அவளை அவன் பார்வை துளைக்க, அதை எதிர்கொள்ள முடியாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டாள் லட்சனா.
“இங்கே மாலை வகுப்பில் டொச் படிக்க வந்தாயா..?” அவளின் கையில் இருந்த புத்தகத்தைப் பார்த்துவிட்டுக் கேட்டான்.
ஆம் என்று தலையை மேலும் கீழும் அசைத்தவள், ‘அப்பாடி! நான் சொன்னது அவன் காதில் விழவில்லை. தப்பித்தேன்..’ என்று ஆறுதல் பட்டுக்கொண்டாள்.
“வகுப்பு இனித்தான் தொடங்கப் போகிறதா..?” அவள் இன்னும் நின்று கொண்டிருந்ததில் கேட்டான்.
“இல்லை. முடிந்துவிட்டது.”
பதில் சொன்னபிறகுதான் யோசித்தாள், இனித்தான் தொடங்கப் போகிறது என்று சொல்லியிருக்க இவனிடமிருந்து தப்பித்துப் போயிருக்கலாமே என்று.
சரியான மக்குடி நீ என்று தன்னைத்தானே மனதுக்குள் திட்டிக்கொண்டாள்.
“அப்படியானால் கொஞ்சநேரம் கதைத்துக்கொண்டு இருக்கலாம். அமர்ந்துகொள்.” என்றவன், பியர் டின்னை வாயில் சரித்தான்.
அந்த இடத்தில் தமிழ் பேசும் ஒருவனைக் கண்டதில் அவனுடன் கதைக்க அவளின் மனதில் விருப்பம் உண்டானது என்னவோ உண்மைதான். ஆனால் அவன் கையில் இருக்கும் பொருட்கள் அவளை ஏனோ பயப்படுத்தியது.
அவன் அதனை ரசித்து ருசித்துக் குடிப்பதை ஒருவித முகச்சுளிப்போடு பார்த்துக்கொண்டு இருந்தாள். அவள் அதையே பார்ப்பதை உணர்ந்து அவள் புறமாக பியரை நீட்டி, “வேண்டுமா? வேண்டுமென்றால் இந்தா குடி. இந்த வெயிலுக்கு இதைக் குடித்தால்தான் தாகம் அடங்கும்..” என்றான் இயல்பாக.
“என்னது…?!?” என்றவள் மீண்டும் வேகமாக பல அடிகள் பின்னால் நகர்ந்திருந்தாள்.
அவனுக்கு அவளின் செய்கைகள் அனைத்தும் வேடிக்கையாக இருந்தது போலும்.
“என்ன நீ, எப்போது பார்த்தாலும் திகைப்பதும் ஓடுவதுமாக இருக்கிறாய். உனக்கு வேண்டாம் என்றால் விடு. எனக்கும் தர விருப்பம் இல்லைதான். நீ ஆசையாக என் பியரையே பார்க்கிறாயே என்றுதான் கேட்டேன்.” என்றுவிட்டு மறுபடியும் அந்த அமிர்தத்தை ருசித்துக் குடித்தான்.
முழுவதையும் குடித்து முடித்துவிட்டான் போலும், அவன் டின்னை வாயில் கவிழ்த்த விதத்திலேயே தெரிந்தது. முடிந்து கொண்டிருந்த சிகரெட்டினையும் கடைசி முறையாக ஆழ்ந்து இழுத்துவிட்டு, அதன் கட்டையை அந்த பியர் டின்னுக்குள்ளேயே போட்டவன், அந்த டின்னை சற்று தூரத்தில் இருந்த குப்பை வாளிக்குள் இருந்த இடத்தில் இருந்தே குறி பார்த்து எறிந்தான்.
அவனையே பார்த்துக் கொண்டிருந்த லட்சனாவின் கண்களும் பறந்துகொண்டிருந்த பியர் டின்னையே தொடர்ந்தது. அது சரியாக குப்பை வாளிக்குள்ளேயே சென்று விழவும் அவளின் விழிகளில் ஆச்சரியம் மின்னியது.
அந்த ஆச்சரியம் குன்றாது அவன் புறம் திரும்பவும், “உன் பெயர் என்னவென்று சொன்னாய், லச்..” என்று அவன் இழுக்க, “லட்சனா..” என்றாள் அவள்.
“லட்சனா…” என்று தானும் ஒருமுறை சொல்லிப்பார்த்தான்.
“அழகான பெயர். நீ இங்கே வந்து எவ்வளவு காலம்..?”
“ஆறு மாதமாகிறது.”
“ஓ.. அதுதான் டொச் கிளாசுக்கு வருகிறாயா..?”
தலையை ஆமென்பதாக அசைத்தாள்.
“படிப்பது புரிகிறதா…?”
“ஒரு கண்றாவியும் விளங்கவில்லை. நித்திரைதான் வருகிறது…” என்று சலித்தவள், தன்னுடைய எச்சரிக்கை உணர்வையும் மறந்து அவனோடு கதைக்க ஆரம்பித்து இருந்தாள்.
அவள் சொன்னவிதத்தில் மெலிதான புன்னைகை பூத்தது அவன் முகத்தில்.
“ஆரம்பத்துக்கு அப்படித்தான் இருக்கும். போகப் போகப் பிடித்துவிடுவாய்…” என்றான் இதமாக.
“ச்சு..! எங்கே பிடிப்பது. இப்போது இரண்டு மாதமாக வருகிறேன். ஒன்றுமே விளங்கமாட்டேன் என்கிறது…” என்றவளின் குரலில் அப்போதும் சலிப்புத்தான் இருந்தது.
“அப்படியானால் ஒன்று செய். யாராவது ஜேர்மன் நாட்டுக்காரன் ஒருவனை நண்பனாக்கு. பிறகு அவனோடு கதைக்க வேண்டுமே என்கிற ஆர்வத்தில் மொழியைப் பிடித்துவிடுவாய்.” என்று சொன்னவனின் குரலில், இலகுவான வழி ஒன்றைச் சொல்கிறேன் பார்த்தாயா என்கிற பெருமை இருந்தது.
அதைக் கேட்டவளுக்கோ, ‘மொழி பிடிக்க வழி சொல்கிறானாம் வழி…’ என்று பத்திக்கொண்டு வந்தது.
“அப்படித்தான் இந்தநாட்டு மொழியைப் பிடித்தாக வேண்டுமென்றால், நான் பிடிக்காமலேயே இருந்துவிடுகிறேன்…” என்றாள் மிகுந்த எரிச்சலோடு.
அவனோ அவளை ‘ நீ என்ன லூசா…’ என்பதாகப் பார்த்தான்.
அந்த நாட்டிலேயே பிறந்து, அந்தக் கலாச்சாரத்திலேயே ஊறி வளர்ந்தவனுக்கு தான் சொன்னதில் தப்பேதும் இருப்பதாகத் தோன்றவில்லை. அதனால் அவளின் மனநிலையையும் அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை.
“மொழியைப் பிடிக்கவேண்டும் என்கிற கட்டாயம் இல்லையென்றால் பிறகு எதற்கு இங்கே வருகிறாய்..?” என்று புரியாத குரலில் கேட்டான்.
“மொழியைப் பழகத்தான்! அதற்காக எவனையும் பிடித்து மொழியைப் படிக்கவேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை!” என்றாள் அப்போதும் சூடாகவே.
“ஏன்? ஒருவனை நண்பனாக்கிக் கொள்வதில் என்ன பிழை கண்டாய்…? உனக்கு எந்த வழியில் பார்த்தாலும் லாபம் தானே.”
“அப்படிக் கண்டதிலும் லாபம் அடையவேண்டிய அவசியம் எனக்கில்லை…” என்றாள் கோபத்தில் மூச்சிரைக்க.
அவளின் கோபத்துக்கான காரணம் அவனுக்குப் புரியவே இல்லை. அவளையே சில நொடிகள் பார்த்தான். அவளும் விடாது அவனை முறைத்தாள்.
எனக்கு என்ன என்பதாகத் தோள்களைக் குலுக்கியவன், கையில் கட்டியிருந்த மணிக்கூட்டில் நேரத்தைப் பார்த்துவிட்டு, “ஓ… நேரமாகிவிட்டது.” என்றபடி எழுந்துகொண்டான். “நான் கிளம்பப் போகிறேன். நீ யாருக்காக காத்திருக்கிறாய்..?” என்று கேட்டான்.
அவனின் கேள்வியில் அவளுக்கு மீண்டும் எரிச்சல் வந்தது . பின்னே, போக வெளிக்கிட்டவளைப் போகவிடாது கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டு நிறுத்திவிட்டு இப்போது மீண்டும் கேள்வி கேட்கிறானே! அதுவும் யாருக்காகக் காத்திருக்கிறாய் என்று.
எப்போதும் வகுப்பு முடிந்ததும் நேராக வீட்டுக்குச் சென்றுவிடுவாள் அவள். இன்று வகுப்பு முடிந்து வெளியே வந்தவளை இந்த மரமும் அதன் நிழலும் ‘இங்கே கொஞ்ச நேரம் வந்து இருந்துவிட்டுப் போயேன்..’ என்று அழைப்பதைப் போல் தோன்றியது.
வீட்டுக்குப் போயும் என்ன செய்யப் போகிறேன். என்னுடைய அறைக்குள் சென்று முடங்கத்தானே போகிறேன் என்று நினைத்தவள் நிழலின் சுகத்தை அனுபவிக்க நினைத்தே அங்கே வந்து அமர்ந்தாள்.
இப்படி ஒருவனிடம் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்திருக்க அங்கே வந்தே இருக்கமாட்டாள்!