“இதைவிட மெல்லப்போனால் பார்ப்பவர்கள் சிரிப்பார்கள்…” என்றான் அவன் வேகத்தை குறைக்காமலேயே.
இதுவே மெல்லவா என்றிருந்தது அவளுக்கு.
இறக்கமான வளைவில் வேகத்தைக் குறைக்காமலேயே அவன் வண்டியை வளைக்க, பயத்தில் உடல் நடுங்க தன் கைகளால் அவனை வளைத்துப் பிடித்தவள் கண்களை இறுகமூடி அவன் முதுகில் தன் முகத்தைப் புதைத்துக்கொண்டாள்.
அவளின் தாளம் தவறிய இதயத்துடிப்பை அவன் முதுகு உணர, சாலையோரமாக வண்டியை நிறுத்திவிட்டு, “லட்சனா…” என்று மெல்ல அழைத்தான்.
“ம்…” என்றவள் அசையவே இல்லை.
“பயந்துவிட்டாயா…?” கனிவோடு கேட்டான்.
“ம்..ம்..” அப்போதும் அவன் முதுகில் புதைத்துக்கொண்ட முகத்தை அவள் நிமிர்த்தவில்லை.
“தூங்கிவிட்டாயா…?” சிரிப்போடு கேட்டான்.
“ம்ஹூம்…”
“இனித் தூங்கப்போகிறாயா…?” குரலில் நகை துலங்கக் கேட்டான் அவன்.
ஏன் அப்படிக் கேட்கிறான் என்று யோசித்தபடி கண்ணைத் திறந்தவளுக்கு தான் இருக்கும் நிலை புரிந்தது. அவன் முதுகோடு பசை போட்டு ஒட்டாத குறையாக ஒட்டிக்கொண்டு போதாக்குறைக்கு கைகள் இரண்டாலும் அவன் இடையை இறுக்கமாக வளைத்துப் பிடித்தபடி இருந்தாள்.
நெஞ்சப் படபடப்பு அதிகரிக்க, வெட்கத்தில் முகம் சிவக்க, அவனை நிமிர்ந்து பார்க்கமுடியாமல் ஒருவித கூச்சம் அவளை ஆட்கொள்ள சட்டென்று தள்ளி அமர்ந்தாள் லட்சனா.
வண்டியின் பக்கக் கண்ணாடியில் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தவனின் விழிகளில் இப்போது ரசனை வந்திருந்தது.
அவளின் படபடத்த இமைகள், வெட்கத்தில் சிவந்துவிட்ட கன்னங்கள், மேலுதட்டின் மேலே பூக்கத் தொடங்கிய வியர்வைப் பூக்கள், கீழுதட்டைப் பற்றியிருந்த முத்துப்பற்கள் என்று அவளின் முகத்தை ஆர்வத்தோடு ரசித்தான்.
அவன் உள்ளத்தில் புதுவித உணர்வுகளின் தாக்கங்கள்! நாணம் கொண்டு நாணும் பெண்ணை முதன்முதலாய்ப் பார்க்கிறான்.
சிறுவயது முதலே ஆண் பெண் பேதமின்றி பழகியவனுக்கு பெண்களின் இயல்பு தெரியாததல்ல. ஆனால் இந்த நாணம், அவளின் தடுமாற்றம், அவன் கண்களைச் சந்திக்க முடியாமல் அவள் படும்பாடு அனைத்தும் புதிது. அதுமட்டுமல்ல, அவைகள் அவன் மனதுக்குப் பிடித்தும் இருந்தது. ஆர்வத்தோடு அவளையே பார்த்தான்.
அவன் தன்னைப் பார்க்கிறான் என்பதை உணர்ந்துகொண்டவளுக்கு பெரும் தடுமாற்றமாய் இருந்தது. அவனை நிமிர்ந்து பார்க்கமுடியாமல் தடுமாறினாள்.
அது இன்னும் அவனைக் கவர அவளையே விழிகள் மின்னப் பார்த்தான் சூர்யா.
அந்தப் பார்வையை எதிர்கொள்ள முடியாமல், “ப.. பள்ளிக்கூடம் விடப்போகிறது…” என்றாள் மெல்லிய குரலில்.
காரணமின்றி அவன் முகத்தில் சந்தோஷப்புன்னகை.
“ம்.. போகலாம்…” என்றவன் இப்போது, “என்னைப் பிடித்துக்கொள்..” என்றான் சிரிப்போடு.
அந்தச் சிரிப்பு அவளை இன்னும் தடுமாற வைத்தது!
தயக்கத்தோடு அவள் அவனின் தோள்களைப் பற்ற, அவளின் கைகளைப் பற்றி அவற்றைத் தன் இடையருகே கொண்டுவந்து, அவளை முன்னோக்கி இழுத்தான். வண்டியில் அவனிடமிருந்து தள்ளியிருந்தவள் வழுக்கிக்கொண்டு வந்து அவனோடு ஒட்டிக்கொண்டாள்.
தன் நிலையை உணர்ந்தவளின் உடல் மீண்டும் நடுங்கத்தொடங்க கைகளோ சில்லிட்டுப் போனது. குளிர்ந்துவிட்ட தன் கரங்கள் கதகதப்பான அவன் கரங்களுக்குள் அடங்கிக்கிடப்பது அந்த நிலையிலும் இதமாய் இருந்தது அவளுக்கு!
இப்போது அவளின் கைகளைத் தானே தன் இடையைச் சுற்றிப் போட்டுக்கொண்டான் அவன்.
அப்படி அவனோடு ஒட்டிக்கொண்டு இருக்கமுடியாமல் கைகளை அகற்றப்போனவளிடம், “இப்படியே இரு. இல்லையானால் முன்னை விடவும் வேகமாகப் போவேன்…” என்றான் மிரட்டலாக.
திகைத்து விழித்தவளை வண்டியின் கண்ணாடி வழியே பார்த்து, விழிகளில் குறும்பு மின்ன ஒற்றைப் புருவத்தை உயர்த்தினான் சூர்யா.
அவன் விழிகளில் இருந்த ஈர்ப்பு அவளை நிலைகுலையச் செய்ய சட்டென்று பார்வையைத் திருப்பிக்கொண்டாள்.
அவன் வண்டியை எடுக்க அவளையும் மீறி பயத்தில் அவளின் கைகள் அவனை இறுக்கிக்கொள்ள வாய்விட்டுச் சிரித்தான் அவன்.
அவளுக்குத்தான் வெட்கமாகப் போய்விட்டது. ஆனாலும் அவளாலும் ஒன்றும் செய்ய முடியாதே! காரணம், வேகமாக வண்டியை விரட்டிக்கொண்டு இருந்தான் அவன்.
‘எப்போதடா பள்ளிக்கூடம் வரும்…’ என்று இருந்தது அவளுக்கு.
ஆனாலும் அவன் உடலின் கதகதப்பை உணர்ந்தபடி பயணித்தவளின் நெஞ்சுக்குள் ஒருவித பரவசம்.
தயக்கம் இருந்தபோதும் மெல்ல விழிகளை உயர்த்தி வண்டியின் கண்ணாடி வழியே அவனைப் பார்க்க, அதுவரை அவளையே பார்த்திருந்தவனின் விழிகள் அவளைப் பார்த்துச் சிரித்தன.
விழிகளில் நாணம் வந்து ஒட்டிக்கொள்ள முகத்தை அவன் முதுகிலேயே புதைத்துக் கொண்டாள் சனா. அவளின் செய்கை அவனைக் கவர சந்தோசமாகச் சிரித்தான் சூர்யா.
அவர்களுக்குள் மௌனம் தொடர்ந்தபோதும் அவர்களின் விழிகள் நான்கும் அடிக்கடி சந்தித்து ரகசிய மொழி பேசிக் கொண்டன.
ஒருவழியாக பள்ளிக்கூடத்தை அடைந்து, அங்கு வாகனம் நிறுத்துமிடத்தில் அவன் வண்டியை நிறுத்தியபோது, ஏறும்போது இருந்த தயக்கம் போய் அதற்கிடையில் பள்ளிக்கூடம் வந்துவிட்டதா என்றுதான் தோன்றியது அவளுக்கு.
மெல்ல இறங்கித் தயங்கி நின்றாள். மனமோ அவன் எதையாவது கதைக்கமாட்டானா என்று ஏங்கியது. அவனோ, அவளைப் பார்வையால் பருகியபடி நின்றான்.
அவன் பார்வையில் மீண்டும் உள்ளம் படபடக்கத் தொடங்க, “வ.. வருகிறேன்…” என்றாள் அவன் முகம் பாராது.
முகத்தில் பூத்த புன்னகையோடு அவளை ரசித்தபடி தலையை அசைத்தான் அவன்.
அதற்கு மேலும் அவன் முன் நிற்க முடியாமல் மனமின்றி நகரப்போனவளின் இடையில் கைகொடுத்து தன்னருகே இழுத்தான் சூர்யா. அவன் இழுத்ததில் தடுமாறி நிற்கமுடியாமல் அவன் தோள்களைப் பற்றியவள் நடக்கப்போவதை உணரும் முன்னே, அவளின் மெல்லிதழ்களில் தன் இதழ்களை மென்மையாகப் பொருத்தி மீட்டான் சூர்யா.
நடந்ததை உணர்ந்து மனமதிர, விழிகள் அதிர்ச்சியில் விரிய அவனையே பார்த்தவளைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டிவிட்டு, வண்டியில் காற்றாய்ப் பறந்தான் சூர்யா.