நிகேதன் வீடு வரும்போது நேரம் பதினொன்றைத் தாண்டியிருந்தது. பெரும் சண்டை ஒன்றில் அன்றைய நாள் ஆரம்பித்ததாலோ என்னவோ அந்த நாளே அவனுக்குச் சரியில்லை.
கிளிநொச்சி ட்ரிப் போனவனின் டயர் இடையில் பஞ்சராகி, உச்சி வெயிலில் நின்று அதை மாற்றுவதற்குள் போதும் போதும் என்று ஆகிப்போயிற்று. இதில் வந்தவர் சினந்து, அவரைச் சமாளித்துக் கிளிநொச்சிக்குக் கூட்டிக்கொண்டுபோய், திரும்பக் கூட்டிக்கொண்டு வந்து விட்டுவிட்டு, கார்மெண்ட்ஸ் பிள்ளைகளை ஏற்றி, அவர்களை அவரவரின் வீடுகளில் இறக்கிவிட்டு வருவதற்குள், ‘என்ன வாழ்க்கையடா’ என்று வெறுத்துப்போனது அவனுக்கு.
வாகனத்தைக் கொண்டுவந்து வளவுக்குள் எப்போதும் நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு கதவைத் திறக்க, ராகவன் இவனை நோக்கி வருவது தெரிந்தது. நிகேதனின் புருவங்கள் சுருங்கிற்று. இவ்வளவு நேரத்துக்கு இவன் ஏன் உறங்கப்போகாமல் முழித்திருந்து, அவனைத் தேடி வேறு வருகிறான். திரும்பவும் ஏதும் சண்டையோ? நினைத்த மாத்திரத்திலேயே மூளைக்குள் சூடேறியது.
உடலும் மனமும் முற்றிலும் களைத்திருந்த இந்த நேரத்தில் எதையும் கேட்கும் நிலையில் அவன் இல்லை. ஆனால், அந்த வீட்டின் மருமகனைத் தவிர்க்க முடியாதே. வேறு வழியற்று அவனைக் கேள்வியாகப் பார்த்தான்.
“உங்களோட கொஞ்சம் கதைக்கவேணும் நிகேதன். அதுதான் பாத்துக்கொண்டு நிண்டனான்.”
“சொல்லுங்கோ.”
“வேனுக்க இருந்தே கதைப்பமா?”
தனியாகக் கதைக்கப் பிரியப்படுகிறான். இறங்கப்போன நிகேதன் மீண்டும் அமர்ந்துகொண்டு, “ஏறுங்க.” என்றான்.
ஏறி அமர்ந்தவன் உடனே ஒன்றும் பேசிவிடவில்லை. எப்படி ஆரம்பிப்பது என்று தயங்குவது தெரிந்தது. அவன் யோசிக்க யோசிக்க இவனுக்கு என்னவோ என்று அழுத்தம் ஏறிக்கொண்டு போயிற்று.
“என்ன எண்டாலும் சும்மா சொல்லுங்க ராகவன்.” காத்திருக்கப் பொறுமையற்று ஊக்கினான்.
ஒரு முடிவு எடுத்தவன் போன்று இவன் புறமாகத் திரும்பிப் பேசினான் ராகவன். “இதைப் பற்றி நானும் கதைக்கிறன் எண்டு குறை நினைக்க வேண்டாம் நிகேதன். ஆனா, வீட்டுப் பொம்பிளைகளை விட நாங்க கிளியரா கதைச்சிட்டா சோலி முடிஞ்சு எண்டு நினைச்சன்.” என்றுவிட்டுத் தொடர்ந்தான் அவன்.
“ஒரு பிள்ளைக்கு அம்மா ஆகப்போறாள். ஆனாலும் என்ர மனுசிக்கு… கயலுக்கு இன்னும் பொறுப்பு வரேல்ல நிகேதன். இருந்திருந்தா என்னட்ட ஒரு வார்த்த கதைக்காம ரூம் கட்டுறதைப் பற்றி உங்களிட்ட வந்து கதைச்சிருக்க மாட்டாள். நான் கோபப்பட்டதுக்கு, ‘இவ்வளவு காலமும் அண்ணாதான் வீடு பற்றின முடிவு எல்லாம் எடுத்தவர். அந்தப் பழக்கத்தில ஆலோசனைதான் கேட்டனான். நான் காசு கேக்க இல்லை.’ எண்டு அழுகிறாள். இருந்தாலும் அவள் கேட்டிருக்கக் கூடாது. ஆரணி சொன்னதிலையும் பிழை இல்ல. ஆனா வயித்தில பிள்ளையோட இருக்கிறவள் மனம் நோகிறதுலையோ இப்பிடி அழுகிறதுலையோ எனக்கு உடன்பாடு இல்ல நிகேதன். எனக்கு என்ர மனுசியும் பிள்ளையும் முக்கியம். சுயநலமா கதைக்கிறன் எண்டு நினைக்காதீங்கோ. பிள்ளை எண்டுறது எவ்வளவு பெரிய செல்வம் எண்டு அஞ்சு வருசமா குழந்தைக்கு ஏங்குற உங்களுக்கு விளங்காம இருக்காது தானே?” என்றபோது நிகேதனின் கை ஸ்டேரிங்கை அழுத்தமாகப் பற்றியது. தாடை இறுகிற்று.
கேள்வியாக ஏறிட்டவனிடம் கோபத்தில் வார்த்தைகளை விட்டுவிடாமல் இருக்க வாயை இறுக்கி மூடிக்கொண்டு அமர்ந்திருந்தான் நிகேதன்.
அவன் முகம் என்ன சொன்னதோ, “நிகேதன் அது நான் பிழையா…” என்றவனைக் கையால் தடுத்து, “சொல்ல நினைக்கிறதை சொல்லி முடிங்க ராகவன்.” என்றான் நிகேதன்.
“வேற ஒண்டும் இல்ல. என்ர மனுசி பிள்ளையை எந்தக் குறையும் இல்லாம நான் பாப்பன். இத கயலிட்டயும் சொல்லிப்போட்டன். இனி கயல் எந்த உதவியும் உங்களிட்ட கேக்க மாட்டாள். அப்பிடியே ஏதாவது யோசிக்காம கதைச்சாலும் ஆரணிய கொஞ்சம் அமைதியா போகச் சொல்லுங்கோ.” என்றதுமே, கோபத்தில் அவன் தேகம் இரும்பாய் இறுகியது. என் மனைவியைப் பற்றிக் கதைக்க இவன் யார் என்று மனம் கொதித்தது. தங்கையின் கணவன் என்றுகூடப் பார்க்காமல் சூடாக எதையாவது திருப்பிக் கொடுத்துவிடப் பார்த்தான்.
எல்லோரையும் போன்று ஆத்திரப்பட்டோ அவசரப்பட்டோ இல்லை தமக்காக மட்டுமாக யோசித்தோ பேசமுடியாத நிலை அவனது. ஒரு நொடி விழிகளை இறுக்கி மூடித் திறந்துவிட்டு, “ஆரா தானா போய் ஆரிட்டையும் எதுவும் கதைக்கமாட்டாள் ராகவன். நீங்களா வராதவரைக்கும் அவளும் வரமாட்டாள்.” என்றுவிட்டு, வாகனத்தை விட்டு இறங்கினான்.
அவனுடைய கோபத்தை ராகவானால் உணர முடிந்தது. அவனும் எதையும் வேண்டுமென்று பேசவில்லை. உங்களிடம் நானோ என் மனைவியோ எந்த உதவிக்கும் வரமாட்டோம் என்று சொல்ல நினைத்தான். அவனளவில் தெளிவாகவும் நிதானமாகவும் சொல்லியிருக்கிறான். அதுவே போதும் என்று தானும் இறங்கிக்கொண்டான்.
வெளியே நடந்த எதையும் அறியாத ஆரணி, அறைக்குள் வந்தவனின் முகம் கோபத்தில் சிவந்து தணலைப் போன்று ஜொலிப்பதைக் கண்டு திடுக்கிட்டுப் போனாள். ஆடைகளை விறுவிறு என்று கழற்றி எறிந்துவிட்டு, சாரத்தை மாற்றிக்கொண்டு டவலை தூக்கி தோளில் போட்டுக்கொண்டு வந்த வேகத்திலேயே கிணற்றடிக்கு நடந்தான் அவன்.
இன்னுமா இவனுக்குக் கோபம் தீரவில்லை? மனதில் பாரமேற அவன் கழற்றி எறிந்தவற்றை எடுத்து அழுக்கு உடைகள் போடும் கூடைக்குள் போட்டுவிட்டுக் காத்திருந்தாள். யாரில் சரி பிழை என்பதையெல்லாம் தாண்டி அவனுடைய பாராமுகம் அவளை வாட்டியது.
அவனும் வந்தான். அவள் விழிகள் அவனையே தொடர்ந்தது. தலையை அழுத்தித் துடைத்தான். டவலைத் தூக்கிப் போட்டான். போனில் அலாரம் செட் பண்ணிவிட்டு தன் பக்கத்தில் சென்று படுத்துக்கொண்டான்.
நெற்றியின் மீது ஒரு கையை மடித்துப் போட்டுக்கொண்டு விழிகளை மூடிக்கொண்டவனையே சற்று நேரம் பார்த்துக்கொண்டு நின்றாள், ஆரணி. இத்தனை வருடங்களில் அவர்களுக்குள் எத்தனையோ முறை சண்டைகள் வந்திருக்கிறது. அப்போதெல்லாம் கொஞ்சல், குலாவல் இருக்காதே தவிர அத்தியாவசியப் பேச்சுக்கள் இருக்கும். அதைக்கூட அவன் தவிர்ப்பது இதுதான் முதல் முறை. ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டுத் தன்னைச் சமாளித்தாள்.
“நிக்கி சாப்பிடேல்லையா?”
அவனிடமிருந்து பதில் இல்லை என்றதும், மீண்டும், “நிக்கி…” எனும்போதே, “பசி இல்ல!” என்றான் அவன்.
குரலே பெரும் கோபத்தில் இருக்கிறான் என்று சொல்லியது. ஏன் என்று ஓடினாலும் வந்து அவனருகில் அமர்ந்தாள்.
“சாப்பிட்டு படு நிக்கி.”
“…”
“நிக்கி…”
வேகமாகக் கையை முகத்திலிருந்து எடுத்து, “ஏன்டி நிம்மதியா படுக்கக் கூட விடமாட்டியா? என்ன இது எப்ப பாத்தாலும் நொய் நொய் எண்டுகொண்டு.” என்று சுள் என்று பாய்ந்தான்.
விக்கித்துப்போனாள் ஆரணி. விழிகள் தளும்பியது. வேகமாக எதிர்புறம் முகத்தைத் திருப்பி நாசுக்காகத் துடைத்துக்கொண்டாள்.
“நிம்மதியா படுக்கக் கூட விடமாட்டியா எண்டா… எனக்கு விளங்க இல்ல நிக்கி?”
“தயவு செய்து அடுத்தச் சண்டையை ஆரம்பிக்காத. எரிச்சலா வருது!”
அவள் அதிர்ந்தாள். “ஏன் நிக்கி இப்பிடியெல்லாம் கதைக்கிறாய்? நானாடா சண்டையை ஆரம்பிக்கிறன்? இன்னுமொரு செலவுக்கு நீ எங்க போவாய்? கடனுக்கு மேல கடன் படுவியா? அவள் கேட்டுட்டா உன்னால மறுக்க ஏலாது. அதனாலதான் நான் முந்திக்கொண்டு நிலமையை எடுத்துச் சொன்னனான்.” தழுதழுத்த குரலில் மென்மையாக எடுத்துரைத்தாள்.
“வரவு செலவு, கடன் வாங்குறது, கட்டுறது எல்லாம் என்ர பிரச்சனை. நான் பாக்கிறன்! நீ தலையிடாத. முக்கியமா வாயத் திறக்காத!” என்றான் அவன் பட்டென்று.
அவளுக்கு நெஞ்சில் யாரோ ஈட்டியைப் பாய்ச்சியதுபோல் வலித்தது. “நான் தலையிட வேண்டாம் எண்டால்… நீயும் நானும் வேற வேறயா நிக்கி?” தொண்டை அடைத்துக்கொள்ளக் கேட்டாள்.
அவன் சுள்ளென்று பாய்ந்தான். “வேற தான்டி. நீ வீட்டுல இருக்கிறாய். நான் வெளில நாயா அலையிறவன்; வாகனம் ஓட்டுறவன். என்னோட வாற மனுசர பக்குவமா கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டியது என்ர பொறுப்பு. அதுக்கு எனக்கு நிம்மதி வேணும். நீ ஒவ்வொரு நாளும் இழுத்துவைக்கிற சண்டைக்குத் தீர்ப்பு சொல்ல ஏலாம எனக்கு முழி பிதுங்குது. என்ன வாழ்க்கை இது? நரகம்!” என்றான் மிகுந்த வெறுப்புடன்.
கண்களை அப்படியே இறுக்கி மூடிக்கொண்டாள் ஆரணி. எதையெல்லாம் அவன் சொன்னால் அவளிதயம் தாங்காதோ அதையெல்லாம் சொல்கிறான் அவளுடையவன். இதயமே தாங்கிக்கொள்! நொறுங்கிவிடாதே! இயலாமல் நெற்றிப்பொட்டை அழுத்திவிட்டாள். அது இன்னுமே விண் விண் என்று வலித்தது.
அவள் படுகிற பாடும் சேர்த்து அவனை வதைத்தது. எழுந்து அமர்ந்து தலையைப் பிடித்துக்கொண்டான். “விடிய போனா இரவுதான் வாறன். ஒரு நாளாவது நிம்மதி இருக்காடி இந்த வீட்டில? ஓடி ஓடி உழைக்கிறன். என்னால முடிஞ்ச வரைக்கும் உங்க எல்லாரையும் சந்தோசமா வச்சிருக்கத்தான் பாக்கிறன். இத விட இன்னும் என்ன செய்ய எண்டு சத்தியமா எனக்கு விளங்க இல்ல. யோசிக்க யோசிக்கச் செத்திடலாம் போல இ…” என்றவனின் வாயில் வேகமாகத் தன் கையை வைத்து நிறுத்தினாள், ஆரணி. உடைப்பெடுத்த கண்ணீரையும் கண்ணுக்குள்ளேயே அடக்கினாள். இதழ்கள் அழுகையில் நடுங்கிற்று.
“இப்ப என்ன? உனக்கு நிம்மதி வேணும். நான் கதைக்கக் கூடாது. அவ்வளவு தானே. இனி கதைக்கேல்ல. வா, வந்து சாப்பிட்டுப் படு, பிளீஸ்!” தழுதழுத்த குரலில் கெஞ்சினாள்.
“எனக்கு வேண்டாம். விடு!” என்றுவிட்டு மீண்டும் அவன் சரிய, “தம்பி இன்னும் சாப்பிடாம என்ன செய்றாய்?” என்று குரல் கொடுத்தார் அமராவதி.
“பசி இல்லையம்மா.”
“வேலைக்குப் போற பிள்ளை. பசிக்காம எப்பிடி இருக்கும்? வந்து சாப்பிடு. வா!” என்று அவர் எழுந்துகொள்ளும் அரவம் கேட்டது.
“ப்ச்!” அவரின் தொணதொணப்புத் தாளாமல் எழுந்து போனான், அவன்.
ஆரணியில் விழிகள் நம்பமுடியாத் திகைப்பில் அகன்றன. போகிறவனையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். அங்கே அமராவதி அவனுக்கு உணவு கொடுப்பது தெரிந்தது.
கோழியில் குழம்பும், கத்தரிக்காய் பால்கறி, கோழிக்கால் பொரியலும், வல்லாரை கீரையில் சம்பலும் செய்து வைத்திருந்தாள். பசித்த வயிறுக்கு வெகு ருசியாக இறங்கியது உணவு. ‘நல்லா சமைக்கிறா…’ அவளது கைப்பக்குவம் அவன் கோபத்தைக் கூட ஆற்றியது.
“அந்தப் பொரியல் கொஞ்சம் போடுங்கம்மா.” கேட்டு வாங்கிச் சாப்பிட்டான்.
விழிகளை இறுக்கி மூடியபடி அப்படியே அமர்ந்திருந்தாள், ஆரணி. அவனுடைய நிம்மதி, சந்தோசத்தை எல்லாம் குழைப்பது அவள் என்றுவிட்டானே. இதயத்தை யாரோ கசக்கிப் பிழிவதுபோல் வலித்தது அவளுக்கு. அடக்கமாட்டாமல் விசித்துவிட்டவள், வேகமாகக் கையால் வாயைப் பொத்திக்கொண்டாள்.
சாப்பிட்டு வந்தவன் அவள் இன்னும் அதே இடத்திலேயே இருப்பதைக் கண்டு நின்றான். அவனுக்கு முதுகு காட்டி அமர்ந்திருந்தவள் வேக வேகமாகக் கன்னங்களைத் துடைப்பது தெரிந்தது. உதட்டைக் கடித்தான். “சாப்பிட்டியா?” சாப்பிட்டு வந்து கேட்கிறோம் என்கிற உண்மை சுட்டதில் அவனுக்கும் குரல் எழும்பவில்லை.
அவளுக்குக் கண்ணீர் பெருகியது. அவன் பார்க்க அழக் கூடாது என்கிற பிடிவாதத்துடன் கண்ணீரை உள்ளுக்கு இழுத்தபடி இருந்தாள். “சாப்பிட்டியா எண்டு கேட்டனான், ஆரா!” என்றபடி அருகே வந்தான். அவன் தோளைத் தொட முனைய வேகமாக விலகி எழுந்து வந்து தன் பக்கத்தில் படுத்துக்கொண்டாள்.
அவள் இருக்கிற அந்த விளிம்பு நிலையில் அவன் சாதாரணமாகத் தொட்டாலே போதும். முழுவதுமாக உடைந்துவிடுவாள். கதறிவிடுவாள். எப்போது, அவனின் சந்தோசமும் நிம்மதியும் அவளால் தொலைகிறது என்றானோ அதன்பிறகும் அவனுடைய சந்தோசத்தையோ நிம்மதியையோ கெடுக்கிற காரியங்களை ஆற்ற அவள் தயாராயில்லை. தன் துனபத்தையும் துயரையும் தனக்குள்ளேயே அடக்கிக்கொண்டாள். அவளின் சின்னஞ் சிறு இதயம் வலி தாங்கமாட்டாமல் கதறியபோதும் பல்லைக் கடித்து பொறுத்துக்கொண்டாள்.
அவளையே பார்த்துக்கொண்டு நின்றான் நிகேதன். அவளிடம் அசைவே இல்லை. விளக்கை அணைத்துவிட்டு வந்து தன் பக்கத்தில் தானும் சரிந்துகொண்டான். ஆரணியின் கண்ணீர் கன்னங்களை நனைத்தபடி ஓடிக்கொண்டே இருந்தது.