நேரம் இரவு பதினொன்றைத் தாண்டியிருந்தது. அந்த நேரத்திலும் உறங்காமல் அவளைத் தன் கைவளைவுக்குள் வைத்தபடி அமர்ந்திருந்தான் நிகேதன். ஒரு கை அவளைத் தன்னுடன் அணைத்திருக்க இன்னொரு கை அவளின் தலையை வருடிவிட்டுக்கொண்டே இருந்தது.
அன்று மாலையில், அவ்வளவு மகிழ்ச்சியான செய்தியை அவள் சொன்னபோது, உச்சபட்ச சந்தோசத்தில் திக்குமுக்காடிப்போனான். ஆனால், நின்று நிதானமாக உள்வாங்கி, உணர்ந்து, அவளோடு சேர்ந்து கொண்டாட நேரம் இல்லாமல் வேலை விரட்டியது.
மனமே இல்லாமல், தன் விதியை நொந்தபடி அவளிடம் ஆயிரம் மன்னிப்புகளைக் கேட்டுவிட்டு, அவள் முறைக்க முறைக்க ஓடிப்போனவன் சற்று முன் தான் திரும்பி வந்திருந்தான்.
அவளை இப்படிக் கைக்குள்ளேயே வைத்திருக்க வேண்டும், எந்த வேலையையும் செய்ய விடக் கூடாது, நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மனதில் ஆயிரம் ஆசைகள் இருந்தாலும் நிதர்சனமும் யதார்த்தமும் வேறாயிற்றே.
“கோவமா?” என்றான் அவளின் நெற்றியில் முத்தமிட்டு. ஆம் என்று தலையை அசைத்துவிட்டு அவன் கையைப் பிடித்துக் கிள்ளிவிட்டாள், ஆரணி. அவன் உதட்டினில் இளஞ்சிரிப்புப் படர்ந்தது.
தாய்மை அவளின் முகத்துக்குப் புதுச் சோபையைக் கொடுத்த உணர்வு அவனுக்கு. சற்று நேரம் அவளையே பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு, “கொஞ்ச நாளைக்கு அம்மாவை இங்க வந்து இருக்கச் சொல்லவா?” என்று கேட்டான்.
சரக்கென்று நிமிர்ந்து அவனை முறைத்தபடி கையெடுத்துக் கும்பிட்டாள் அவள். அவன் உதட்டு முறுவல் விரிந்துபோயிற்று.
“அந்தளவுக்கு என்ர அம்மா வில்லியாடி?”
“எனக்குப் பொய் சொல்லிப் பழக்கமில்லை நிக்ஸ்!” என்றாள் அவள் கண்ணில் சிரிப்புடன்.
“தனியா இருப்பியா?” அவளின் விளையாட்டுப் பேச்சை விட அவள் மீதான அக்கறையில் தான் அவன் கவனம் சென்றது.
“ஏன் தனியா இருக்க? நீயும் இருந்து என்னைப் பார்.”
அவன் அமைதியானான். அதில் அவள் முறைத்தாள்.
“உனக்கு என்னிலையும் பாசமில்ல. எங்கட பிள்ளையிலையும் பாசம் இல்ல. இல்லாட்டி இவ்வளவு காலமும் ஏங்கி இருந்த குழந்தை வரம் மாதிரி கிடைச்சிருக்கு. அதைக் கொண்டாடாம என்னை விட்டுட்டு வேலைக்கு ஓடி இருப்பியாடா?”
அவளுக்கு அது பெரும் மனக்குறை என்று புரிந்தது அவனுக்கு. உண்மையைச் சொல்லப்போனால் அவளை விட்டுவிட்டுப் போய் அவன்தான் தவித்துப் போனான். ஆனால் வேறு வழியும் இல்லையே. மெல்ல தன்னை அவளுக்கு விளக்க முயன்றான்.
“வேலைக்குப் போனாத்தானேடா காசு வரும். இவ்வளவு நாளுமாவது நானும் நீயும் மட்டும் தான். இனி பிள்ளையும் வரப்போகுது ஆரா. என்ர வாழ்க்கையில நான் பட்ட கஷ்டங்கள் என்ர பிள்ளை படக்கூடாது.” எனும்போதே அவன் குரல் கரகரத்தது. ஆரணி நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
“வறுமை எண்டுறது கொடுமை ஆரா. அது என்னோடையும் உன்னோடையும் போகட்டும். அண்டைக்கு மாமி சொன்ன மாதிரி இன்னும் உனக்கே நான் ஒண்டுமே செய்ய இல்ல. அதே என்னைப்போட்டு குத்துதடி. இதுல பிள்ளைக்கும் எதுவும் செய்ய வக்கில்லாம இருந்தா நான் வாழுறதுலேயே அர்த்தம் இல்..” என்றவனை மேலே பேசவிடாமல் அவன் வாயை தன் விரல்களால் மூடினாள், ஆரணி.
“லூசா நீ? நான் சும்மா விளையாட்டுக்கு கதைக்கிறதை எல்லாம் பெருசா எடுப்பியா? எத்தனையோ பொம்பிளைகள் வயித்தில பிள்ளையோட கூலி வேலைக்குப் போறீனம். தோட்ட வேல, வயல் வேல, கட்டட வேல எண்டு எவ்வளவு கஷ்டமான வேலை எல்லாம் செய்றதை பாக்கிறோம் தானே. அவே எல்லாம் பிள்ளை பெற இல்லையா? இல்ல, பிள்ளையைப் பெத்து வளக்க இல்லையா? எனக்கு நீ இருக்கிறாய். பார்வதி அம்மா இருக்கிறா. அந்தளவும் போதும். என்னையும் பிள்ளையையும் நான் கவனமா பாப்பன். நீ எதையும் யோசிக்காம நிம்மதியா இரு.”
அப்படிச் சொன்னவளை தொண்டை அடைக்கப் பார்த்தான் நிகேதன். யாருடன் எல்லாம் தன்னை ஒப்பிடுகிறாள். இந்த நேரத்தில் இயல்பாகவே சலுகைகளை எடுத்துக்கொள்ளத் தூண்டும். கணவனின் அருகாமையை மனது தேடும். அப்படி இருந்தும் அவனையும் அவன் நிலையையும் விளங்கி நடக்கிறவளின் அன்பு அவனை அசைத்தது.
“உனக்கு ஏதாவது வேணுமா ஆரா?”
“ஏதாவது வேணுமா எண்டா?”
அவன் சிறிது தயங்கினான். பின் மெல்ல தன்னைச் சமாளித்துக்கொண்டு, “ஏதாவது சாப்பிட வேணும் மாதிரி, எங்..காயாவது போகவேணும் மாதிரி இல்ல யா…ரையாவது பாக்க வேணும் மாதிரி..” என்றான் மெல்லிய தடுமாற்றத்துடன்.
வேகமாக அவன் மார்பில் முகத்தைப் புதைத்தபடி இல்லை என்று மறுத்துத் தலையசைத்தாள் அவள். அவன் அணைப்பு இறுகிப் போயிற்று. இருவருக்கும் மற்றவரின் மனம் புரியாமல் இல்லை. இருந்தும் அதற்குமேல் எதையும் பேசாமல் மௌனத்தை கெட்டியாகப் பற்றிக்கொண்டனர். “நேரமாகுது படு!” அடைத்த குரலில் சொன்னவன் அவளைத் தன் மார்பிலேயே உறங்கவைத்தான்.
———————————-
மாளிகை போன்று இரண்டு மாடியில் காட்சி தந்த அந்த வீட்டின் முன்னால் வேனை கொண்டுவந்து நிறுத்தினான், நிகேதன். அவனுடைய இதய ராணியின் பிறந்தவீடு. அவளைப்போலவே அழகாக நிமிர்ந்து நின்றிருந்தது.
மலைபோல் நிமிர்ந்து நிற்கும் அந்த வீட்டுடன் ஒப்பிடுகையில் அவன் அவளைக் குடிவைத்திருக்கும் வாடகை வீடு மடுபோன்று தோற்றமளித்து அப்போதே அவனைக் குன்ற வைத்தது. தயக்கம் கால்களைக் கட்டிப்போட்டாலும் இறங்கி நடந்தவனை, வீட்டின் காவலாளி கேட் வாசலில் நிறுத்திக் கேள்வியுடன் ஏறிட்டார்.
“ஆரணின்ர அம்மா அப்பாவ பாக்கவேணும்.”
“நீங்க தம்பி?”
“நான்.. ஆரணின்ர ஹஸ்பண்ட்.” அவன் சொன்னதும் அவர் முகம் பளிச்சென்று மலர்ந்தது.
“உண்மையாவா தம்பி? உங்களைப் பாத்தது சந்தோசம். ஆராம்மா எப்பிடி இருக்கிறா? ரெண்டுபேரும் சந்தோசமா இருக்கிறீங்க தானே? அவா இல்லாம இந்த வீடே பாழடைஞ்சு போச்சு, தெரியுமா?” மூச்சு விடாமல் பேசியவரை சிறு முறுவலோடு பார்த்திருந்தான்.
“கொஞ்சம் பொறுங்கோ. ஐயா விடியவே போயிடுவார். யசோம்மாதான் நிக்கிறா கேட்டுட்டுச் சொல்லுறன்.” என்றுவிட்டு அவர் வீட்டுக்கு அழைப்பை ஏற்படுத்தவும், யார் என்று சொன்னதும் இப்படியே திருப்பி அனுப்பி விடுவாரோ என்று உள்ளுக்கு உதறியது அவனுக்கு.