அன்று செண்டரில் நின்று நிகேதனுக்கு அழைத்தாள் ஆரணி.
“என்ன ஆரா?” அவன் கேட்ட விதத்திலேயே வேலையாக நிற்கிறான் என்று விளங்கியது.
காட்டிக்கொள்ளாமல், “என்னைக் கூட்டிக்கொண்டுபோய் வீட்டை விட்டுவிடு நிக்கி.” என்றாள் அவள்.
“நான் ஹயர்ல நிக்கிறன். இப்ப எப்பிடி வர? முதல் உன்ர ஸ்கூட்டிக்கு என்ன நடந்தது?”
“என்னவோ அது ஸ்டார்ட் ஆகுதில்ல. நீ வா! பள்ளிக்கூட ஹயர்ல தானே நிக்கிறாய். அத முடிச்சுக்கொண்டு வந்து கூட்டிக்கொண்டு போ.” எப்போது எங்கே நிற்பான் என்று அனைத்தும் அவளுக்குத் தெரியும் என்பதில் பிடிவாதமாகச் சொன்னாள்.
“ஆரா! நீ என்ன சின்னப்பிள்ளையா? ஸ்கூட்டி ஸ்டார்ட் ஆகாட்டி ஆட்டோ பிடிச்சு போ. எனக்கு இப்ப வரேலாது.” என்றான் அவன்.
“அது எனக்குத் தெரியாமையா உன்ன கூப்பிட்டனான். ஆகத்தான் போடா! நீ வராத. நான் நடந்தே போறன்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தவள், முன்னர் ஒரு காலத்தில் கடைக்குப் போய்விட்டு நடந்து வருகையில் எந்த வாங்கிலில் அமர்ந்திருந்து அந்த செண்டரை பிராக்குப் பார்த்தாளோ அதில் சென்று அமர்ந்துகொண்டாள்.
காலம் எப்படி ஓடுகிறது? அவளுக்கு நம்பவே முடியாமல் இருந்தது. சுகிர்தனிடம் வாங்கியதை அவன் திருமணத்தின்போது திருப்பிக் கொடுத்திருந்தான் நிகேதன். இப்போது வட்டிக்கடனும் முழுமையாகக் கொடுத்தாயிற்று. அவளின் தாலிக்கொடிக்கு வட்டியோடு சேர்த்து முதலையும் திருப்பிக் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். விரைவில் அதுவும் திரும்பிவிடும். அதன்பிறகு அவர்கள் வாழ்க்கை இரண்டு மடங்கு வேகத்தில் உயரத்தான் போகிறது. என்ன அவன் ஓடுகிற ஓய்வற்ற ஓட்டம் தான் அவளுக்குப் பெரும் கவலையைக் கொடுத்தது.
அன்று, அவளது அன்னையின் பேச்சைப்பற்றி அவன் எதுவுமே வாயைத் திறந்து கதைக்காதபோதும் அது அவனுக்குள் மிகப்பெரிய காயத்தை உண்டாக்கியிருக்கிறது என்பதை அவனுடைய இந்த ஓட்டத்தில் உணர்ந்துகொண்டாள் ஆரணி.
சற்று நேரத்திலேயே அவனுடைய வேன் அவளின் முன்னால் வந்து நின்றது. டிரைவர் சீட்டில் இருந்து அவளை முறைத்தான் அவன். முகம் கொள்ளா சிரிப்பை அடக்க முயன்றபடி அவனைப் பாராமல் ஒரு பக்கமாகத் திரும்பி வீதியைப் பார்த்துக்கொண்டிருந்தாள், ஆரணி.
“நடிச்சது காணும்! வந்து ஏறடி!” என்று சீறினான் அவன்.
அவள் காதிலேயே விழாதவள் போல் இருந்தாள்.
“ஆரா!”
அவனுடைய அதட்டலில் திரும்பி முறைத்தாள், ஆரணி. “என்னவோ நேரம் இல்லை எண்டு சொன்ன? பிறகு ஏன் வந்தனீ? நீ போ. நான் நடந்தே போவன்.” அப்போதும் இருந்த இடத்தைவிட்டு அசையவில்லை அவள்.
அவனுக்குக் கோபத்தோடு சேர்த்து சிரிப்பும் வந்தது. “அடங்காதவளே, நான் வருவன் எண்டு தெரிஞ்சே குந்திக்கொண்டு இருந்திட்டு இதுல உனக்கு ரோசம் வேற. என்ர செல்லம் எல்லா. வாடி நேரமாகுது!” என்றான் கெஞ்சலாக.
அதன் பிறகுதான் மலையிறங்கினாள் அவள். பக்கத்தில் இருந்த பைகளை எல்லாம் பொறுக்கிக்கொண்டு எழுந்தாள். “உன்ன பாத்தா செண்டருக்கு வந்த ஆள் மாதிரி தெரிய இல்லையே? இடையில எங்க போயிட்டு வாறாய்?” என்று கேட்டபடி எட்டி அவள் பக்கத்து கதவைத் திறந்துவிட்டான், அவன்.
“அது என்னத்துக்கு உனக்கு? நான் எங்கயும் போவன். என்னவும் செய்வன். நீ இன்னும் ஓடி ஓடி உழை!” என்றாள் முறைப்புடன்.
அவன் உதட்டினில் மென் முறுவல் மலர்ந்தது. அவளுக்கென்று அவன் நேரம் ஒதுக்காத கோபத்தைக் காட்டுகிறாள். ஆனால், மனதில் அணையாமல் எரிந்துகொண்டே இருக்கும் அந்த அவமானத்தீ அவனை இன்னுமே விரட்டிக்கொண்டேதான் இருக்கிறது. ஒன்றும் சொல்லாமல் அவளின் கையைப் பற்றி உதட்டில் ஒற்றி எடுத்தான்.
“சாப்பிட்டியா?”
“ம்ம்.. அதெல்லாம் நேரா நேரத்துக்கு முடிஞ்சுது. நீ?”
“இண்டைக்கு வீட்டில இருந்து சுகிர்தன் பிரியாணி கொண்டு வந்தவன். வயிறு முட்ட வெட்டியாச்சு.” என்றான். அவர்களுக்கேயான ஒரு அழகிய பயணப் பொழுது வெகு வேகமாக வீட்டு வாசலில் வந்து முடிவுற்றது. அவள் இறங்கிக்கொண்டாள்.
“நான் வர நேரமாகும். பார்வதி அம்மாவை கூப்பிட்டு வச்சிரு என்ன.” என்றவன் அப்போதுதான் அவள் ஒரு பையைச் சீட்டிலேயே விட்டுவிட்டதைக் கண்டான்.
“ஆரா! இத விட்டுட்டு போறாய்.” என்றான் தூக்கிக் கட்டியபடி. ஒரு குறுஞ்சிரிப்புடன், “அது உனக்குத்தான் தேவைப்படும் மச்சி!” என்றுவிட்டு கதவைத் திறந்துகொண்டு வீட்டுக்குள் சென்று மறைந்தாள் அவள்.
அவள் சொன்னவிதம், அவளின் சிரிப்பு, வீட்டுக்குள் சென்று மறைந்தது எல்லாமே அவனை அதற்குள் என்ன இருக்கிறது என்று எடுத்துப்பார்க்க வைத்தது.
கையை விட்டு எடுத்தான். முதன் முதலாக வெளியே வந்தது, அவனின் ஒற்றைக் கைக்குள் அடங்கிவிடுகிற அளவுக்கான குட்டி ரோஜாக்களாக மின்னிய இரண்டு ஷூக்கள். ‘என்ன இது?’ மனம் பரபரக்க மற்றவற்றையும் வெளியே எடுத்தான். பிறந்த குழந்தை அணியும் குட்டிச் சட்டை. பிங்க் வர்ணத்தில் ஒரு சீப்பு, பவுடர் டப்பா, பொட்டுச் சிரட்டை. ‘ஆரா..’ மனம் அரற்றியது. அவன் அறிவு மின்னல் வேகத்தில் பிரித்தறிந்த உண்மையை நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் நொடி நேரம் திக்கு முக்காடினான். அடுத்த வினாடியே அனைத்தையும் பொறுக்கிக்கொண்டு அவளிடம் ஓடினான்.
அறையில் பெரும் சிரிப்புடன் அவன் வருகைக்காகக் கட்டிலில் அமர்ந்திருந்தாள், ஆரணி.
அறை வாசலில் மூச்சு வாங்க ஓடிவந்து நின்றான் அவன். அவள் சிரிப்புடன் அவனையே பார்த்திருந்தாள். அவளின் கண்களைச் சந்திக்க முடியாமல் அவன் பார்வை அலைபாய்ந்தது. முகத்தில் மெல்லிய சிவப்பு. சிரிப்புடன் தலையைக் கோதினான். புழுக்கம் தாங்கமாட்டாமல் சேர்ட்டின் முதல் இரண்டு பட்டன்களைக் கழற்றிவிட்டான். அவன் நிதானத்தில் இல்லை என்று அப்படியே தெரிந்தது. கண்கொட்டாமல் தன்னுடையவனின் பூரிப்பைக் கண்டு மகிழ்ந்தாள், அவள்.
“என்னடி இதெல்லாம்?” என்றான் கையில் இருந்ததைக் காட்டி.
“உனக்குத்தான். இன்னும் பத்து மாதத்தில தேவப்படுமே.” அவன் முகம் அப்படியே மலர்ந்துபோயிற்று. சிரிப்பு மின்னியது. “என்னடி விசயம்?” என்றான் கண்களில் மெல்லிய நீர் படலத்துடன்.
“எனக்கென்ன தெரியும்?” தோளை குலுக்கினாள் அவள்.
“ஆரா..”
“ஆராக்கு என்ன?”
“சொல்லடி..” அவன் குரல் கரகரத்தது. வேகமாக அவளிடம் வந்தான். “நான் அப்பா ஆகிட்டனா?” விழி முழுக்க ஓராயிரம் நட்சத்திரங்கள் மின்னக் கேட்டான், நிகேதன்.
“ஓ அப்பிடியா?”
“வதைக்காத ஆரா. உண்மைய சொல்லு.” அவன் கைகள் நடுக்கத்துடன் அவள் வயிற்றைத் தடவிற்று. அவள் விழிகளும் தளும்பிற்று. கைகளை அவன் கழுத்தில் கோர்த்தபடி தாடையில் தன் உதட்டைப் பதித்தாள். அவன் நெஞ்சில் கையை வைத்து, “நீ அப்பா. நான் அம்மா. அப்ப இங்க இருக்கிறது?” என்று தன் வயிற்றைக் காட்டி அவள் கேட்க, “என்ர உயிர்!” என்று முடித்துவைத்தான் அவன்.
அவளை இறுக்கிக் கட்டிக்கொண்டு தோள்வளைவில் முகம் புதைத்தான். அழவேண்டும் போலிருந்தது. துள்ளிக்குதிக்க வேண்டும் போலிருந்தது. ‘நான் அப்பா ஆகிட்டேன்..’ என்று ஊர் முழுக்கக் கத்திச் சொல்லவேண்டும் போலிருந்தது. அவளைத் தூக்கிக்கொண்டு சுத்த வேண்டும் போலிருந்தது. வேகமாக நிமிர்ந்து, “தேங்க்ஸ்டி தேங்க்ஸ்டி தேங்க்ஸ்டி செல்லம்!” என்று முகம் முழுக்க முத்தமிட்டான்.
சிரிப்புடன் கண்கொட்டாமல் அவள் அவனையே பார்த்திருந்தாள். “அப்பிடி பாக்காத ஆரா. எனக்கு வெக்கமா இருக்கு.” என்றான் நிகேதன்.
மீசை வைத்த அந்தக் குழந்தையின் வெட்கத்தில் அவள் அடக்கமாட்டாமல் நகைத்தாள். “என்னடா இது நான் சொல்ல வேண்டியதை எல்லாம் நீ சொல்லிக்கொண்டு இருக்கிறாய்.”
“போடி!” என்றவன் அவளைத் தன் கைகளுக்குள் கொண்டுவந்தான். “எல்லாம் தானா நடக்கும் எண்டு சொன்னேன் தானே. இப்ப பாத்தியா நடந்திட்டுது!” என்றவன் தன்னவளை தன் மார்பில் சேர்த்துக்கொண்டான். மனம் நிறைந்து தளும்பிற்று.