அவள் ஆரணி 35 – 2

அவர்களைக் கண்டு திகைத்து நின்றாள் ஆரணி. விழிகளை அகற்றக்கூட முடியவில்லை. இந்த ஐந்து வருடங்களில் அடிக்கடி நினைத்துக்கொள்வாள். அதுவும், வாழ்க்கை என்றால் என்ன என்று அவள் படிக்க ஆரம்பித்துவிட்டதில் இருந்து அவர்களின் அருமை இன்னும் அதிகமாக விளங்க ஆரம்பித்து இருந்தது. எப்போதாவது தூரத்தில் வைத்துக் காண்பாள். ஓடிப்போய்க் கதைக்க ஆவல் எழுந்தாலும் விலகி வந்துவிடுவாள். இன்றைக்கு அவனும் அவளும் எவ்வளவோ நன்றாகத்தான் வாழ்கிறார்கள். இருந்தாலும் அவர்களின் முன்னே சென்று நிமிர்ந்து நிற்கும் அளவுக்கு அவளின் தரம் உயரவில்லை. ‘உங்களிடம் நான் எதற்கும் கையேந்த வரவில்லை’ என்கிற இடத்தில் இருக்கிறபோதுதான் போகவேண்டும் என்கிற வைராக்கியம் இத்தனை நாட்களாகத் தடுத்து நிறுத்தியிருந்தது.

ஆனால் இன்று, வெகு அருகாமையில் அவர்களைக் கண்டபோது உள்ளத்தில் எதுவோ ஒன்று உடைந்து அழுதது. யசோதா சற்றே வயதாகி இருந்தார். என்றாலும் அவரிடம் பெரிய மாற்றமில்லை. சத்தியநாதனின் ஆளுமையும் அழுத்தமும் முகத்தின் இறுக்கமும் கூட அப்படியேதான் இருந்தது. ஆனாலும், உடல் அளவில் தளர்ந்து தெரிந்தார். ‘அப்பாக்கு வயசாகிட்டுது..’ அவளுக்குக் கண்ணில் நீர் மல்கியது. அவரிடம் ஓடிப்போக, அப்பா என்று அவரைக் கட்டிக்கொள்ள, ‘உங்களுக்கு என்ன அவ்வளவு பிடிவாதம்’ என்று சண்டை பிடிக்க உடலும் உள்ளமும் துடித்துப் போயிற்று.

அவளுக்குத்தான் சொன்ன சொல்லை நிறைவேற்றாமல் போகமுடியாத நிலை. அவர்களுக்கு அப்படி எதுவும் இல்லை தானே. அவளைத் தேடி வரலாமே. ஏன் வரவில்லை? அந்தளவுக்குக் கோபமா? துடித்தாள் ஆரணி.

நிகேதனும் அவர்களை அங்கே எதிர்பார்க்கவில்லை. திகைப்பும் கேள்வியுமாக நண்பனைத்தான் திரும்பிப் பார்த்தான். ‘சொறி மச்சி..’ என்று உதடசைத்தான் அவன். இரு தரப்பும் தாமாக சந்தித்துக்கொள்ளப் போவதில்லை. இப்படி ஒரு சூழ்நிலை அமைந்தால் மாற்றம் வராதா என்கிற நப்பாசையில் தான் அவர்கள் வருவார்கள் என்று தெரிந்தும் இவர்களிடம் சொல்லாமல் விட்டான்.

தர்மினியின் பெற்றோர் வாசலுக்கே விரைந்து சென்று அவர்களை அழைத்து வருவதிலேயே அங்கிருந்துதான் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று நிகேதன், ஆரணிக்குப் புரிந்து போயிற்று. வேகமாக ஆரணியிடம் சென்று நின்றான் நிகேதன். அவனுடைய கை ஒன்று தானாகவே அவளை மென்மையாக அரவணைத்தது.

கண்ணில் நீருடன் திரும்பி அவனைப் பார்த்தாள் ஆரணி. “அழாத!” என்றான் கனிந்த குரலில். “போய்க் கதைக்கப் போறியா? நானும் வாறன்.” அவள் மறுத்துத் தலையசைத்தாள்.

அமராவதி, கயலினி, ராகவன் மூவருக்குமே அவர்களை இனம் கண்டுகொள்ள முடியாதபோதும் ஆரணியின் கலங்கிய தோற்றம் எதையோ உணர்த்த நிகேதனின் அருகில் வந்தான் ராகவன்.

“ஏதாவது பிரச்சனையா நிகேதன்?”

“இல்ல. அது ஆரான்ர அம்மாவும் அப்பாவும்.”

“ஓ..!” என்றவனுக்கு மேலே என்ன சொல்லுவது என்று தெரியவில்லை. அவன் மூலம் பெண்கள் இருவருக்கும் செய்தி போனது. சத்தியநாதனை பார்த்தவர்களுக்கு அவளின் அந்த நிமிர்வும் திமிரும் யாரிடமிருந்து வந்திருக்கிறது என்று புரிந்து போயிற்று.

அமராவதிக்குப் புகைந்தது. ‘பெரிய பணக்காரராம். ஒரு ரூபா சீதனம் இல்லாம மகளை அனுப்பிப்போட்டு என்ன திமிர் வேண்டிக்கிடக்கு!’ என்று எரிச்சல் கொண்டார்.

சத்தியநாதன் தம்பதியினர் திருமணம் முடிந்ததுமே மணமக்களை வாழ்த்திவிட்டுப் புறப்பட்டனர். விருந்துக்குப் பெண் வீட்டினர் அழைத்தும் நாசுக்காக மறுத்தார் யசோதா. தன்னிடம் வேலை பார்ப்பவர்கள் என்கிற முறையில் அவர்கள் வீட்டு விசேசங்களில் கலந்து கொண்டாலுமே கணவர் இப்படியான இடங்களில் எல்லாம் இறங்கிப் போகமாட்டார் என்று தெரிந்து யசோதாவே அனைத்தையும் சமாளித்தார்.

அதைவிட, மகளையும் அங்கே பார்ப்போம் என்று அவரும் எதிர்பார்க்கவில்லை. பார்த்த நொடியில் இருந்து மனது பொறுக்கவே இல்லை. அவர்களிடம் பணிபுரிகிறவரின் மகளின் திருமணம் என்பதில், வரவேண்டுமே என்பதற்காக வெகு சாதாரணமாக வெளிக்கிட்டு வந்திருந்தார் அவர். அவரின் அந்த, ‘வெகு சாதாரணம்’ புதுக் கலியாணப் பெண்ணான கயலினியின் ஆபரணங்களின் இரண்டு மடங்கு இருந்தது. ஆனால், ‘ஆரணி இண்டஸ்ட்ரீஸ்’ இன் தனியொரு வாரிசின் தேகத்தில் தங்கத்தைத் தேடவேண்டியிருந்தது. இதில் அவள் ஒரு திருமணத்துக்கு வந்திருக்கிறாள்.

மனம் புளுங்க கணவரோடு மண்டபத்தை விட்டு வெளியேறிக்கொண்டிருந்த யசோதா ஒரு கட்டத்துக்குமேல் முடியாமல், “நீங்க போய்க் காரை எடுங்கோ சத்யா. நான் இப்ப வாறன்.” என்றுவிட்டு விறுவிறு என்று மகளிடம் வந்தார். வந்த வேகத்தில் நிகேதனை ஒரு நெருப்புப் பார்வை பார்த்தவர் அவளின் கையைப் பற்றித் தரதர என்று இழுத்துக்கொண்டு வெளியே நடந்தார்.

யாருக்கும் கேட்காத தூரம் வந்ததும் அவளைப் பிடித்துத் தள்ளிவிட்டார்.

“இதுதானா நீ தேடி வந்த சந்தோச..மான வாழ்க்கை?”

“அம்மா..” கண்கலங்கினாள் அவள்.

“வாயத் திறக்காத!” என்றார் விரல் நீட்டி. “என்னவோ ஏழ்மை நிரந்தரமில்லை, அவன் முன்னுக்கு வருவான், என்ன நல்லா வச்சிருப்பான் எண்டு நிறையச் சொன்ன. அஞ்சு வருசமாகியும் ஒரு மண்ணாங்கட்டியையும் காணேல்ல. ஆனா ஒண்டு, நீ சொன்ன மாதிரி அவன் நல்ல கெட்டிக்காரன் தான். உன்னையும் வேலைக்கு அனுப்பி ஒண்டுக்கு ரெண்டுபேரா உழைச்சு அவன்ர தங்கச்சிக்கு நல்ல சீதனத்தோட கட்டி குடுத்து இருக்கிறானே. இனி என்ன கைக்கும் வாய்க்கும் அல்லாட போறியா?” என்றவருக்கு ஆத்திரம் அடங்குவேனா என்றது.

அவள் அணிந்திருந்த ஆரத்தை ஒற்றை விரலால் தூக்கிக் காட்டினார். “கழுத்தில தாலி இல்லை எண்டுறதை மறைக்கிறதுக்குப் போலி நகை. கை, காது எங்கயும் ஒரு பொட்டுத் தங்கம் இல்ல. உன்ன இப்பிடி பாக்கிறதுக்கா பெத்து வளத்தம். அப்பாக்கு கிடைச்ச மரியாதைய பாத்த தானே. எங்கட அந்த உயரம் எங்க நீ வாழுற வாழ்க்கை எங்க?”

அவளின் சேலைக்குப் பொருத்தமாகச் சிவப்பும் பச்சையும் கற்கள் பதித்த சற்றே தடிமனான வெளிப்படையாகச் சொல்லப்போனால் கழுத்தில் தாலி இல்லை என்பதைக் காட்டிக்கொள்ளாத அளவுக்குத் தடிமனான நெக்லஸ் மற்றும் ஆரம் அணிந்திருந்தாள். அதற்குப் பொருத்தமான காதணிகள் வளையல்கள் எல்லாமே. அதை அவர் கண்டுகொள்வார் என்று எதிர்பாராதவளின் முகம் அவமானத்தில் சிவந்து போயிற்று.

“அம்மா பிளீஸ். ஆட்களுக்குக் கேக்கப்போகுது!” கண்ணீருடன் முணுமுணுத்தாள்.

“கேட்கட்டும். கேட்டா எனக்கு என்ன? அம்மாவும் அப்பாவும் பெரிய பகட்டா வந்திட்டு போறினம்(போகிறார்கள்). ஆனா மகள் சோத்துக்கே பிச்சை எடுக்கிறாள் எண்டு எங்களுக்குப் பின்னால சனம் கதைக்காது? அதைவிடப் பெருசாவா உன்னைப்பற்றிக் கதைக்கப்போகுது? நீயும் நீ தேடி வந்த வாழ்க்கையும்! ச்சேய்!” வெறுப்புடன் மொழிந்துவிட்டுப் போனார் அவர்.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock