அவள் ஆரணி 30 – 1

அந்த ஒரு மாதத்தையும் கடத்துவதற்குள் ஆரணி திணறிப்போனாள். கைபேசியில் கூடப் பேச முடியாத நிலை. எந்த நேரமும் பிரச்சாரமும் கோஷமும் சுற்றிவர ஆட்களும் இருந்ததில் மெசேஜ் மட்டுமே அனுப்பிக்கொள்ள முடிந்தது. எப்போதாவது சொட்டு நீர் பாசனம் போன்று சில நொடித்துளிகள் பேசிவிட்டு வைத்துவிடுவான்.

அவனைப் பாராமல் அவன் குரலைக் கேளாமல் அவனின் அண்மையை அனுபவிக்காமல் அரைவாசியாகிப் போனாள் ஆரணி. அவனுடைய பாசம், கோபம், அதட்டல், உருட்டல் எல்லாவற்றுக்குமே மனம் ஏங்கிப் போயிற்று.
செண்டருக்கு போய்வந்ததில் பகல் பொழுதுகள் எப்படியோ ஓடின. மாலையும் இரவும் தான் வாட்டியது. வார இறுதிகளில் கயலும் ராகவனும் வந்து போனார்கள். யார் வந்தால் என்ன? அவளுடன் பேச யாருமே தயாராக இல்லையே. ராகவன் மட்டும் அவ்வப்போது பேசுவான். அவனுக்கும், சனி ஞாயிறுகளில் மட்டுமே பார்க்கிற மனைவியோடு பொழுதை செலவழிக்கவே நேரம் சரியாக இருந்தது.

ஒருவழியாக ஒரு மாதம் முடிந்து வீடு வந்த நிகேதன் ஆரணியைப் பார்த்து அதிர்ந்து போனான். அன்னையிடம் இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு அறைக்குள் வந்ததுமே, “என்னடி இது கோலம்? நான் என்ன வனவாசமா போனனான். ஒரு மாதத்துக்கு ஆள் பாதியாகிப்போய் இருக்கிறாய்?” என்று கடிந்துகொண்டான்.

“என்னைத் தனியா விட்டுட்டு போனவன் நீ. நீ கதைக்காத!” குரல் அடைக்க மொழிந்தவள் தன்னால் முடிந்தவரையில் அவனை இறுக்கமாகக் கட்டிக்கொண்டாள். முகமெங்கும் முத்தமிட்டாள். மார்பில் முகத்தை அழுத்திப் புதைத்தாள். அவள் விழிகளில் மெல்லிய நீர்ப்படலம். மூக்குநுனி அழுகையை அடக்கியதில் சிவந்து போயிற்று. அவன் கைகளும் அவளைத் தானாக வளைத்துக்கொள்ள, “என்ன ஆரா?” என்றான் ஆதுரமாக.

“உன்ன பாக்காம உன்னோட கதைக்காம விசர் வந்திட்டுது நிக்ஸ்.”

கனிவோடு சிரித்தான் அவன். “நான் மட்டும் சந்தோசமாவா இருந்தன்? காசுக்காகப் பல்லைக் கடிச்சுக்கொண்டு நிண்டுட்டு ஓடிவாறன்.” தானும் ஒருமுறை ஏக்கம் தீர அவளை இறுக்கி அணைத்து விடுவித்தான். அப்போதும் அவள் விலக மறுக்க, “அதுதான் வந்திட்டன் தானே. தள்ளு! குளிச்சிட்டு ஓடிவாறன். வேர்வை நாறுது!” என்றுவிட்டு கையோடு கொண்டுவந்திருந்த பையை எடுத்து அவளிடம் கொடுத்தாள்.

பிரித்துப் பார்த்தவள் விழிகளை விரித்தாள். “என்னடா இவ்வளவு இருக்கு?” அந்தளவில் தாராளமாகக் கொடுத்திருந்தார்கள்.

“இருக்காம? இதுக்குத்தானே உன்னையும் விட்டுட்டுப்போய் அந்தப்பாடு பட்டது. கவனமா எடுத்து வை. நாளைக்கு முதல் வேலையா வட்டிக்காரனுக்குக் கொண்டுபோய்க் குடுக்க வேணும்.” என்றான் உடைகளைக் களைந்துகொண்டே.

“இதையும் குடுத்தா முக்கால்வாசி முடிஞ்சிடும் என்னடா?”

“ம்ம். சுகிர்தன் இந்த ட்ரிப்ல அவன் உழைச்சதையும் தாறன் எண்டு சொன்னவன். அவனுக்கு அவன்ர கலியாணத்துக்குத் திருப்பித் தந்தா போதுமாம். இன்னொரு ஆறுமாதத்துக்கு வாகனங்கள் பெரிய பிரச்சனை தராம உழைச்சு தந்தா வட்டிப் பிரச்னையை முடிச்சிடலாம்.” என்றவனுக்கு மிகப்பெரிய ஆசுவாசம். பிறகும் கடன் இருக்கும் தான். அது ஆளையே அடித்து விழுங்கும் கடன் இல்லையே.

ஆரணிக்கும் சந்தோசமாக இருந்தது. ஆனால், ஆறுமாதம் என்பது இன்றைக்கு இருண்டு நாளை விடுகிற விடியல் அல்லவே. ஆ…று மாதங்கள். அந்த ஆறு மாதங்களும் மெல்ல மெல்ல கரையத் தொடங்கியது.

கயலுக்கு மாற்றல் கிடைத்து இங்கேயே வந்து சேர்ந்தாள். ராகவனுக்கும் அவளுக்கும் அமராவதி அம்மாவின் அறை கொடுக்கப்பட்டுவிட அவரின் வாசம் ஹால் என்றாகிப் போனது. எல்லோருக்குமே அது ஒருவித சிரமத்தைத்தான் உண்டாக்கிற்று. ஆனாலும் அந்தச் சின்ன வீட்டில் வேறு வழியும் இல்லை என்று பொறுத்தனர்.

அன்று, வழமை போன்று நிகேதனுக்கு அதிகாலை ட்ரிப் இருந்தது. நேரத்துக்கே எழுந்து டோஸ்ட்டை மெல்லிய சூட்டில் இரண்டு பக்கமும் வாட்டி, அதற்கு நுட்டெல்லா பூசி அவனுக்கும் அவளுக்குமாகத் தேநீரையும் சேர்த்து எடுத்துக்கொண்டு அறைக்கு வந்தாள், ஆரணி.

ரகசியக் குரலில் சிரிப்பும் கதைப்பும் சீண்டலுமாக வெகு அழகாகக் கழிந்துகொண்டிருந்தது அவர்களுக்கேயான அந்த நேரம். சற்று நேரத்தில் எழுந்து வந்து எட்டிப் பார்த்தார், அமராவதி. நிகேதனை ஒட்டிக்கொண்டு கட்டிலில் அமர்ந்திருந்த ஆரணிக்கு ஒரு மாதிரி ஆகிப்போயிற்று. காலைப்பொழுதில் கதவைப் பூட்டி வைப்பது அழகில்லை என்று அவள் சாற்றி வைத்தால் இப்படித் திறந்துகொண்டு வருவதா? நிகேதனை முறைத்துவிட்டு விலகி அமர்ந்தாள்.

“என்னம்மா?” என்றான் அவனும் சற்றுச் சூடான குரலில். அந்த என்னம்மாவில், ‘என்னம்மா இதெல்லாம்’ என்பது அடங்கிக்கிடந்தது.

அதை அலட்சியம் செய்து, “உன்ர மனுசி அங்கேயும் இங்கயும் ஓடித்திரிஞ்சா என்னெண்டு படுக்கிறது?” என்று கேட்டுக்கொண்டே உள்ளுக்கு வந்தார், அவர். ஆரணி கொதிநிலையின் உச்சத்துக்கே போய்க்கொண்டிருந்தாள். ஒரு வேகப்பார்வையால் அவளை ஆற்றுப்படுத்தினான், அவன்.

கண்ணாடி அணிந்திராததில் அருகில் வந்து என்ன சாப்பிடுகிறார்கள் என்று குனிந்து பார்த்துவிட்டு, “விடியகாலம இந்த இனிப்ப அவனுக்குக் குடுத்து சுகர் வரவைக்கப் போறியா நீ? என்னடா இது? அவள் நஞ்சை தந்தாலும் சாப்பிடுவியா?” என்றார் அதட்டல் குரலில்.

புருவங்களைச் சுளித்தான் நிகேதன். “என்ன கதை இது நஞ்சு அது இது எண்டு? நான் கேட்டுத்தான் அவள் கொண்டுவந்தவள். நீங்க போய்ப் படுங்கம்மா!” என்றான் எரிச்சலுடன்.

“நீ கேட்டா தருவாளா? உனக்கு இனிப்பு பிடிக்காதே. இதையெல்லாம் தந்து பழக்கி உன்னையும் கெடுத்திட்டாள் போல. மனுசன்ல அக்கறை இருந்தா கொஞ்சம் நேரத்துக்கு எழும்பி சமைச்சா என்னவாம்?”

ஆரணிக்கு அன்றைய நாளின் ஆரம்பமே கெட்டுப்போயிற்று. வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு அவருக்கு ஒன்றும் சொல்லாமல் விறு விறு என்று எழுந்து வெளியே வந்தாள். அவள் வாயை திறந்தால் நிச்சயம் அது சண்டையாக மாறும். அது கடைசியில் அவனுக்கும் அவளுக்குமான உரசலில் தான் போய்முடியும். அதைத் தவிர்த்துவிட்டாலும் மனம் புகைந்து தள்ளியது.

அதன் பிறகும் இதேதான் நடந்தது. “முழிப்பு வந்திட்டுது தம்பி!” என்று அவள் எழும்பும்போதே அவரும் எழுந்துகொண்டார்.

உண்மையாகவும் இருக்கலாம். ஹாலில் படுக்கிறவரை அவர்களின் நடமாட்டம் எழுப்பிவிடலாம். ஆனால், அவனுக்கும் அவளுக்கும் மட்டுமேயான தனிமைப் பொழுதை அவர் ஆக்கிரமித்துக் கொள்வது அவளுக்குப் பிடிக்கவில்லை. அவர் அறைக்கு வருவது அதைவிடப் பிடிக்கவில்லை. அதில் உணவை ஹாலுக்கே மாற்றினாள்.

அவனோடான தன் பொழுதுகள் வெகுவாக குறைந்துபோனதில் தன் நிம்மதியைத் தொலைக்கத் தொடங்கினாள், ஆரணி. நிகேதனுக்கும் மிகுந்த வருத்தம் தான். இது அமராவதியாகப் புரிந்து நடக்கவேண்டிய ஒன்று. அவரிடம் போய் இதைப்பற்றி அவன் பேசுவதே அழகற்ற செயல். அதில் அவனும் தனக்குள் இறுகினான்.

இப்படி அவர்களுக்கான தனிமை, அவர்களின் சந்தோசங்கள் எல்லாமே மெல்ல மெல்லப் பறிபோனது. இருவருக்குமே பகல்கள் வேலையில் கரைந்தன. வெளியே அமராவதி இருக்கிறார், எதுவும் கேட்டுவிடுமோ என்கிற பயத்தில் இனிமையான பேச்சும் சிரிப்பும் இல்லாமல் இயந்திரமாய் மாறிப்போன இரவுகள் கசந்து வழிந்தன. ஆரணியை ஒருவித எரிச்சல் தாக்கத் தொடங்கியது.

இது கயலுக்கு என்று கொடுத்த வீடு. அவளைப் போ என்று சொல்ல அவர்களுக்கு உரிமையில்லை. அவர்கள் தான் வேறு வீடு பார்க்க வேண்டியவர்கள். இதை எப்படி நிகேதனிடம் கேட்பது? அவன் கடன் கொடுப்பதில் ஓடிக்கொண்டு இருந்தான். வேறு வீடு என்றால் அதற்கு வாடகை கொடுக்க வேண்டும். தளபாடப் பொருட்கள் எல்லாமே புதிது வாங்கவேண்டும். எல்லாமே காசில் தங்கி இருந்தது. வேறு வழியில்லை. கடன் முடிகிற வரைக்கும் பல்லைக் கடித்துப் பொறுக்கத்தான் வேண்டும்.

அன்றைக்கு நிகேதன் வீடு வரும்போது ஆரணியின் முகம் வாடிப்போயிருந்தது. எல்லோரும் ஹாலில் இருந்ததில் என்ன என்று பார்வையாலேயே கேட்டான். அவள் ஒன்றுமில்லை என்று தலையை ஆட்டினாள். அவனுக்கு அவளைத் தெரியாதா? “என்னடி?” என்றான் தனியாகத் தள்ளிக்கொண்டுபோய்.

“பீரியட்ஸ் வந்திட்டுது.” என்றாள் கண்கள் கலங்க.

அவர்களின் தாம்பத்யம் ஆரம்பித்ததில் இருந்தே குழந்தையை வெகு ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறாள் அவள். அவனுக்கும் அந்த ஆவல் மிகுந்துதான் இருந்தது. பிந்திக்கொண்டே போவதில் அவன் காட்டிக்கொள்வதில்லை. இப்போதும் ஒரு ஏமாற்றம் மனத்தைக் கவ்வியது. இருந்தும் அதை மறைத்து, “அதுக்கு என்னத்துக்கு இவ்வளவு சோகம்? ஏலாம இருக்கா?” என்றான் அவளின் வயிற்றைத் தடவிவிட்டபடி.

“ப்ச்! அதெல்லாம் ஒண்டும் இல்ல. ரெண்டு நாள் லேட்டாகவும் சந்தோசமா இருந்தது.”

நம்பி ஏமாந்து இருக்கிறாள். இந்த வாரம் முழுவதும் அவனையும் நெருங்க விடவில்லை. அவனுக்கும் தெரியும். அவள் நெற்றியில் முத்தமிட்டு, “அப்ப ஐயான்ர காட்டுல இன்னும் மழைதான் எண்டுற?” என்று கேட்டுச் சிரித்தான் அவன்.

“போ நிக்கி! எனக்கு உண்மையாவே சரியான கவலையா இருக்கு. ஒரு மாதம் ரெண்டு மாதம் எண்டா பரவாயில்ல. ஆறுமாதம் தாண்டுது.” அவளின் விழிகள் தளும்பிப் போயிற்று. வீட்டுக்கு வந்து போகிறவர்கள், அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் கூட விசாரிக்கிற அளவுக்கு வந்தாயிற்றே.

தன் விளையாட்டை விட்டுவிட்டு அவளை முறைத்தான் அவன். “அடியேய் மொக்குச்சி! சும்மா கண்ண கசக்காத. இன்னும் கொஞ்சக் காலம் அனுபவிங்கடா எண்டு கடவுள் சொல்லுறார். உனக்கு அது விளங்க இல்லையா? அதெல்லாம் நடக்கிற நேரம் நடக்கட்டும். அதுவரைக்கும் சந்தோசமா இருப்பம்.” என்றான் அவளின் மூக்கோடு மூக்கை உரசியபடி.

“எங்க அனுபவிக்கிறது? கதைக்கவும் ஏலாது சிரிக்கவும் ஏலாது. என்னவோ எல்லாமே இயந்திரத்தனமா மாறின மாதிரி இருக்கு நிக்கி. வர வர எனக்கு ஒண்டுமே பிடிக்க இல்ல” என்றாள் குரல் அடைக்க.

அவன் நிலையும் அதேதான். என்ன செய்வது என்று தெரியாத நிலையில் பதிலற்று நின்றான். அவளோ, “எங்களுக்கு பேபி கிடைக்கும் தானே நிக்கி? எனக்கு உண்மையா பயமா இருக்கடா. என்ர அம்மா அப்பாவில இருந்து மாமி வரைக்கும் எல்லாருக்கும் என்னில கோவம். எல்லாரும் திட்டித் திட்டி எனக்கு..” எனும்போதே அவள் குரல் உடையவும் அவன் துடித்துப்போனான்.

“ஆராம்மா.. என்னடி நீ?” என்றபடி அவளை அணைத்துக்கொண்டான். “அது எப்பிடி எங்களுக்குக் கிடைக்காம போகுமாம்? கடவுள் அந்தளவுக்குப் பொல்லாதவர் இல்ல. கட்டாயம் உன்ன மாதிரி ஒரு பேபி என்னை மாதிரி ஒரு பேபி எண்டு அதெல்லாம் கிடைக்கும். நீ மனத போட்டு குழப்பாத.” என்று தேற்றினான். இப்படி உடைக்கிறவள் அல்லவே அவள். என்னாயிற்று? அவன் மனமும் கலங்கிப் போயிற்று. என்னென்னவோ சொல்லித் தேற்றினான்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை வெளியே போக ஆரணியைத் தயாராகச் சொன்னான் நிகேதன். அப்போது அவனிடம் வந்து நின்றாள் கயல்.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock