வழமை போன்று அதிகாலையிலேயே கிளம்பி ஹயருக்குச் சென்றுவிட்டு, ஆரணி சொன்ன நேரத்துக்குச் சரியாக வீட்டுக்கு வந்து விறாந்தையில் அமர்ந்துகொண்டான் நிகேதன். பூவினியை பார்வதி அம்மாவிடம் விட்டுவிட்டுப் போகவா என்று அவள் கேட்டபோது, வேண்டாம் நான் வருகிறேன் என்று அவன் தான் சொன்னான். சொன்னதுபோல் வந்தும் விட்டான். ஆனால், தன் முடிவை மாற்றிக்கொள்ள மாட்டாளா என்கிற எதிர்பார்ப்புடன் அவன் விழிகள் அவளையே தொடர்ந்தது. மனம் ஒருவிதமாக அலைப்புற்று உறுத்திக்கொண்டே இருந்தது.
அவனுடைய எதிர்பார்ப்புக்கு மாறாக அவள் தயாராகிக்கொண்டிருந்தாள். ஆக, போகத்தான் போகிறாள். மனதினுள் ஒருவித இறுக்கம் படர தலையைக் குனிந்தபடி அப்படியே அமர்ந்திருந்தான்.
பூவினியை குளிக்கவார்த்து, உணவு கொடுத்து, புது டயப்பரையும் போட்டுவிட்டு அவனின் முன்னால் நிலத்தில் விளையாட்டுப் பொருட்களோடு அவளை இருத்திவிட்டாள். இப்போதெல்லாம் நன்றாகவே தவழ ஆரம்பித்துவிட்ட பூவினிக்கு விரிப்பெல்லாம் பத்தாது. அதில், வீட்டை எப்போதும் தூசி தும்பு இல்லாமல் பார்த்துக்கொள்வாள், ஆரணி.
நிமிர்ந்து அவளின் முகம் பார்த்து, “போகத்தான் வேணுமா ஆரா?” என்று வினவினான், நிகேதன். கேட்கக்கூடாது என்றுதான் நினைத்தான். முடியாமல் கேள்வி வெளியே வந்திருந்தது.
அதற்குப் பதில் சொல்லாமல், “சாப்பிட, குடிக்க உங்களுக்கு ஏதாவது தரவா?” என்று கேட்டாள், அவள்.
“உன்ர அப்பாவோட நீ சேருறதுல எனக்குச் சந்தோசம் தான் ஆரா. ஆனா.. இப்ப நீ போறது என்னவோ என்னை நம்பாம என்னை உதறிப்போட்டு போறமாதிரி இருக்கு.” என்றான் மீண்டும்.
ஒரு நொடி அமைதி காத்தாள் ஆரணி. பின் நிமிர்ந்து, “சமைச்சிட்டன். பசிச்சா போட்டுச் சாப்பிடுங்கோ. பூவிக்குத் தேத்தண்ணி மட்டும் இன்னும் ஒரு மணிநேரம் கழிச்சுக் குடுத்தா காணும். ஒரு ரெண்டு மணித்தியாலத்தில வந்திடுவன்.” என்றுவிட்டு, அவன் தன்னையே பார்த்துக்கொண்டு இருக்கிறான் என்று தெரிந்தும் செருப்பை மாட்டிக்கொண்டு ஸ்கூட்டியில் புறப்பட்டாள்.
நடப்பதை நம்பமுடியாமல் அமர்ந்திருந்தான் நிகேதன். தன் உணர்வுகளை எல்லாம் வார்த்தைகளாகச் சுடச்சுடக் கொட்டுகிறவள் இன்று மௌனமாய் இருந்து அவனைத் தண்டிக்கிறாள் என்று மட்டும் புரிந்தது.
மனதை இனம்புரியாத பீதி ஒன்று கவ்விக்கொள்ள அவள் போன திசையையே பார்த்திருந்தான்.
ஆரணி இண்டஸ்ட்ரீஸ் வளாகம். பக்கச் சுவரோரமாக விருந்தினர்கள், வெளியாட்கள் வந்தால் நிறுத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த பார்க்கிங்கில் கொண்டுபோய் ஸ்கூட்டியை நிறுத்தினாள், ஆரணி. தன் காரை கண்டதுமே காவலாளி ஓடிவந்து கேட்டை விரியத் திறந்து பிடித்துக்கொண்டு நிற்கும் காட்சி நினைவில் வருவதை என்ன முயன்றும் அவளால் தடுக்க முடியாமல் போயிற்று.
கிட்டத்தட்ட ஐந்து ஐந்தரை வருடங்கள் கழித்து வருகிறாள். முன்பக்கம் அலுவலகமும் அதிலிருந்தே போகக்கூடிய வகையில் தொழிற்சாலையும் அமைந்திருந்தது. அதே அலுவலகம். அதே நடைமுறைகள். இன்னும் அதே தெரிந்த முகங்கள். ஆனால், அவள் தான் முற்றிலுமாக மாறிப்போனாள். உரிமையாய் நடந்து திரிந்த இடத்தில் சாதாரணமாகக்கூட நடக்க முடியாமல் கால்கள் கூசிற்று. அலுவலகத்துக்குள் நுழைந்தவளைத் தடுப்பார் யாருமில்லை. எதிர்ப்பட்ட தெரிந்த முகங்கள் அனைத்திலும் அவளைப் பார்த்து வியப்பும் அதிர்ச்சியும்தான். முகம் கன்றுவதைத் தடுக்க முயன்றவாறே, ஒரு தலையசைப்புடன் அவர்களைக் கடந்து தந்தையின் அறையின் கதவைத் தட்டிவிட்டுத் திறந்தாள்.
வேலையில் கவனமாக இருந்த சத்தியநாதன் நிமிர்ந்து பார்த்தார். அவள் என்றதும் அவர் புருவங்கள் ஒருமுறை சுருங்கி மீண்டன.
ஆரணியின் விழிகள் அப்போதே மெல்ல கரிக்க ஆரம்பிக்க, “வரலாமா?” என்றாள் அடைத்துப்போன குரலில்.
ஒருமுறை அவளின் விழிகளுக்குள் அலசிவிட்டு, பேசாமல் கையால் முன்னிருக்கையைக் காட்டினார் அவர். வந்து அமர்ந்தாள் ஆரணி.
சற்றுநேரம் இருவரிடமும் அமைதி.
“எப்பிடி இருக்கிறீங்க?”
அவர் ஒன்றுமே சொல்லவில்லை. அவளையே பார்த்துக்கொண்டிருந்தார். அந்தப் பார்வைக்கு பொருள் எப்படி எடுப்பது என்று தெரியாது அவள் கலங்கினாள். அவரோடு சாதாரணமாகத்தான் கதைக்க நினைத்தாள். அது முடியாமல், கலங்கும் கண்களையும் தழுதழுக்கும் குரலையும் வைத்துக்கொண்டு எதுவும் வரமாட்டேன் என்றது.
ஒரு முடிவுடன் நிமிர்ந்து நேராக அமர்ந்தாள்.
“நீங்க நினைச்ச மாதிரி என்ர தெரிவு பிழைச்சு போகேல்ல அப்பா. நான் காதலிச்சு கட்டினவர் நல்லவர் தான். நானும் நல்லாத்தான் இருக்கிறன். எனக்கும் ஒரு மகள் இருக்கிறா. ஆனா..” மேலே பேசமுடியாமல் மனதில் மிகுந்த சுமையோடு தந்தையை நோக்கினாள்.
“ஆனாப்பா உங்களுக்கும் அம்மாக்கும் நான் நல்ல மகளா நடக்கேல்ல. நல்ல பெயரை வாங்கித் தரேல்ல. உங்களுக்கு மரியாதைய தேடி தாற மாதிரி என்னுடைய செயல்கள் இருக்க இல்ல.” முதன் முதலாக அவர் பார்வை விலகியது. அதை உணராமல் அவள் தொடர்ந்தாள்.
“பரம்பரை பணக்காரன் நீங்க. காலம் காலமா ஊருக்குள்ள மதிப்பும் மரியாதையா வாழ்ந்த மனுசன். அப்பிடியான உங்களுக்கு ஒரு மகளா நான் தேடித் தந்தது, ‘மகள் யாரோடையோ ஓடிப்போயிட்டாளாம்’ எண்டுற பெயரைத்தான். அப்பிடி நான் செய்திருக்கக் கூடாது. அழியாத அவமானத்தை உங்களுக்குத் தேடி தந்திருக்கக் கூடாது. அண்டைக்கு நான் வீட்டை விட்டு வெளில வந்திருக்கக் கூடாது. அங்க இருந்து போராடி இருக்கவேணும். நிகேதனை தூக்குவன் எண்டு சொன்னீங்க தான். மிரட்டினீங்க தான். ஆனாலும், என்னை மீறி நீங்க எதுவும் செய்திருக்க மாட்டீங்க எண்டு நம்பியிருக்கோணும். உங்களுக்கு விளங்க வச்சிருக்க வேணும். உங்கட சம்மதத்தோட அந்தக் கலியாணத்தைச் செய்திருக்கோணும். இதை எல்லாத்தையும் செய்யாம விட்டுட்டன்.” புத்தருக்குப் போதிமரத்தடியில் ஞானம் பிறந்ததுபோல், அவளுக்கும் தெளிவு பிறக்க சில காலங்களும் சில காயங்களும் தேவைப்பட்டிருக்கிறது.
அவரோ, ஜன்னல் வழி தெரிந்த வெளிப்புறத்தை பார்த்தபடி இருந்தார்.
“ஒரே ஒரு பொம்பிளைப்பிள்ளை எண்டு எந்தக் குறையும் இல்லாம வளர்த்தீங்க. எந்த இடத்திலையும் நீங்க ரெண்டுபேரும் என்னைக் கைவிடேல்ல. ஆனா நான்… உங்கள கை விட்டுட்டன் அப்பா. நடுத்தெருவுல விட்டமாதிரி விட்டுட்டன். வெளில கோபப்பட்டு இருந்தாலும் உள்ளுக்க நிறைய துடிச்சு இருப்பீங்க. கவலைப்பட்டு இருப்பீங்க. கடைசிவரைக்கும் மகள் எங்களோட இருப்பாள் எண்டு நம்பின உங்களுக்கு நான் செய்தது பெரும் பாவம் எல்லா அப்பா. அதுதான் போல காலம் எல்லாத்தையும் வலிக்க வலிக்கப் படிப்பிக்குது அப்பா.” என்றபோது என்ன முயன்றும் முடியாமல் அவள் குரல் தழுதழுத்துப் போயிற்று. இரண்டு கண்ணீர் மணிகள் வேறு உருண்டு விழுந்தது. வேகமாகத் துடைத்துக்கொண்டாள்.
இப்போது அவரின் பார்வை கூர்மையுடன் அவளிடம் படிந்தது. அதை உணராமல் அவள் தனக்குள் போராடிக்கொண்டு இருந்தாள். கையை ஓங்கிக்கொண்டு வந்த நிகேதன் கண் முன்னே வந்தான். வெளியே போ என்று அவளைத் துரத்தினான். அவன் நல்லவன் தான். அவள் மீதான அவனுடைய அன்பிலும் அவளுக்கு ஐயமில்லை. ஆனால், அனைத்தும் நீயே என்று நம்பியவளை வார்த்தைகளால் குதறிவிட்டானே. அவனையே உலகமாய் நம்பிய இதயம் கதறுகிறதே. அதை யாரிடம் சொல்லி அழுவாள். குறைந்த பட்சமாய்ப் பெற்றவர்களுக்கு இழைத்த தவறுக்காகவாவது மன்னிப்பு கேட்டுவிட மனம் சொல்லிற்று. மீண்டும் நிமிர்ந்து அவரைப் பார்த்தாள்.
“நான் செய்தது பெரும் பிழை. அதுக்கு மன்னிப்பு கேக்கவேணும் எண்டு நினைச்சன். அதுதான் உடனே வந்திட்டேன். மற்றும்படி அண்டைக்குச் சொன்னதுதான் அப்பா, உங்கட சொத்துப்பத்து எனக்குத் தேவையே இல்ல. அதுக்காக நான் இங்க வரவும் இல்ல.” மீண்டும் அவளுக்கு வார்த்தைகள் திக்கிற்று.
அதற்குமேல் என்ன பேசுவது என்று தெரியவில்லை. இதே அப்பாவுடன் மணிக்கணக்கில் பேசி இருக்கிறாள். செல்லச் சண்டைகள் போட்டிருக்கிறாள். அவரை ஆட்டிப் படைத்திருக்கிறாள். இன்றைக்கும் அதே அப்பாதான். ஆனால் அவர்களுக்கிடையிலான தூரம் மட்டும் கண்ணுக்குப் புலப்படாத அக்கரையாக நீண்டு தெரிந்தது.
அதற்குமேல் அங்கே இருக்க முடியாமல் எழுந்துகொண்டாள். “முடிஞ்சா என்னை மன்னிச்சுக்கொள்ளுங்கோ அப்பா. அம்மாட்டையும் மன்னிப்புக் கேட்டேனாம் எண்டு சொல்லிவிடுங்கோ.” என்றுவிட்டு எழுந்து நடந்தவள் முடியாமல் நின்றாள்.
திரும்பி அவரைப் பார்த்தாள். அவரும் அவளைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தார்.
“நான் ஒருக்கா உங்களைக் கட்டிப் பிடிக்கலாமா?” கமறிய குரலில் வினவினாள்.
அவர் ஒருகணம் அவளைக் கூர்ந்தார். அவள் விழிகளினோரம் கண்ணீர் பொங்கி வழிந்தது. ஒன்றும் சொல்லாமல் எழுந்து கைகளை விரித்தார். அடுத்த நொடியே ஒரு விசிப்புடன் அவரின் கைகளுக்குள் புகுந்துகொண்டாள்.
எந்த வல்லூறுகளாலும் அசைக்க முடியாத பாசச் சிறகுகள் அல்லவா அவை. தந்தையின் மார்பில் முகம் புதைத்ததும் கண்ணீர் ஆறாகப் பெருகிற்று. நெஞ்சில் எட்டி உதைத்துவிட்டுப் போனவளைக்கூட அதே நெஞ்சில் சாய்த்துக்கொள்ளும் பாசம் தகப்பனுடையது. கதறித் தீர்த்தாள் ஆரணி. எதற்கு அழுகிறாள்? ஏன் அழுகிறாள்? அவரிடம் என்ன சொல்ல பிரியப்படுகிறாள்? அவள் இதயம் ஏன் இப்படிக் கிடந்து தவிக்கிறது. ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் அழுதாள். தன் மனதின் பாரத்தை எல்லாம் கண்ணீராக அவரின் காலடியில் கொட்டினாள். மனம் கொஞ்சம் தெளிந்தது. கண்களைத் துடைத்துக்கொண்டு விலகினாள்.
கலங்கிச் சிவந்து போயிருந்த விழிகளால் அவரை நோக்கி, “எல்லா…த்துக்கும் சொறி. ஆனா, தயவு செய்து என்னைத் தேடி வந்துடாதீங்க. உங்களிட்ட இரக்கம் சம்பாதிக்கவோ உங்களோட சேரவோ நான் வரேல்ல! செய்த தவறுக்கு மன்னிப்பு கேக்க மட்டும் தான் வந்தனான்.” என்றவள் மீண்டும் விழிகள் கலங்கவும் அங்கு நில்லாமல் விரைந்தாள்.