறையும். வட்டி குறையும். எல்லாமே எங்களுக்கு லாபக்கணக்குத்தான்.” என்று விளக்கினாள் அவள்.
அவன் மனது பாரமாகிற்று. மனைவிக்குக் கட்டிய தாலிக்கொடி பக்குவமாக இருக்க அடகுக்கடைக்கு கொண்டுபோகிற நிலைதானே அவனது. அன்றும் ஒருநாள் அவள் இப்படிக் கழற்றித் தந்தது நினைவில் வந்தது. காட்சி வேறாயினும் நிகழ்வு அன்றும் இன்றும் ஒன்றுதான். ஆனால், அவள் சொல்வதும் சரிதான். மனதின் உணர்வுகளைக் காட்டிலும் உண்மை மிகப்பெரிய கசப்பாக அவனுக்குள் இறங்கிற்று.
“இத வச்சாலும் முழுக்காசும் குடுக்கேலாது.” என்றான் அவளின் முகம் பாராது.
“பரவாயில்ல வாறத குடு. வட்டியும் கடனும் குறையும் தானே.” கையும் மனமும் கூச அதை வாங்கினான். அவளின் முகம் பார்க்க முடியாமல் வேகமாக அவளை இழுத்து அணைத்துக்கொண்டான். “உன்ர கழுத்துக்கு ஒரு தாலிய கூட நிரந்தரமா தரேலாத நிலையிலதான் உன்ர நிக்கி இன்னுமே இருக்கிறான் ஆரா. சொறியடி.” என்றான் கனத்துப்போன குரலில்.
ஆரணிக்கு அவன் வேதனையைத் தாங்க இயலாமல் கண்கள் கரித்தது. இமை சிமிட்டித் தன்னை அடக்கிக்கொண்டு சிரித்தாள். “என்ர நிக்கி அவனையே தந்திட்டானாம். இந்தத் தாலி எல்லாம் அவனை விட பெருசில்ல.” என்றாள் அவன் முதுகை வருடிக்கொடுத்தபடி.
அப்போதும் அவள் கழுத்தில் புதைந்திருந்தவனின் அணைப்பின் இறுக்கம் குறையவே இல்லை.
“டேய்! சும்மா சோக கீதம் வாசிக்காத. என்னோட இருக்கிறதே கொஞ்ச நேரம் தான். இதுல ஆயிரம் பிரச்சனை உனக்கு!” என்றவளின் அதட்டலிலும் அவன் தெளியவில்லை. இன்னுமின்னும் அவளுக்குள் புதைத்தான்.
“நிக்ஸ், அம்மா அப்பா விளையாட்டு விளையாடி நிறைய நாளாச்சு. என்ன மாதிரி? இண்டைக்காவது விளையாடுவமா இல்ல..” என்று இழுத்துச் சிரித்தாள்.
அவள் தன்னைத் தேற்ற முனைவது புரிந்தது. ஒரு காலம் விரதமிருந்தார்கள். பின்னோ அதைத் துறந்தார்கள். ஆனாலும் இல்லறத்தின் இனிமைகளைத் திகட்டத் திகட்ட அனுபவிக்க முடியாமல் வாழ்க்கை அவர்களைத் துரத்திக்கொண்டேதான் இருக்கிறது. ஏக்கமாக நிமிர்ந்து, “நீ இல்லாட்டி நான் என்னடி ஆகியிருப்பன்?” என்று கேட்டான்.
குறும்புடன் நகைத்தாள் ஆரணி. “இன்னொரு பூரணியோட இதேமாதிரி இருந்திருப்பாய்.” என்றாள், கட்டிலில் விழுந்திருந்த தம் கோலத்தைக் கண்ணால் காட்டி.
அவள் வாயிலேயே ஒன்று போட்டுவிட்டு, “ஒரு நாளும் இல்ல. இதே ஆரணியோட மட்டும் தான் இப்பிடி இருந்திருப்பன்.” என்றான் அவன்.
“பாரடா! காதலை சொன்னதுக்கு அறைய கையத் தூக்கினவன் எல்லாம் கதைக்கப் பழகிட்டான்.”
அவனையே நக்கலடித்தவளை முறைத்தான் நிகேதன். “நீ என்னைப் பாக்க முதல் நான் தான் உன்ன பாத்தனான். அது தெரியாது உனக்கு!”
“ஆஹா!”
“அப்பவே உன்ன பிடிக்கும் எனக்கு.”
“பிறகு?”
அவனுக்குக் கோபம் வந்தது. என்ன சொன்னாலும் நம்பாமல் சிரிக்கிறவளை நன்றாகவே முறைத்தான். “நம்படி ஆரா! ஆனா நமக்கு இவள் எல்லாம் சரிவரமாட்டாள் எண்டுதான் காட்டிக்கொள்ள இல்ல.”
அவளுக்கு இதெல்லாம் தெரியும் தான். ஆனாலும் எப்போது இந்தப் பேச்சு வந்தாலும் விடமாட்டாள். “ஓ..! அதுதான் நானே வந்து சொன்னதும் ஆகா சந்தோசம் எண்டு கொண்டாடினீங்களோ?”
“லூசு! மனதுக்குப் பிடிக்கிறது வேற. யதார்த்தம் வேற. நீ இப்ப அனுபவிக்கிற இந்தக் கஷ்டத்தை எல்லாம் அனுபவிக்க வேண்டாம் எண்டு நினைச்சன். அதுவும் உன்னில வச்ச அன்புதான்டி.”
“சரி விடு! நீ என்னதான் தலைகீழா நிண்டும் என்னட்ட இருந்து தப்ப முடிஞ்சதா? இல்லையே. பாவமடா நீ.” என்று சிரித்தவளின் இதழ்களைக் கோபத்துடன் சிறை செய்தான் அவன்.