அன்றும் நேரம் பிந்தி வீடு வந்த நிகேதன் ஒருவித யோசனையிலேயே இருந்தான். ஆரணியின் பேச்சிலும் முழுக்கவனம் இல்லை; உணவிலும் கவனமில்லாமல் சாப்பிட்டு எழுப்பவும், “என்ன பிரச்சனை நிக்கி?” என்றாள் ஆரணி.
“நாலு பரப்பில நல்ல இடத்தில ஒரு காணி வந்திருக்கு ஆரா. வாங்குவம் எண்டு நினைச்சன். மினிவேன் லோன் இன்னும் முடியாததால லோன் எடுக்கேலாது. அதுதான் என்ன செய்யலாம் எண்டு யோசிக்கிறன்.”
“உனக்குப் பிடிச்சிருக்கா?”
“ம்ம்.. இடம் நல்ல இடம். விடுபட்டு போயிடுமோ எண்டு கவலையா இருக்கு.” எங்கே இவளின் சத்தத்தைக் காணவில்லையே என்று அவன் நிமிர அவனின் முன்னால் அவளின் தாலிக்கொடி ஆடிக்கொண்டிருந்தது.
நிகேதன் முறைத்தான். “எங்கடா இன்னும் இந்தச் சீன காணேல்ல எண்டு யோசிச்சன். உள்ளுக்குக் கொண்டு போடி!” என்றான் கோபத்துடன். ஆரணி அசையவில்லை. “எங்களை மாதிரி ஆக்கள் எல்லாம் நகை வச்சிருக்கிறதே அடகு வைக்கத்தான். நிரந்தரமான சொத்து வாங்கப்போறாய். சும்மா கோவப்படாம இதைக் கொண்டுபோய் வச்சிட்டு வாங்கு.” என்று கொடுத்தாள் அவள்.
சற்றுச் சிந்தித்தவனுக்கும் வேறு வழி இல்லை என்று புரிந்தது. “சரியா ஒரு வருசத்துல திரும்ப எடுத்துத் தந்திடுவன். பிறகு வீடு கட்டேக்க திருப்பித் தா.” என்றவனுக்கும் இப்போது சிரிப்புத்தான் முந்திக்கொண்டு வந்திருந்தது. நல்ல அமைவிடத்தில் நல்ல காணி. அதைத் தவறவிட மனமில்லை. அடுத்தநாள் மூவருமாகவே சென்று பார்த்தார்கள். சுகிர்தனும் தர்மினியுடன் வந்திருந்தான். ராகவன், கயல், அமராவதி என்று எல்லோரையுமே அழைத்துச் சென்று காட்டினான். எல்லோருக்குமே மிகவும் பிடித்திருந்ததால் விலையைப் பேசி முற்றாக்கி காணியை ஆரணியின் பெயருக்கு மாற்றிவிட்டே ஓய்ந்தான் நிகேதன்.
அதில் அமராவதிக்கு அதிருப்திதான். “உன்ர பெயர்ல எழுதி இருக்கலாம். இல்ல ரெண்டுபேரின்ர பெயர்லையும் எழுதி இருக்கலாம்.” என்றார் அவர்.
“அவள் வேற நான் வேற இல்லையம்மா!” என்று முடித்துக்கொண்டான் அவன்.
நிலத்தை வாங்கியபிறகும் அவர்கள் மூவருமாகப் போய்ப்பார்த்தார்கள். ‘எங்கட காணி..’ அந்த வார்த்தையே மிகுந்த மகிழ்ச்சியை கொண்டுவந்து கண்முன்னே நிறுத்தியது. “என்ர பூவாச்சி இந்த இடத்திலதான் வளரப்போறா. நடை பழகுவா. பள்ளிக்கூடம் போவா. அப்பாவும் அம்மாவும் அதையெல்லாம் பாத்து சந்தோசப்படுவோமாம்.” கையில் வைத்திருந்த மகளிடம் கதை பேசியபடி வந்தவனைப் பார்த்தாள், ஆரணி. அவன் தோற்றத்தில் சத்தியநாதனின் பிம்பம் நொடியில் வந்து மறையவும் மனதில் சொல்லொணா வேதனை ஒன்று தாக்கிற்று. வேகமாகக் காணியைப் பார்ப்பதுபோல் நடந்தாள். நெஞ்சுக்குள் என்னவோ பிசைந்தது.
“பாருங்கோ செல்லம், அப்பா வேலை வேலை எண்டு ஓடினா வீட்டுல நிக்கிறேல்ல எண்டு சண்டை பிடிப்பா உங்கட அம்மா. இப்ப காணி வாங்கினதும் ஆளை கையிலேயே பிடிக்க முடியுது இல்ல.” என்று அவளைச் சீண்டினான் அவன்.
“டேய்! இது உன்ர உழைப்பு இல்ல. என்ர தாலிக்கொடியடா!” என்றாள் அவள்.
“அதையும் நான்தான்டி வாங்கித் தந்தனான்!”
“பின்ன, அதை வேற ஆரிட்டையுமா கேக்கேலும்?”
“கேட்டுத்தான் பாரேன்!” என்று முறைத்தான் அவன்.
—————–
அன்று, கயலினி ராகவனின் மகன் ராகுலனுக்கு முதலாவது பிறந்தநாள். சகாதேவனும் குடும்பத்துடன் வந்திருந்தார். ராகவனின் பெற்றோர் வீட்டினர், சுகிர்தனின் குடும்பம், அவன் பெற்றோர், நிகேதனின் குடும்பம் என்று நெருங்கியவர்கள் மட்டுமாக இருந்தாலுமே எல்லோரின் குடும்பமும் பெருகி இருந்ததில் என்னவோ பெரிய கொண்டாட்டம் போலவே வீடு நிறைந்திருந்தது. ராகுலனின் பிறந்தநாள் விழாவும் மிகுந்த சந்தோசத்துடன் நடந்து முடிந்திருந்தது. இரவு உணவுக்கு ராகவன் வெளியே கொடுத்திருந்தான். அதை எடுத்துக்கொண்டு வரவும் அப்படியே நிகேதன் வாங்கிய நிலத்தைப் பார்க்கவும் சகாதேவனும் மாலினியும் நிகேதனோடு புறப்பட, ராகவனும் சுகிர்தனும் சேர்ந்து கொண்டனர்.
தர்மினி, ஆரணி, கயலினி மூவரும் இன்றைய விழாவின் காரணமாகச் சிணுங்கிய குழந்தைகளோடு அறைக்குள் சென்றுவிட, சுகிர்தனின் பெற்றோரும் அமராவதியும் ஹாலில் அமர்ந்து உரையாடிக்கொண்டு இருந்தனர்.
விறாந்தையின் ஒற்றைச் சுவரில் மேக் குயின் திரை ஒட்டி, அதில் ராகுலின் பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது. இலக்கம் ஒன்று என்கிற Foil balloon பறந்துகொண்டிருந்தது. கேக்கும் அதே மேக் குயின் தான். ராகுலின் ஆடைகள் முதற்கொண்டு அவர்கள் சாப்பிட்ட பேப்பர் தட்டு, ஜூஸ் அருந்திய பிளாஸ்டிக் கப் எல்லாமே அதே மேக் குயின் தான். இதையெல்லாம் கவனித்த சுகிர்தனின் அன்னை, “சும்மா ஒரு கேக் வெட்டுறதுக்கு எவ்வளவு பெரிய வேலைப்பாடு என்ன?” என்றார் அமராவதியிடம்.
“அதுதான். எங்கட காலத்தில இதையெல்லாம் நாங்க பாத்ததே இல்லை. வருசத்துக்கு ஒரு சட்டை புதுசா கிடைக்கிறதே பெரிய விசயம். இண்டைக்கு எங்கட பேரப்பிள்ளைகள் போட்டோக்கு எண்டே நாலு அஞ்சு சட்டை மாத்தியாச்சு.” என்று சுகமாக அலுத்துக்கொண்டார் அவர்.
இப்படி அவர்களின் வாழ்க்கை மாறிப்போகும் என்று எண்ணியதே இல்லை. கையில் கிடந்த தங்கக் காப்பை மற்றவர்களின் கவனத்தில் விழாமல் வருடிவிட்டுக்கொண்டார். எத்தனை வயதானாலும் சில ஏக்கங்கள் தீர்கையில் மனம் குளிர்ந்துதானே போகிறது.
“பேரனுக்கு எண்டே புதுசா ஒரு அறையும் கட்டி இருக்கு. நீங்க பாக்க இல்லை எல்லா, வாங்கோ காட்டுறன்.” என்று அவர்களை அழைத்துச் சென்று காட்டினார்.
அங்கேதான், பெண்கள் மூவரும் சினந்து சிணுங்கிய பிள்ளைகளின் ஆடைகளைக் கழற்றி விட்டுவிட்டு பெரிய விரிப்பு ஒன்றில் விளையாட விட்டுவிட்டு அருகிலேயே அமர்ந்திருந்தனர்.
“இப்ப அடிக்கடி பெரியவனும் குடும்பத்தோட வந்து நிண்டுட்டு போறதால கொஞ்சம் பெருசாவே கட்டினாங்க. மகளும் மருமகனும் லோன் எடுக்கத்தான் வெளிக்கிட்டவே. பிறகு, சின்னவன் அரைவாசிக்கு மேல காசு குடுத்ததில கடனில்லாம கட்டி முடிச்சிட்டினம்.” பெருமையுடன் சொன்னார், அமராவதி.
ஆரணிக்கு அவரின் பேச்சைக் கேட்டுத் திகைப்பு. இது எப்போது நடந்தது? இதைப்பற்றி ஒரு வார்த்தை கூட நிகேதன் அவளிடம் சொல்லவே இல்லையே. நெஞ்சுக்குள் என்னவோ செய்தது. கயலினியிடம் இதைப்பற்றிக் கேட்டு, தனக்கு ஒன்றும் தெரியாது என்பதைக் காட்டிக்கொள்ள முடியாமல் முகம் கன்றிற்று.
“சந்தோசம் அம்மா. அருமையா பிள்ளைகளை வளத்து இருக்கிறீங்க. இப்பிடி ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியா இருந்தாத்தான் எங்களுக்குப் பிறகும் ஒற்றுமையா இருப்பினம்..”
“ஓமோம்! ஒருகாலம் எதிர்காலத்தை நினைச்சாலே பயமா இருக்கும்; நித்திரையே வராது. இப்ப நிம்மதியா இருக்கிறன். சின்னவன கூப்பிட்டு, ‘தம்பி உன்ர தங்கச்சி அறை கட்டப்போறாளாம். உன்னால முடிஞ்சத செய்’ எண்டு ஒரு வார்த்தைதான் சொன்னனான். உடனேயே காசு கொண்டுவந்து குடுத்திட்டான்.”
ஆரணியின் காதிலும் விழட்டும் என்று சற்றே அழுத்தியே சொன்னார், அமராவதி. அவள் மறுத்தும் மகன் செய்துவிட்டானே! செய்ய வைத்துவிட்டாரே. எப்போதும் அவரா அவளா என்று வந்தால் மகன் அவள் பக்கம் நின்றுவிடுகிறானே என்கிற குறை அவர் மனதில் நிறைய நாட்களாக இருந்தது. அதை இன்று தீர்த்துக்கொண்டார்.
“சின்னவன் தலையெடுக்கிற வரைக்கும் மூத்தவன் தானே எங்களைப் பாத்தவன். இப்ப அந்தக் கடமை இல்லாததால அவனும் காசு சேர்த்து கொழும்பில ஒரு வீடு வாங்கி இருக்கிறான். குடிப்பூரலுக்கு நல்ல நாள் பாத்துக்கொண்டு இருக்கிறான். அதுக்கும் ஒருக்கா எல்லாரும் கொழும்பு போய்வர வேணும். சின்னவனிட்ட வேன் இருக்கிறதால போக்குவரத்தும் பிரச்சனை இல்ல.” என்று கதை அளந்தபடி அந்த மூவர் கொண்ட குழு இயல்பாக மீண்டும் விறாந்தைக்குச் சென்று சேர்ந்தது.