அவள் ஆரணி 48 – 1

ஆரணி இண்டஸ்ட்ரீஸில் இருந்து வெளியே வந்த நிகேதனுக்குத் தன்னை ஆற்றுப்படுத்த சிறிது நேரம் தேவைப்பட்டது. அவர் ஒன்றும் மோசமாக அவனைக் கையாளவில்லை. மரியாதைக் குறைவாக நடத்தவில்லை. ஆனாலும் மனம் அடிபட்டுப் போயிருந்தது.

அவன் நல்ல நிலையில் இருந்திருக்க அது ஒரு தந்தையின் எதிர்பார்ப்பு என்று சாதாரணமாகக் கடந்திருப்பானாக இருக்கும். இன்றோ, பிள்ளையைக் கொடுத்ததைத் தவிர வேறு என்ன கிழித்தாய் என்கிற கேள்வி இன்னுமே அழியாமல் நின்று அவனை வதைத்துக்கொண்டு இருக்கையில், அக்கேள்வியின் இன்னொரு வடிவமாகத்தான் அவரின் கேள்வியை அவனால் பொருள் கொள்ள முடிந்தது. நீ எதுவும் என் பெண்ணுக்குச் செய்யவில்லை. அதனால் உனக்கும் சேர்த்து நான் செய்கிறேன் என்கிறார். இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லையே!

அதற்குமேல் எதையும் சிந்திக்க இயலாமல் வாகனத்தை எடுத்துக்கொண்டு போனவன், இரவு வீட்டுக்கு வரும்போது அவளின் தாலிக்கொடியோடுதான் வந்தான்.

கண்களில் கேள்வியோடு பார்த்தாள் ஆரணி. “எடுத்து வை.” என்றுவிட்டுக் குளிக்கப் போனான். அவன் வந்தபோது, உணவு தயாராய் இருந்தது. உறங்கியிருந்த மகளைக் கொஞ்சிவிட்டு வந்து உணவை முடித்தான். அதுவரை அமைதிதான். இருவருமே எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

நிகேதனுக்கு அவளின் முகம் பார்க்கிறபோதெல்லாம், ‘செய்த பிழைய இப்பதான் உணர்ந்திருக்கிறா போல. வந்து மன்னிப்பு கேட்டவா’ என்ற மாமனாரின் வார்த்தைகள்தான் ஓடிற்று. காதலித்தது இருவரும். மணம் முடித்ததும் இருவரும் தான். பிறகு ஏன் அவள் மட்டும் தனியாகப் போனாள்? அவனுடனேயே போய் ‘நாங்க செய்தது பிழை’ என்று மன்னிப்பைக் கேட்டிருக்கலாம்.

தனித்துப்போய்க் கேட்டு, அவனை அவள் தனியாக விட்டுவிட்டது போலொரு உணர்வு தாக்க, தன்னை மறந்து அவளையே பார்த்தான். இதுநாள்வரை அவள்தான் விலகி நின்றாள். இன்றோ அவனுக்குள்ளும் ஒரு விலகல். உங்களுக்குள் என்ன பிரச்சனை என்று கேளாமல் கேட்ட மாமனாரின் பார்வை வேறு அவனை அறுத்தது.

அவளின் புருவங்கள் சுருங்கவும் பார்வையை அகற்றிக்கொண்டு சென்று சோபாவில் அமர்ந்தான். என்னவோ ஒரு சோர்வு, சலிப்பு. தன் மனதின் குமுறல்களை யாரிடமும் பகிர முடியாத புழுக்கம் வேறு அவனை அழுத்தியது. விழிகளை மூடி தலையைச் சோபாவில் சாய்த்தான்.

ஆரணிக்கு ஒன்றும் விளங்கவில்லை. அவன் எதற்கோ பரிதவிக்கிறான் என்று புரிந்தது. நெருங்கிப்போய் ஆறுதல் சொல்ல முடியாமல் மனதில் தடை விழுந்து போயிற்றே. அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள். மூன்று மாதத்தில் எடுத்துவிடலாம் என்று சொல்லியிருந்தவன் திடீரென்று கொடியோடு வந்து நிற்கிறான். முகம் வேறு சரியாகவே இல்லை. “இவ்வளவு வேகமா ஏன் நிகேதன்? அவசர தேவை ஒண்டும் இல்லையே.” என்றாள்.

உடனே ஒன்றுமே சொல்லவில்லை அவன். சற்று நேரம் கழித்து மெல்ல விழிகளைத் திறந்தான். தன் முன்னே நின்றவளின் மீதே அவன் பார்வை படிந்தது.

வந்ததில் இருந்து இது என்ன விதமான பார்வை? அவளுக்கு விளங்கவில்லை. “என்ன?” என்றாள் திணறலோடு.

ஒன்றுமில்லை என்பதுபோல் தலையை அசைத்தான் அவன். பின், “ஒரு வேனை விக்கப்போறன் ஆரா. வித்துப்போட்டு அந்தக் காசுல வீடு கட்டுற வேலைய ஆரம்பிக்கப் போறன்.” என்றான்.

ஆரணி திகைத்தாள். கொஞ்சம் காசு சேர்த்துக்கொண்டு அடுத்த வருடம் ஆரம்பிப்பதுதான் அவர்கள் இருவருமாகப் பேசி எடுத்திருந்த முடிவு. இப்படி ஒரே நாளில் எல்லா முடிவுகளும் ஏன் மாறிப்போயிற்று?

“ஏன் இதெல்லாம் திடீரெண்டு?”

“மிச்சம் சொச்சமா இருக்கிற மானத்தையாவது காப்பாத்தத்தான்.” என்றான் அவன் கசந்த குரலில்.

அவளுக்கு அப்போதும் ஒன்றும் புரியவில்லை. அவன் மானத்துக்கு என்னாயிற்று என்றுதான் ஓடியது.

“ஏதாவது பிரச்சனையா நிகேதன்?”

‘நிகேதன்! நிகேதன்! நிகேதன்! இதற்கு அவள் அவனோடு பேசாமலேயே இருக்கலாம்!’ மனதுக்குள் இருந்த அழுத்தம் ஒன்று எரிமலைக் குழம்பினைப் போன்று வெடித்துக்கொண்டு கிளம்பியது. பெரும் சிரமப்பட்டு அதை அடக்கினான். ஒருமுறை வெடித்துவிட்டுப் படுகிற பாடு போதாதா?

“ஒண்டுமில்ல போய்ப்படு! நேரமாகுது.” என்றான் வேறு பேச விரும்பாமல்.

“நீங்க?”

“வாறன். நீ போ!”

அவனையே குழப்பத்துடன் பார்த்துவிட்டுப் போனாள் அவள். போகிறவளின் முதுகையே பார்த்திருந்தான் நிகேதன். என்னவோ அவனுக்கு ஒன்றுமே பிடிக்கவில்லை. காதலிக்க ஆரம்பித்த நாள் தொடங்கி இருவரும் ஒன்றாகப் பயணிக்க ஆரம்பித்த பாதை, இன்றைக்கு இரண்டாக்கப் பிளந்து கிடந்தது. ஒரு நெடிய மூச்சுடன் அப்படியே சோபாவிலேயே சரிந்து கண்களை மூடிக்கொண்டான்.

அதன் பிறகு நிகேதன் வீட்டில் தங்குவதே இல்லை. சொன்னது போலவே ஒரு வேனை விற்றான். வீடு கட்டுவதற்கான வேலைகளை மின்னல் விரைவில் ஆரம்பித்தான். எதையும் தடுக்க முடியாத நிலையில் ஆரணி தள்ளியே நின்றாள்.

—————————-

அன்று காலையில் கண் விழிக்கும்போதே அவளருகில் சுருண்டிருந்தான் நிகேதன். அநாதரவான குழந்தை போன்று தன்னை அண்டிப் படுத்திருந்தவனைப் பார்க்கையில் நெஞ்சுக்குள் பிசைந்தது. இப்போதெல்லாம் எப்போது வீட்டுக்கு வருவான் என்றே தெரியாது. ஆனால் விடிகாலையில் அவளைக் கட்டிக்கொண்டு உறங்கிக்கொண்டு இருப்பான். மனம் அவனுக்காகக் கசிந்த அதே நேரம், அவன் உதிர்த்த வார்த்தைகள் நினைவில் வந்து அவள் இதயத்தை அழுத்தியது.

இன்றைக்கு அவர்களின் ஆறாவது திருமணநாள். ஆறு வருடங்களுக்கு முன்பு இதே நாளில் எதைப்பற்றியும் யோசிக்காமல் அவனை மட்டுமே நம்பி வீட்டை விட்டு வெளியே வந்து தைரியமாக மணமும் முடித்தாள். அனைத்து இன்ப துன்பங்களிலும் சமபங்கெடுத்துக்கொண்டாள். அதற்கு அவன் தந்த பரிசு? என்ன நடந்திருந்தாலும் வீட்டை விட்டு வெளியே போ என்று அவன் சொல்லலாமா? கையை ஓங்கலாமா?

அனைத்தையும் கோபத்தில் செய்துவிட்டு அவனும் தனக்குள் நிம்மதி இழந்து அலைப்புறுகிறான் என்று புரிந்தது. ஆனால், அவனை மட்டுமே உயிராக நேசித்த மனது காயப்பட்டுக் கிடக்கிறதே. விழிகள் கலங்க மெல்ல அவனிடமிருந்து விலகி எழுந்துகொண்டாள். அவள் வீட்டு வேலைகளைப் பார்க்க, அவன் எழுந்துகொண்ட அரவம் கேட்டது.

வேக வேகமாக அவனுக்கான காலை உணவையும் தேநீரையும் எடுத்துவந்து பரிமாறினாள். அதை முடித்துக்கொண்டவன் புறப்படாமல் சென்று சோபாவில் முடங்கிக்கொண்டான்.

ஆரணியின் புருவங்கள் சுருங்கியது.

ஹயருக்கு போகிற நேரமாகியும் அவன் அசையவில்லை. உடைகூட மாற்றாமல், காதில் ஹெட்போன்களைக் கொழுவிக்கொண்டு விழிகளை மூடி இருந்தவனைப் பார்க்கையில் உடம்பு ஏதும் சரியில்லையோ என்று வேறு கலக்கமாயிற்று. பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு அதற்குமேல் முடியாமல் அவன் அருகில் சென்று மெல்லத் தட்டினாள்.

விழிகளைத் திறந்தவனின் பார்வையில் என்ன இருந்தது? அவளுக்குப் புரியவில்லை. ஆனால், நெஞ்சுக்குள் என்னவோ செய்தது. “என்ன?” என்றாள் தடுமாறி.

மெல்ல அவளின் கரம் பற்றித் தன்மேல் சரித்தான் நிகேதன். இதை எதிர்பாராதவள் மெல்லிய அதிர்வுடன் அவனின் இழுவைக்கு இழுபட்டாள். தன் காதுகளில் கிடந்த ஹெட்போன்களில் ஒன்றை எடுத்து அவளின் காதில் வைத்தான் அவன்.

சின்னச் சின்ன ஊடல்களும்
சின்னச் சின்ன மோதல்களும்
மின்னல் போல வந்து வந்து போகும்
ஊடல் வந்து ஊடல் வந்து
முட்டிக் கொண்டபோதும்
இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்
இரு மாதங்கள் நாட்கள் செல்ல
நிறம் மாறிடும் பூக்கள் அல்ல

என்று போய்க்கொண்டிருந்தது பாடல்.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock