அதன் பிறகு அவள் உறங்கவில்லை. இவர்களின் நடமாட்டத்தை அறிந்து பார்வதி அம்மா வந்தார். சிந்தனை முழுக்க அவனிடம் இருந்தபோதும் தன்னைச் சமாளித்துக்கொண்டு அவரோடு கதைத்துக்கொண்டு இருந்தாள். பயணத்தைக் பற்றி அவரிடம் தெரிவித்தாள். தான் தாய்மை உற்றிருக்கும் செய்தியையும் சொல்லி அவரிடமும் பேச்சு வாங்கிக் கொண்டாள்.
அன்றைக்கு எட்டு மணிக்கே வீட்டுக்குத் திரும்பி வந்த நிகேதன் உடையைக்கூட மாற்றவில்லை. தான் பெற்ற மகளைக்கூடத் தூக்கிக் கொஞ்சவில்லை. தலையைப் பிடித்துக்கொண்டு சோபாவிலேயே அமர்ந்திருந்தான். பூவினி தானாகவே அவன் மடியில் ஏறி, அவனோடு விளையாடி, அவளாகவே மீண்டும் இறங்கியும் போயிருந்தாள். அது எதையும் உணராமல் விண் விண் என்று தெறித்த தலையைப் பற்றியபடியே இருந்தான் அவன்.
நான் அப்பாவானதை தெரிந்துகொள்ளக் கூடத் தகுதியற்றவனாகிப் போனேனா என்கிற கேள்வி அவனுடைய நிம்மதியை மொத்தமாகப் பறித்துக்கொண்டது. மனதில் அமைதியில்லை. சிந்தனையில் தெளிவில்லை. வாழ்வில் பற்றில்லை. ஒற்றை நாளில் கிட்டத்தட்ட ஒரு பைத்தியக்காரனாகவே மாறிப்போயிருந்தான் நிகேதன்.
அவன் நிலை கண்டு ஆரணிக்கு அழுகையே வந்துவிட்டது. கலைந்த தலை, கசங்கிய உடை, உயிர்ப்பை இழந்து போயிருந்த முகம் என்று சுயத்தை முற்றிலும் இழந்து போயிருந்தான் அவன்.
அவளுக்கு எப்படிச் சகலமுமாக அவனிருக்கிறானோ அப்படி அவனுக்கும் அவள்தான் எல்லாமே என்பதும் அவள் அறிந்ததுதான். தயக்கமாய் இருந்தாலும் அவனோடு பேசிவிட எண்ணி அவள் நெருங்க, “நான் செய்த பிழைக்கு இதுதான் நீ எனக்குத் தாற தண்டனையா ஆரா?” என்றான் அவளை நிமிர்ந்து பார்த்து.
ஆரணி திகைப்புடன் அவனைப் பார்த்தாள். இரத்தச் சிவப்பாய்ச் சிவந்துபோயிருந்த விழிகளும் கறுத்துக் களைத்துப்போயிருந்த முகமும் அவள் நெஞ்சையே பதற வைத்தது.
“பிளீஸ் நி…”
“இதைப் பற்றி எதுவுமே கதைக்கக் கூடாது எண்டுதான் நினைச்சனான் ஆரா. ஆனா என்னால முடியேல்ல. நெஞ்சுக்க என்னவோ கிடந்து குடையுது!” என்றவனின் கைகள் மீண்டும் தலையைத் தாங்க, பார்வை தரையில் இருந்தது.
“நான் செய்தது பிழை எண்டு எனக்குத் தெரியும் ஆரா. என்னை மட்டுமே நம்பி வந்தவள் நீ. உன்னட்ட கோபப்பட்டு இருக்கக் கூடாது. கையை ஓங்கி இருக்கக் கூடாது. எல்லாருக்கும் முன்னுக்கு வச்சு உன்ன நோகடிச்சிருக்கக் கூடாது. வீட்டை விட்டு வெளில போ எண்டு சொல்லியே இருக்கக் கூடாது. நான் சின்னதா முகம் திருப்பினாலே நீ தாங்கமாட்டாய் எண்டு தெரிஞ்சும் நான் அப்பிடி நடந்தது பிழைதான். அதுதான் வந்து மன்னிப்பு கேக்க இல்ல. செய்றதை எல்லாம் செய்துபோட்டு வந்து மன்னிப்பு கேட்டா சரியா எண்டு நினைச்சன். நீ என்னை விலக்கி வச்சாலும் நான் நெருங்கி வராம நிண்டதுக்குக் காரணம் உன்ர காயம் ஆறட்டும் எண்டுதான். ஆனா அதுக்காக…” என்றுவிட்டு மீண்டும் நிமிர்ந்து அவள் முகம் பார்த்தவனின் விழிகளில் பெரும் பரிதவிப்பு. “நான் அப்பா ஆகிட்டேன் எண்டுறதை அறிஞ்சுகொள்ளுற தகுதி கூட எனக்கில்லாம போச்சா ஆரா?” என்றான்.
“நிக்கி…” ஆரணியின் குரல் தழுதழுத்தது.
“நீ நிகேதன் எண்டே கூப்பிடு.” என்றான் அவன்.
“நிக்கி…” அவளின் ஒற்றைக் கன்னத்தில் கண்ணீர் கோடாக இறங்கியது.
“எங்களுக்கு எண்டு எதுவுமே இல்லாம, அந்தச் சின்ன அறைக்க சாப்பிடுறதுக்குக் கூட ஒழுங்கான சாப்பாடு இல்லாம இருந்த காலத்தில கூட நான் இப்பிடி கலங்கினது இல்ல ஆரா. இப்ப என்னட்ட எல்லாமே இருக்கு. ஆனா எதுவுமே இல்லாம அனாதையா நிக்கிற மாதிரி இருக்கடி. நான் ஏன் வாழுறன் எண்டே தெரியாம இருக்கு. இதுதான் நீ எனக்குத் தர நினைக்கிற தண்டனையா?” என்றான் மீண்டும்.
ஆரணி துடித்துப்போனாள். “நிக்கி, என்ன கதைக்கிறாய்?” என்றவள் வேகமாக மண்டியிட்டு அவன் முன்னே அமர்ந்தாள். “நான் சொல்லுறதை கொஞ்சம் கேளு நிக்கி. எனக்கு உன்னில நிறையக் கோபம் இருந்தது. நீயா என்னை இந்தளவுக்கு நோகடிச்சது எண்டுற கவலை இருந்தது. அந்தக் கோபத்தையும் கவலையையும் மனதில வச்சுக்கொண்டு, என்னவோ பத்தோட பதினொண்டு மாதிரி உன்னட்ட வந்து எங்களுக்கு இன்னுமொரு பிள்ளை பிறக்கப்போகுது எண்டு சொல்ல முடியேல்லடா. என்னால உன்னோட கடமைக்கோ கட்டாயத்துக்கோ வாழ ஏலாது நிக்கி. அதாலதான் சொல்ல இல்ல. அங்கேயும் மாலினி அக்காவா கேட்டிருக்காட்டி உன்னட்ட சொல்லாம ஆருக்குமே சொல்லியிருக்க மாட்டன். மாலினி அக்கா கேட்ட பிறகு என்னால பொய் சொல்ல ஏலாம போச்சு. என்னை என்ன செய்யச் சொல்லுறாய்?” என்று கேட்டாள் கண்ணீரோடு.
அவள் முகத்தில் இருந்த அவன் பார்வை மாறவே இல்லை. அவள் சொல்கிறவற்றை உள்வாங்கி, ஆராய்ந்து உணருகிற நிலையிலும் அவன் இல்லை.
“இந்த மூண்டு மாதத்தில ஒரு நாள் கூடவா உனக்கு என்னட்ட சொல்ல ஏலாம போனது? இல்ல இவனுக்கெல்லாம் ஏன் சொல்லவேணும் எண்டு நினைச்சியா? என்ன இருந்தாலும் அம்மா, தங்கச்சி எண்டு வந்தா மனுசிய பற்றி யோசிக்க மறக்கிறவன் தானே நான்.” என்றவன் தன் முகத்தை இரு கைகளாலும் அழுத்தித் துடைத்தான். அவன் விழிகள் எங்கு என்றில்லாமல் வெறித்தது. ஆரணிக்கு அவனைக் பார்க்க அடிவயிறு கலங்கியது.
“பொறுப்பில்லை, வேலைக்குப் போகேல்ல, உழைக்கேல்ல எண்டு எல்லாரும் சொல்லிச் சொல்லி அது என்ர மனதில ஆழமா பதிஞ்சு போச்சு போல ஆரா. அதாலதான் அம்மாவோ கயலோ ஒண்டு கேட்டா என்னால மறுக்க முடியிறேல்ல. நீ கேட்டா கூட ஏன் நாளைக்கு உன்ர அப்பா வந்து கேட்டா கூட என்னால மாட்டன் எண்டு சொல்ல ஏலாது. என்னால முடிஞ்சதை செய்யத்தான் நினைப்பன். இதுதான் நான். ஆனா, அதுக்காக உன்ன நோகடிச்சதில, உனக்குச் சொல்லாம செய்ததுல எந்த நியாயமும் இல்லை எண்டுறதும் தெரியும் எனக்கு.” என்றவன் பெரிய மூச்சு ஒன்றை இழுத்து விட்டுவிட்டு அவளைப் பார்த்தான்.
“ஓகே. பரவாயில்ல. நீ தந்த எதையுமே நான் வேண்டாம் எண்டு சொன்னது இல்ல. காதலை தந்ததும் நீதான். கலியாணத்தைத் தந்ததும் நீதான். உழைக்க வழி காட்டினதும் நீதான். சந்தோசத்தைத் தந்ததும் நீதான். என்னை அப்பா ஆக்கினதும் நீதான். இந்த வசதி, காசு, வாழ்க்கை எல்லாமே நீ தந்ததுதான். இதையெல்லாம் அனுபவிக்கிற நான் நீ தாற தண்டனையை மட்டும் எப்பிடி வேண்டாம் எண்டு சொல்லுவன்?” என்று அமைதியாகச் சொல்லிவிட்டு எழுந்து குளிக்கச் சென்றான்.
என்னவெல்லாம் சொல்லிவிட்டுப் போகிறான் இவன்? அசையக்கூட மறந்தவளாக அப்படியே தரையிலேயே அமர்ந்திருந்தாள் ஆரணி.
அவன் குளித்துவிட்டு வந்தான். “பசிக்குது ஆரா.” என்றான் மேசையில் அமர்ந்தபடி.
ஒருவித அதிர்வுடன் அவனையே பார்த்தாள் ஆரணி. சில நிமிடங்களுக்கு முதல்தான் தன் கட்டுப்பாட்டை இழந்து புலம்பினான். இப்போது என்னவோ அவர்கள் ஆதர்ச தம்பதிகள் போலும், அவர்களுக்குள் எதுவுமே நடக்கவில்லை போலும் நடக்கிறானே.
எல்லாவற்றையும் தன் மனதுக்குள் புதைக்கிறவன் இதையும் தனக்குள்ளேயே புதைத்துக்கொண்டானா? என்னவாய் ஆகிக்கொண்டிருக்கிறான் அவளின் நிக்கி? மனம் துடித்தது. விழிகளில் கண்ணீர் அரும்பியது. துடைத்துக்கொண்டு எழுந்து சென்று உணவை போட்டுக் கொடுத்தாள்.
அவன் சாப்பிட்டான். வயிறு முட்டச் சாப்பிட்டான். “நீயும் சாப்பிடு!” என்றவிட்டு எழுந்துபோய்க் கட்டிலில் படுத்துக்கொண்டான்.
ஆரணி அப்படியே சமைந்துபோய் அமர்ந்திருந்தாள். அவளுக்குச் சற்று நேரம் எதையும் சிந்திக்கவோ செயலாற்றவோ முடியாமல் போயிற்று. தன்னைத் தேற்றிக்கொண்டு பூவினிக்கு உடம்பு துடைத்து, உடை மாற்றி, உணவு கொடுத்து, சற்று நேரம் விளையாட விட்டு, உறக்கத்துக்குச் சிணுங்கியவளைத் தட்டிக்கொடுத்து உறங்க வைக்கிற வரைக்கும் அந்த வீட்டில் வேறு சத்தமே இல்லை.
பூவினியும் உறங்கிப்போனாள். வீடு மயான அமைதியில் திளைத்து இருந்தது. ஆரணிக்கு ஒரு கட்டத்துக்குமேல் நிகேதனின் அமைதியும் போக்கும் பொறுக்கவே முடியாமல் போயிற்று. அவனை மாற்றிவிடு. உன்னைவிட்டால் அவனுக்கும் வேறு யாருமில்லை என்று மனம் உந்தியது.
எழுந்துவந்து அவன் பக்கத்தில் படுத்தாள். அவன் விழித்துப் பார்த்தான். அவள் அவனோடு ஒன்றினாள். அவன் கைகள் தானாக அவளை அரவணைத்துக்கொண்டது. ஆரணி அவன் மார்பில் தன் முகத்தைப் புதைத்தாள். “சொறி நிக்கி.” என்றாள்.
ஒன்றும் சொல்லாமல் அவளின் தலையை வருடிவிட்டான் நிகேதன். அவன் செவிகளை நனைத்துக்கொண்டு கண்ணீர் ஓடியது. அவளறியாமல் புறங்கையால் துடைத்துக்கொண்டான். ஆனால், அவனை உணர்ந்துகொண்ட ஆரணியின் அணைப்பு இறுகியது. அவளின் கண்ணீர் அவன் மார்பை நனைத்தது.
“அழாத ஆரா! காலம் எல்லாத்தையும் மாத்தும்!” என்றான் அவளின் கண்ணீரையும் துடைத்துவிட்டபடி.