அவன் சிந்தும் அந்தப் புன்னகையைக் கண்டுவிட்டால் அவள் மனம் கொள்ளும் ஆனந்தத்தை எப்போதும் போல் இப்போதும் உள்ளே வியந்தபடி, கப்புக்களை மேசையில் வைத்துவிட்டு அவனுக்கு நேரெதிரே அமர்ந்தாள்.
அடிக்கடி என்றில்லாவிட்டாலும், எப்போதாவது அவள் வேலை முடியும் நேரங்களில் அவன் வருவதும், இருவரும் எதையாவது சலசலத்தபடி கபே அருந்துவதும் அவர்களுக்குள் நடப்பதுதான்.
ஆனால் அவளைக் கோபமாகத் திட்டிவிட்டு அவனாகவே தேடி வந்திருப்பது இதுதான் முதல் முறை என்பதால் அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
“பாட்டிக்கு என்னவாம் சூர்யா..?” அவனிடம் ஒரு கப்பை நீட்டியபடி கேட்டாள்.
“சம்மர் தானே. அதனால் பூக்களின் மகரந்தங்கள் தான் கண் கடிப்பதற்கு காரணமாம். மருந்து தந்திருக்கிறார்கள்..” என்றான் அவன்.
பிறகு ஏன் அவள் மெசேஜ் அனுப்பியபோதும், அழைத்தபோதும் அவன் எடுக்கவில்லை என்கிற கேள்வி மனதில் தோன்றினாலும் வாயைத் திறந்து கேட்கவில்லை. பின்னே, மறுபடியும் ஒரு பிரச்சினை ஆரம்பித்துவிட்டால் என்ன செய்வது.
ஒன்றும் பேசாது கபேயை அவள் அருந்த, “அங்கே வைத்தியரிடம் செல்கையில் கைபேசியின் சத்தத்தை நிறுத்தியிருந்தேன். பிறகு அதைக் கவனிக்கவில்லை லட்டு. வேலைக்குப் போனபிறகுதான் பார்த்தேன். உனக்கு பதில் அனுப்ப முடியாமல் வேலை இருந்தது. அதுதான் நீ எடுக்கவும் கோபமாக வேறு கத்திவிட்டேன். சாரி..” என்றான் அவன் அவள் முகத்தைப் பார்த்து.
அதுவரை அவள் மனதிலிருந்த தவிப்புக்கள், குமுறல்கள அனைத்தும் சட்டென்று மாயமாய் மறைந்தது.
“விடுங்கள் சூர்யா. என்னிடம் தானே கோபப் பட்டீர்கள். நானும்.. நீங்கள் ‘மெசேஜ்’ உம் அனுப்பவில்லை. கதைக்கவுமில்லை என்றதும் என்னவோ ஏதோ என்று பயந்துவிட்டேன். அதுதான் வேலை நேரம் என்று தெரிந்தும் அழைத்தேன். சாரி…” என்றாள் அவளும்.
“சரி விடு. இருவரும் மாறி மாறி மன்னிப்புக் கேட்டு என்ன செய்யப் போகிறோம். ஆனால் லட்டு, பிரச்சினை ஒன்று வந்து இருவரும் மன்னிப்புக் கேட்ட விஷயம் இது ஒன்றுதான் என்று நினைக்கிறேன்…” என்றான் அவன் புன்னகையோடு.
அதைக் கேட்டு அவளுக்கும் சிரிப்பு வந்தது. “உண்மைதான்…” என்றபடி அவனைப் பார்த்தவளின் விழிகள், அவன் முகத்தில் இருந்த மிக மெல்லிய மாற்றத்தைக் கண்டுகொண்டது.
“ஹேய் சூர்யா, நீங்கள் இன்று மீசையைச் சவரம் செய்யவில்லையா..?” என்று துள்ளலோடு கேட்டாள். அவளின் ஆசையை அவன் ஏற்றுக்கொண்டதில் அவளுக்குப் பெரும் சந்தோசமாக இருந்தது.
“சந்தேகமாக இருந்தால் நீயே கை வைத்துப்பார்..” என்றவன் மேசையில் இருந்த அவள் கையை எடுத்துத் தன் உதட்டுக்கு மேலே தடவினான்.
அங்கு மிக மெலிதாய் அரும்பியிருந்த மீசை, விரல்களில் தட்டுப் பட்டதாலா அல்லது அவன் செய்கையினாலா, அவள் கை மட்டுமல்ல மொத்த உடலுமே குறுகுறுத்தது.
“அச்சோ, என்ன சூர்யா இப்படிச் செய்கிறீர்கள்..?” என்று கூச்சத்தோடு கையை வேகமாக இழுத்துக் கொண்டாள் லட்சனா. அவனுக்கோ அவளைப் பார்க்கச் சிரிப்பு வந்தது.
“சந்தேகமாகக் கேட்டாய். அதுதான் உறுதிப் படுத்தினேன்..” என்றான் அவன் வெகு இலகுவாக.
இவனுக்கு எல்லாமே இலகுதான் என்று மனதில் நினைத்துக்கொண்டவள் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். இப்போதே அவன் முகம் இன்னும் களையாக இருப்பதுபோல் தோன்றவே, அதை வாய்விட்டே சொன்னாள்.
“அப்போ இதற்கு முதல் நான் களையாக இல்லையா..?” என்று அவன் கேலிபோல் கேட்க, “நான் ‘இன்னும் களையாக’ என்று சொன்னேன் சூர்யா.” என்றாள் அவள்.
“என்னவோ போ! எனக்கு ஏதோ பாரம் சுமப்பதுபோல் இருக்கிறது லட்டு.”
“அது.. நீங்கள் இதுவரை மீசை வைத்ததில்லை தானே. அதுதான் அப்படி இருக்கிறது. போகப் போக பழகிவிடும்.” என்றவளுக்கு அன்றைய அவனின் செய்கைகள் அனைத்தும் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.
நல்ல மூடில் இருக்கிறவனிடம் ஜெயனைப் பற்றி சொல்லலாமா என்று அவள் யோசிக்கையிலேயே, “இன்று நல்ல வெயில். வருகிறாயா நீச்சல்குளத்துக்கு நீந்தப் போகலாம்..?” என்று கேட்டான் அவன்.
அவளுக்கும் நீந்த மிகவும் பிடிக்கும்தான். ஆனாலும் அவனோடு போவது நல்லதல்ல என்று மனதில் தோன்ற, “இல்லை சூர்யா. நான் வரவில்லை.…” என்றாள் மெல்ல.
புருவங்களை உயர்த்தி அவன் கேள்வியாகப் பார்க்க, “ப்ளீஸ் சூர்யா. புரிந்துகொள்ளுங்கள்..” என்றாள் கெஞ்சலாக.
அவளைச் சற்று நோக்கியவன், “உன் விருப்பம்..” என்று தோளைத் தூக்கிவிட்டு, மீதமிருந்த கபேயைப் பருகி முடித்தான்.
அவளும் பருகிவிட்டு கப்புக்களை உள்ளே கொண்டு சென்று வைத்தவள் லிண்டாவிடம் சொல்லிக்கொண்டு வர, இருவரும் வெளிய வந்தனர்.
“சூர்யா, உங்களிடம் ஒன்று சொல்லவேண்டும்…” நடந்துகொண்டே அவள் சொல்ல, “என்ன..?” என்று கேட்டான் அவன்.
அவளுக்கு எப்படி ஆரம்பிப்பது என்று குழப்பமாக இருந்தது. சொல்லாமலும் இருக்க முடியாது. காரணம், விசா கிடைத்துவிட்டதாக காலையில்தான் அழைத்துச் சொல்லியிருந்தான் ஜெயன்.
இனி எப்போது வேண்டுமானாலும் அவன் வந்துவிடலாம்.
அவளைத் திரும்பிப் பார்த்துவிட்டு, அவள் கையேடு தன் கையைக் கோர்த்து, “என்ன யோசனை லட்டு. எதுவானாலும் தயங்காது சொல்லு…” என்றான் இதமாக.
“அது… ஜெயன் வருகிறாராம் சூர்யா.” என்றாள் மொட்டையாக.
“முதலில் அவர் யார் என்று சொல்லு? அவர் வந்தால் நமக்கென்ன?”
“அது…” என்று மீண்டும் அவள் இழுக்க, “பொறு.” என்றவன், சாலையோரமாக இருந்த வாங்கிலைக் காட்டி, “வா. அங்கிருந்து கதைக்கலாம்..” என்று பிடித்திருந்த அவளின் கையை விடாமலேயே அழைத்துச் சென்றான்.
இருவரும் அமர்ந்ததும், “இப்போது சொல்லு…” என்றான் இதமாக.
“அத்தானுடைய தம்பி அவர். இங்கே வருகிறாராம்.”
“ஓ… சிவாண்ணாவின் தம்பியா? வரட்டும். அதனால் என்ன?”
இதுவரை அவன் முகத்தைப் பார்த்துக் கதைத்தவளுக்கு, இப்போது அது முடியவில்லை.
பார்வையைத் திருப்பி, “வந்து.. அவருக்கும்.. எனக்கும்.. திருமணம் செய்வதாக வீட்டில் முடிவு செய்திருந்தார்கள்..?” என்றாள் நெஞ்சு தடதடக்க.
அவனிடமிருந்து பதிலெதுவும் இல்லை என்றதும், தயக்கத்தோடு அவன் முகத்தைத் திரும்பிப் பார்த்தவள் பயந்து போனாள்.
அந்தளவுக்கு அவன் பார்வை அவளை எரித்தது. பார்வையிலேயே கோபத்தை இந்தளவுக்குக் காட்டமுடியுமா என்று தோன்றியது.
கல்லாக இறுகியிருந்த முகத்தைப் பயத்தோடு பார்த்தவள், “சூ..ர்யா..” என்றாள் தட்டுத் தடுமாறி.
“முடிவு செய்திருந்தார்கள் என்றால்..?” கடுமையான குரலில் அவன் கேட்க,
“அது.. அது.. மூன்று வருடத்துக்கு முதலே முடிவு செய்திருந்தார்கள்.”
“பிறகு எதற்கு என்னோடு சுத்துகிறாய்..:?”
அவன் கேள்வியின் அர்த்தம் புரிந்து துடித்துப்போனாள். “சூர்யா…!?” என்றவளின் குரல் தழுதழுத்தது. அவளைப் பார்த்து எப்படி அப்படிச் சொல்ல முடிந்தது அவனால்..?
மனம் கனக்க, அவன் அறியாத அவள் வாழ்க்கையின் முன் பகுதியை சொல்லத் தொடங்கினாள் லட்சனா.