‘இவனுக்குக் கோபம் போய்விட்டதா… சிரிக்கிறானே.. ’ என்று ஆவலோடு அவள் அவனைப் பார்க்க, “கண்ணாடி இல்லாமல் உன் கண்கள் இன்னும் அழகாக இருக்கிறது…!” என்று ரசனையோடு சொன்னவனின் கை, அவளின் மூக்கைப் பிடித்துச் செல்லமாக ஆட்டியது.
அவன் அவளை ரசிக்கிறான் என்பதில் உள்ளம் துள்ள, “கண்களைச் சொல்லிவிட்டு மூக்கை பிடிக்கிறீர்களே சூர்யா…” என்றவளின் குரல் காதலில் குலைந்து வந்தது.
அவளையே பார்த்தபடி, “உன்னைப்பற்றி, உன்னைவிட எனக்கு நன்றாகத் தெரியும்! அதனால் இப்படி லூசுத்தனமாக எல்லாம் சிந்திக்காதே…!” என்று இதமாகச் சொன்னவனின் வார்த்தைகள் அவள் நெஞ்சில் இனிமையைச் சேர்த்தது.
எதையும் நேராகப் பேசுபவன், அவளைத் தவறாக நினைத்திருந்தால், அதையும் நேராகச் சொல்லியிருப்பான். அவன் அப்படி நினைக்கவில்லை என்பதும், கோபத்தைக் கைவிட்டு இலகுவாக அவளோடு கதைத்ததும், அவள் மனதில் அதுவரை அழுத்திக்கொண்டிருந்த தவிப்புக்களை பனிபோல் அகற்றியது.
மனமும் உடலும் லேசாகிவிட, சாய்ந்துகொள்ள அவன் தோள் வேண்டும் என்று உள்ளம் கேட்க, இதற்கு முதல் நடந்த கருத்து மோதலை மறந்து, அவன் தோள் சாய்ந்தாள் லட்சனா.
அவனுமே அவள் இடையில் கையைப் போட்டு தன்னோடு சேர்த்து இறுக்கியபடி அவள் முகம் பார்க்க, அதில் நிறைந்துவழிந்த காதலில் அவன் பார்வை மாறியது. தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் அவள் முகம் நோக்கி வேகமாகக் குனிந்தவன், நொடியில் சுதாகரித்துக்கொண்டான்.
உடல் இறுக கண்களை மூடித்திறந்தவன், அவள் இடையிலிருந்த கையையும் இழுத்துக்கொண்டு, “தள்ளியிரு லட்சனா…” என்றான் கரகரத்த குரலில்.
அவளுக்கோ பெருத்த ஏமாற்றம். உடலும் உள்ளமும் அவன் இதழ் ஒற்றுதலுக்காய் ஏங்கியது. எதிர்பார்த்தது கிடைக்காத ஏமாற்றத்தில், ஏக்கம் பாதி எதிர்பார்ப்பு மீதியாக அவனைக் கேள்வியாகப் பார்த்தாள்.
“ஒரு அளவுக்குமேல் என்னால் என்னைக் கட்டுப்படுத்த முடியாது..” என்றான் அவன், அவள் விழி வழி வந்த கேள்விக்குப் பதிலாக.
அப்போதுதான் அவள் சொன்னது அவளுக்கே நினைவில் வர, விழுந்தடித்துக்கொண்டு விலகியமர்ந்தாள்.
என்னைத் தொடாதே, என்னருகில் வராதே என்று பெரிதாகச் சொல்லிவிட்டு இப்படிச் செய்துவிட்டாளே. அவளைப் பற்றி என்ன நினைப்பான் என்று தோன்றியதும் அவள் முகம் கன்றிச் சிவந்தது.
“தடையை விதித்தவள் நீதான். நானல்ல!” கன்றிவிட்ட அவள் முகத்தைப் பார்த்து அவன் சொல்ல, அவளுக்கு அது இன்னும் அவமானமாக இருந்தது.
அவனை நிமிர்ந்து பார்க்கமுடியாமல் தடுமாறியவளின் உள்ளம் அவனது அருகாமைக்கு ஏங்கியது!
அவனிடமிருந்து விலகியிருப்பதுதான் நல்லது என்பதை புத்தி அறியும்! அவன் அருகாமை மட்டுமே வேண்டும் என்று உள்ளம் கதறும்! இவை இரண்டுக்கும் மத்தியில் போராடிக்கொண்டிருந்தாள் லட்சனா.
வெட்கத்தை விட்டு அவன் தோள் சாய்ந்தால், இந்தப் போராட்டத்துக்கு முடிவு வந்துவிடும்தான். அதன்பிறகு அவனின் தேடல் அல்லவா அவளிடம் தொடங்கிவிடும்! அதை அனுமதிக்க முடியாதே!
“சா..” மன்னிப்புக் கேட்கத் தொடங்கியவள் படக்கென்று வாயை மூடிக்கொண்டாள். அதுவும் வில்லங்கத்தில் போய் முடியும் அபாயம் உண்டே!
அவளைப் புரிந்துகொண்ட புன்னகை அவன் முகத்தில் அரும்பியது.
காரை இயக்கிக் கொண்டே, “நாளை மாலை டொச் வகுப்புக்கு பள்ளிக்கூடம் வருவாய் தானே. சாலை விதிகள் பற்றிய இணையத்தில் இருக்கும் தமிழ் கேள்விகளை பிரிண்ட் எடுத்துத் தருகிறேன். படி…” தன்னைத் தானே கட்டுப்படுத்தியவன் ஒன்றுமே நடக்காததுபோல் பேசினான். அது அவளுக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது.
“ம்ம்.. வருவேன். நீங்களும் நாளைக்கு விளையாட வருவீர்களா..?” என்று ஆவலோடு கேட்டாள்.
“ம்.. அப்படியே உன்னையும் பார்த்ததாகுமே…” என்றபடி பெட்ரோல் செட்டில் சூர்யா காரை நிறுத்த, அவனோடு அவளும் இறங்கினாள்.
காருக்குப் பெட்ரோல் நிரப்பும் விதத்தைக் காட்டிக்கொடுத்தான் சூர்யா. அவளின் அத்தான் நிரப்புகையில் பார்த்திருக்கிறாள் தான். என்றாலும் அவன் காட்டித் தந்தது மனதுக்கு இதமாக இருந்தது.
பணம் கொடுக்க, உள்ளே சென்றவனோடு கூட நடந்தபடி, “நான் கொடுக்கிறேன் சூர்யா…” என்றாள் அவசரமாக.
அவன் நடை ஒரு நொடி தயங்கி மீண்டும் தொடர்ந்தது. “ஏன், அங்கே நான் கட்டிய பணத்துக்குப் பதிலாகவா..?” என்று ஒரு மாதிரிக் குரலில் கேட்டான்.
அவள் நினைத்ததையே அவன் கேட்டதில் பதில் சொல்லச் சற்றே சிரமப் பட்டாள் லட்சனா.
என்றாலும் உண்மையை அவனிடம் ஒப்புக்கொள்ளாது, “அந்தத் தொகைக்கும் இந்தத் தொகைக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது சூர்யா…” என்றவள் அவன் என்னவோ சொல்லவர, “எனக்குச் செய்ய உங்களுக்கு உரிமை இருக்கிறதென்றால், உங்களுக்குச் செய்ய எனக்கு உரிமை இல்லையா..?” என்று வேகமாக அவனை மடக்கினாள்.
அவன் விழிகளில் மெச்சுதலான பார்வை ஒன்று வந்துபோனது. “கெட்டிக்காரிதான்…!” என்றான் புன்னகையோடு.
“புரிந்தால் சரிதான்..” என்றபடி பணத்தைச் செலுத்தச் சென்றவளிடம், “கொஞ்சம் பொறு..” என்றவன், ஒரு பியர் டின்னையும் சிகரட் பெட்டியையும் எடுத்து வைத்து, “இதற்கும் சேர்த்துக் கொடு..” என்றான்.
அவற்றைப் பார்த்து அதிர்ந்தவளின் பாதங்கள் இரண்டடி வேகமாக பின்னால் நகர்ந்தது.
“என்ன..?” அவளின் செய்கையின் அர்த்தம் புரியாது கேட்டான் சூர்யா.
“இது.. இது எதற்கு…?”
“இதென்ன கேள்வி.. எதற்கு என்று தெரியாதா..?” என்று பதிலுக்குக் கேட்டான் அவன்.
“தெரியாமல் என்ன? நன்றாகத் தெரியும்! ஆனால் இவை இல்லாமல் உங்களால் இருக்க முடியாதா…?” என்று வெடுவெடுத்தாள் லட்சனா.
பெட்ரோல் செட்டில் வேலைக்கு இருந்த மனிதன், புரியாத மொழியில் கதைக்கும் இவர்களை வேடிக்கை பார்ப்பதைக் கவனித்துவிட்டு, “நாம் அடுத்தவர்களுக்கு வேடிக்கைப் பொருளாக வேண்டாம். முதலில் பணத்தைக் கொடுத்துவிட்டு வா. நம் சண்டையை வெளியே வைத்துக்கொள்ளலாம்…” என்றான் சூர்யா.
அவனை மீண்டும் முறைத்துவிட்டு, ‘இந்தக் கருமத்தை எல்லாம் நான் வாங்கிக் கொடுக்கவேண்டி இருக்கிறதே..’ என்று தன்னையே நொந்தபடி, பணத்தைக் கொடுத்து சில்லறையை வாங்கியவள், வேகமாக வெளியே வந்து காரில் ஏறி அமர்ந்துகொண்டாள்.
ஒரு கையில் பியர் டின்னும் மற்றக் கையில் சிகரட் பெட்டி சகிதம் வந்தவனும், காரிலமர்ந்து எதுவும் பேசாது காரைக் கிளப்பினான்.
சனாவோடு சைந்தவி விளையாடச் செல்லும் பூங்காவின் வாகன நிறுத்துமிடத்தில் காரை நிறுத்திவிட்டு, “இனி நாம் நமது சண்டையைத் தொடங்கலாமா..?” என்றவனின் குரலில் கேலி இருந்தது.
“என்னைப் பார்த்தால் உங்களுக்குச் சண்டைக்காரி மாதிரி இருக்கிறதா..?” என்றபடி அவள் அவனை முறைக்க, “அம்மாடி.. பயமாயிருக்கிறதே…” என்று நடித்தான் அவன்.
அவள் அப்போதும் சிரிக்காமல் இருக்க, “இப்போது என்ன கோபம் உனக்கு?” என்று விளையாட்டை விட்டுவிட்டுக் கேட்டான் சூர்யா.
அவள் அப்போதும் பேசாமல் இருக்கவே, சிகரட் ஒன்றை எடுத்து உதட்டில் பொருத்தி நெருப்பை மூட்டியவன், கார்க் கதவின் கண்ணாடியைக் கீழே இறக்கினான். அதைப் பார்க்க அவளுக்குப் பத்திக்கொண்டு வந்தது.
வேண்டாம் என்று சொன்னதைக் காதில் வாங்காமல், அவள் முன்னாலேயே புகைக்கிறானே.
“அந்தக் கருமத்தை முதலில் தூக்கி எறியுங்கள்…” என்று சீறினாள் சனா.
ஆட்காட்டி மற்றும் நடுவிரலால் அதைக் கைகளில் ஏந்தி, அந்தக் கையை காரின் வெளியே நீட்டிச் சாம்பலைத் தட்டியபடி, “ஏன்..?” என்று கேட்டவனின் மூக்கில் இருந்து புகை வெளியேறியது.
“என்ன ஏன்? இதெல்லாம் நல்ல பழக்கமா சூர்யா? உடம்புக்கு கேடு என்று தெரியாதா? உங்கள் வீட்டில் தெரிந்தால் என்ன நினைப்பார்கள்?” என்று பொரிந்து தள்ளினாள் அவள்.
“ஹேய்.. நிறுத்து.. நிறுத்து! இப்படிக் கேள்விமேல் கேள்வியாகக் கேட்டால் நான் எப்படிப் பதில் சொல்ல? ம்..?” என்றவனின் உதடுகளில் புன்னகைதான் தவழ்ந்தது.
எப்போதும் அந்தப் புன்னகையில் மயங்குபவளுக்கு இன்றைக்கு கோபம் வந்தது.
“சிரிக்காதீர்கள் சூர்யா…” என்றாள் கடுப்பை மறையாது.
புன்னகை விரிந்தபோதும், “சரி..சிரிக்கவில்லை.” என்றான் அவன் தன்மையாக.
“இது நல்ல பழக்கம் இல்லைதான். நீ சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் பழக்கமாகிவிட்டது லட்டு. அதற்காக எப்போதும் என்றில்லை. எப்போதாவதுதான்.” என்றான் அவள் கேள்விகளுக்குப் பதிலாக.
“உங்களுக்கே தெரிகிறதுதானே, நல்லதில்லை என்று. பிறகும் ஏன் சூர்யா இவற்றைச் செய்கிறீர்கள்?”
“அதுதான் சொன்னேனே.. பழகிவிட்டது. விடமுடியவில்லை என்று…” என்றான் சிகரட்டை புகைத்தபடி.