யாழ் குடாநாட்டில், யாழ்ப்பாண நகரத்திலிருந்து சுமார் இரண்டு மைல் தொலைவில் அமைந்திருக்கின்ற நல்லூரில், ‘யாழின் மணிமகுடம்’ என்கிற உலகப்பிரசித்தியோடு வீற்றிருந்து அருள்பாலிக்கிறான் நல்லூர் கந்தன்.
கந்தப் பெருமானின் காலடியில், அவனைச் சாட்சியாகக் கொண்டு, சுற்றமும் சொந்தமும் சூழ பிரமிளாவின் கழுத்தில் மாலைசூடி, அவளைத் தன் திருமதியாக வரித்துக்கொண்டிருந்தான் கௌசிகன்!
அந்த நொடிவரை எல்லோருக்குள்ளும் ஒரு பதட்டமும் காரணமறியாத பயமும் சூழ்ந்தே இருந்தன. மனங்கள் ஒத்து மணம் நடந்திருக்க மணமக்கள் மகிழ்ந்திருப்பார்கள். இரு குடும்பங்கள் கலந்து பேசி நடாத்தி வைத்திருந்தால் சொந்தங்கள் கொண்டாடியிருக்கும். இங்கேதான் எதுவுமே இல்லையே! கட்டாய மணம் என்பதில் ஒரு கலக்கம் சூழ்ந்தே இருந்தது.
அதுவும் பிரமிளா கலங்கித் துடித்துக்கொண்டிருந்த நெஞ்சத்தையும், கண்ணீர் கசியப் பார்த்த விழிகளையும் அடக்கி, எதையும் காட்டிக்கொள்ளாமல் அவனுக்குக் கழுத்தை நீட்டுவதற்குள் ஓய்ந்தே போயிருந்தாள்.
அப்படியிருந்தும் அவன் அவளின் கழுத்தில் பொன்தாலியை அணிவித்து முடித்தபோது, எவ்வளவு முயன்றும் சொட்டிவிட்ட இரண்டு துளிக் கண்ணீர்களை அவளால் காப்பாற்றவே முடியாமல் போயிற்று! முகம் இறுக கேள்வியாக நோக்கியவனைப் பார்ப்பதை வேண்டுமென்றே தவிர்த்தாள்.
அவளைப் பெற்றவர்கள், மகளின் திருமணத்தைக் கண்ணாரக் கண்ட மகிழ்வில் வடித்த ஆனந்தக் கண்ணீருடன் சேர்த்து, இப்படியான ஒருவனின் கட்டாயத்துக்குப் பணிந்துபோனோமே என்று வேதனைக் கண்ணீரையும் சேர்த்துச் சிந்தினார்கள்.
தனபாலசிங்கம் முற்றிலுமாக மனத்தளவில் ஓய்ந்து போயிருந்தார். அவனைப் பற்றி விசாரித்துத் தெரிந்துகொண்டதில் ஒரு குறை சொல்ல முடியாத ஒழுக்கசீலன் என்பது மட்டுமே அவருக்கான ஆறுதலாக இருந்தது.
மற்றும்படி கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுத்து, எடுக்க வேண்டிய இடத்தில் எடுத்து, அடிக்க வேண்டிய இடத்தில் அடித்து, மிரட்ட வேண்டிய இடத்தில் மிரட்டித் தன் காரியம் சாதித்துக்கொள்வதில் அவன் மிகச்சிறந்த வியாபாரி என்றார்கள்.
இந்தத் திருமணம் நடந்தே ஆக வேண்டும் என்று பிள்ளையார் சுழி போட்ட செல்வராணி கூடக் கனத்துப்போன மனத்துடன்தான் சுற்றிக்கொண்டிருந்தார். ராஜநாயகம் மட்டும் நினைத்தத்தைச் சாதித்த பெருமிதத்தைப் பெண் வீட்டினரிடம் காட்டியபடி தன் முக்கிய விருந்தினர்களுடன் பெருமை பீற்றிக்கொண்டிருந்தார்.
திருமணம் முடிந்து மத்தியான விருந்தும் முடிந்து மாலையில் உயர்தர ஹோட்டல் ஒன்றில் திருமண வரவேற்பு நடந்துகொண்டிருந்தது.
மோகனனுக்கு நடக்கும் எதுவும் கொஞ்சம் கூடப் பிடிக்கவேயில்லை. இந்தத் திருமணம் நடக்கக் கூடாது என்று பிரமிளாவுக்கு அடுத்தபடியாகப் போர்க்கொடி தூக்கித் தோற்றுப்போயிருந்தான். அவனை அவமதித்த, கன்னத்தில் அறைந்து கேவலப்படுத்திய ஒருத்தி அவனுக்கு அண்ணி.
அவளைப் பழிவாங்க வேண்டும் என்கிற வெறியுடன் அவன் காத்திருக்க, அவளோ அவனே மதிக்கவேண்டிய பதவிக்கு வருகிறாள். பொறுக்கவும் முடியவில்லை. அதைத் தாங்கிக்கொள்ளவும் இயலவில்லை.
வெறுத்துப்போய் வெளியே வந்தவனின் விழிகளில் விழுந்தாள் அவள். அன்று காலையிலிருந்து அவனை, அவளையே கவனிக்க வைத்துக்கொண்டிருக்கும் அவள்.
அப்படி, முதன்முதலில் அவளைக் கவனிக்க வைத்தவன் ரஜீவன். திருமணத்துக்கென்று வேட்டி சட்டையில் புறப்பட்டுச் சைக்கிளில் வந்து இறங்கியவனைக் கண்டதுமே, ‘இவனை ஆர் இஞ்ச கூப்பிட்டது!’ என்கிற கோபத்துடன் அவனை நோக்கி நடந்தவனைத் தேக்கியது, அழகான நீலப்பட்டில் மிகுந்த அழகும் நளினமும் துலங்க ஓடிவந்து, “விடியவே வாடா எண்டு சொன்னா எப்ப வாறாய்” என்று கேட்டுக்கொண்டு ரஜீவனிடம் ஓடிவந்த அவள்தான்.
இவனை வரவேற்கும் இவள் யார்? இதுவரை பார்த்தது இல்லையே என்று கவனித்தபோதுதான் இவள் அந்தப் பிரமிளாவின் தங்கை என்பது தெரிய வந்தது. அப்படிக் கவனிக்க ஆரம்பித்தவன்தான் இப்போதுவரை தன்னை மீறி அவளையே கவனித்துக்கொண்டிருக்கிறான்.
வெறுப்புடன்தான் பார்க்கிறான். ஆனால், பார்த்துக்கொண்டே இருக்கிறான்.
தம்பதியினர் கேக் வெட்டி முடித்து, மோதிரங்களை மாற்றிக்கொண்டு விருந்தினரோடு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தனர். மேடைக்கு அருகிலேயே நின்றபடி தமக்கைக்குத் தேவையானவற்றையும் கவனித்து, அதேநேரம் தன் தாய் தந்தையரையும் கவனித்தபடி நின்றவள் ஒருமுறை எதிரில் வந்தபோது, “ஏய்! நீ பொம்பிளை வீடுதானே. போய்க் குடிக்கிறதுக்குக் கூலா எடுத்துக்கொண்டு வா!” என்றான் வேண்டுமென்றே.
அவளோ நிதானமாக நின்று அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, “ஏன் உங்களுக்குக் கால் இல்லையோ?” என்று பதில்கேள்வி கேட்டாள்.
“ஏய், நான் ஆர் தெரியுமா? மாப்பிள்ளையின்ர தம்பி! மரியாதையா சொன்னதைச் செய்!”
“மாப்பிள்ளை கேட்டாலே குடுக்கமாட்டன். இதுல மாப்பிள்ளையின்ர தம்பியாம்!” உதட்டை வளைத்துச் சொல்லிவிட்டு அவள் நடக்க, அந்த அவமதிப்பைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், “நான் நினைச்சா இந்தக் கலியாணத்தையே குழப்பிவிட்டுடுவன்!” என்றான் அவன்.
“அதை முதல் செய்ங்க. உங்களுக்குப் புண்ணியமா போகும்! என்ர அக்கா நிம்மதியா வாழட்டும்.” என்றுவிட்டுப் போய்விட்டாள் அவள்.
குடும்பத்துக்கே திமிர்! மனம் கொதித்தது அவனுக்கு.
பதிலடி கொடுத்துவிட்டு நடந்தாலும் மனத்தில் கவலையாயிற்று பிரதீபாவுக்கு. இப்படியான வீட்டுக்கா அவளின் அக்கா போக வேண்டும்? இந்தத் திருமணம் வேண்டாம் வேண்டாம் என்று எவ்வளவு சொல்லியும் கேட்கவே இல்லையே இந்த அக்கா.
இது எல்லாவற்றுக்கும் காரணம் மேடையில் நிற்கிற அந்த மனிதர்! ப்ச் இனி அவர் அவளுக்கு அத்தான்! அப்படிக் கூப்பிடக்கூடப் பிடிக்காமல் அவனையே முறைத்துக்கொண்டு நின்றாள்.
வாழ்த்த மேடையேறி வந்தவர்களுக்குக் கைகொடுத்து சிரித்துப்பேசி புகைப்படம் எடுத்துக்கொண்டாலும், கீழிருந்து தன்னையே முறைத்தபடி நின்றவளைக் கண்டுகொண்ட கௌசிகனின் முகத்தில் மென்னகை மலர்ந்தது. புகைப்படம் எடுத்துக்கொண்டவர்கள் இறங்கியதும் என்ன என்று புருவங்களை உயர்த்திக் கேட்டான்.
பார்வையால் அவனை வெட்டிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள் பிரதீபா.
“உன்ர தங்கச்சி என்னை முறைக்கிறாள்.” அருகில் நின்ற மனைவியிடம் நகைப்புடன் கிசுகிசுத்தான் அவன்.
அப்படிக் காதோரமாகக் கதைப்பான் என்று எதிர்பாராததில் தடுமாறினாலும், அவள் ஏன் இவனை முறைக்க என்று பார்த்தாள் பிரமிளா.
உண்மையிலேயே தீபா இவனை முறைத்துக்கொண்டுதான் நின்றிருந்தாள்.
‘இஞ்ச வா!’ என்று சைகை செய்தான் கௌசிகன்.
அதற்குப் பணியாமல் அலட்சியம் காட்டி நின்றவளை, “தீபா!” என்று சத்தமாகவே அழைத்தான் அவன்.
அதற்குமேல் போகாமல் இருக்க முடியாதே! கடுப்புடன் மேடையேறித் தமக்கையின் பக்கம் நின்று, “என்ன?” என்றாள் வெடுக்கென்று.
“என்னத்துக்கு என்னை முறைக்கிறாய்?” நகைக்கும் குரலில் கேட்டான் அவன்.
புசு புசு என்று ஆத்திரம் பொங்க, “உங்கட தம்பி என்ன பெரிய கொம்பரோ? ஏய் எண்டு மரியாதை இல்லாம கூப்பிடுறார். இதுல நான் பொம்பிளை வீட்டுக்காரியாம். அவருக்குக் குடிக்கிறதுக்குக் கூலா கொண்டுவரட்டாம். எங்களப் பாத்தா அவருக்கு என்ன வேலைக்காரர் மாதிரித் தெரியுதாமோ? செய்யாட்டி கல்யாணத்தை நிப்பாட்டுவாராம். ‘அதை முதல் செய்ங்கோ, என்ர அக்கா சந்தோசமா இருப்பா.’ எண்டு சொல்லிப்போட்டு வந்தனான். உங்கட தம்பிட்ட சொல்லி வைங்கோ, நான் அக்கா மாதிரி நல்லவள் இல்லையாம் எண்டு. என்னோட சேட்டை விட்டார் எண்டால் ஆர் எண்டும் பாக்காம கிழிச்சு விட்டுடுவன்!” என்று பொரிந்துவிட்டு, மடமடவென்று கீழிறங்கிச் சென்றாள் அவள்.
கௌசிகனின் முகத்திலிருந்த சிரிப்பு மறைந்து போயிற்று! பிரமிளாவுக்கும் மோகனனின் செய்கை சுத்தமாகப் பிடிக்கவேயில்லை. எதற்குத் தேவையில்லாமல் புதிதாக ஒரு பிரச்னையை உருவாக்கப்பார்க்கிறான் என்று சினம்தான் உண்டாயிற்று.
முகம் கடினமுற விழிகளால் மோகனனைத் தேடினான் கௌசிகன். மேடையிலிருந்து இறங்கிச் சென்ற தீபாவையே அப்போதும் அவன் முறைத்துக்கொண்டு நிற்பதைக் கண்டு அழைக்க முற்பட, வேகமாக அவனின் கையைப் பற்றித் தடுத்தாள் பிரமிளா.
திரும்பிப் பார்த்தவனிடம், “இதைப் பெருசாக்கி அவனுக்குக் கோபத்தைக் கூட்டாதீங்க!” என்றுவிட்டு, அதற்குமேல் எதுவும் நடந்துவிடாமல் இருக்கப் பிரதீபாவை அழைத்துத் தன்னருகிலேயே வைத்துக்கொண்டாள் அவள்.
“ஏன்?”
அவன் கேள்வியே காதில் விழாததுபோல் நின்றாள் பிரமிளா. அடுத்து ஒரு பகுதியினர் வந்து புகைப்படத்துக்கு நின்று வாழ்த்திப் பரிசளித்துவிட்டுச் சென்றதும், “ஏன் எண்டு கேட்டனான்?” என்று அழுத்திக் கேட்டான் அவன்.
“துஷ்டரைக் கண்டால் தூர விலகு எண்டு கேள்விப்படேல்லையா நீங்க? நடந்ததுல இருக்கிற சரி பிழையை விட, உங்கட தம்பியோட எந்த விதத்திலையும் தீபா சம்மந்தப்படுறது எனக்கு விருப்பம் இல்ல!” அன்றிலிருந்து கணவனாகிப்போனவனை நேராகப் பார்த்துப் பதில் சொன்னாள் அவள்.