வீட்டுக்குப் போய்க்கொண்டிருந்த யசோதாவுக்கு மனக்கொதிப்பு இன்னுமே அடங்கமாட்டேன் என்றது. எங்களை வேண்டாம் என்றுவிட்டுப் போனவள் எங்களுக்கும் வேண்டாம் என்பதுதான் அவர்களின் முடிவு. அது எல்லாம் அவளைப் பாராத வரைக்கும் தான். அதுவும், வெகு வெகு சாதாரணமாக அவளைப் பார்த்தபோது பெற்ற வயிற்றின் தீயை அவரால் அணைக்கவே முடியாமல் போயிற்று.
“உங்கட மகளைப் பாத்தீங்களா சத்யா? நான் அவ்வளவு பேசுறன்(திட்டுறன்). திருப்பிக் கதைக்காம அழுகிறாள்.” என்றார் குமுறலாக. “ஒரு சொல்லு சொல்ல விடமாட்டாள். திருப்பித் திருப்பி கதைப்பாள். இண்டைக்கு அவ்வளவு பேசுறன். தலை குனிஞ்சு நிக்கிறாள்!” அவருக்கு நெஞ்சே வெடிக்கும் போலிருந்தது.
இத்தனை நாட்களுக்குப் பிறகு அருகில் கண்ட மகளிடம் எப்படி இருக்கிறாய் என்று கேட்கவே தேவையில்லாமல் அவள் எப்படியிருக்கிறாள் என்று அவளின் கோலமே சொன்னதைத்தான் அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அன்று கோயிலில் வைத்துப் பார்த்த பிறகு அவளை அவர் காணவே இல்லை. அப்படிக் காணாதவரைக்கும், ‘எங்க எண்டாலும் சந்தோசமா இருக்கட்டும்’ என்று தன்னைத்தானே தேற்றிக்கொண்டவர் இப்படிக் கண்டபிறகு என்ன சொல்லி தன் மனதைத் ஆற்றுவார்.
“இதுக்கா ஒற்றைக் கால்ல நிண்டு அவனைக் கட்டினவள். எங்களைத்தான் தலைகுனிய வச்சாள். வேண்டாம் எண்டு தூக்கி எறிஞ்சாள். அவளாவது நல்லா இருக்க வேண்டாமா? என்ன கண்டறியாத காதலோ!” எப்படி வாழ்ந்திருக்க வேண்டிய பெண். இன்றைக்கு ஒரு சாதாரணச் சேலையில், யாரோ போல் காய்ந்து கருத்து மெலிந்து.. அவர் மனம் அழுதது.
“அவன்ர தாயையும் தங்கச்சியையும் பாத்தீங்களா. நகையும் நட்டுமா நல்லா இருக்கினம். இவள் தான் என்னவோ பஞ்சத்தில அடிபட்டவள் மாதிரி..” எதற்கும் பதில் சொல்லாமல் காரைச் செலுத்துவதில் கவனமாக இருந்தார் சத்தியநாதன். கணவரின் அந்த அமைதியை உணரும் நிலையில் கூட யசோதா இல்லை. “என்ன குடும்பமோ? இருக்கிறதை பங்கிட்டாவது போட்டிருக்க வேண்டாமா? என்ர பிள்ளையை மட்டும் பிச்சைக்காரி மாதிரி விட்டிருக்குதுகள்.”
பொறுப்பான பெண்ணாக நின்று வந்தவர்களைக் கவனித்த அவளின் பக்குவம் கூட அவரைச் சந்தோசப்படவிடாமல் வருந்தத்தான் செய்தது. இரப்பர் பந்தாக்கத் துள்ளித் திரிந்த மகள் இந்தப் பக்குவத்தைப் பெறுவதற்கு எத்தனை ஊமைக் காயங்களைப் பட்டாளோ என்று தனக்குள் அழுதார்.
“இதெல்லாம் இவளுக்குத் தேவையா? என்னவோ பாசமானவன் மாதிரி அவளுக்குப் பக்கத்திலேயே நிக்கிறான். எளியவன். இவ்வளவு காலமாச்சு ஒரு குழந்தை இல்ல. என்ன ஏது எண்டு கூட்டிக்கொண்டுபோய்க் காட்டினானோ என்னவோ? முதல் அதுக்குக் காசு இருக்கோணுமே?”
‘ஏன் என் பெண்ணின் வாழ்க்கை இப்படியானது?’ திரும்பத் திரும்ப இதுதான் தோன்றிற்று. கார் வீட்டின் முன்னே நின்றது. கணவர் இறங்காததைக் கவனித்துவிட்டு, “நீங்க வரேல்லையா?” என்றார் கதவைத் திறந்தபடி.
“கொஞ்சம் வேல இருக்கு. நீ போ, நான் பிறகு வாறன்.”
“ஓமோம்! நல்லா ஓடி ஓடி உழையுங்கோ. சொத்துச் சுகம் எல்லாம் குடுத்து கட்டிவைக்க மகள் தானே இருக்கிறாள்.” என்றபடி இறங்கி நடந்தார் அவர்.
போகிற மனைவியையே சற்றுநேரம் பார்த்திருந்துவிட்டு யன்னலை இறக்கினார் சத்தியநாதன். “யாஷ்!” இது அவரின் பிரத்தியேகமான அழைப்பு. ஆரணி அவர்களோடு இருந்த நாட்களில் இதெல்லாம் வெகு சாதாரணம். இப்போதெல்லாம் அதற்கான நேரங்கள் அமைந்ததே இல்லை. இன்று என்னாயிற்று? அதிர்ந்து வேகமாகத் திரும்பினார் யசோதா.
“உன்ர மகளுக்குக் கஷ்டம் தான். ஆனா சந்தோசமாத்தான் இருக்கிறாள்.” என்றுவிட்டுப் போனார் மனிதர். திகைத்து நின்றுவிட்டார் யசோதா. அவ்வளவு இறுக்கமாக இருந்தவர். அவள் இருந்த திசைக்குக் கூடத் திரும்பாதவர் இதை எப்போது கவனித்தார்? ஆனாலும் கணவரின் வார்த்தைகளில் மெல்லிய சந்தோசமும் நிம்மதியும் ஊற்றெடுத்தது.
‘என்னவோ சந்தோசமாவாவது இருந்தா சரி. வேற என்ன சுகத்த தான் அவளும் காணக்கிடக்கு..’ மனதில் எண்ணியபடி வீட்டுக்குள் நடந்தார் யசோதா.
————————
அவர்கள் வீட்டு விறாந்தையின் தரையில் அமர்ந்து சுவரில் சாய்ந்து இருந்தான் நிகேதன். அவன் மடியில் சுருண்டிருந்தாள் ஆரணி. இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அவன் கை மட்டும் அவளின் தலையை வருடி விட்டுக்கொண்டே இருந்தது. அன்னை தன்னைக் குறித்துக் கேட்டதைக் காட்டிலும் அவனைக் குறித்துச் சொன்ன வார்த்தைகள் தான் அவளைக் கூறு போட்டன. நிச்சயம் அவனுக்கும் கேட்டிருக்கும். அவளின் பின்னால் அவனும் தானே ஓடிவந்தான். தனக்குள் என்ன பாடு படுகிறானோ? நிமிர்ந்து அமர்ந்து, “சொறி நிக்கி.” என்றாள் வேதனையோடு.
“அதெல்லாம் ஒண்டும் இல்ல!” என்றுவிட்டு அவளைத் தன் மார்போடு சேர்த்துக்கொண்டான். ஆரணிக்கும் அவன் துணை கொண்டுதான் நகரும் நிமிடங்களைக் கடக்க முடிந்தது. அதன் பிறகும் பெரும் மௌனம். ஒருவர் மற்றவரின் அருகாமையில் மனதின் காயத்தை ஆற்ற முயன்றனர். பின் மெல்லப் பேசினான் அவன்.
“நீயும் மாமி கதைச்சதை பெருசா எடுக்காத. அவா சொன்னது ஒண்டும் பொய் இல்லையே. ஆனா.. இன்னும் நீ என்னை நம்புறாய் தானே?” என்றான் அவளின் முகம் பார்த்து.
அவள் மென்மையாகப் புன்னகைத்தாள். அவன் கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவன் தாடையில் தன் உதடுகளை அழுத்தமாக ஒற்றி எடுத்துவிட்டு மீண்டும் அவன் மடிக்குள் புகுந்துகொண்டாள். “வெளில இருந்து பாக்கிற அம்மாவுக்கா இருந்தாலும் சரி இல்ல வேற ஆக்களுக்கா இருந்தாலும் சரி எங்களை ரெண்டுபேராத்தான் தெரியும். ஆனா நானும் நீயும் வேற வேற இல்ல. அது எங்களுக்குத் தெரியும். நாங்க எங்கட கடமையைச் செய்து முடிச்சு இருக்கிறோம் நிக்கி. இனி காலம் முழுக்க நீ எனக்காகத்தான் உழைக்கப் போறாய். என்னை சந்தோசமாத்தான் வச்சிருக்கப் போறாய். அது எனக்குத் தெரியும். அது அம்மாக்கு விளங்க கொஞ்சக் காலம் எடுக்கும். அப்ப, தான் கதைச்சது பிழை எண்டு அவாவுக்கே விளங்கும். அதால அவா கதைச்சதை நினைச்சு நீ கவலைப்படாத.”
அவன் கேட்டுக்கொண்டான். பதில் ஒன்றும் சொல்லவில்லை. இருவரும் அதன்பிறகு பேசிக்கொள்ளவில்லை. அவன் கைகளுக்குள்ளேயே ஆரணி உறங்கிவிட்ட பிறகும் நிகேதனால் முடியவே இல்லை. கண்ணை மூடினாலே யசோதா தான் வந்து நின்று நாக்கைப் பிடுங்குவதைபோல் கேள்வியாகக் கேட்டுத் தள்ளினார்.
அவர் சொன்னதில் பிழை இல்லை. இந்த ஐந்து வருடத்தில் அவளுக்கு என்ன செய்தான் என்று கேட்டால் எதுவுமில்லை. அவளை வேலைக்கு அனுப்பினான். இன்னுமே அனுப்பிக்கொண்டு இருக்கிறான். அவளின் உழைப்பில் தன் குடும்பச் செலவைப் பார்த்தான். இன்னுமே பார்த்துக்கொண்டு இருக்கிறான். அந்த உண்மைதான் அவனை குத்தியது. வெட்க வைத்தது. அவமானத்தில் தனக்குள் தானே குறுகினான். அந்த அவமானம் மீண்டும் அவனைத் துரத்த ஆரம்பித்தது. சாட்டையாய் அடிவிழுந்தால் தப்பித்து எப்படி ஓடுவோமோ அப்படி தலைதெறிக்க ஓட ஆரம்பித்தான் நிகேதன்.
அவன் வேகத்தில் ஆரணி திகைத்துப்போனாள். அவர்கள் தனியாக வந்த பிறகு சனி ஞாயிறுகளில் அவளுக்காகவும் நேரம் ஒதுக்கியவன் அதையெல்லாம் மறந்தான். “இப்பிடி உழைக்கவேணும் எண்டு தேவை இல்ல நிக்கி. எங்களுக்கு என்ன வேணும் எண்டு நாங்கதான்டா முடிவு செய்ய வேணும். மற்றவே சொல்லுறதுக்காக நீ ஓடாத.” என்றவளின் பேச்சை அவன் காதிலேயே வாங்கவில்லை.
“என்ன தடுக்காத ஆரா. நாங்க நல்லாருக்கோணும். நான் உன்ன நல்லா வச்சிருக்க வேணும். எல்லாரும் பாத்து வாயப் பிளக்கிறமாதிரி நீ இருக்கோணும்!” அவன் இயல்பே மாறிப்போயிற்று. ஆரணி கலங்கிப்போனாள். வேகத்தடை போடும் வழியற்று நின்றாள்.
அதுவரை ஆட்களுக்கு மாத்திரம் ஹயர் போனவன், பஜாரில் புடவைக்கடை ஒன்றில் பொறுப்பாளராக இருந்த ஒருவரைப் பிடித்தான். அங்கிருக்கும் கடைகளுக்குக் கொழும்பில் இருந்து மொத்த விற்பனைக்கு(wholesale) வந்திறங்கும் பொருட்களை ஏற்றி இறக்குகிற ஹயர் ஒவ்வொரு மாதமும் எத்தனை பிடித்துத் தருகிறாயோ அதற்கு ஏற்ப உனக்கும் ஒரு கமிஷன் என்று பேரம் பேசினான். இடைத்தரகர் போலக் கடைக்காரர்களையும் அவனையும் வாயால் பேசி கோர்த்து விடுவது மாத்திரமே அவர் வேலை. அதற்கு என்று தனியாக ஒரு வருமானம். கசக்குமா என்ன? அவருக்கும் இலாபம் அவனுக்கும் இலாபம் என்றானபோது முழு மூச்சாக அவர் முயன்றதில் நிகேதன் பெரும் பலனைப் பெற்றான்.
தேவை என்கிற நிலையில் தானே தேடல் தொடங்கும். அவனின் தேவை எல்லையில்லா வானம்போல் ‘சத்யநாதனின் செல்வநிலையாக’ விரிந்து கிடந்ததால் அவன் தேடலும் பெருகிக்கொண்டே போயிற்று. அதன் பலனாக அவன் வருமானமும் சடுதியில் கூடிக்கொண்டே போனது.