வீடு நோக்கிச் சென்றுகொண்டிருந்த நிகேதன் சத்யநாதனைப் பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருந்தான். ஆரணி சென்று கேட்ட ஒற்றை மன்னிப்பிலோ, அவனை அழைத்து ஒருமுறை அவர் பேசியதிலோ அவரிடம் இத்தனை மாற்றம் உண்டாகியிருக்கும் என்று நம்ப அவன் தயாராயில்லை. ஆரம்பம் முதலே அவர் அவனைக் கண்காணித்திருக்க வேண்டும். கண்காணித்து, அவன் நல்லவன் தான், உழைப்பாளி தான் என்று ஐயம் திரிபுர உணர்ந்திருக்க வேண்டும். ஆனாலும், அவர்களாகவே அவரிடம் வரவேண்டும் என்று காத்திருந்திருக்கிறார். வந்ததும் முழுமையாகப் பிடித்துக்கொள்ள முனைகிறார்.
‘பொல்லாத மனிதர்’ என்று எண்ணும்போதே அவன் உதட்டோரம் சிறு முறுவல் ஒன்று உண்டாயிற்று.
இதோ, அவனிடம் வாக்கு வாங்கிவிட்டாரே. சத்தமே இல்லாமல் இருந்த இடத்திலிருந்தே அவர்களை ஆட்டுவிக்கும் அவர், அவனுக்கு மாமா என்பதைத் தாண்டி, அவனுடைய மதிப்பிற்குரிய முன்மாதிரி என்கிற இடத்தை நோக்கி உயர்ந்திருந்தார்.
விசயம் அறிந்த ஆரணியோ கொதித்து எழுந்துவிட்டாள். “ஆர(யாரை) கேட்டு என்னை அங்க கொண்டுபோய் விடுறதுக்கு முடிவு எடுத்தனி நிக்கி? நான் போக மாட்டன். என்னால உன்ன விட்டுட்டு இருக்கேலாது.”
“நான் என்ன நிரந்தரமாவே அங்க இரு எண்டா சொல்லுறன்? இனி நான் கொழும்புக்கு வெளிக்கிட வேணும். பிறகு வந்தாலும் வீட்டு வேல இருக்கும். ஹயர் இருக்கும். இதுல எப்பிடி நான் உன்ன பாப்பன் சொல்லு? அங்கபோய் இருந்தா உனக்கும் சந்தோசமா இருக்கும். மாமா மாமிக்கும் சந்தோசமா இருக்கும் தானே. நானும் உன்னைப் பற்றின பயமில்லாம வேலைகள பாப்பன். பூவிக்கும் அவவின்ர அம்மம்மாவோட தாத்தாவோட இருக்க, வளர சந்தர்ப்பம் கிடைக்கும் தானே ஆரா.”
அவன் என்ன சமாதானம் சொல்லியும் அவள் மனம் ஆறமாட்டேன் என்றது. “என்ன இருந்தாலும் என்னை கொண்டுபோய் அங்க விட நினைச்சிட்டியே நிக்கி. அந்தளவுக்கு என்னை வெறுத்திட்டியா?” என்று கலங்கினாள்.
அதற்குப் பதில் சொல்லவில்லை நிகேதன். அவள் முகத்தையே பார்த்தான். ஆரணிக்கு சில நிமிடங்களுக்கு மேலே அவனைப் பார்க்க முடியவில்லை. தன் கூற்றில் நியாயம் இல்லை என்கிற உண்மை அவளுக்கே தெரியுமே. என்றாலும் மனதின் சிணுக்கம் மறையவில்லை.
அவன் சிறு சிரிப்புடன் அவள் கன்னத்தில் தன் உதடுகளை ஒற்றி எடுத்தான். அவள் பிடித்துத் தள்ளிவிட்டாள்.
“நீ ஒண்டும் நடிக்கத் தேவையில்லை. இப்ப எல்லாம் உனக்கு என்னில பாசமே இல்ல.” அவன் முகம் பாராமல் அப்போதும் முறுக்கினாள் அவன்.
அவன் இதழ்கள் விரிந்தன. அவள் முகத்தோடு தன் முகம் வைத்து உரசினான். “என்ர ஆராவில எனக்கு பாசம் இல்லையா?” என்று கேட்டான்.
“பிறகு ஏன் என்னை அனுப்ப நிக்கிறாய்? நான் போகேல்ல நிக்கி!” என்றாள் கெஞ்சலாக.
“ஏன் எண்டு சொல்லு?”
“என்னவோ நாங்க இறங்கி போற மாதிரி இருக்கு..”
“சரி! இறங்கி போனாத்தான் என்ன? முதல் ஆரிட்ட(யாரிட்ட) இறங்கி போறோம்?”
அவள் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.
“அவே எங்களை தேடி வரவேணுமா இல்ல நாங்க அவேயே தேடி போகவேணுமா? எது சரி எண்டு சொல்லு?”
அதற்கும் அவளிடம் பதில் இல்லை.
“என்ர முகத்தை பாத்து சொல்லு. உனக்கு மாமாவ மாமிய பாக்கவேணும் மாதிரி இல்லையா? மாமின்ர கைப்பக்குவத்தில சாப்பிட வேணும் மாதிரி? பூவிய யாராவது பக்குவமா பாத்துக்கொண்டா அடிச்சுப்போட்ட மாதிரி படுத்து எழுப்பலாம் எண்டு நீ நினைச்சதே இல்லையா?” என்று கேட்டான் அவன்.
“எண்டாலும்..”
“என்ன எண்டாலும்? சும்மா ஒண்டுமே இல்லாததை தூக்கிப் பிடிக்கிறேல்ல ஆரா. நாங்க ஒண்டும் இறங்கிப் போக இல்ல. நல்லாத்தான் இருக்கிறோம். நீயா வெளில வந்த. நீயாத்தான் திரும்பவும் வரவேணும் எண்டு மட்டும் தான் அவே எதிர்பாக்கினம். மற்றும்படி நீயும் பூவியும் எப்ப வருவீங்க எண்டு ரெண்டுபேரும் காத்துக்கொண்டு இருக்கினம். அவேயும் பாவம் தானே. நீ வெளில வந்ததில இருந்து வீடே பாழடைஞ்சு போச்சுது எண்டு மாமி கண்கலங்குறா. அவவுக்கு என்ன பதில் சொல்லப்போறாய்?”
அதைக் கேட்டதும் அவளுக்குத் தொண்டை அடைத்துக்கொண்டது. கோபம் பாராட்டாமல் தன்னைத் தேடி ஓடிவந்த அன்னை கண்ணுக்குள் வந்து நின்றார்.
“இன்னொரு பிள்ளை எண்டதும் மாமின்ர முகத்தில எவ்வளவு சந்தோசம் தெரியுமா? முதல் பிள்ளைக்குத்தான் அவளை வச்சுப் பாக்க குடுத்து வைக்க இல்ல. இந்தப் பிள்ளைக்காவது நானே எல்லாம் செய்யவேணும் எண்டு பரபரக்கிறா. அவவுக்கு என்ன பத்து பிள்ளையா இருக்கு இதையெல்லாம் செய்து பாக்க?”
“நான் போனா நீ?”
அந்தக் கேள்வியிலேயே அவளின் சம்மதத்தை அறிந்துகொண்டான் அவன். “இது என்ன கேள்வி? உனக்கு பின்னாலதான் வருவன்.” என்றான் சிரித்துக்கொண்டு.
“பூவம்மா உன்ன ஒரு இடத்தில இருக்க விடமாட்டா. நானும் எல்லா நேரமும் வீட்டுல நிக்கேலாது. என்ர ஆராவ என்னால வடிவா பாக்கேலாம போயிடுமோ எண்டு பயமா இருந்தது. நீ அங்க இருந்தா நான் நிம்மதியா வேலைகளை பாப்பன். பிள்ளை பிறக்கிற வரைக்கும் தானே?” என்று இன்னும் எடுத்துச் சொன்னான் அவன்.
“ஆனா சாப்பாட்டுக்கு நீ அங்கதான் வரவேணும். இரவுக்கு அங்கதான் தங்கவேணும். நீ இல்லாம நான் தனியா படுக்கமாட்டன். இது எல்லாத்துக்கும் நீ ஓம் எண்டு சொன்னா சொல்லு, வாறன்.” பேரம் பேசினாள் அவள்.
“எல்லா நாளும் தங்க கிடைக்குமா தெரியாது ஆரா. இங்க இருந்து எனக்கு ஹயருக்கு போறது ஈஸி. ஆனா ஏலுமான(இயலுமான) நேரமெல்லாம் அங்க வாறன். உன்னோட தங்குவன். சரிதானே.” என்று இன்னும் என்னென்னவோ சொல்லி அவளை சம்மதிக்க வைத்தான் அவன்.
……………………….
மாளிகை போன்ற அந்த வீட்டின் முன்னே வேனை கொண்டுவந்து நிறுத்தினான் நிகேதன். மகளை அவன் தூக்கிக்கொள்ள இறங்கிய ஆரணியின் கால்கள் நடுங்கின. மெல்ல நிமிர்ந்து அந்த வீட்டைப் பார்த்தாள். இத்தனை வருடங்களும் அதே ஊரில்தான் சற்றுத் தள்ளி வசித்தார்கள். ஆனாலும் இந்தத் தெருவுக்கே அவள் வந்ததில்லை. ஆறு வருடங்கள் கழிந்தும், எந்தப்பெரிய மாற்றங்களும் அற்று, அவளை வரவேற்கக் காத்திருந்தது அந்தப் பெரிய வீடு.
பிறந்து, உடம்பு பிரட்டி, தவழ்ந்து, நடைபயின்று, பள்ளிக்குச் சென்று, பல்கலையில் பயின்று, ஆரணி இண்டஸ்ட்ரீஸின் வாரிசாக அலுவலகப் பொறுப்பெடுத்து என்று அவளை முழு மனுசியாக உருவாக்கியது அந்த வீட்டிற்குள் இருக்கும் அவளின் தந்தை. என்றோ ஒருநாள் அந்த வீட்டையும் அவரையும் உதறிவிட்டு வெளியேறினாள்.
அன்று, அவளிடம் ஆயிரம் நியாயங்கள் இருந்தன. நியாயமான கோபங்கள் இருந்தன. குமுறல்கள் இருந்தன. இன்றோ தன்னை ஆளாக்கியவர்களை முகத்துக்கு நேரே பார்க்கப்போகிறோம் என்கிற இந்த நொடியில், அனைத்தும் தவிடுபொடியாகி தரையில் உதிர்ந்திருந்தன. அவள் ஒன்றும் வாழ்க்கையில் தோற்றுவிடவில்லை. வாழ வழியற்று அவர்களைத் தேடி வரவில்லை. இருந்தபோதிலும், மகளாக பெற்றவர்களுக்கு அவள் செய்தது பெரும் தவறு. இரண்டு குழந்தைகளுக்கு அன்னையாகப் போகிறாள். அதில் ஒன்றேனும் அவள் செய்ததை அவளுக்குத் திரும்பிச் செய்யுமாக இருந்தால்.. அந்த நினைவிலேயே அவள் உள்ளம் துடித்தது. விழிகள் கலங்கிற்று. துனைக்குத் தன்னவனை அவள் தேடிய நொடியில் அவளின் கரம் பற்றினான் நிகேதன்.
“ஒண்டுக்கும் யோசிக்காம வா! நான் இருக்கிறன்.” என்று அழைத்துச் சென்றான்.
சத்யநாதனும் யசோதாவும் வீட்டு வாசலிலேயே காத்திருந்தனர். கணவனின் கைப்பிடியில் தம்மை நோக்கி நடந்து வருகிற மகளையே கண்ணீர் மல்க பார்த்திருந்தார் யசோதா. இந்த ஒரு நாளுக்காக அவர் காத்திருந்தது நீண்ட நெடுங்காலம்!
ஆரணியின் பார்வை அன்னையைத் தழுவி பெரும் தவிப்புடன் தந்தையிடம் நிலைத்தது. அவர் அவளை வா என்று அழைக்கவில்லை. ஆனால், அவளின் வரவை எதிர்பார்த்து நின்றார். போ என்று சொல்லாதவர் எதற்கு வா என்று அழைக்கப் போகிறார்? போனவளே திரும்பி வருகிறாள். பின்னுக்கு கட்டியிருந்த அவரின் கைகளின் இறுக்கம் கூடிற்று. அவரின் நீண்ட நெடிய தேகம் விறைத்து நிமிர்ந்தது.
அவரின் முன்னால் வந்து நின்றாள் ஆரணி. இருவரின் பார்வையும் மற்றவரில் தான் இருந்தது. அப்பாவுக்கும் மகளுக்குமேயான நொடிகள் அவை. ஆரணியின் விழிகள் மீண்டும் கலங்கின. இதே வீட்டில் வைத்து நேருக்கு நேராக அவரை எதிர்த்து நின்றது நினைவில் வந்தது. அவளின் உதடுகள் துடித்தது. நிகேதனின் கையை இன்னும் இறுக்கமாகப் பற்றினாள்.
“நான் உங்கள கட்டிப் பிடிக்கலாமா?” கண்களில் மல்கிய நீருடன் அன்றுபோல் இன்றும் கேட்டாள்.
மீசை துடிக்க பின்னுக்குக் கட்டியிருந்த தன் கைகளைப் பிரித்து, மெல்ல விரித்தார் அவர். அடுத்த நொடியே அந்தப் பரந்த சிறகுகளுக்குள் அடைக்கலமாகி இருந்தாள் அவள்.
அவள் உடல் அழுகையில் குலுங்கியது. எதற்கு என்றில்லாமல் அழுதாள். ஏன் என்றில்லாமல் கண்ணீரைச் சொரிய விட்டாள். “சொறி அப்பா!” என்று உதடுகள் முணுமுணுத்தது.
நிகேதனின் விழிகள் தன்னாலே கலங்கின. அவளைப் பார்க்க முடியாமல் முகத்தைத் திருப்பினான். சத்யநாதனின் ஒற்றைக் கரமொன்று உயர்ந்து அவளின் தலையை ஆதுரத்துடன் வருடிக்கொடுத்தது. யசோதாவுக்கு பெற்ற மனது தாங்கவே இல்லை. வயிற்றில் குழந்தையைச் சுமக்கும் இந்த நேரத்தில் அவளுக்கோ பிள்ளைக்கோ ஏதாவது ஆகிவிடுமோ என்று பதறினார்.
“ஆரா சும்மா அழுறத நிப்பாட்டு. இப்ப என்ன நடந்துபோச்சுது எண்டு இந்த அழுகை. அதுதான் எல்லாரும் சேர்ந்தாச்சு எல்லோ. கண்ணை துடை!” என்று அதட்டினார்.
அதற்கும் தனியாதவளின் அழுகை, நிகேதனையும் பயமுறுத்தியது. “ஆரா, அழக்கூடாது!” என்றான் அவளைத் தட்டிக்கொடுத்தபடி. அவனது தொடுகை அவளை ஆற்றுப்படுத்தியது. அழுகையும் கட்டுக்குள் வந்தது. தந்தையிடமிருந்து மெல்ல விலகி முகத்தை துடைத்துக்கொண்டாள்.
அதற்குள், நிகேதனின் கையில் இருந்த பூவினி என்ன நினைத்தாளோ தன் பிஞ்சுக் கரத்தினால் சத்யநாதனின் முகத்தில் எட்டி அடித்தாள். நிகேதன் அதிர்ந்து சமாளிப்பதற்குள், அவரின் நரைத்த மீசை அந்தப் பிஞ்சு விரல்களுக்குள் சிக்கி இருந்தது.
அம்மாவை ஏன் அழ வைத்தாய் என்று கேட்டாளா அல்லது என்னை ஏன் இவ்வளவு நாளாக வந்து பார்க்கவில்லை என்று கேட்டாளா. அது அவளுக்கும் அவளின் தாத்தாவுக்கும் மட்டுமே வெளிச்சம். சத்யநாதனுக்குள் புது இரத்தம் பாய்ந்தது. உடல் சிலிர்த்தது. அந்த நொடியில்தான் தாத்தாவாகப் பிறப்பெடுத்தார். உதட்டோரம் சிரிப்பில் துடிக்கத் தன் பேத்தியைப் பார்த்தார். விழிகளினோரம் மெல்லிய நீர்ப்படலம் உண்டாயிற்று.
மகளைக் கண்டுகூட கிறுங்காதவரின் கண்கள் பேத்தியைக் கண்டு கலங்கியது.
அவளுக்கு அவருக்கு அடித்ததில் குதூகலம் போலும். அல்லது, தான் அடித்தும் சிரித்த கிழவரைக் கண்டு உற்சாகம் பொங்கியது போலும். செப்பிதழ்களைத் திறந்து மலர்ந்து சிரித்தபடி தகப்பனின் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.
அவளின் செய்கையும் சிரிப்பும் அங்கிருந்த எல்லோரின் முகத்திலும் புன்சிரிப்பை பூசிச் சென்றது. கனத்திருந்த சூழ்நிலை நெகிழ்ச்சி மிகுந்த தருணமாய் மாறிற்று.
“என்ர பேத்திதான் இந்தக் கிழவருக்கு சரியான ஆள். வந்த நிமிசமே அடியப் போட்டுட்டாவே.” என்று குதூகலமாகச் சொன்னார் யசோதா.
அந்தப் பேச்சை எல்லாம் பொருட்படுத்தும் நிலையில் சத்தியநாதன் இல்லை. தன் பேத்தியின் மீதே விழிகள் மொய்த்திருக்க ஆவலோடு கைகள் இரண்டையும் அவளை நோக்கி நீட்டினார்.
நிகேதனும் கொடுக்க, யசோதாவிடம் கூட சேராதவள் சத்யநாதனிடம் சிரித்துக்கொண்டே தாவினாள். காரணம் அவரின் மீசை என்று அதை அவள் பற்றிய வேகத்திலேயே தெரிந்தது.
அந்த நொடியில் இருந்து அந்த வீடும் சத்தியநாதன் என்கிற ஆலமரமும் பூவினி என்கிற சின்னப்பூவின் கட்டுப்பாட்டில் வந்திருந்தது.