இதயத் துடிப்பாய்க் காதல் 8 – 2

“இது நல்ல பிள்ளைக்கு அழகு! உன் விருப்பத்தையும் மதிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே இதற்குக் கூடச் சம்மதிக்கிறேன்..”என்றான் அவன்.

“உங்களிடம் வந்துவிடவேண்டும் என்று எனக்கு மட்டும் ஆசையில்லையா சூர்யா? ஆனால் எல்லோரிடமும் சொல்லி, அவர்களின் சம்மதத்துடன் நம் திருமணம் நடந்துதான் நான் உங்களிடம் வரவேண்டும். எனக்கு சொந்தமென்று இருப்பது அக்கா, அத்தான், அவர் குடும்பமும்தான். அவர்களை என்னால் என்றுமே உதற முடியாது சூர்யா.” நயமாகவே தன் நிலையை அவனுக்குப் புரியவைத்தாள்.

“உன்னையென்ன அவர்களை விட்டுவிட்டு ஓடியா வரச்சொன்னேன். உன் சொந்தங்களை உதறச் சொல்லியும் நான் சொல்லவில்லையே! அல்லது என்னைத் திருமணம் செய்தால் அவர்களை உதறவேண்டி வரும் என்கிறாயா? அப்படி என்ன குறை கண்டாய் என்னிடம்?” சற்று சூடாகவே இருந்தது அவன் கேள்விகள்.

‘அவர்களை உதற முடியாது..’ என்று அவள் சொன்னதில் அவனுக்குக் கோபம் உண்டாகியிருந்தது.

“ஐயோ சூர்யா! அப்படி எல்லாம் இல்லை. உங்களிடம் குறை இருப்பதாக நான் சொல்வேனா…?” என்றவளுக்கு, அவளைப் புரிந்து கொள்கிறான் இல்லையே என்கிற ஆற்றாமையில் குரல் அடைத்தது.

“நானாக என் வீட்டில் சொல்லாமல் தாத்தா வந்து நம் காதலைப் பற்றிச் சொன்னால், ‘எங்களிடம் இதைப் பற்றி இவள் ஒரு வார்த்தை சொல்லவில்லையே. அந்தளவுக்கு வேற்றாளாக நாம் போய்விட்டோமா.’ என்று அவர்கள் வேதனைப் படமாட்டார்களா சூர்யா? முதலில் நம்மைப் பற்றி நான் அவர்களிடம் பேசுகிறேன். அதன்பிறகு தாத்தா வந்து திருமணத்தைப் பற்றிக் கதைக்கட்டும். நான் வீட்டில் சொல்வதற்கு எனக்கு கொஞ்சம் டைம் தாருங்கள் என்றுதானே கேட்கிறேன்…” என்றாள் அவள்.

“நமக்கு ஒருவரை ஒருவர் பிடித்திருக்கிறது. அதை வீட்டில் சொல்வதற்கு எதற்கு டைம் கேட்கிறாய்…?” என்று புரியாத குரலில் கேட்டான் அவன்.

இதற்கு மேலும் என்ன சொல்லி அவனுக்குப் புரிய வைப்பது என்று தெரியவில்லை அவளுக்கு. ஜெயனைப் பற்றி இப்போது சொன்னால் இன்னும் என்னென்ன சொல்வானோ என்று எண்ணியவள், அதைச் சொல்லாது, “சூர்யா, ஆறுமாதம் பொறுக்கலாம் என்று நீங்கள் ஏற்கனவே ஒத்துக்கொண்டுவிட்டீர்கள்..” என்று அவனுக்கு நினைவு படுத்தினாள்.

“ம்ம்.. ஒத்துக்கொண்டேன் தான். ஆனால் அந்தக் காலமும் எதற்கு என்பதுதான் என் கேள்வி. சரி, விடு! உன் விருப்பம் போலவே இருக்கட்டும்.” என்று ஒருவழியாக மலையிறங்கினான் அவன்.

‘அப்பாடி…!’ என்றிருந்தது அவளுக்கு.

“இன்று மதியத்துக்குப் பிறகு எங்காவது வெளியே போகலாம், வா.…” அந்தப் பேச்சை அத்துடன் முடித்தவன் அவளை வெளியே அழைத்தான்.

“இன்றுமா…?” என்று அவள் இழுக்க,

“இப்போதுதானே இன்னும் ஆறு மாதத்திற்கு காதல் செய்வோம் என்றாய். தொலைபேசியில் காதல் செய்ய உன் காதலனுக்குத் தெரியாது! அதனால் இன்று என்னுடன் வருகிறாய்…” என்று அவளின் பேச்சை வைத்தே அவளை மடக்கினான் அவன்.

“கடவுளே…! சூர்யா…” செல்லமாக அவள் அலுக்க,

“மூன்றுமணிக்கு பள்ளிக்கூட வீதிக்கு வருகிறாய்! அதுவும் காதல் செய்வதற்கு என் காதலியாக!” என்றவனின் குரலில் நகைப்பு நன்றாகவே இருந்தது.

“உங்களை…!” என்று அவள் பல்லைக் கடிக்க அவனோ பெரிதாக நகைத்தான். அதைக் கேட்டவளின் முகத்திலும் புன்னகை அரும்பியது.

கைபேசியை அணைத்தபின்னர் அவனைப்போலவே தானும் ஒரு தலையணையைத் தன்னோடு சேர்த்தணைத்தவள், “ஆனாலும் இவ்வளவு பிடிவாதம் உங்களுக்கு ஆகாது சூர்யா…” என்றாள் வாய்விட்டே!

தலையணையோடு பேசும் தன் நிலையை நினைத்துச் சிரித்துக்கொண்டவளின் உள்ளத்தில் தன்னை நினைத்தே ஆச்சரியமாக இருந்தது.

எப்படி இப்படி மாறிப்போனோம்? காதல் என்கிற பெயரில் அவன் அவள் நெஞ்சில் விதைத்த அன்புக்கு இவ்வளவு சக்தியா? ஆச்சரியமாக இருந்தது அவளுக்கு.

அவன் இல்லாத நாட்களையோ, அவனின் நினைவுகள் இல்லாத நிமிடங்களையோ அவளால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.
அவன் மட்டுமே அவள் உலகமாக மாறிப்போனதே!

அவர்கள் பிறந்து வளர்ந்த தேசங்கள் வேறாகிப் போனாலும், பழக்கவழக்கங்கள் மாறாக இருந்தாலும் மனதில் தோன்றிய நேசம் அவர்களை இணைத்துவிட்டதே! இதன் பெயர்தான் காதலா?

அவர்கள் பார்த்துக்கொண்டது சில முறைதான். ஆனாலும் நெஞ்சங்கள் இரண்டும் இடமாறிக்கொண்டது. அது போதாது என்று காதலையும் உடனேயே பரிமாறிக்கொண்டார்கள். இதில் திருமணமும் உடனேயே என்று அவன் கேட்டதை நினைத்ததும் அவள் முகம் வெட்கத்திலும் ஆசையிலும் மலர்ந்தது.

திருமண ஆசை அவளுக்கும் இருந்தாலும் நிதானிப்பது நல்லது என்றே தோன்றியது. அதைவிட அவனின் வேகத்தைப் பார்க்கையிலும் ஏனோ பயமாக இருந்தது.

முக்கியமாக அக்கா அத்தானிடம் அவர்களின் காதலைச் சொல்லவேண்டும். அடுத்ததாக ஜெயபாலன்.

அவனையும் அவளையும் இணைக்க அக்காவும் அத்தானும் விரும்புவதை அவள் அறிவாள். அதைவிட ஜெயபாலனின் ஆசை என்னவென்பதையும் அறிவாளே!

அவர்கள் எல்லோரிடமும் தன் காதலை சொல்லி, ஜெயபாலனின் மனம் நோகாதபடிக்கு அவனுக்கும் இதைப் புரியவைத்ததன் பிறகல்லவா அவர்கள் இணைய முடியும்.

இதுவரை இருந்த உல்லாசம் மறைய நெஞ்சில் பாரமேறியது. இதையெல்லாம் எப்படி அக்காவுக்கும் அத்தானுக்கும் புரியவைக்கப் போகிறாள்? எப்போது அவளது சூர்யாவை கைப்பிடிக்கப் போகிறாள்.

அக்காவிடம் இதைப் பற்றி பேசுவதை நினைத்தாலே பெரும் தயக்கமாக இருந்தது. ஆனாலும் பேசித்தானே ஆகவேண்டும்!

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock