இதயத் துடிப்பாய்க் காதல் 6 – 1

சூர்யாவின் கார் மிதமான வேகத்தில் சென்றுகொண்டிருந்தது. அவனருகில் அமர்ந்திருந்த சனாவுக்கு அவனோடு போய்க்கொண்டிருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சியாக இருந்தாலும், அதை அனுபவிக்க முடியாமல் மனப்பாரம் அழுத்தியது.

அருகில் இருந்தவனைத் திரும்பிப் பார்த்தாள். அடர்ந்த புருவங்கள் இரண்டும் ஒன்றோடு ஒன்று நெரித்துக்கொண்டு நிற்க, கூரான நாசி கூட அவனின் கோபத்தைக் காட்டியது. பார்வையை சாலையில் பதித்து காரை ஓட்டிக்கொண்டிருந்தவனின் முகத்தில் இருந்த இறுக்கத்தை எப்படிப் போக்குவது என்று அவளுக்குத் தெரியவில்லை.

இதில் அவள் செய்த பிழை எதுவுமில்லை என்று புத்திக்குத் தெரிந்தாலும் மனமோ அவனைச் சமாதானப்படுத்து என்று தூண்டிக்கொண்டே இருந்தது!

இதுதானே எல்லாப் பெண்களின் இயல்பும். அன்பு வைக்கும் வரை திடகாத்திரமான மனதோடு இருப்பவர்கள், வைத்துவிட்ட அன்பினாலேயே மனதளவில் பலவீனப்பட்டும் போகிறார்கள்!

சற்று முன்னர் அவன் அணைத்ததுக்கு அவள் கோபம் காட்டியதில் இருந்து இப்படியேதான் இருக்கிறான்.

மண்டபத்தில் அழுகையில் உள்ளம் துடிக்க அவனைப் பார்ப்பதும் கலங்கிய கண்களை யாருக்கும் தெரியாது துடைப்பதுமாக இருந்தவளிடம், “அவள்தான் என் தங்கை தாத்தா. சனா..! இங்கே வா!” என்றபடி சுலோவும், அவளுடன் தாத்தாவும் வருவது தெரிந்தது.

வயதில் பெரியவர் தன்னைத் தேடி வருவது அழகல்ல என்பதை உணர்ந்து, முகத்தில் புன்னகையை தவழவிட்டு, அவர்களிடம் விரைந்து, “சுகமாக இருக்கிறீர்களா தாத்தா…?” என்று பாசத்தோடு விசாரித்தாள்.

“எனக்கென்னம்மா. நான் நன்றாக இருக்கிறேன். உன் பெயர் லட்சனா என்று உன் அக்கா சொன்னாள். பெயரைப்போலவே லட்சணமாக இருக்கிறாய்.” என்றார் அவர், அவளின் தலையைப் பாசத்தோடு தடவி.

எழுபது வயதைத் தாண்டியபோதும் நரைத்த தலைமுடியோடும் அடர்ந்த மீசையோடும் கம்பீரம் குறையாது, செல்வாக்கான குடும்பத்தின் ஆணிவேர் நான் என்கிற பெருமை இல்லாது தன்னைத் தேடிவந்து கதைத்த வைரவேலன் தாத்தாவை அவளுக்கு மிகவும் பிடித்துப் போனது.

“பாட்டி எங்கே தாத்தா?” என்று உள்ளன்போடு கேட்டாள்.

“அங்கே பார், பெண்களோடு சேர்ந்து அரட்டையடிக்கத் தொடங்கி விட்டாள் என் வீட்டம்மா. இப்போதைக்கு வருவாள் போல் தெரியவில்லை. அதுதான் நான் மட்டும் உன்னைத் தேடிக்கொண்டு இங்கே வந்துவிட்டேன்.” என்றவர் அங்கு நின்ற சூர்யாவைப் பார்த்து,

“சூரி, இவள்தான் சுலோவின் தங்கை லட்சனாவாம். உனக்குத் தெரியுமா?” என்று, விழிகளில் குறும்பு மின்னக் கேட்டார்.

“ம்ம்!”

அப்போதுதான் சூர்யாவும் அங்கு நிற்பதைக் கண்ட சுலோ, “என்ன சூர்யா, எப்போதும் விழாக்களுக்கு நீ வரமாட்டாயே. இன்று என்ன அதிசயம் நடந்தது?” என்று கேட்டாள்.

மின்னலாய் அவன் பார்வை அவளிடம் பாய்ந்து அவளைப் பார்க்கத்தான் வந்திருக்கிறான் என்று உணர்த்த, அப்படி வந்தவனிடம் கோபப்பட்டது தப்போ? அவன் செய்தது தவறானாலும் அதை மெதுவாகச் சொல்லியிருக்க வேண்டுமோ என்று இப்போது தோன்றியது அவளுக்கு.

“அதுவாக்கா.. தாத்தா வரச்சொன்னார். அதுதான் வந்தேன். இப்போதானால் ஏன் வந்தோம் என்றிருக்கிறது. படத்துக்குப் போகலாமா என்று யோசிக்கிறேன்.” என்றான் அவன்.

சனாவுக்கோ எத்தனையோ நாட்களுக்குப் பிறகு அவனைக் கண்டும், அவனோடு கதைக்கமுடியாமல் போய்விடுமோ என்று தவிப்பாக இருந்தது.

“ஏன் சூர்யா அப்படிச் சொல்கிறாய்..?” என்று குழப்பத்தோடு சுலோ கேட்க,

“அவன் அப்படித்தான், விடும்மா. அவன் வயதை ஒத்தவர்கள் யாரும் இங்கே இல்லையல்லவா. அதோடு இங்கே எல்லோரும் திருமணமானவர்கள். அதுதான்! திருமணம் ஆகும்வரைதான் இந்த சுதந்திரம் எல்லாம். அதன்பிறகு இப்படி இருக்கமுடியாதே.” என்றார் தாத்தா அவனையே பார்த்தபடி.

“அப்படியானால் சூர்யாவுக்கும் விரைவாகக் கால்கட்டு போட்டுவிடுங்கள் தாத்தா.” என்று நகைத்தாள் சுலோ.

“ம்ம்.. விரைவில் போடத்தான் வேண்டும். இந்தப் பயலை இதுக்குமேல் விட்டு வைக்கவும் முடியாது. அவனும் திருமணத்துக்குத் தயாராகிவிட்டான்.” என்றார் அவர்.

சூர்யாவின் பார்வை வேகமாகத் தாத்தாவைச் சந்தித்து மீண்டது. சனாவோ கலங்கிப்போனாள்.

இவன் இப்போதுதானே காதலைச் சொன்னான். இவரானால் இப்படிச் சொல்கிறாரே. நான் தான் அவன் காதலைச் சொன்னதாகத் தவறாகப் புரிந்துகொண்டேனோ? அந்தக் கலக்கம் கண்களில் தெரிய சூர்யாவை நிமிர்ந்து பார்த்தாள்.

அவனும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் அவன் முகத்தில் அவளின் கலக்கத்துக்கான பதிலோ ஆறுதலோ எதுவுமில்லை.

“நல்ல விசயம்தானே தாத்தா. பெண்ணையும் பார்த்துவிட்டீர்களா?” என்று சுலோ விசாரிக்க,

“ம்.. பார்த்துவிட்டேன். இனி மெல்ல மெல்ல திருமணப் பேச்சை ஆரம்பிக்க வேண்டியதுதான்.” என்றவரின் பேச்சை, “நான் கிளம்புகிறேன் தாத்தா. படத்துக்குப் போய்விட்டு மூன்று மணித்தியாலங்களில் உங்களைக் கூட்டிப்போக வருகிறேன்.” என்ற சூர்யாவின் இறுக்கமான குரல் இடைமறித்தது.

“ஆகா…! சூர்யாவுக்குக் கூட கல்யாணப் பேச்சை எடுத்தால் வெட்கம் வருகிறதே தாத்தா. அதுதான் ஓடப்பார்க்கிறான்.” தன் தங்கையின் உள்ளம் நொருங்கிக்கொண்டு இருப்பதை அறியாமல் கேலி பேசிச் சிரித்தாள் சுலோ.

நெஞ்சின் வலி விழிகளில் தெரிய அவனைப் பார்த்தவளை முறைத்துவிட்டு, “சரி தாத்தா நான் வருகிறேன். சுலோக்கா வருகிறேன்.” என்ற சூர்யா, வாசலை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

“கொஞ்சம் பொறு சூரி.”

“என்ன தாத்தா..?” பொறுமையற்று வந்தது அவன் கேள்வி.

“லட்சனாவையும் கூட்டிக்கொண்டு போ. அவளுக்கும் இங்கே பேச்சுத் துணை யாருமில்லை. திருமணமான பெண்கள் கணவனைப் பற்றியும் பிள்ளைகளைப் பற்றியும் கதைப்பார்கள். இவள் இங்கே இருந்து அவர்களின் வாயைப் பார்ப்பதற்கு உன்னோடு வந்து ஒரு படத்தைப் பார்க்கட்டுமே.” என்றார் இயல்பாக.

“இல்லை.. இல்லை தாத்தா. நான் இங்கேயே அக்காவுடன் இருக்கிறேன்.” என்றாள் சனா அவசரமாக.

அவனுக்குத் திருமணம் என்பதிலேயே அவள் உள்ளம் உடைந்திருந்தது. இதில் அவனோடு சென்றால் காதல் கொண்ட நெஞ்சம் வெட்கத்தை விட்டு என்னைக் கல்யாணம் செய்துகொள்வீர்களா என்று கேட்டுவிடுவோமோ என்று பயந்தாள். அதனால் அவனோடு செல்வதைத் தவிர்க்கப் பார்த்தாள்.

ஆனால் வைரவேலன் தாத்தா விடுவதாக இல்லை.

“ஏனம்மா.. என் பேரனோடு படத்துக்குப் போவதால் என்ன நடந்துவிடும் என்று நினைக்கிறாய்..?” வயதில் மூத்தவர் அல்லவா, வெளிப்படையாகவே கேட்டார்.

“ஐயோ தாத்தா. அப்படி எதுவும் இல்லை.” என்றவளை மேலே கதைக்கவிடாது,

“ஏன் சுலோம்மா, அவனோடு உன் தங்கையை அனுப்ப மாட்டாயா? என் பேரன்மேல் உனக்கு நம்பிக்கை இல்லையா?” என்று கேட்டார் வைரவேலன் தாத்தா.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock